ஒரு விருப்பற்ற
வாழ்வின் கடைசிக் கண்ணியில்
வந்து நிற்கிறோம் நாமிருவரும்
தராசுத்தட்டை முதல் ஆளாக
கையிலெடுக்கும் நீ சிறு குறைகளை
புளிஒட்டிய கனத்தோடு இறக்குகிறாய்
காலகாலமாக கனந்தாளாது அரள்வதை
பாதாள கரண்டியால் தூர்வாறுகிறேன் என்கிறாய்
ஆமா நாந்தான் தப்பு
ஆமா நாந்தான் தப்பு என
ஊடலின் உச்சத்தில்
தன்மீது பழியைப் போட்டபடி
சுழித்தபடி நகரும் நொடியில்
எது இணைக்கிறது மீண்டும் நம்மை
நீ அளித்த முத்தங்களா
நீ அளித்த கருணைகளா
நீ வழங்கிய மன்னிப்புகளா
நான்கு கரங்கள்
வேறொன்றுமில்லை
வேறொன்றுமேயில்லை.
எப்பொழுதும் கையில் தயாராக ஒரு சுடுசொல்
அனல் தகிக்கும் ஒரு கோபம்
யாவற்றிலும் ஒரு கண்சுருக்கப் பார்வை
நிழலெனத் தொடரும் எதிர்மறை
தூற்றித்திரியும் விழுமியங்கள்
தூக்கிவீசும் அலட்சியங்கள்
புருவம் உயர்த்தா முகம்
ஏன் இப்படி
ஏன் இப்படி என்கிறார்கள்
அவளொரு வறண்ட நிலத்தாவரம்
கூரிய முட்களால் பதம் பார்ப்பவள்
மேலும் நுணுக்கமான கவனத்தோடு
கையாள வேண்டிய சப்பாத்திக்கள்ளி.
திரும்பிப் பார்த்தாலும் கண்களுக்குப்
புலப்படாத தொலைவின்
கரைகளை வந்தடைந்திருக்கிறோம்
உன் துக்கங்களுக்கும்
என் துக்கங்களுக்கும்
வெவ்வேறு முகங்கள்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
நம்மை விட்டு நீங்கியிருந்தோம்
நம்மை வீழ்த்திய அத்துனை
துரோகங்களையும் தனித்தே
கடக்க பழகிக் கொண்டோம்
எத்தனை துன்பமென்றாலும்
எத்தனை பாரமென்றாலும்
நீ சொல்லியழ நானிருப்பதாய்
நான் சொல்லியழ நீயிருப்பதாய்
வெறுமையாக வார்த்தைகளைப்
பிடித்துத் தொங்கிக்
கொண்டிருந்ததுதான் நகை
எதையுமே தொலைக்கவில்லையேயென
வாதாடி விட்டு மனங்கசியச் சொல்கிறாய்
‘ஐ மிஸ்யூடி அம்மு’.