cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கட்டுரைகள் கவிதைச் சார்ந்தவைகள்

ரேவாவின் கவிதை குறித்த வாசிப்பும் மரபான பொருள் கொள்ளலும்


சில கவிதைகளை வாசித்து மரபான வாசிப்பு என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உடன்வரும் அறிதலின் வெளிச்சம்

துணைக்கு ஆளில்லையென்பதாய் அலறும் குரல் உனக்கு

நீ அதை பரிசீலி

எழுந்து நடக்கிற சொற்பத்தில் மிஞ்சுகிறது

இருப்பு

கடல் பார்க்கும் போது காடு முடைகிற கைகள் உனக்கு

அதைத் திருப்பிக்கொடு

சட்டென விடுவித்திக்கொள்ளும் இந்த பயணம்

என்னை அச்சுறுத்துக்கிறது

மரணத்திற்கு மேலே

ஆமாம் தானே

கைகளை விடாதே

ஜன்னல் கம்பிகளை பச்சிலைகளால் நீதான் வேய்ந்தாய்

கூரைக்கு மேல் வளர்த்துக்கொண்ட இந்த செளகர்யம் தான் கீழே விட மறுக்கிறது.

உனதல்லாத உன்னை

தாங்கிப்பிடி

வேரல்ல விளைவித்தது

சொல் பொறுக்கும் சூட்டை உச்சரிக்கும் உதடுகள் மேல் கோபம் எதற்கு

நினைப்பாய் தானே

ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லா வரிகளைத்

தாங்கிக்கொண்ட நிலமிது

தரமறுக்கும் காற்றை நீயே 

திறந்துவிடு

நிழலுக்கும் மேலாய் இருக்கிறது வெளிச்சம்

நீ அதை பரிசீலி

-ரேவா.

 

இந்தக் கவிதைக்குள் என்ன முதன்மையாக இருப்பதாகத் தெரிந்தது என்றால்,

நீ, என்ற விளிப்பும்,

நான் என்ற தன்னிலை விளக்கமும்

நீ என கவிதை யாரை விளித்தது?

அந்த நீக்குப் பொருந்தும் நான் யார்?

இந்தக் கேள்விகள்தான் முதலில் இந்தக் கவிதையை வாசிக்கும் போது எழுபவை.

அந்த நீ யார் என்பதைப் புரிந்துகொள்வதுதான் அடுத்த கட்டம். அதற்கு நீயுடன் துணை நிற்கும் சொற்களைக் குறித்து ஆராயவேண்டும்.

ஏனெனில், மரபான வாசிப்பு, கவிதையை நேர்க்கோட்டில் வாசித்துப் பழகியிருக்கிறது. அதை மாற்றி கவிதையை குறுக்கு மறுக்காக வாசிக்கவேண்டும்.

கவிதையின் சுதந்திரம் அதன் தொடக்கப் புள்ளியையும் முடிவில்லா வெளியையும் திறந்து காட்டுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

உடன் அறிதலின் வெளிச்சம் என்ற தலைப்பு யாருடனாவது இணைந்தால் அல்லது இணையாக இருப்பதால் கிடைக்கும் ஒளி என்பதாக ஒரு கற்பனையை உருவாக்குகிறது. 

இந்த அறிமுகத்துடன் இந்தக் கவிதையைக் குறுக்கு மறுக்காக வாசித்துப் பார்க்கலாம்.

முதலில் கவிதைக்குள் இருக்கும் நீ என்னவெல்லாம் செய்கிறது என்று பார்க்கலாம்.

அலறுகிறது, முடைகிறது, வேய்கிறது.

அலறும் குரல்.

முடைகிற கைகள்.

நீதான் வேய்ந்தாய்.

துணைக்கு ஆளில்லை என அலறுகிறது.

கடல் பார்க்கும் போது காட்டை முடைகிறது.

ஜன்னல் கம்பிகளை வேய்கிறது.

இந்த இடத்திலிருந்தே இந்த நீ யார் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது.இப்போது கவிதை விடுகதையாகிவிடுகிறது.

 

இப்போது மரபான வாசிப்பு மூலம் நீயைக் கண்டுபிடிக்க முடியாது எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த விடுகதையின் விடையை இந்த மூன்று வரிகள் சொல்கின்றன.

 “கூரைக்கு மேல் வளர்த்துக்கொண்ட இந்த செளகர்யம்.”

 “வேரல்ல விளைவித்தது.”

 “தாங்கிக்கொண்ட நிலமிது.”

இப்போது நீ என்பது மரம் போன்றது. அல்லது மரமேதான்.அல்லது மரம் போன்ற எல்லாமும் செய்யும் மனிதனாக இருக்கலாம்.

 

 

உனதல்லாத உன்னை

தாங்கிப்பிடி

கைகளை விடாதே.

இந்த வரிகளில் உனதல்லாத உன்னை என்பது.

உனதோடுள்ள உன்னை அல்லது உன்னை மறுத்த உன்னை அல்லது நீயல்லாத நீ.இப்படி பலவகையான நீ-யை வரையறை செய்யலாம்.

நானை விளக்கும் மற்றமையாக இருக்கவேண்டிய நீ, அத்தகைய நீயின் மற்றமையாக மற்றொரு நீ இருக்கிறது. அந்த நீ நானாக இருக்கலாம். அதனால் அந்த நானை அதாவது நீயைத் தாங்கிப் பிடிக்கவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.

 

ஏனெனில்  “சட்டென விடுவித்திக்கொள்ளும் இந்த பயணம்

என்னை அச்சுறுத்துக்கிறது

மரணத்திற்கு மேலே ” என்ற வரிகளின் மூலம் அந்த  ‘உனதல்லாத உன்னை’ என்பது நான்தான் என்பது உறுதியாகிறது.

“நிழலுக்கும் மேலாய் இருக்கிறது வெளிச்சம்”

இங்கு நிழல் தருவது நீ .வெளிச்சமாக இருப்பது நான்.

 

“நீ அதை பரிசீலி

நீ அதை பரிசீலி”

என்று கவிதை கெஞ்சுகிறது. நான் நீயைக் கெஞ்சுகிறது

ஏனெனில், நானை நீ உடன் இருந்து அறிந்து கொண்டால் வெளிச்சமான நான் நிழலாக இருந்த நீக்குச் சாத்தியப்படும். மரம் போல் இல்லாமல் மரமற்ற மனிதனாக மாற கவிதைக்குள் இருக்கும் நான் கேட்டுக் கொள்கிறது.


இந்த வகையில் கவிதையை வாசித்தால் முழுமையாக கவிதையின் பொருளைப் புரிந்துகொள்ளலாம். 

அல்லது கவிதையின் பல சொற்கள் மற்ற இணைச் சொற்களுடன் கலந்து கொடுக்கும் பொருளைப் புரிந்து கொள்வதன் மூலம் படைப்புக்கு நெருக்கமாக வாசிக்க முடிகிறது.

இந்தக் கவிதையில் செய்ய முடிந்தது மரபான கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளல் முறைமை. இது மரபான பொருள் கொள்ளும் முறை.


– முபீன் சாதிகா

About the author

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Rathnavel Natarajan

ரேவாவின் கவிதை குறித்த வாசிப்பும் மரபான பொருள் கொள்ளலும்
By முபீன் சாதிகா – அருமையான மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Mubeen Sadhika

You cannot copy content of this Website