சோற்றை வேக வைப்பதில் மிகுந்த கவனம் தேவை. வெந்த சோறே வயிற்று அறைகளுடன் சிநேகம் கொள்ளும். கவிதைகளும் வெந்த சோற்றின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். கௌரிப்ரியாவின் ‘ஆழியின் மகரந்தம்’ அத்தகைய தன்மையுள்ள கவிதைகளைக் கொண்டுள்ளது.
கொடுப்பது கால்படிதான் என்றாலும் பல் போக உதைக்கும் மாடு என்பார்கள். அப்படியானதொரு சிரமம் ஏதுமில்லாது தெளிந்த நடையில் எளிதில் நம்மை வந்தடைகின்றன கவிதைகள்.
நாகலிங்கப் பூவாக மாறும் கடல் அலை, ஆழியை மடிக்கும் கலையைக் கற்பித்தல், பார்கோட் பியோனா கட்டையாதல், ஓவியத்திற்குள் சூல் கொள்ளும் கணவன், சொல்லாமையும் கல் ஆதல், பாடலுக்கேற்ப ஆடும் கண்ணாடி துடைப்பான், குறு முதுகில் குதிக்கும் ஆனந்தம் தரும் வேகத் தடைகள்.
அன்றாடங்களில் தான் எதிர்கொள்ளும் அனுபவிக்கும் விசயங்களில் கவிதையைக் கண்டடையும் நுட்பம் இயல்பாக இவர் கைவரப்பெற்றுள்ளார்.
“தனது எளிய வீட்டின்
செம்பருத்திப் புதரில்
பலகோண வெண்பட்டுச்
சிலந்தி வலையில்
பழுத்த சிற்றிலை
சுடர்ந்த காட்சி”
“வெள்ளையடிக்க
மனம் வரவில்லை
எண்ணை பிசுக்கேறிய
பாட்டியின்
தலைமாட்டுச் சுவருக்கு”
“வாழைப் பூ மடல்களுக்கு
வண்ணமிடும் ஆனந்தம்”
“கடல்சாரா மீனின்
கவி நெய்தலிலுண்டு”
“ஒளி மீது ஊறும் சிற்றெறும்பாதல்
காற்றெனும் மாய முது கிழவன்”
என நம்மை வசீகரம் கொள்ளும் வரிகள் தொகுப்பில் வந்துகொண்டே இருக்கின்றன.
வாழ்வில் எதிர்கொள்ளும் சிறு சிறு இடர்களுக்கு நாம் கொள்ளும் எரிச்சலில் ஏராளமான பொக்கிசங்களைத் தவறவிடுகிறோம். இத்தொகுப்பில் கௌரிப்ரியாவின் ரசனை நம்மை வியக்கவைக்கிறது.
எது குறித்தும் பதற்றம் கொள்ளாது அதனதன் போக்கில் அதனதன் குணநலனுக்கேற்றவாறு அணுகி தனக்கான பிரத்தியேக வடிவத்திற்குள் வாசிப்பவர்களை அட எனச் சொல்லச் செய்திடுகிறார்.
ஆதார் கார்டு புகைப்படத்திற்கும், மாற்றம் செய்த ஆதார்கார்டு புது புகைப்படத்திற்குமான மாற்றத்தில் நமக்குள் உருக்கொள்ளும் சமாதானத்தைப் போன்று சில கவிதைகளில் திருப்தி கொள்வதும் நிகழ்கிறது.
வாஞ்சையாய் வருடுகிறேன்
பன்னீர்ப் பூவின்
முனை பிளந்த
நாலாம் இதழை. என முடிவுறும் ‘நான்காம் இதழ்’ போன்று மருத்துவ தொழில்சார் கவிதைகளும் தொகுப்பில் உண்டு. அப்படியான கவிதைகளில் நோய்மை அகற்றும் தாய்மை ததும்பி ஓடுகிறது.
மாற்றிக்கொண்டே வர ஏதேனும் ஒரு டி.வி. சேனலில் குத்தாட்டப் பாட்டை கேட்டதும் நம்முள் உருக்கொள்ளும் எனர்ஜி அன்றைய நாளினை மலர்ச்சி கொள்ளச் செய்யும். ‘ ஆழியின் மகரந்தம்’ தொகுப்பும் அப்படியானதொரு எனர்ஜியை தருகிறது.
உங்களுக்கு வாய்த்திருக்கும் எல்லாவற்றையும் ரசிக்கும் இம்மனப்போக்கை என்றைக்கும் தவறவிடாதீர்கள்.
மகிழ்ச்சி கௌரிப்பிரியா.
நூல்: ஆழியின் மகரந்தம்
ஆசிரியர் : கெளரிப்பிரியா
வெளியீடு : தமிழ்வெளி
வெளியான ஆண்டு : டிசம்பர் -2023
விலை: ₹ 140
நூலைப் பெற “ +91 90 9400 5600