cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கட்டுரைகள்

கவிதை கையறுநிலை


“கவிதை செத்துவிட்டது, அந்தப் புகழுடம்பிலிருந்து நூறு நூறு புழுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன” என்ற தற்கருத்தியல்கள் எப்போதும் சொல்லப்பட்டுக்கொண்டே வருகின்றன.

ஈராயிரம் வருடங்களாக கவிதைகளும் ,கவிதையியல்களுமாக வாழ்ந்து வளர்ந்து வரும் சமூகம் நாம். கவிதை என்ன தரும்? கவிதைகளின் பயன் மதிப்பு என்ன ? என்பது போன்ற கேள்விகளுக்கு ஈராயிரம் ஆண்டுப் பாரம்பரியத்தை, அதன் அறுபடாத சங்கிலித் தொடரை நாம் உதராணமாகக் காட்டமுடியும். எது கவிதை? எவையெல்லாம் நல்ல கவிதை என்ற வரையறைக்குள் பல்வேறு உளச்சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் கவிதை என்ற தொடரிஆதி_மூதாதைகளிடமிருந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் பேரியக்கம். மொழியை எந்த அளவிற்கு விரித்து, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நாம் நகர்த்துகிறமோ, அந்த அளவிற்கு அதன் உயிர்ப்பு இயங்குகிறது.

அவ்வகையில் கவிதை, காலந்தோறும் தன்னை புதுப்பித்தே வந்திருக்கிறது. புத்தம்புதிய சொற்சேர்க்கைகள், பாடுபொருள்கள் என அக, புற மாற்றங்களுக்கு தகவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இப்பாரம்பரியமிக்க கவிதை மரபில் வேறெந்த வகைமையையும் விட கவிதையே அத்தனை சுலபமாய் சீண்டலுக்கும், பகடிக்கும் உள்ளாக்கப்படுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை, போலவே கவிஞர்களும் கூட.

எப்போதும் ஒரு மொழியில் புதிய புதிய சொல்லாட்சிகள் கவிஞர்களிடமிருந்தே வரும். பல்வேறு பார்வைக்கோணங்களின் வழியாக நம்முடைய காலத்தை நமக்குக் காட்டும் அற்புதம் கவிதைகளிலேயே இருக்கிறது. சொற்களிலும், அதன் தரிசனங்களிலுமாக ஒரு கவிஞன் நமக்குக் காட்டித்தரும் உன்னதங்களைத்தான் நாமெல்லோரும் மனனம் செய்து படித்துத் தேறி வந்து நிற்கிறோம். பக்தி, திணை, காதல்,வீரம் இப்படி அள்ளக்குறையாத செல்வமரபை அடைகாத்தல்லவா வைத்திருக்கிறோம்.

ஆனாலும் கெடு வாய்ப்புகள் மிகுந்ததாக இருக்கிறது இந்த காலம். எங்கும் சந்தை மயம். சகலத்தையும் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்துவிட்ட கார்ப்பரேட் வியாபாரங்கள். ஒரு மனிதனாக இருப்பதின் அத்தனை துர்பாக்கியங்களையும் சுமந்து அலைகிறவனாக காலம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கொசு பேட், சுவற்றேராங்களில் எறும்பு சாக்பீஸ் கோடுகள், விளக்குமாற்றடிக்கு நைந்து விழும் கரப்பான் பூச்சிகள்….. எப்போதும், எதையேனும் அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும் மனிதர்களுக்கு.

கவிஞனோ, தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டவன். மூர்ச்சையாகிக் கொள்ள முடிவதுமில்லை. அவனின் துன்பியல்கள்,வாதைகள், சின்ன மகிழ்ச்சிகள், எதுவொன்றையும் கால எந்திரத்தோடு ஒட்ட வைத்துப் பார்க்கும் பரிசோதனைகளிலேயே இருக்கிறான்.

கொஞ்சமும் கலையுணர்வற்ற சமூகத்தின் முன் அவனது ஆடைகள், அம்மணமாக ஸ்கேன் செய்து காட்டப்படுகின்றன.

