வாழ்க்கை போலொரு விளையாட்டு
விதிகளற்ற விளையாட்டு வாழ்க்கையைப் போல இருக்கும்.
சமன்செய் நீளங்களை ஆழங்களை அகலங்களை
நீட்டல்களை குறைத்தல்களை கணிக்கிற
பயிற்சியே அன்றாடத்தின் அதிமுக்கிய பணி
சரி,எதனோடு அல்லது எவரோடு சமன்செய்தல்?
ஷூ… சும்மாயிரு. தொணதொணக்காமல்…
அலுத்துக் கொள்ள என்ன இருக்கிறது?
சலிப்பின் கசப்பேறிய பொழுதுகளை
மூடி வைத்திட இழுத்து வந்து கொண்டே இருக்கிறது அந்தி
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
அச்சு எதுவெனும் ரகசியம் தெரியாத (ரகசியமாம் பெரிய…)
ஆனால் அதற்குள் கச்சிதமாய் பொருந்திக் கொள்கிற
சூக்குமமறிகிறவன் தான் ஜெயிக்கிற குதிரை
இதைத்தான் நான் முதலிலேயே சொன்னேன்
தெளிவாக
விதிகளற்ற விளையாட்டு வாழ்க்கையைப் போல இருக்கும்.
பிரகாசி
நெருங்காலத்திற்கு முன்பு ஒரு காலத்தில்
இருந்ததாய் நினைவிலிருக்கும் நினைவுகளின் நினைவுகளில்
பொத்திக் காத்திட்ட அமிழ்தென அப்படியே இருக்கிறது அந்த அன்பு
அதே தித்திப்பும் கசப்பும் நிறையவே உவர்ப்பும் கலந்த சுவையோடு
படிகமாகி பின் வைரமாகி ஒளிவீசிக் கொண்டிருந்த ஒரு நாளில்
அடர்வனப்பச்சையின் தழுவலில் காணாமற் போயிருந்த
புராதனக் கோவிலின்
நடை கண்டுபிடித்துத் திறப்பது போல
கிறீச்சொலிப்புடன் நேற்று திறந்துவிட்டாய்
இறந்துவிட்டதாகவே கருதியிருந்த சுண்டிப்போன அன்பின்
நரம்புகளும் வற்றிப்போனதாய் எண்ணியிருந்த செங்குருதியும்
பாய்ந்தோட
இத்தனை நாள் ஒருக்களித்துத்தான் படுத்திருந்தது போலவென
நம்பிடும்படியிருந்தது அதன் புத்துயிர்ப்பு
திறந்த கோவிலின் தூசு படிந்த பிரகாரங்களைக் கடந்து மைய மண்டபம்
தாண்டி கருவறை சேர்ந்து அருள்பாலிக்கிறாய் பிரகாசியாய்
தாயே தலைவியே குணவதியே
என்னே நின் கருணை

Art : Tomasz Alen Kopera
கால வெளி
கண்முன்னே விரிந்திருக்கிறது
புல்வெளி
பச்சைக் கடலென
இலக்கற்று அதனூடாக
மிதக்கின்றன உடற்படகுகள்
நங்கூர விரல்களை இறுகப் பிணைத்தபடி
நெடும்பயணத்தின்
ஏதோ ஒரு புள்ளியில்
நீ வெளியாகிறாய்
நான் காலமாகிறேன்.
பிரசவம்
பகல் நிராகரித்த பறவைகள்
கருக்கலில் கிளைகளில் மலர
தனித்து விடப்பட்ட சோளக் காட்டு பொம்மை
சதா வைக்கோல் பொதியுடலைச் சுமக்கும்
இளைப்பாறிட கால்களுமில்லாத களைப்பு
கூகைகள் அலறும் தனித்த இரவில்
கண்களினின்று ஊற்றெடுக்கிறது பயச் சுனை
மண்சட்டி விழிகளுருட்டி
தனிமைக்குத் துணை தேடியும்
கிடைக்கவில்லை எவரும்
இருளின் ராகங்களையாவது
துணைக்கழைக்க இரவின் தந்திகளை
காற்றினில் வெறியுடன் மீட்டுகின்றன
விரைத்து விரிந்த கட்டைக் கரங்கள்
ஈசானி மூலையின்று வழிகிற இசையின் அதீதமாய்
கேட்கும் சினை எருதின் கடைசி அலறலில்
ஆகாய யோனியினின்று மெல்ல மெல்ல
பிரசவிக்கிறது இருள்
விடியலை