இறப்பிற்கு பின் நகர்தல்
விரைந்து முன்னேறும்
பாதங்களின் நடுவே
மூச்சுத் திணறி மடிகிறது
பிழைக்கவே வழியில்லாத
எதார்த்தத்தின் நகர்வுகள்
மழைநாளின் நடுச்சாமத்தில்
உதிர்ந்திருக்கும்
விட்டில் பூச்சி இறகுகளை
இழுத்துப் போகிறது
வெவ்வேறு பெயர் கொண்ட
ஒரே நிறத்து எறும்புகள்
சென்றடவைதற்கான சிறு துளை
வெகு தூரத்தில்
*******
பரபரப்பு குறையாமல்
தூசிப் படிந்திருக்கும்
ஏக்கங்களின் விரல் நுனிகள்
காற்றில் அலைகிறது
அனாதையென
நவீன மனங்களின் வேகத்தோடு
மல்லுக்கட்டி தோற்கும் எதுவொன்றுக்கும்
ஒதுக்கப்பட்டிருக்கும்
கடைசி வரிசை நாற்காலிகள்
விவாதிக்கின்றன
முகமூடிகளின்
நேற்றைய ஏலத் தொகையை
வேடிக்கைப் பார்த்தபடி
முதல் வரிசை முகமூடிகள்
*******
வாதாடிடும் வழி அடைத்து
யாருமே முன்னறிந்திடாத
என்னை
பிரித்து மேஜைமீது வைத்திருந்தேன்
களவாடிவிட்டு போயிருக்கலாம்
இல்லாமலாவது
அத்தனை சிரமமில்லை
கூறு போட்டவர்கள்
அப்படியேனும் விட்டிருக்கலாம்
வரிசை மாற்றி
அடுக்கி வைத்ததோடல்லாமல்
பரிசுப் பெட்டிக்குள் பொதிந்திருக்கிறார்கள்
குப்பையென்று லேபிள் ஒட்டி
*******
இல்லாமல் செய்யும் எத்தனம்
சிதைந்து போக அனுமதியாமல்
ஏந்தியிருந்தேன்
மறதியினை கடன் வாங்கி வைத்திருக்கும்
மூளையின் மென்புள்ளிகளை
கால் பிடித்து தரதரவெனயிழுக்கும் சந்தர்ப்பங்கள்
ஒளிந்து கொள்ளும் பீப்பாய்
சாம்பலாகி ஒட்டுகிறது
பாத விளிம்பில்
பலிபீடத்தில் சரணடைகிறேன்
வெட்டுபட்டுச் சிதறும் பங்குகளுக்கு
காற்றின் எடை
*******
என்னை வேண்டி
கைப்பிடித்து அழைக்கிறேன்
எனக்கான அம்னீஷியாவை
வேறெப்படியும்
கடக்கும் வழி இல்லை
குறுக்கு வெட்டில்
செதிலேறி கிடக்கும் நினைவடுக்குகளை
திரும்பி பாராமல்