cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 கவிதைச் சார்ந்தவைகள் விமர்சனம்

“ழ என்ற பாதையில் நடப்பவன்” – சித்திரங்கள் மொழியாகும் தருணங்களின் தொகுப்பு


பொருளின் பொருளைப் பொருளால் மட்டுமே உணரக்கூடிய பௌதீகச் சாட்சியம் வாழ்வு. அப்பொருளைச் சொற்களால் திரட்டிவிட முடியுமா? எனப் போராடுவது எழுத்து. எழுத்தின் கூர்வடிவான கவிதையால்தான் அதன் சாத்தியங்கள் நெருங்கப்படுகின்றன. இறைவனின் துகளை, இறைவனே துகள் என ஊதிப்பார்ப்பது கவிமொழி. மீவியப்பும் வலியும் நிரம்பத் திரளும் கவியால் மட்டுமே பொருள்படாச் சித்திரங்களை மொழியாக்க முடியும். அவ்வியல்பு கூடிய கவியாகவுள்ளார் பெரு. விஷ்ணுகுமார்.

கேலியோடும் நக்கலோடும் வாழ்வின் காட்சிகளை அணுகுகின்றன, அவரது பெரும்பான்மைக் கவிதைகள்.

“….

இன்றேல் அந்தப்பக்கம்

யாரிடமாவது போய்

அவரைப் பற்றியே விசாரித்துக் கொண்டிருப்பார்”

என முடியும் “ நூதனக் கிறுக்கன்” கவிதையை வாசித்தபோது, “கறுப்பா, குள்ளமா, கனமா ஒருத்தர் இருப்பாருல்ல அவரைத் தெரியுமா?” என வடிவேலுவிடம் சிங்கமுத்து கலாட்டாச் செய்யும் காட்சி நினைவிற்கு வந்தது.

கேலியானதொன்றைச் சொல் படுத்துவதைக் காட்டிலும் கடினமானது மொழியால் காட்சிப்படுத்துவது. அதை நேர்த்தியாகச் செய்து காட்டியிருக்கும் கவிதை, “GOOGLE MAP”. 

“ஆழியுலா” என்ற கவிதையிலும், கலாட்டாச் சித்தரிப்புகள் கற்பனையினூடாகத் தொடர்ந்தபடி உள்ளது.

“உதிரம் தோய்ந்த வேடனின் அம்பிலே

வானத்தைக் கண்டறிந்து களிப்பில்

இமைத்து இமைத்து

பறக்க யத்தனித்துக் கொண்டிருக்கிறது

உடலற்ற கண்கள்”

என முடியும் ”தொடர்தல்” என்ற துன்பியல் பேசும் கவிதையின் தொடக்கத்தில்

”தேவையா இது

பறப்பதற்கென்றே வந்தமர்ந்து

ஒழுங்கு மரியாதையாகப் போயிருக்கலாம்”

எனும் நக்கல் தொனி (Tone of satire) மூட்டமிடுகிறது. 

பல இடங்களில் நக்கலும் கேலியும் காட்சிகளைக் செழுமைப் படுத்தும் வேலையைச் செய்தாலும் சில இடங்களில் இருவேறு உணர்ச்சி நிலை கவிதையில் படிந்து முழுமையடையாமல் செய்துவிடுகிறது. நூதனக் கிறுக்கன் கவிதை முன்னைய பார்வைக்கும் தொடர்தல் கவிதை பின்னைய பார்வைக்கும் உதாரணங்கள்.

வடிவநேர்த்தி:

பல வடிவங்களை முயன்று பார்க்க வேண்டும். உள்ளடக்கத்தின் உணர்வுகளும் காட்சிகளும் கட்டமைப்புகளும் மாறிக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிற எத்தனிப்பு, விஷ்ணுவின் கவிதைகளில் தெரிகிறது. 

பெண்ணின் நெற்றிப்பொட்டைக் குறிக்கும் விதமாக (.) அடைப்புக் குறிகளுக்குள் புள்ளி வைத்தது; இராபர்ட் கிளைவ் பற்றிய கவிதையில் அவரது இறப்புத் தேதியைத் தலைப்பாகக் குறிப்பிட்டது எனச் சில புத்தம் முயற்சிகள் அணிச் சேர்த்துள்ளன.

