நகர மறுக்கும் இசை.
என் பாதைகள் தவறிவிட்டன.
நேரான பாதையில் நடப்பதாக லயித்திருந்தேன்.
தவறியதற்கு நான் பொறுப்பல்ல.
உன் இசைதான் காரணம்.
தேர்ந்த இசைக்கருவிகளுக்கு செவிசாய்த்த நீ
என் தடுமாற்றங்களை
மறந்து விட்டாய்.
என் பாதைகளின் முட்களும், கற்களும்
உன் பயணத்தைத் தடுக்க அனுமதிப்பதில்லை நான்.
பாதங்களில் வழியும் குருதியின் சிவப்பில்
நிறைபவளுக்கு
ஈடென தர உன் வாழ்வில் ஏதும் மிச்சமில்லை.
நிறைவாழ்வு உம்முடையது.
வாழ்க. மங்கலமுடைத்து வாழ்க. பொலிக.
நான் இருளில் ஒளிவேன்.
முரடான கற்களுக்குள் பொதிந்து கொள்வேன்.
கருமேகங்களுள் ஒளிவேன்.
இடிகளை சத்தமிழக்க வைப்பேன்.
என் கண்ணீரை உலர வைப்பேன்.
பாறைகளில் மின்னலை ஒளித்து வைப்பேன்.
உன் உறக்கத்தில்
பயமுறுத்தும் அணங்குகளை
என் ஒற்றைக்கால் கறுப்புக்கயிற்றின்
முடிச்சில் ஒளிப்பேன்.
தகிக்கும் கனலை கையிலேந்துவேன்.
என் உக்கிரங்கள் தாங்க முடியா சிறுதெய்வம் நீ.
கருணை பொலியும் புன்னகை உனது.
என் அருளென்பது
உன் நேர்க்கோடுகளில்
நெளிக்கோலங்களிடா மனது.
எம் கருணை.
என் காதல்
என் அன்பு.
இதைவிட உனக்கேதும் என்னால் அருள் முடியாது.
உன்னை என்னிடமிருந்து விலக்கிவிடுதலே
என் பெருங்காதல்.
வாழி நீ வாழி.
******
ம்யூட் பட்டன்
என் கதறல்களை நான் ம்யூட்டில் வைத்திருக்கிறேன்.
உன் கருணைகள்
அந்த பொத்தானை
மறுபடி மறுபடி
அழுத்துகின்றன. துண்டான வார்த்தைகளின்
பொருள்புரியாது திகைக்கும் உன்னை
எனக்குப் பிடிக்கவில்லை.
இரக்கமற்று ஒரு மன்றாடலை
பட்டென நிறுத்தும் பொத்தானின் இயந்திரத்தனத்தை
உன்னிடம் எதிர்பார்க்கிறேன்.
எந்த ஒரு பிசுபிசுப்புமற்று
உறைநிலையில் பிணமேடையில்
காத்திருக்கும் சவமென
என்னை நீ பிரதிபலிப்பதையே விரும்புகிறேன்.
உன்னை அசைக்கும் என் வளைவுகளை ஒளிக்க
வேண்டும்.
வீர்யமிக்க மருந்துகளின்
பக்கவிளைவுகளைப் போல
என் காதல் உன் சமனத்தை குலைக்க வல்லது.
வல்லமைமிக்க
உன் அன்றாடங்களின் சமநிலை
அலுக்கும்பொழுதின்
இடைநிறுத்தம் நான்.
பயணத்தின் பக்க இருக்கையாய் மாறும்
பேராசையை
வாள்வீசி
கிழிக்கிறேன்.
கிழிந்த பக்கங்களுக்கு
இறக்கை முளைத்து
என் வானமெங்கும்
கலர்கலராய் பட்டங்கள்
சற்று நேரம் பறக்கட்டும்.
அனுமதிக்கிறேன்.
விடியலுக்குள் நீரில் அமிழ்த்தி விடுகிறேன்.
சத்தியம்.
உன் ஜன்னல்களுக்கு
கனத்த திரைச்சீலையிட்டு
கண்மூடு.
உன் உறக்கம் எனக்கு
கன முக்கியம்.
******
பைபோலார்
உருவெளித் தோற்றம்,
காதில் குரல்கள்,
ஒன்றுமே இல்லாததை
அதிதீவிரத்துடன் எண்ணுவது,
பூனைமயிர் சிலிர்த்துக் கொள்வது,
இருமனமாய் எதிரெதிர் நின்று விவாதம் புரிவது,
எதிர்மனதுக்கும் சேர்த்து
தேம்புவது
கசப்பு மருந்துக்கு
வெல்லக்கட்டி சமாதானம்
இது எல்லாம் ஒரு உயிரில்
நிகழ்வதானால்
மருத்துவத்தில்
ஆயிரம் பெயர் சொல்லுகிறார்கள்
சிரித்துக் கொள்கிறது
சிறு பிராயத்தில்
தொடங்கிய காதல்.
******
சுருக்கமின்றி விரித்தல்.
நெடுக விரித்து வைத்த
ஜமக்காளங்களைப்
பார்த்துக் கொண்டே செல்கிறாள்.
எல்லாவற்றிலும் சுருக்கம் இருக்கிறது.
ஒட்டுத்தையல் போட்டிருக்கிறது.
முனை மடங்கியிருக்கிறது.
நேராய் நீவி விரிக்கப் படவேயில்லை.
நுட்பமறியாது அணுகும் ஆணைப் பற்றி
சொல்லிக் கொடுத்த
சித்திக்கும் இதே
ஜமக்காளங்கள்தான்
மண்டபத்தில் விரிக்கப் பட்டிருந்ததாம்.
‘பழகிக்கொள்’ என்று சொல்லியிருந்தாள்
பாலைக் கையில் கொடுத்தபோது.