cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கட்டுரைகள்

எனக்கு பிடித்த கவிதைகள்


 எனக்குப் பிடித்த கவிதைகள் எனும் இந்த வரிசையை பெண் கவிஞர்களைக் கொண்டே நிரப்பத் திட்டம். கவிதைகளில் – கவிஞர்களில் பால் பேதம் தேவையா? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால், இத்தொடர் அதற்குப் பதிலளிக்கும் என்பதை மட்டும் உறுதிபட நம்புகிறேன்.

பொதுவாகவே பேரிடர்களின் காலங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான். புயல், மழை, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்களே போதுமான அளவு துயரத்தைத் தரும் வேளையில், அவை போதாதென்று போர் என்கிற செயற்கை பேரிடரையும் மனிதர் உருவாக்கிக் கொள்கின்றனர்.

உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் போர்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. நன்கு தெரிந்த உதாரணம், தற்போதைய உக்ரைன் – ரஷ்யா போர்.

தமிழ்நாட்டில் இருக்கும் நமக்கு நேரிடையான போர் அனுபவங்கள் இல்லை. எனினும், நம் தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் அவதியுற்றதை உயிரும் உடலும் பதறப் பதற உணர்ந்தே இருந்தோம். போரின் போது பெண்கள் அடையும் பல்வேறு துன்பங்களைக் குறித்து ஈழத்து பெண் கவிஞர்கள் காத்திரமாக எழுதிய கவிதைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக.. அ. சங்கரி அவர்கள் எழுதிய “இடைவெளி” என்னும் கவிதை.  1986ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டம் வெளியிட்ட, “சொல்லாத சேதிகள்” என்கிற தொகுப்பில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.

போராளியாகப் பயணத்தைத் துவக்கியிருக்கும் நண்பன் மேல் கொண்ட ஈர்ப்பு, காதலாக பரிணமிக்கும் தருணத்தை அழகாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது இக்கவிதை. ‘எந்த சிறு நிர்பந்தமும் அற்ற சுதந்திரமான என் காதலை, பேதையின் நேசமாகவே நீயும் புரிந்து கொள்வாய் என அஞ்சுகிறேன். என்ன செய்ய.. நான் விடுதலை அடைந்தவள். உன்னால் அந்த உச்சிக்கு வர இயலாதே’ – என்று முடியும் இடத்தில், போராட்டமானது பாலின சமத்துவத்தையும் கோரி நிற்பதாக மற்றொரு வடிவம் எடுப்பதை உணர முடியும்.

 

இடைவெளி

உனது கையினைப் பற்றி
இறுக்கிக் குலுக்கியும்
நெற்றியில் ஒரு சிறு
முத்தம் இட்டும்
எனது அன்பினை
உணர்த்தவே விரும்பினேன்.

நண்பனே
இராக்குயில் கூவும்
சோளகக் காற்றின் உறுமல் கேட்கும்
நடுநிசிப் போதிலும்
கூர் உணர்திறனும்
விழித்த கண்ணுமாய் கடமையாற்றுவாய்.

என்றும்
மனித வாழ்க்கை பற்றியும்
எமது அரசியற்சூழல் பற்றியும்
உயிர்ப்பாய் இயங்கும்
உன்னை நோக்கி
வியப்பும் உறுவேன்
அவ் வியப்பும்
நீண்ட கால நெருக்கமும்
என்னிற் காதலை விளைக்கும்.

அக்காதலை
முத்தமிட்டும்
நெற்றியை வருடியும்
உன்னிரு கைகளை
இறுகப் பற்றியும்
உணர்த்த விரும்பினேன்.

எனது காதல்
சுதந்திரமானது
எந்தச் சிறு நிர்ப்பந்தமும்
அற்றது;
எனது நெஞ்சில் பெருகும்
நேசத்தின் ஒரு பரிமாணம்.

எனினும் நண்பனே
ஒரு பெண்ணிடம்
சொல்வது போலவும் உணர்த்துவது போலவும்
உன்னை அணுக அஞ்சினேன்.

பறவைகள் போலவும்
பூக்கள் போலவும்
இயல்பாய்
மனிதர்
இருக்கும் நாளில்
நானும் உனது அருகில் நெருங்குவேன்.

பெண்ணை
என்றும் பேதையாகவும்
ஆணை
வீரபுருஷ நாயகனாகவும்
நோக்கும் வரைக்கும்
எனது நேசமும்
பேதை ஒருத்தியின் நேசமாகவே
உனக்கும் தெரியும்.

