cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கட்டுரைகள்

ப.காளிமுத்து கவிதைகளில் காலப்பொருத்தமும், புதுக்கவிதை முன்னோடிகளின் தொடர்ச்சியும்


காலப்பொருத்தம் :

தீபா 8 வயது கவிதை, சிறுமி ஒருத்தியின் இனிய குழந்தைப் பருவ நினைவுகளை எழுதிக்கொண்டே சென்று, 8 வயதைக் கடந்த பிறகான அவளது வாழ்க்கை பற்றிய அதிர்ச்சியை குறிப்பால் உணர்த்தி முடிகிறது. சமீப காலங்களில் பள்ளிக்கூடங்களிலும், சமூகத்திலும் சிறுமிகள் மீது நடத்தப்படும் வன்முறை, அத்துமீறல், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகளோடு பொருந்திப் பார்க்க கூடிய வகையில் இக்கவிதை அமைந்திருக்கிறது.

கடவுளின் கணினியே களவாடப் படுவதோடு, அந்தக் கணினி ஹேக் செய்யப்பட்டு கணினியின் டி  நினைவகத்தில் ( D Drive ) இருக்கும் தகவல்களும் திருடப்படுகின்றன. கணினியை இழந்த கடவுளுக்கு என்ன ஆகிறது என்பது நயம்பட எழுதப்பட்டுள்ளது. கடவுளின் கம்ப்யூட்டரே பாதுகாப்பாக இல்லையாம், இதில் பக்த்தனின் தகவல்களை முப்பெருஞ் சுவர்களைக் கட்டி பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறப்படுவது வேடிக்கையாக இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

சிறுமி ஸ்டெத்தஸ்கோப் வைத்துக்கொண்டு , டாக்ட்டராகி விளையாடுவது ஒரு கவிதையில் இனிமையாக சொல்லப்பட்டுள்ளது. என்னதான் ஒருபுறம் சிறுமிகள் மீதான தாக்குதல்களும் அடக்குமுறைகளும் வன்கொடுமைகளும் நிகழ்ந்தாலும், கல்வி கற்கும் ஆர்வத்தோடு இருக்கும் சிறுமிகளும், அதற்கு இசைவாக இருக்கும் சூழலும் இன்றும் நிலவுகிறது என்று உட்பொருளாக கூறிச் செல்கிறது இக்கவிதை.

செல்போன் இல்லாத வாழ்க்கையை எண்ணியே பார்க்க முடியாது என்பதை செல்போனில் ஓர் எண் இல்லாமல் போனால் என்னாகும் என்று எண்ணிச் சொல்கிறது ஒரு கவிதை.

90களுக்கு முன்னர் பிறந்தவர்கள் திருமணமாகி , கிழவர்களாகவோ பூமர் அங்கிள்களாகவோ ஆகிவிட்டனர். இந்த 2K கிட்ஸ் , இன்பம் மற்றும் துய்ப்பில் வெறிகொண்டு அலைகின்றனர். இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட 90sகிட்ஸ் நிலையை இத்தொகுப்பில் உள்ள சில கவிதைகள் தொட்டுச் செல்கின்றன.

Alternative Truth என்ற வாதம் மாலன் போன்ற மெத்தப்படித்த அதிமூத்த ஊடகவியலாளர்களாலும், மெட்டா பிக்‌ஷன் என்ற பெயரில் சில போஸ்ட் மார்டனிச எழுத்தாளார்களாலும் முன்வைக்கப்படும் நிலையில், அந்தக் கருத்தை ஒட்டியும் வெட்டியும், சில வண்ண காகங்களைக் கொண்டு கொத்தித் தத்தித் பறக்கிறது ஒரு கவிதை.

குடிப்பழக்கம் இன்று இயல்பான திரிபாக , திரிபான இயல்பாக மாறிவிட்டது. அதிலும் சாலைகளிலும் பேருந்துகளிலும் தென்படும் டாஸ்மாக் குடிகாரர்கள், சட்டை கசங்காமல் பகட்டாக குடிக்கும் தனியார் ஏசி பார் குடிகாரர்கள் என்று வர்க்கம் சார்ந்து இரண்டு வகைக் குடிகாரர்கள் இருப்பதை சுட்டிச் செல்கின்றன இரு வேறு கவிதைகள்.

கைகுலுக்கல் அற்றுப்போன காலம் ஒன்று வரும் என்று அறியாமலேயே எழுதப்பட்டிருக்கும் , கைகுலுக்கலைப் பற்றி ஓர் கவிதையின் கனம் , கரோனா காலத்துக்குப் பிறகு கூடித்தான் போகிறது .

கல்விக் கூடங்களில் , நாட்டின் உயரிய பல்கலைக் கழகங்களில் கூட நிகழும் கொலையா தற்கொலையா என்று அறிய இயலாத இறப்புகளை , அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை, கைப்பற்ற செல்போனில் இருந்து வெளிவராத உண்மைகளையும் சுட்டியும் குறித்தும்  டைரியின் கிழிக்கப்பட்ட பக்கங்களைப் பற்றி சொல்லிச் செல்கிறது ஒரு கவிதை.

மழைப்பாறையில் மகிழ்பெயர்களை எழுதிச் செல்லும் காதலர்களை பற்றி எழுதி இருப்பது கவிதை அல்லாமல் வேறென்ன ?

புதுக்கவிதை மரபின் தொடர்ச்சி:

யூமாவாஸுகியின், கண்டராதித்தனின் கவிதைகளில் வரும் சிறுமிகளின் தொடர்ச்சியை, இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுமிகள் பற்றிய இரு கவிதைகளில் காணலாம்.

கைகுலுக்கல் பற்றிய கவிதை , ஆத்மாநாமின் முத்தம் பற்றிய கவிதையை மெலிதாக நினைவூட்டிச் செல்கிறது.

யூட்யூப் வீடியோக்களிலும், புதுக்கவிதைகளிலும் அதிகம் இடம்பெறும் விலங்கு பூனை. ப.காளிமுத்துவின் கவிதைகளிலும் பூனைகளைப் பற்றிய கவிதைகள் இருக்கின்றன.

தனது அஞ்சலிக்கு ஒட்டப்பட்ட சுவரொட்டியில் இருந்து இறங்கி தெருவில் நடக்கும் மனிதன், மரத்தின் இலைக்குள் வாழும் மனிதன் போன்ற கவிதைகள் , மேஜிக்கல் ரியலிசம் எழுதும் சிலரின் கதைகளை, கவிதைகளை நினைவுபடுத்துகின்றன.

வயோதிகன் ஒருவன் மட்டும் வாழ்ந்து இறந்த ஒற்றை வீட்டைப் பற்றிய கவிதை, ஜெயமோகனின் டார்த்தீனியம் நாவலின் கடைசியில் வரும் கிழவனின் வீட்டை , கிழவனை நினைவுபடுத்துகிறது. அதுதான் , பலரையும் படுத்துகிறதோ ?


 

About the author

பா.சரவணன்

பா.சரவணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website