காட்சியைக் கற்பனை செய்தல்; கற்பனையிலிருந்து காட்சிப்படுத்துதல் என்ற இரு அம்சமும் பெரு.விஷ்ணுகுமாருக்கு இயல்பாகக் கைகூடுகிறது. இரு தளத்திலும் அவரது அகக்காட்சிகள் நயன மொழியில் நடைபோடுகின்றன. காட்சியிலிருந்து கற்பனையாக விரிந்தது எனப் பெருநகரத்துச் சிறுவன் கவிதையைச் சொல்லலாம். கற்பனையிலிருந்து காட்சியாக விரிந்தது என முகமற்ற காற்றாடிகளின் டார்வின் கோட்பாடு கவிதையைச் சுட்டலாம்.

கவிதையின் தலைப்பை (வற்புறுத்தல்) கணிணி நிரலாக்கத்தினூடே (computer programming) அடைப்புக் குறிகளுக்குள் பதிவேற்றி, அதற்குப் விடையாகக் கிடைக்கப் பெறும் தீர்வாகக் (found),’கவிதை; வந்துவிழுமாறு செய்திருக்கிறார் கவிஞர். 

வற்புறுத்தல் என்னும் கவிதையில் அடங்காப்பசிக்கு இரையாகும் பெண்ணின் ஏற்பும் தவிப்பும் ஆபாசக் காணொலி பார்த்து ஆண் உருவாக்கிக் கொள்ளும் மீகாமக் கொப்பளிப்பும் நேரடியாகப் பேசப்படுகிறது.

Grammatical pedantry syndrome – வைத்து எழுதப்பட்டுள்ள “வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்குதல்” என்னும் கவிதை, நம் எல்லோரது வாழ்விலும் நிகழ்ந்த அல்லது இனி நம்மால் நிகழ்த்தப்பட இருக்கும் பாடுபொருள்தான் என்றாலும் விஷ்ணுவின் வியக்கும் இயல்பால் இரசிக்கத்தக்க ஆக்கமாகிறது.

இதே போன்றதொரு கவிதை,

கடுப்பை அழைத்தல்,

”ஹலோ

அவரைக் கொஞ்சம் கூப்பிடுங்களேன்

இவரா

இல்லை அவரில்லை

இவரா

இல்லை அவரில்லை

ப்ப்ப்ச்ச்..

இவராஆ..

இல்லை அவரும் இல்லை

டேய்..

என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது

தேவடியா மகனே

அவரேதான் அவரேதான்

அழைத்ததற்கு நன்றி.

 

இசையின் லயத்திலிருந்து இசைவுகளை இம்சிக்கும் பதிவுகள்:

நூலின் இறுதிப் பகுதியிலான கவிதைகளுக்கு வயலீனா என்று முகத்தலைப்பு வைத்திருக்கிறார் விஷ்ணு. அதற்குக் கீழ் இசையென்பது விழிப்பற்ற வெட்டவெளியில் நிகழும் எதேச்சைகளால் ஆனது என விளிக்கும் சொற்கள் செறிவான சிந்தையின் சுவடுகள்.

தொடக்கத்திலிருந்து மொழியில் நிறைந்திருந்த விளையாட்டுத்தனமும் நையாண்டித்தனமும் இறுதிப் பகுதியில் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. வலி கவிய மனம் சிதறுண்டு ஏக்கமும் துக்கமும் பரவி நிகழும் இசையின் மொழி இங்கு கவிதைகளாகிறது

மேடை, நீர், சலனம் எனும் கவிதையில் சிசு கலைப்பட்டதில் தொக்கியாடுகிறது ஓர் குடும்பத்தின் அவலம் நிறைந்த இசைக்குறிப்பு. விஷ்ணுவின் கவிதைகளில் துன்பியல் பிரக்ஞையை விஞ்சிய தன்னுணர்வில் பிறந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியால் வெளிப்படுகிறது. விஷ்ணுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி விரும்பி புழுவிற்காய் மாட்டித் தவிக்கும் முள் போல் நீங்காது இதயத்தைத் தைக்கிறது.


  • கவிதைத் தொகுப்பு : ழ என்ற பாதையில் நடப்பவன்
  • ஆசிரியர் : பெரு.விஷ்ணுகுமார்
  • பதிப்பு ஆண்டு : 2017
  • வெளியீடு : மணல் வீடு பதிப்பகம்
  • விலை :  ₹100
  • Kindle Edition :

About the author

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப் என்கிற பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஜார்ஜ் இம்மானுவேல் ஜோசப். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் என இலக்கியத்தில் இயங்கி வருகிறார்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website