cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கட்டுரைகள்

மூன்று கவிஞர்களும் மூன்று கவிதைகளும்


மோனலிசா ஓவியத்திற்கு முன்பாக ஒருவர் நிற்கும் போது அந்த ஓவியத்தைப் பற்றிய பிரமிப்பு என்பது ஓவியத்தில் இருப்பதில்லை. அது ஓவியத்தை பார்ப்பவரின் கண்களிலேயே இருக்கிறது என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம்கவிதை குறித்து பேசுவதற்கு இந்த கருத்து பொருந்தும். கவிதை பற்றிய புரிதலும் வியப்பும் கவிதை குறித்து நம் எண்ணங்கள் எவ்வளவு மேம்பட்டு இருக்கின்றன என்பதை பொறுத்தே அமையும்

ஒரே கவிதை குறித்து மாறுபட்ட பார்வைகள் வரவேண்டும் என்று விரும்புபவன் நான். ஏனெனில், கவிதையை ஜனநாயகப்படுத்த, பரவலாக்க இது பெரிதும் பயன்படும் என்று நினைக்கிறேன்.  அந்த வகையில் மூன்று கவிஞர்களின் மூன்று கவிதைகளில் குறித்து நான் முன்பு எழுதிய குறிப்புகளை உலக கவிதை தினத்தில் நுட்பம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

I

கவிதையின் உண்மையான மதிப்பு உடனடியாக உணரக் கூடிய தனிப்பட்ட நன்மைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலம். ஆனால் நம்முடைய உடனடி சூழ்நிலைகளுக்கு அப்பால் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதற்கான ஒரு வழி கவிதை . அப்படி சிந்திப்பதற்கு வாய்ப்பு அமையும் நாள் மிக அழகானது .

ஒரு கவிதை நம்மை எப்படி கவர்கிறது – கவிதையை ரசிப்பதற்கு தயாராக இருக்கும்போது அது எளிதாக நடக்கிறது. இயல்பிலேயே இரசனை சார்ந்துதான் நான் கவிதைகளைப் படிக்கிறேன் அதிலும் எளிமை உருவாக்கும் அழகு எந்த பேருருவாளும் உருவாக்க முடியாது என்று நினைப்பேன்.
கவிதையில் அமையப்பெறும் உரையாடல் தன்மை எனக்கு வெகுவாகப் பிடிக்கும்,

நான் கண்ணீரை எடுத்துவைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது

அப்துல் ரகுமானின் இந்த வரிகள் உள்ள “போட்டி” என்ற கவிதையைப் பல முறை படித்து ரொம்ப ரசித்திருக்கிறேன் , இந்த ரசனை எனக்கு எங்கிருந்து வந்தது என்றால் கிராமங்களில் கூலி வேலை செய்பவர்கள் அலுப்பு தெரியாமல் இருக்க எதிர்பாட்டு பாடுவதை, விடுகதை போடுவதை அருகிருந்து கேட்டு வளர்ந்ததால் இது மிக நெருக்கமாகிவிட்டது. அப்படியான ஒரு தன்மையுள்ள ஒரு கவிதைதான் நான் மிகவும் ரசித்தது.

கடற்கன்னியும் சில கடற்பறவைகளும் பாடுவதுபோல புனைவை அழகான கவிதையாக சித்துராஜ் பொன்ராஜ் எழுதியிருக்கிறார். அதில் தொழிற்படும் வடிவமே முதலில் எனக்குப் பிடித்தது.

கடற்கன்னி பாடுவதைப் பெரிய பத்தியாகவும் பறவைகள் பாடுவதை சிறிய பத்தியாகவும் அமைத்துள்ள விதம் கடற்கன்னி மற்றும் பறவைகளின் உருவ ஒப்பீடு போல எனக்கு முதலில் தோன்றியது .பிறகு கவிதை நடக்கும் இடம் கடற் புறம் என்பதால் அலைகளின் உயர்வு தாழ்வு (அகடு – முகடு) போல பத்திகளின் அமைப்பு இருப்பதாகவும் பட்டது.

முதலில் இருக்கும் கடற்கன்னியின் பாடல் வெயிலில் தொடங்கி நிழலோடு முடிகிறது. இந்த முரண் இத்தோடு முடிவதில்லை. உள்ளுக்குள்ளே பல படிநிலைகளில் தொடர்ந்து வருகிறது. இக்கவிதை உருவமின்மையை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அதன் தொடக்கமாக உருவமில்லாத வெயில் அமைகிறது.

இரண்டாவது பத்தியில் கடல் பறவைகள் பாடுகின்றன – அதில் கடலுக்கு நெய்தல் என்ற பெயர் எப்படி வந்தது என்ற புனைவு மிக அற்புதமாக உள்ளது. அது கடலுக்கு உருவமில்லை என்று முடிகிறது.

மீண்டும் கடற்கன்னி பாடுகிறாள். கடல் மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி என்ற உவமை மிக அழகானது. அதில் முகம் பார்ப்பது யார்? அதன் எதிரொளி எங்கு செல்கிறது என்பதற்கான பதில் இன்மை என்பதாகிறது . ஒருவேளை வானம் என்றால் அதற்கும் உருவமில்லை. மேலும் இது முதல் பாட்டில் உள்ள பிரகாசமான வெயில் என்பதன் தொடர்ச்சியாக இருக்கிறது .

