1.
மறத்தல்
ஒரு இனிய
சுபாவமாகத் திரள்கிறது
கதவுகளின்
இடுக்குகளில் இருந்து
ஏங்கும் தந்தையைக்
கட்டிலின் விளிம்பிலிருந்து
விழப் பார்க்கும் அன்னையை
கோபத்தின் முடிச்சிலிருந்து
விலகமுடியா உற்றவளை என
எல்லோரையும் மறக்க முடிகிறது
எதிரே
சில சொற்கள் இருந்தால்
அதிலும்
அது புதியது என்றால்
தன்னையே
மறக்கவும் வாய்க்கிறது
இவ்வினிய
சுபாவத்திற்காகவே
தினமொரு தந்தையை
பொழுதொரு அன்னையை
கணமொரு காதலை
அழியச்செய்து லயிக்கிறேன்.
2.
யாரும் படிக்காத கவிதையைப்
புரட்டுகிறது ஒரு கை
யாரோடும் போதாச் சொற்களோடு
உரையாடுகிறது ஒரு நாவு
யாராலும் அறியமுடியா அழகோடு
மோதுகிறது ஒரு கண்
யாருள்ளும் அசையாத ரூபத்தைக்
கோர்க்கிறது ஒரு மனம்
யாராலும் படிக்கப்படாதது கவிதைதானா
என்று ஒரு கையும்
யாரோடும் பேசப் போதாதது சொற்கள்தானா
என்று ஒரு நாவும்
யாராலும் அறியமுடியாதது அழகுதானா
என்று ஒரு கண்ணும்
யாருள்ளும் அசையாதது ரூபம்தானா
என்று மனமும்
கேட்டுக் கொண்டிருக்கவில்லை
நம்மைப்போல்.
3. கால்கள்
முன்பு
வாய்க்காலின் சகதிதோய்ந்த
முள்பொதியில்
எந்தச் சரடுமின்றி
நடைபோட்டவைதாம்
இன்று
கரையில்
நனைந்த செருப்புடனே
நிற்கிறது
தாவாதிருக்க
ஒரு நூறு காரணங்களை
அள்ளித்தர இயன்றாலும்
கரையை யாரும்
குறை கூறப்போவதில்லை என
நிச்சயம்
அதற்குத் தெரியும்.
4. நிறைய
நிறையமுறை
என்று சொல்லும்படி
விட்டுவிட்டனர்
அவனை
அவனும் நிறையமுறை
என்று சொல்லும்படி
பற்றிவிட்டான்
அவர்களை.
நிறைய மெய்களோடு
கொஞ்சம் பொய்களைக் கலக்கிறான்
பாலாடையில் பதிந்த
தேயிலைத் துகள்போல்
பெரிதுபெரிதாய்த்
தெரிகிறது அது
நிறைய கலக்கப்பட்ட மெய்
பார்வைக்கு எங்குமே
புலப்படாமல் போய்விட்டது
பிறகு
நிறைய கலந்த பொய்யுடனும்
சொற்பமாய்த் தூவிய மெய்யுடனும்
வருகிறான்
காரிருளில் மினுக்கும்
உடுக்களென
அவை
சிலாகிக்கப்படுவதைக்
காண்கிறான்
பழுப்பு நிற மேகமொன்று
அவன் தலைமேல்
நிழலிடத் தொடங்குகிறது
இனி ஒருபோதும்
எது நிறைய எது குறைய
என்ற கணக்குகள்
தேவைப்படாது
அவனுக்கு
5. பிறைசூடி
முற்றத்துள் ஒடுங்கிய
மெழுகப்படாத திண்ணையே
அவனது தர்பார்
அங்கே ஓர் அமைச்சுக்கான
தீர்ப்புகளும் கவிதைகளும்
பொழியப்படும்
சிலவேளை
எறவானத்திலிருந்து
மன்றாட்டுக் குரல்களும்
இறங்கிவரும்
எங்களிடம் சாதிக்கும்
அதே மௌனத்தால் நிறைந்திருப்பான்
அதற்குள்
தேவர்களும் அசுரர்களும்
மோதும் போர்ச்சத்தமும்
ஒடுங்கியிருக்கும்
காலத்தைத் தாயத்தெனக்
கட்டித் தைத்திருக்கும்
அத்தன்
கண்டத்தைப் பிடிச்சோடி அவுசாரி
ஆலகாலம் ஆலகாலமென
முழுங்குவான்
அம்மை
தினவுகொண்ட
விரல்களுடன் ஓடோடி
விஷமுறிஞ்சிவிட்டு வருவாள்
தெய்வீகத்தின் துர்மணத்தால்
நிறைவுகொள்ளும்
எம் வாசல்.