கென்யா மூத்தக்குடி
காகுரு
அந்த பூர்வக்குடி வாத்தியத்தை இசைப்பதை நிறுத்து
உன் தசைகள் துடிக்க வாசிக்கும் போது
ஆப்பிரிக்க காற்று மணம் மாறுவதைக் கவனி
எதற்கான எச்சரிக்கை இது
எட்டு திசையிலிருந்தும்
தடதடவென நிலம் அதிர ஓடிவருகின்றன
காட்டெருமைகள்
விரிந்தக் காதுகளுடைய யானைகள்
சிங்கங்கள்
சிறுத்தைகள்
புலிகள்
வரிக்குதிரைகள்
ஒட்டகச் சிவிங்கிகள்
இன்னும் எண்ணற்றவை
ஓஹ் என்ன மாயை இது
இந்த இசைக்கும் இவைகளுக்கும் என்ன பரிமாணம்
நைரோபி
எத்தனை பழைய கிழவி நீ
வெள்ளைக் கூந்தலுக்குப் பிந்தைய அழகியே
கன்னங்களில் குழி விழுந்த குரங்குகளைக் காதலிக்கிறாய்
என்ன சூக்குமம்
பரிபாசையின் பொருட்டு அவை தலையசைக்கின்றன
இருபது லட்ச காலமெனப்படுவது அசாத்தியம்
தேவனே
கறுப்பும் வெள்ளையும் உன்னுடைய இரத்தப் பூனைகளே
பசியும் உணவும் ஏன் யுத்தம் செய்கின்றன
இது நியாயமில்லை
நீங்கள் சற்று இறங்கி வாருங்கள்
இந்நிலத்தில் முத்தமிடுங்கள்
கரும் பாறைகள் பூக்கும் புனித முத்தம்
காடுகளின் மீது திராட்சை ரசம் பொழியப் பொழிய
யுகாந்திர மாற்றங்களுக்குப் பிறகும்
பெண் என்ற சொல்லின் மீதான
போதைத் தீரவில்லை ஏன்
அவளை காக்க யாரை அழைக்க வேண்டும்
தனங்களின் மீது தனங்களைப் போர்த்திக் கொள்கிறாள்
தாழ்த்து உன் பார்வையை
வாவுதா
செம்மறியாட்டு ஈரலைத் தீயில் வாட்டி
குச்சியில் செருகி வை
“msitu ni nguvu”. – forest is strength
மங்கோலியக் கூடாரங்கள்
நாடோடியின் நாட்குறிப்புகளில் குறியீடுகளின் நடனங்கள்
தாறுமாறாகக் கிடக்கின்றன எண்ணிலடங்கா பாதங்கள்
ஒவ்வொன்றும் உலகின் வெவ்வேறு திசைகள்
சூரியனும் நிலவும் சாட்சியாகின்றன
வந்தவரெல்லாம் தங்கிட அல்லாத வாழ்வில்
நாடோடிகளின் பிழைப்பு நிச்சயமானது
நீலவானத்தை தெளிவாகக் காண்
தாய் தந்தையின் முகங்களைப் போல்
பனிப்படர்ந்த முகடுகளில்
கம்பளிப் பூச்சியென ஊர்ந்து செல்
காவலுக்கு யாருமில்லை களவாடத் தேவையில்லை
செங்கிஸ்கானின் படை வருகிறது
புகைகளின் மத்தியில் குதிரைகளின் மூச்சு சப்தம்
ஒரு தலை துண்டாக வந்து விழும் அச்சப்படாதே
போருக்கான முன்னறிவிப்பு
காதலியின் வாசம்
தந்தையின் இரத்தம்
தாயின் கண்ணீர்
பிள்ளைகளின் பதவி
எதற்காக வேண்டுமானாலும் போர் தொடங்கப்படலாம்
முடிவு முடிவுகளிலிலிருந்து தொடங்கும் கவனி நீ
அசையாத உலோகக் குதிரையின் மீது நிற்கிறான் செங்கிஸ்கான்
ஓநாய்களிடமிருந்து யுத்தம் கற்றுக்கொள்
கால்நடைகளைப் பழக்கு வாழ்வதற்கும் சேர்த்து
இரண்டு திமில் ஒட்டகங்கள் தோதானச் சவாரி
கழுகுப் பந்தயத்தில் நரம்புகளை கோத்து மாலையிடு
அங்க்பயர்
உனக்கும் ஆசைகள் இருக்கின்றனவா
சொல்
புத்தனுக்கு நேர்ந்துவிடப்பட்ட நிலங்கள்
ஏன் சிவப்பு ஆற்றில் நீந்துகின்றன
“saikhan ovog aimguud”- beautiful tribes