ஒரு வழியாக..
சந்தேகத்தை இடவலமாக அதக்கி வைத்திருக்கும்
கன்னக் கதுப்பில்
ஓராயிரம் அர்த்தக் குமைச்சல் ஊறுகிறது
எதுவும் பயன்படப் போவதில்லை
நீயும் நானும் ஒப்புக்கொள்ள விரும்பும் சமரசத்தை
தொலைத்துவிட்டேன்
பழியை எண்ணி
மனதை அஞ்சி
பெருங்காட்டின் இடைவழியில் சரித்து உருட்டித் தள்ளும்
பாதாள அடுக்குகளில் மோதி பிளந்தது
யோசனையின் பின்மண்டை
தலைகீழ் கோணத்தை நேர்ப்படுத்திக்கொள்ள
நான் எனக்கு ஒரு தூக்க மாத்திரையைப் பரிந்துரை செய்கிறேன்
கனவுகளின் இரகசிய கதவுகள் திறந்ததும்
வெளியேற வேண்டியது முதலில் தன்மானம் அல்ல
●●●
அம்முனையிலிருந்து..
நிர்க்கதியை கையில் வைத்திருக்கிறாய்
வெகு காலமாக
இப்படி கொடு
சற்று நேரம் என்னிடம் இருக்கட்டும்
உன் பாதையில் நான் போகிறேன்
எனதில் நீ போ
திரும்பி வரும்போது அது
என்னவாகவோ இருக்கட்டும்
●●●
உனதல்லாத எனதென..
ஒரு சிறிய வரவேற்பறையில்
கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தோம்
நிறைய அமைதி பரவி கிடந்தது
டீப்பாயில்
நேற்றைய காத்திருப்பை
நேற்றைய நிரலை
நேற்றைய மௌனத்தை
நேற்றைய அதிருப்தியை
இன்றைய கணமாக்கி
கண்முன்னே
புதிர் கட்டங்களாகச் சுழற்றி வைத்திருக்கும்
இந்த அசௌகரிய நிலையை
என்ன செய்வது என்று
நம் இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை
●●●
பிரிவின் பொருட்டு..
இப்படியான இரவுகளை
உன்னுடைய சின்னஞ் சிறிய பர்ஸில்
பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவே உன்னிடமிருந்து
கற்றுக்கொண்டேன்
ஆனால்
வெறுமை நிரம்பிய ஒரு நீண்ட பகல் பொழுதை
டிஷ்யு பேப்பரைப் போல மடித்து
கையோடு எடுத்துப் போகும்
வித்தையை மட்டும் தவிர்த்திருந்தேன்
●●●
அப்படிப் பார்க்கப் போனால்..
தயவு செய்து
தயவு செய்யாதே
அவமானத்தின் நிழல்
மூக்கு நுனிக்கு கீழேதான் காத்துக் கிடக்கிறது
ஒவ்வொரு தயவின்போதும்
அதன் அசைவற்ற அடர்த்தியை நுகர்கிறேன்
நீயோ
கருணை ததும்ப வெளியேறுகிறாய்
●●●
காகிதத்தின் முடிவிலியாகி..
சிறிய வனமொன்றை பேப்பர் வெயிட்டுக்குள்
வார்த்து வைத்திருக்கிறாய்
தொலைந்து போகும் காரணங்களோடு
திரும்பி வர முடியாத எல்லைக் கோட்டினை
இலை உதிர்ந்த மரத்தின்
முட்டி புடைத்துக்கொண்டிருக்கும்
வேர்த்தண்டில் நிலத்தைத் தொட்டு கீறி வைக்கிறேன்
இனியும் என்னைத் தேடும் முடிவுக்கு
நீ வரும்போது
இரவில் வெளிச்சம் தொடுக்கும் பிறை நிலவுக்காக
காத்திருந்து
ஜன்னல் விளிம்பில் வாகாய்
அந்த பேப்பர் வெயிட்டை கொஞ்சம் நகர்த்தி வை
கவிஞர் இளங்கோவின் கவிதை எல்லாமே புதிர்தன்மையும் அடர்த்தியும் மிக்கவை. இந்தக் கவிதைகள் புரிய கவிதை பித்து தேவை. கவிதை புரிய கவிஞர் ரேவா குரல் உதவுகிறது. இளங்கோவின் கவிதைக்கு என வார்க்கப்பட்ட குரல் ரேவாவின் குரல். பர்பெக்ட் கெமிஸ்ட்ரி.