சில சொற்கள்
மஞ்சள் படித்துறையில் பாசிகளை
உண்டுகொண்டு இருக்கும் மீன்களிடம்..,
தன் கவிதையை யாரோ திருடிவிட்டதாக
சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.
கவிதைகள்
யாரோ ஒருவருக்கு
யாரோ ஒருவர் எழுதுவதுதானே?
அதைத் திருடுவது பிழையென்றும் இல்லையே,
என்றது.
பின்
கவிதைகள் தனித்து எழுதப்படுவதில்லை.
தனக்கென்று கவிதைகள்
தானாக உருவாவது இல்லை.
அது எதிர்படும் எல்லோருக்கும் எழுதப்படுகிறது.
அது எழுதியவனை/ளை தவிர்த்து,
எல்லோருக்குமானது.
எழுதியதோடு எழுதியவனுக்கும்
கவிதைக்கும் தொடர்புகள்
அற்றுப்போய் விடுகிறது.
அதனாலே அது கவிதையாக்கப்படுகிறது.
அவள் மீண்டும்
தன் கவிதையில் இருந்து
சில சொற்களை
நதியில் வீசியெறிந்தாள்.
அதைப் பிடித்து உண்டு,
தன் ஆழத்துக்குள் சென்றது மீன்.
கொடும் கனாக்கள்
உன் பிரிவை துரத்தும்
காலவெளியை கைப்பிடித்து
அலைந்துக்கொண்டு இருக்கிறேன்.
நீ காலவெளியை விட்டு
வெகுதொலைவில்
சென்றுக்கொண்டு இருக்கிறாய்.
ஒர் மின்னல் போல,
அதிரும் சிறு வெளிச்சத்தை
பற்ற நினைக்கும் சிறுமியை போல.
சமவெளி முகடுகளில்
ஒரு நாடோடி போல
சுற்றி சுற்றி வருகிறேன்.
நீ கடல்வெளிக்கு
அப்பால்
ஒர் நீருற்று போல
அமைதியாக
சலசலத்து
ஓடிக்கொண்டு இருக்கிறாய்.
கொடும் கனாக்களில்
முகமலர்ந்து சிரிக்கும்
உன் புன்னகையை காண்கிறேன்.
விழிப்பு இல்லா
பெரும் உறக்கம் ஒன்றில்
அலைந்துக்கொண்டு
இருக்கிறேன்.
கனவே நேற்றுப்போல
இன்று நீ வரவில்லை
நாளை என்பதை நீ மறக்க
சொன்னதாய்
உன் தேவதை சொல்லிவிட்டு சென்றாள்..
நான் அதே மலைமுகடுகளில்
இரைக்கு தப்பிய
மான் குட்டி போல
நடுநடுங்கிக்கொண்டு இருக்கிறேன்.
நீ பனிபொழியும்
புல்வெளியில் முனையில்
அமர்ந்திருக்கிறாய்.
மூங்கில் காடுகளில்
உன் ராகம் இசைத்து காத்திருக்கிறேன்.
பொன்வண்டு போல
துளையிட்டு நிரப்பு
என் கனாக்களில்….