இந்த இடத்தில் இருந்து கவிஞர் யவனிகா ஸ்ரீராம் ஆழ, அமுந்திப் பிடித்த சொற்கலப்பைக்கு நிலமெங்கும் தடங்கள். தன் கூர்மையான அரசியல் பிரக்ஞையின் மூலம் , அவர் கிளறிப் போட்டுக் கொண்டுபோகும் மண்ணில் வேர் பிடித்து நின்றவைகள் ஏராளம்.
மொழி / காட்சி / விஸ்தாரமான பிரக்ஞை என்ற அவரின் வகைப்பாட்டிற்குள் தொழிற்பட்ட கவிதைகளின் கருக்கள் தமிழ் நிலத்திற்கு முற்றாகப் புதியது. அலைந்த ஊர்கள், ஏறி இறங்கிய மலைகள், சொந்த வாழ்வின் நெருக்கடிகள்……
இது எல்லாவற்றிலுமிருந்து, ஒரு கூரிய அலகின் பசியைச் சமாதானம் செய்து கொள்வதைப் போல வேட்கை மிகுந்த வரிகளை அவரால் எழுதிக் கொண்டிருக்க முடிகிறது.

“ஆசியப் பகுதியில் வசிப்பது
தலைக்கு மேல் தொப்பியை
சரியாக வைத்துக்கொள்ள
தாடைகளிலிருந்து பற்களைக் கழற்றுவது”

என்ற வரிகளில் உள்உள்ள நுண்அரசியல் இருபதுஆண்டுகளுக்கும் முந்தைய மூப்புடையது. நிலம், வணிகம், உயிர்கள் என்கிற பன்மயமான கோளமொன்றின் விலகல்அச்சை தன்கவிதைகளில் மிகவும் காத்திரமாகக் கொண்டுவந்து விடுகிறார்.

ஒரு இடதுசாரிக்கவிஞராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவரின், கவிதைகளுக்குள் நுழையும் போதே பார்வைச் சவால்கள் ஏற்பட்டு விடும் வாய்ப்பு உருவாவதை மறுக்க முடியாது.

அடர்ந்த ஒருவரியின் தீவிரத்தை மிக நுட்பமாக நீங்கள் பின்தொடர்ந்து வரும்போதே, அதன் அடுத்தடுத்த தொடர்வரிகள் புலப்படாத தேசத்தின் ஒருநிலத்தில் அதன் கள்ளத்தனத்தை சுட்டிக்கொண்டிருக்கும்.

அத்தனை வேகமாக, உங்கள் வாசிப்பின் பயணப்பாதையை மடைமாற்றித் தரும் நுட்பம் கவிஞர் யவனிகாவுடையது.

“சாலை வளையங்களில் அவனது மிதிவண்டி
சுழன்று மறைகிறது
அந்தியில் சிவந்து நீர்ச்சலனமாய்
கானலில் உருவமிழந்து போகிறான்
சூரியக்கோளம் நுழைவாயிலென
தரையில் விழுந்து திறந்து கிடக்கிறது
அனேகமாய் அதற்குள் புகுந்து அதைக் கடந்திருப்பான்
அவ்வளவு வேகம் இருந்தது அவன் கால்களில்
பிறகு அங்கிருந்து பால்காம்புகள் விடைக்க
ஒரு எருமை வெளியேறி வந்தது
அதன் முதுகில் ஒரு தவளை அதன் முதுகில்
மிதிவண்டியின் மணல் தடயம்”

சொற்கள் உறங்கும் நூலகம் தொகுப்பில் தடயம் என்றொரு இக்கவிதை.

மிதிவண்டியும், கடந்து சென்ற அவனையும், துரத்திக் கொண்டிருக்கும் நம்மிடம், நிதானித்துக் கொள்ள என்ன இருக்கிறது ? என்பதை வினவுகிறது. அதே தொகுப்பில் தரிசனம் என்றொரு கவிதை.

