ஒருவர் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருப்பார். எளிமையாக உடுத்துவார். இனிதாகவும் தெளிவாகவும் பேசுவார். அன்பாக இருப்பார். கடமையைச் செய்துகொண்டு கட்டுப்பாட்டோடு கண்ணியமாக வாழ்வார். அமைதியாகவும் இன்பமாகவும் இருப்பார். இந்த ஒருவர் என்பது ஆண் பாலை மட்டும் குறிப்பதல்ல , எல்லாப் பாலுக்கும் பொதுவாக ஒருவர் என்று எழுதுகிறேன்.
திடீரென்று எல்லாம் மாறிவிடும்.
படாடோபமாக (பந்தாவாக) உடுத்தத் தொடங்கிடுவார். வேலையில் கவனம் இழப்பார். திடீரென்று கடும் சொற்களைப் பேசுவார். உடலை முன்னிலைப்படுத்திக் காட்டுவார் ( Exhibitionism) . உடலின் ஈர்ப்பு மிகு அங்கங்களைக் காட்சிப்படுத்துவார் . தலைமுடியின் சிறு வடிவம் முதல் கால் நகத்தின் பளபளப்பு வரை அதீத அக்கறை கொள்வார். எடுத்துக்காட்டாக,ஆண் எனில் எப்போதும் டீசர்ட் அல்லது சட்டை அணிந்தே வெளியில் வருபவர், திடீரென்று திறந்த மார்புடன் உலவுவார். மிகக் குட்டியான ஷார்ட்ஸ் உடுத்துவார். வேட்டியை, கைலியைத் தொடை தெரிய ஏற்றிக் கட்டித் தெருவில் திரிவார். பெண் எனில் , ஆண்களின் பார்வையில் கோடுகளும் புள்ளிகளும் தெரியும் படி பொது வெளியில் தோன்றுவார். மொழி கூட மாறிப் போகும். இரட்டைப் பொருளிலோ, காமம் பொங்கும் மொழியோ பேசத் தொடங்குவார். இவையெல்லாம் அவரது இயல்பிலிருந்து திரிபாக நிகழும் மாற்றங்கள். இங்கு இந்த மாற்றத்தைக் குற்றம் என்று சொல்லவோ, ஒழுக்க விழுமியங்களைத் தூக்கிப் பிடிக்கவோ, பண்பாட்டுப் போலீஸ் வேலை செய்யவோ இதைச் சொல்லவில்லை. ஒருவரின் இயல்பு எனப் பல ஆண்டுகளாக இருந்த ஓர் வாழ்க்கை முறையிலிருந்து எப்படி மாறி விடுகிறார் என்பதைச் சுட்டவே இந்த நடத்தை மாற்றங்கள் சுட்டப்படுகின்றன.
உடனே பணி இடத்தில் இருப்போர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தினர், அவரைப் பற்றி எதிர்மறையாகப் பேசத் தொடங்குவர். அவரது செயலுக்கு அவரவர் அறிவுக்கும் அனுபவத்துக்கும் கற்பனைக்கும் ஏற்ற காரணங்களைக் கற்பித்துப் பேசிக்கொள்வார்கள். ஒன்றை இரண்டாக்குவார்கள் ; இரண்டை இருபதாக்குவார்கள் ; இருபதை இருநூறு ஆக்குவார்கள். ஆனால், அடுத்தவர் வாழ்வை ஆழ்ந்து ஆராயும் இவர்கள் எல்லாம் தவறவிட்ட ஒன்று இருக்கிறது. யாருமே பேசாத அதனைக் கவிஞன் பேசுகிறான்.
“நாம்பாட்டுக்கு செவனேன்னு தானே போய்க்கிட்டு இருந்தேன்” என்கிறார் நடிகர் வடிவேலு , பாதிப்புக்கு உள்ளாகும் அவரது கதாபாத்திரம் ஒன்றில். “ எல்லாம் அவன் செயல்; அவன் இல்லாமல் ஓரணுவும் அசையாது” என்று கடவுளின் மேல் எல்லா பாரத்தையும் சுமத்துகின்றன மதங்கள். “ தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று தனிமனிதனையே அவனது வாழ்வுக்கு முழுப்பொறுப்பாக்குகின்றான் பழந்தமிழ்ப் புலவன். “ஒரே இடத்தில் இருக்கும் அல்லது சீரான வேகத்தில் நகர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பொருளின் மீது வேறு விசை ஏதும் செயல்படாத போது அது அப்போது இருக்கும் நிலையிலேயே – அதாவது அதே இடத்திலேயே இருக்கும் அல்லது ஒரே வேகத்தில் தொடர்ந்து நகர்ந்துகொண்டு இருக்கும்” என்கிறான் நியூட்டன், இயக்கத்தின் முதலாம் விதியில் (Newton’s first law of motion) . இவற்றில் எது சரி ? ஒரு மனிதர் அவரது போக்கிலிருந்து தடம் மாறிப் போக, தடுமாறிப் போகக் காரணம் என்னவாக இருக்கிறது ?
இந்தக் கவிதையில் பார்ப்போம் :
நடை
வழியும் நேர்வழிதான்
நூல் பிடித்தாற்போல
நடையும் எனது நேராகவே இருந்தது.
உடன் நடந்த ஒருவன்
தடுமாறி என்மேல்
விழுந்து கெடுக்கிறவரை.
- கவிஞர் ராஜ சுந்தர ராஜன் , முகவீதி கவிதைத் தொகுப்பு பக்கம் 77
இந்தக் கவிதை காட்டும் வாழ்வு காமம் சார்ந்த நடை மாற்றத்துக்குப் பொருந்துவதைப் போலவே, நடத்தை மாற்றத்தைப் போலவே ஊழல், மனப்பிறழ்வு, விபத்துகள் எனப் பல நிகழ்வுகளுக்கும் பொருந்தி இருக்கிறது. அந்த மாற்றத்தின் காணாக் கோணத்தைக் காட்டுகிறது இக்கவிதை.