இசையும் காலம்
மனமெங்கும் அலையத் தொடங்கும் யோசனையின் கால்கள்
ஒவ்வொன்றும்
காலத்தின் வெவ்வேறு தொடர்ச்சிக்கு
இழுத்துப்போகிறது
சொல் முந்த
வழித் திறந்த காலம்
இறவாப் பொழுதாகிக் கனக்கிறது
நிகழும் மௌனத்தை எடையேற்றி
நியாபகத்தின் பொத்தலில்
நிறையும் கணக்கற்ற நானுக்கோ
தந்துதவ நல்ல சொல்
தேடித் தேடி ஓடுகின்ற கால்கள்
ஒயுமிடம்
மாயும் மனம்
எங்கு உண்டு
நானின் வளையா நான்
மூங்கில் மனம்
உடைத்துத் துளையிட்ட
விசையில்
இசையும் பொழுதால்
நிகழ்கிறது
ஓயும் காலுக்கான காத்திருப்பு..
*************
ஆழம்
ஒளித்துவைத்த இடம்
தொலையத் தொடங்கும் மன மேடை
நண்டின் கால்கொண்டு
கிளறிவிடுகிறது
குறுகுறுப்பு
எப்படியோ
சேகரம் இல்லாத இடத்தில்
இருள் விளைய
முற்றும் கதிருக்குள் பிறக்கிறது
புதிய பசி
*************
மீட்டும் லாகவம்
கண்டுணர்வாய் எனத் தெரியும்
கடக்கும் வரை
கற்ற பாடம்
புலன் செய்யும் மாயத்தை
எப்படிச் சொல்ல
நிற்கிறாய் நீ
நிகழ்கிற வெளியில்
சுழல்கிறேன் நான்
ஓர் புதைமேட்டின்
பொல்லாக் காலம்
புகட்டிப் போன
பாடம்
பாடலென இசைக்கிற இந்த வெளி
எனக்கு அந்நியமானது
அதனாலென்ன
அறிந்த பாடல் போல இருப்பதில்லை
அறியாத கானகம்
திளைப்பேன்
எனக்குள் இசையாகி
*************
காரியங்கள் நீங்கலாக
எழுத மறுக்கிற மனம் மீது
வார்த்தை விளங்க விழித்திருக்கிறது
அர்த்தத்தின் பலநூறு கண்கள்
எதற்கும் பொருந்தாத
யூகத்தின் சொல் அகராதி
திறந்து வைக்கும் ஒற்றை அர்த்தம்
போதுமானதாயில்லை
போதாமையின் குறைவில்லாத கண்ணுக்கு
நிற்பது எது
பார்ப்பது எதை
பறப்பது ஏன்
பல நூறு அவஸ்த்தை
பறித்துப் போடும் பொருளின் மேல்
பொருந்துவதில்லை
படைக்கும் மனம்
யாவற்றையும் விட்டுப் பறக்க
விளக்கம் தேடா கண்ணுக்குள்
விளங்க நிற்கிறது
பொருள் மீறும் பிறழ் மௌனம்
அற்புதமான அடர்த்தியான கவிதைகள் ரேவா. ஆர் ஜேவாக நுட்பம் ரேடியோல கலக்கும் நீங்கள் கவிஞராக இப்படியான அற்புதக் கவிதைகள் எழுதுகிறீர்கள். இக்கவிதை எல்லாம் உங்கள் குரலில் கேட்பது கூட கவிதையை புரிய உதவுகிறது. சமகால கவிஞர்களில் நீங்கள் தனித்து நிற்கும் அற்புதக் கவிஞர்.