1) நொடி உணர்வுகளின் அழிவு
நடைக்குள் சிதறும் நிழல்களைப் போல்
மறைந்துருக்கும் குரல்கள்
சலனமற்ற துளியாய்
சில வரிகள் மட்டும் நீளுகின்றன
மணலில் புதைந்து போன
வெளிச்சத்தில் பிரவாகமெடுக்கும்
சொற்களின் ஓரங்களில் பதிந்த ரகசியங்கள்
பிம்பமாக ஜொலிக்கின்றன
நீரோடைகள் உதிர்த்த கனலாய்
கண்களின் எல்லை பிய்க்கும் தருணம்
தோளில் பஞ்சாயுதம் சுமந்ததுபோல்
பாதங்களில் தீக்கதிர்கள் சுடுகின்றன
காற்றில் சுழன்றுகொண்டிருக்கும்
தடுமாறும் இரவுகள்
வேரற்ற நினைவுகளின் நிழலாய்
பின்தொடர்கின்றன
காற்றில் பழுத்த நினைவுகளை
நான் கைப்பற்றும்போது
அவற்றின் விதைகள் மட்டும்
நொடிகளின் அடிவாரத்தில் முளைக்கின்றன
பறவையின் சிறகுகளில் ஒளிந்திருக்கும்
பனித்துளியில்
தூவெளி மார்பில் பிறந்த
ஒரு சத்தமற்ற புயல்
உறங்குகிறது
காலம் கடக்கும் பாலமாக
என் மேல் அடுத்தவர்கள் கடந்து போகிறார்கள்
எல்லா மௌனங்களுக்கும் திமிர் பிடிப்பதில்லை
2) அவள் .. குரலில் பறக்கும் பறவை
குளிர்பதனப் பெட்டியில்
பழைய காதல் கடிதங்கள்
பனியில் நடுங்கிய
மருத்துவ முத்தங்கள்
பிரிந்த மனதின் உரையாடலில்
கரம் தொட்ட உஷ்ணங்கள்
சாயும் கதிரொளியில்
ஆறஞ்சு நிற இளமை
காலம்கொன்ற வாஞ்சைகளில்
சிதில மழை
திறப்பதற்குத் தயங்கும்
நினைவுப் பெட்டகத்தில்
ஒரு காலத்துச் சுகந்தம்
சுவரோடு சுவராக
மங்கிப்போன கறுப்பு வெள்ளைப் படங்கள்
தென்னம் பாளையில்
நகைச்சுவை ரேகைகள்
கிணற்றுக்கட்டில்
கைவிடப்பட்ட அந்திகள்
வலிந்து விரிகின்ற காலத்தின் உதிர்வுகளில் மூடிய குரல்
இழந்த வரலாற்றில்
அகலமான நிழல்
குளிர்ந்த நாளொன்றில்
சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து
பரிமாணம் கடந்துவிடும்
நாமிருவரும் மறைந்த நதியில்
ஓராயிரம் மீன்கள் ஒரே நேரத்தில் மேலெழும்
அப்போது
என்னையும் உன்னைச் சேர்த்து
உருவற்ற சில சொற்கள்
ஏந்திக்கொள்ளட்டும்
3) அந்தப் பின் உலகம்
உடல் அகற்றி
குளோசும் காற்றின் சிறகுகளால்
ஆன்மா பறந்து செல்லும்
மரித்த பின் வேதனைகள் உயிரில் கரைந்தபோது
நொடி கிழிந்த அணிவகுப்பு போல
தனக்குத்தானே ஒரு உமிழ்ச்சியாக
கண்ணரிந்த இருள் அல்லாமல்
அதன் வழி போக்கி
பொங்கும் வெண்ணிற அலை அது
என்னவென்று ஊகிக்கமுடியாத சலசலப்பில் பிரியும்
அழிந்த உடலின் நிழல் இழந்து
ஆன்மா வெள்ளி போல நீந்தத் துவங்கும்
அதன் பாதை தவிர்த்து நிற்கும் காலம்
விண்மண்டலம் விடையளிக்கும்
வேகம் இல்லாத சுழற்சி
காற்றில் எங்கோ புதிய இன்பம்
விழுங்கிக்கொள்ளும் அந்த இருளில்
திசை தெரியாமல் அது சென்று விடும்
காலம் கூட ஓய்வு எடுக்கின்றது
ஆனால் அந்த ஆன்மா நீண்ட வெளியில்
வெளிச்சமாகும் போது
மறுபிறவிக்காக எழும்
ஒளிப்படலம்
4) நட்சத்திர வாசல்
நீல வானம் தள்ளிவிடும்
நம் சாயலின் மெலோடிக்கு
அயலான்கள் எழுதட்டும் வரிகளை
வெள்ளி வளையங்களில்
கனவுப் பயணம் தீவிரமாகிறது
நீரின் ராகத்தில் நடனமாடும்
நட்சத்திர வாசலில் நாங்கள்
அதன் ஒளியின் மறைவு கணத்தில்
நிழல் பெருக்கமாய் கரைகிறது
விண்வெளி வரைந்த ரேகைகளாய்
நீண்ட இருள்
நீண்ட சோகம்
சனிக்கோள் எங்கள் கோலம்
நாம் இன்னும் சுடர்க்கண்ணிகள்
காற்றின்றி மிதக்கும் கால்விரல்கள்
கதை எழுதட்டும்
இது ஒரு சிறிய சித்திரம்
இரவின் விளிம்பில்
5) நுண்ணிய அலையோடு நம் ஆத்மா
விண்வெளியின் கருநீல துண்டுகளிலே
நட்சத்திரத் துளிகள் கட்டமைக்கின்ற சிக்ஸாக்கள்
அதன் இருள் ஓரங்களில் எங்கோ தொலைந்து
ஒரு பிளாஸ்மா வானவில்லாகப் பரவிக் கிடக்கின்றது.
காலத்தின் அரண்மனையில் தங்கிய கோளங்கள் சுழன்று பிதுங்கி திசையிழந்து
மீண்டும் துருவப்பறக்கின்றன
விரிசல் கொண்ட வானத்தின் ஓரத்தில்
ஒரு சிறிய ரகசியச் சாளரம்
திரைகளில் கனவுகளின் வேகம்
நீட்சிபெறும் அந்தக்கடலில்
நீரின் ராகம்
சேதிவரும் ஒளிக்கீற்றில்
நிலவின் கைரேகை
ஒளிப்பிம்பத்தில் நம் கண்ணீரின்
அலைவீச்சு
சுடர்மறைகையில் காற்றின் ஒலியாய்ப் பரவும்
உடலின் வெப்பம்
நம்பிக்கையின் சிதைந்த அணுக்களில்
மின்னும்
நம் ஆத்மாவின் எச்சம்