“தனியான வனத்தில் நான் நுழையும்போது
அது நடுங்கிப் பதறுவதை
தன் இனமழியக் கூக்குரலிடுவதை
மலைகள் முட்டிமோதி எதிரொலிக்கின்றன
கடல் எழும்பிக் கரைபுரண்டு கதறுகிறது
வானம் இருண்டு சூரியன் தன் பால்வெளியில்
அதிர்ந்து திடுக்கிட்டுப் போக
பயத்தில் சட்டென ஒரு நதி வற்றிப்போனது
தரிசனம் கண்டவன் மயங்கிக் கிடக்கிறான்
இறந்தவைகளை எழுப்பும் போது
உயிருள்ளவன் அஞ்சுவது பேதமை.
ஒரு போதும் அந்தரத்தில் விளையாது அருகம்புல்”

இந்த வரிகளை எல்லாம் எழுதும்போது, அவரின் மனத்தவிப்புகள் எப்படி இருந்திருக்க வேண்டும். பல்ஸ் மீட்டரின் அபாய அளவீடுகளில் ஏறி ஏறி இறங்கி, சீரற்ற துடிப்புகள், சமன் நிலை குலைத்த நாட்களாக அது இருந்திருக்கும்.

அதனால் தான் பொருட்களுடன் வசிக்க நேர்ந்தாலும் எனது உலகம் கதைகளால் ஆனது. என்கிறார்.

உரையாடாத, உரையாடல் என்னவாக இருக்கும் எனப் பகடியும் செய்து பார்க்கிறார். உரையாடல் நிகழ வாய்ப்பில்லை.

நிலங்களும், மனிதர்களும், தொலைகிற புள்ளியில் நின்று கொண்டு கவாத்து செய்து மீட்டியளிக்கும்மொழி அவருக்குள்ளிருக்கிறது.

புராதனங்களின் தொன்மைக் கதைகள் இழையோட, அதன் நட்டுநடு நரம்புகளை இழுத்துத் தன் காலத்தின் முன்வைக்கும் தீவிரத்தை அவரின் கவிதைகளில் காணலாம்.

நெரிசல் மிகுந்த ஒரு அங்காடித்தெருவை / அதன் கோதுமை நிறப் பெண்களை / மலைபோல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் போனிகளை/ சிறிய சப்பாத்திசுடும் இயந்திரத்தை அவர் எழுதிச் செல்லும் வரிகளுக்குப் பின்னே, ஒரு வாசகன் இந்திய நிலப்பரப்பு முழுமையும் கண்டுவந்து விடுகிறான். கடவுளை ஒரு வஸ்துவைப் போல மாற்றிக் காட்டியவர். முற்காலத்திய காதலிகளின் கனவுகளிலிருந்தும், அவர்களின் முத்த வாடைகளிலிருந்தும் வரிகளைத் தோற்றுவித்துவிடும் வல்லமையை, வரையறைக்கு உட்படுத்திக்கொள்ளாமல் கைவரப்பெற்றிருக்கிறார் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்கள்.

எறிபந்து விளையாட்டின் குறிபோல அவர்கண்களின் குறிகளுக்குத் தப்பாமல் இந்தக்காலம் தன்னைக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. பந்தும் அவர் கைதொட்டே இருக்கிறது. சதா, அவர் எறிந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் சில்லுடைப்புகளைப் பார்த்துக்கொண்டே பின்தொடர்கிற கவிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

கவிகள் எறிகிற வேகத்தில் காணாமல் போனவைகளும், காணாது போகிறவைகளும் காலத்தின் கட்டாயம்.

கவிதை என்பது கையறு நிலை அல்ல, மீட்சி. கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் மூப்புக் கொண்ட விரல்களுக்கு நமது பேரன்புகள்.

About the author

நந்தன் கனகராஜ்

நந்தன் கனகராஜ்

விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தை சார்ந்தவர். தற்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில், ஆலோசகர் பணியிலுள்ளார். "அகாலத்தில் கரையும் காக்கை" என்ற கவிதை நூல் வெளியாகி உள்ளது. பல்வேறு இதழ்களில் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website