1.
பூத்துக் காய்த்துக் கனிந்துதிரும் துயரம்
நிழல் மரங்களுக்கில்லை.
நல்லதுமல்லதுமாய்ப்
பாவனைகள்..
பிறழ்வுகளின் பிதற்றல்களில்
நிராசைகளும் துராசைகளும்
சுயப்பிரதாபங்களும்.
ஆகச் சிறந்ததென்பதெல்லாம்
அவரவர் கற்பிதங்கள்.
பிரதிகளின் பிம்பங்களுக்கேது
தனித்துவம்?
கனவுக்கோட்டைகளுக்கில்லை
நீள அகல விஸ்தீரணங்கள்.
சில இலைகளை
உதிர்த்துப் போயிருக்கிறது
காற்று.
உடற்சட்டையை
உரித்துப்போட
ஒத்திகை பார்க்கிறது காலம்.
முடிவுக்கெப்போதுமில்லை
முடிவுரை.
2.
மரத்தின் வலி
மரங்கொத்திக்கு வயிற்றுப்பாடு
நமக்கு இசை..
வெறுப்பும் கசப்பும் இனிப்பும்
மகிழ்வு மாய்
ஊடாடிக் கிடந்தாலும்
அந்தந்த நேரத்து உணர்வுகளாலேயே
அளவிடப்படுகிறது.
போதும் என
சலித்துக் கொள்ளும் மனம்
வேறொரு தருணத்தைக்
கொண்டாடித் தீர்ப்பதும்
முரண்.
எது சரி?
எது தவறு?
வெற்றி எது?
தோல்வி எது?
எல்லாமே எல்லாமுமாய்…
தலைக்கு மேல் தொங்கும் கத்தி..
இக்கணத்துத் தேநீரை
மிடறு மிடறாய்
ருசித்து அருந்துவோம்.
இவ்வளவு தான் வாழ்வு.
3.
காலச்சுவடுகள்
விட்டுப் போயிருப்பது
நம் பயண அடையாளங்கள்.
எத்தனை தூரம்
எத்தனை துயரம்
நேற்றைக்கும் இன்றைக்கும் தான்
எத்தனை இடைவெளி?
நாளையின் இலக்கை
கடக்கையில்
இன்னுமொரு நாளை
இன்னுமொரு இலக்கு.
எட்டிப் பிடித்தபின்
எட்டாக்கனிகளின் உறுத்தல்.
அருளப்படுவதா
அயராத முயற்சியும் பயிற்சியுமா?
அயர்ந்து கிடக்கும்
வரிகளுக்குள்
ஆழப் புதைந்திருக்கும் மௌனம்
கழுவிலேற்றக் காத்திருக்கும்
கரங்களிடம்
ஒப்புக்கொடுக்கிறது.
பின்னோக்கிப் பயணிக்கும்
வாய்ப்பு வழங்கப்படுவதில்லை
யாருக்கும்.
4.
கடலேகும் நதிகளுக்கில்லை சுயம்.
தன்னைக் கரைத்துத் தன்னிலை
உணர்வது மெய்நிலை.
போதாமைகளைப்
பிரகடனப்படுத்திக் கொள்வது
உளநிலை சிக்கல்.
பற்றறுத்த பின்
பரிபாலனம் சாத்தியமில்லை.
அந்தரக் கயிற்றின் மேல் வாழ்வு..
கரணம் தப்பினால் தான்
மரணம் என்பது பொய்.
நிபந்தனையற்று அன்பு கொளல்
எவ்வகை நேசம்?
நிலம் சேர்ந்த
மழைத்துளிக்கென்ன பெயர்?
ஆளுக்கொரு யோசனை
ஆளுக்கொரு மதிப்பீடு.
இயல்பாய் இருப்பதை
ஏற்றுக்கொள்வதில் தான்
இடர்ப்பாடுகள்..