அதை நான் விரும்பினேன்
எனது ந்ண்பனே
இந்த இடைவெளி
எமக்குள் இருப்பின்
எனது கதலை
உணரவே மாட்டாய்.

என்ன செய்வது?
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால் அந்த உச்சிக்கு
வரமுடியாதே!

-அ. சங்கரி


ருத்தலை உணர்தல் என்பதில் இருந்தே அனைத்தும் தொடங்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தன்னை உணர்தல் எனலாம்.

மற்றவர்கள் பார்வையில் எப்படியாக இருப்பினும், நமது பார்வையில் என்னவாக இருக்கிறோம் என்பதே நம்மை – நமது ஆளுமையைத் தீர்மானிக்கிறது.

பெண்ணிற்கென தனித்த அடையாளங்களை சமூகம் மறுத்தே வந்துள்ளது. அல்லது எதிர்மறையான அடையாளங்களை அவள் மேல் போர்த்துகிறது.

தனது 23வது வயதில் ‌’கைக்கெட்டியவரை எனது அடையாளங்களை அழித்து விட்டேன்’ என்பதை தற்கொலைக் குறிப்பாக எழுதிச் சென்ற கவிஞர். சிவரமணியின் கவிதை இது.

‘உங்கள் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால் நீங்கள் என்னைத் தள்ள முடியாது’ என்று தொடங்கும் அவர்,  ‘தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் நான் பிரசன்னமாகியுள்ளேன்’ என்று ‌தனது இருத்தலைக் கூறும் வரிகள் எவ்வளவு வலி மிகுந்தவை?

காலங்காலமாக ஒடுக்கப்பட்டோரின் குரல்கள் அங்ஙகனமாகவே ஒலிக்கின்றன.  அவர்களின் நியாயங்கள் நிராகரிக்கப்படும் போது இங்கு அனைத்தும் அழுக்கு படிந்தவையே..

 

அவமானப்படுத்தப்பட்டவள் 

உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

சிவரமணி

(1990) தற்கொலைக்கு ஒரு வருடம் முன் எழுதியது.


பெண்ணானவள் ஒவ்வொரு இடங்களிலும் இரட்டைத் நெருக்குதலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒன்று, இச்சமூகம் அவள் மீது வைக்கும் நெருக்குதல். மற்றது, குடும்பம் என்கிற பண்பாட்டு அலகு கொடுக்கும் நெருக்குதல்.

இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். பல வேளைகளில் எது வெளியில் இருந்து வருவது? எது உள்ளிருந்து எழுவது? என்பதில் கூட குழப்பம் விளையலாம்.

மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படும் குடும்ப அமைப்பானது ஒடுக்குமுறைக்கான ஆகச் சிறந்த கருவியாகிறது. யார், எதை, எப்படி செய்வதென்று ஒவ்வொன்றிற்கும் கறாரான அளவுகோல்களைக் கொண்டிருக்கிறது.

யுத்தத்தின் போது எதிர்கொள்ள வேண்டி இருக்கும் பல்வேறு துன்பங்களோடு சேர்த்து, பெண்கள் பாலியல் சார்ந்த  வன்முறைகளுக்கும் கூடுதலாக இலக்காகின்றனர்.

வேட்டையாடும் மிருகத்தின் கண்களைக் கண்டு காதல் வசப்படுவது இயலாத ஒன்று. பயத்துடனும் அருவெறுப்புடனும் கடந்து போகும் பெண்ணிற்கு அதுவே வாழ்க்கை என்றானால்..? காதல், வன்மொழியாகத் தான் இருக்கும்.

 ஆழியாள் அவர்கள் எழுதிய  கவிதை .

 

மன்னம்பேரிகள்

காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்தி சந்தைகளில்
பிரயாணங்கள்; பலவற்றில் கண்டிருக்கிறேன்.

நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.

தந்திக் கம்பத் தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம் மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும் *
அவள் கோணேஸ்வரிக்கும் **
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் – நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையை புரிந்து கொண்டேன்.

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.

ஆழியாள்
10.07.1997

* மன்னம்பேரி(22) 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். 1971 ஏப்பிரல் 16இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்ட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

** கோணேஸ்வரி(33) அம்பாறை சென்றல் கேம் 1ம் கொலனியைச் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியபின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்;.


த்தனைக்குப் பிறகும் ஒரு பூ பூக்கும் தானே செய்கிறது?’ என்று எளிதாகக் கடக்க இயலாது, மகளிரின் வாழ்வை.

களத்தில் நிற்பவருக்கு கண்களுக்குத் தெரிந்த எதிரி மட்டும் தான். ஆனால் அருகாமையில் நிற்பவருக்கு யார் யார் எதிரிகள் என்றே தெரியாத நிலை. கையில் வாளெடுத்து சுழற்றுவது பயிற்சியில் வாய்த்துவிடும். யாருக்கு எதிராக வாளெடுப்பது என்பதை எங்கனம் அறிவது?

போர்க்களம் என்பதனால் பசி இல்லாமல் போய் விடுவதில்லை. வயிற்றோடும் கையில் வைத்திருக்கும் மகவோடும் போராடும் தாய், மகனிடம் எதைச் சொல்ல முடியும்? இன்னும் கொஞ்ச காலத்தில் அவன் கேள்வி கேட்க மாட்டான் என்று ஆறுதல் அடைய மட்டுமே முடியும்.

‘திருமணத்தன்று வைத்த முருங்கை பூத்து விட்டது. மகனும் பாலர் வகுப்பிற்கு செல்லும் அளவு வளர்ந்து விட்டான். காத்திருந்த நாட்களோ கணக்கு வைக்க முடியாமல் போய்விட்டது. ஆயினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. உன் காலடி சத்தத்திற்குக் காத்திருக்கேன்’ – என்பதைவிட மகத்தான காதல் வேறெதுவும் இருக்க இயலும் என்று தோன்றவில்லை.

‘இரவுகள் தூங்குவதற்கென்பது என் வரையில் பொய்யாயிற்று’ என்கிறது மைத்ரேயியின் ”காத்திருத்தல் “ கவிதை.

 

காத்திருத்தல்

 

நேற்றுப் போல இருக்கிறது

எங்கள் திருமணம் நடந்தது.

 

பந்தலைப் பிரிக்கு முன்,

வந்த உறவினர் போகுமுன்

நீதான் போய்விட்டாய்

 

என் மன ஆழத்திற்கு

இது தெரிந்து தானிருந்தது

இருந்தும்,

திருமணம் சிலவேளை

உனை மாற்றலாமென…

பலவந்தமாக –

ஆம், பலவந்தமாகத்தான்

உன்னை மணந்தேன்,

எனக்கு அப்போது

உன் லட்சியத்தின் களபரிமாணமோ

உன்னைத் தடை செய்ய முடியாதென்பதோ

விளங்கியிருக்கவேயில்லை.

 

இப்போது துக்கப்படுகிறேன் –

அன்று உன்னைத்

தடைசெய்ய நினைத்ததற்கு.

உன் லட்சியத்தின் நியாயம்

இப்போதுதானே புரிகிறது.

 

எனினும் ஒரு சந்தோசம்

மனைவியான படியால் தானே

உன் சாதனைகளில் மகிழ்தலும்

உனை நினைத்து அழுதலும்

சாத்தியமாயின.

 

இரவுகள் துாங்குவதற் கென்பது

என்வரையில் பொய்யாயிற்று.

நிசப்த ராத்திரிகளில்

இடையீட்டு எழும் ஒலிகளில்

காலடி ஓசைக்காகக்

காத்திருந்து காத்திருந்து…

கனத்த இருளினுள்

கறுப்புப் பூனையைத்

தேடித் தேடித் தோற்று..!

 

சிலவேளை காலடிகள்

கனத்த பூட்ஸ்களாய்

நெஞ்சில் –

கண்ணிவெடி விதைக்கும்.

 

ஆனால்,

நான் இன்னும்

நம்பிக்கை இழக்கவில்லை.

 

காத்திருந்த இரவுகள்

கணக்கு வைக்க முடியாமற்

பெருகி விட்டன

கல்யாணத்தன்று தட்ட முருக்கு

கொப்ம் கிளையுமாய்

சிவப்பாய்ப் பூத்திருக்கு,

 

பாலர் வகுப்புக்குச்

செல்லும் மகன் கேட்கிறான்:

“ஏனம்மா

எங்கட வீட்டுப் பின்கதவை  –

நீ பூட்டுறேல்ல? –

 

“முன்கதவு திறந்திருந்தா மட்டும்

கண்டவன் எல்லாம் நுழைவான்

பூட்டு பூட்டு எண்டுவாய்.”

 

எனது காத்திருத்தல்கள்

அவனுக்குப் புரிய

இன்னும் சில காலமாகாலாம். அதன் பின்,

அவன் கேள்வி கேட்க மாட்டான்.


Art Courtesy : Illustration,Digital Art,CGI . behance.net


About the author

முத்து காந்திமதி

முத்து காந்திமதி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website