கடலுக்கு உருவம் இல்லை என்பதைப் பறவைகளை ஒட்டி கடற்கன்னியும் வழிமொழிகிறாள். ஆனால், ஒரு படி மேலே சென்று கடலை திணை மருவிய வெற்றிடமான ஒரு மாய நிலம் என்று முடிக்கிறாள். இப்போது வாசிப்பவருக்கு கடற்பறவைகள் என்ன பாடும் என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

தன்பாட்டில் மனிதர்களை ஏற்றிவைத்த கடற்கன்னிக்குப் பதில் தருவது போல் பறவைகள்,

“மனிதர்கள் காற்றிலேறி வருவார்கள்
கவனம் கவனம்
காற்றும் திணை இல்லாத இடம்”

என்று புதிய பதிலைத் தருகிறது . இது கடற்கண்ணி கடலை திணை மறுவிய நிலம் என்று கூறியதற்குப் பதிலாக அமைகிறது.

பறவைகள் இப்படி பாடியதைக் கேட்ட கடற்கன்னி பறவைகள் எச்சரித்த மனிதர்களைத் திணை மறந்து தன்னிடம் வர வைப்பதற்காக கடலின் மூச்சைத் திணற வைக்கும் கர்ப்பத்தை உருவாக்கப் போவதாக சொல்கிறாள்.
முறையில் திரிந்த நிலத்தைப் பாலை என்று சொல்வது போல கடலுக்குள் பயன்படாமல் இருக்கும் மலைகளையும் பாசிகளையும் உடைய நீர் நிலத்தைப் பாலை என்று சொல்லுகிறாள். இறுதியாக கடலை போதாமை என்று சொல்லி ஆசையை ஒப்பிடுகிறாள்.
இறுதியாக பறவைகள் பாடுகின்றன,

“கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம் கவனம்”

இந்த உரையாடல் இத்தோடு முடிந்து விட்டதா என்றால், இல்லை அது தொடரும். அதைத் தொடர, யார் வேண்டுமானாலும் வரலாம். இந்தக் கவிதையை வாசிக்கும் நீங்களாகவும் இருக்கலாம். நானாகவும் இருக்கலாம்.

கடற்கன்னியும் சில கடற்பறவைகளும

சித்துராஜ் பொன்ராஜ்

கடற்கன்னி பாடுகிறாள்:

இதோ பிரகாசமான வெயில்:
கழுத்தின் பின்புறமாய்த் தூக்குக் கயிற்றின் கனத்தோடும் அசௌகரியத்தோடும் புரள்கிறது.

கடலின் கர்ப்பத்தை என்னுடன் இழுத்து வந்து போட்டதுபோல்
பொன்னிறமான மணலில் சிதறிக் கிடக்கும் நுரைகளின் மத்தியில் கிடக்கிறேன்.

நுரைகளைப்போலவே கடலின் கர்ப்பமும் அரூபமானது.

கடல் நிழல்களோடு கூடித் திளைக்கும் சூரியக் கிரணங்களால் சூலுற்றுத் தன் கர்ப்பத்தைத் தானே யுக யுகாந்திரமாய்க் கலைத்துக் கொண்டிருக்கிறாள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

நெய்வாசக் குழலுடைய ஒரு பெண் ஆயிரமாயிரம் மனிதர்களின்
காலடிகள் தட்டிப்போட்ட மணற்பரப்பில் அமர்ந்தபடியே கருநீல நிறத்தில்
பாடல்களை நெய்து கொண்டிருக்கிறாள்.

மனிதர்கள் வெவ்வேறு சமயங்களில் நெய்த பாடல்களே கடல்.

அதனால் கடலைச் சார்ந்திருக்கும் பகுதியும்
நெய்தல் என்று அழைக்கபடுகிறது.

கடலுக்கு உருவமில்லை.

கடற்கன்னி பாடுகிறாள்:

கடல், மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி.

அதற்கு உருவமில்லை.

அதன் உருவமின்மையின் மீதுதான் மனிதர்கள்
ஆழமான பெருமூச்சுகளின் ஓசையோடு
சலித்துத் திரும்பும் பாய்மரக் கப்பல்களின் வடிவத்தில்
தங்கள் போதை மிகுந்த ஆசைகளை ஏற்றி வைக்கிறார்கள்.

இந்தப் போதாமை எனக்கு வருத்தம் தருகிறது.

கடல், திணை மருவி வெறும் வெற்றிடமாகிப் போன மாய நிலம்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

மனிதர்கள் காற்றிலும் ஏறி வருவார்கள்.
கவனம்! கவனம்!
காற்றும் திணை இல்லாத இடம்.

கடற்கன்னி பாடுகிறாள்:

இடுப்புக்கு மேலே மனிதர்களின் உடம்பும்,
கீழே மீனின் வாலும் உடைய சந்ததியை உருவாக்கப் போகிறேன்.
கடலின் மூச்சுத் திணற வைக்கும் கர்ப்பத்தை
எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு.

ஒரு நாள் மூச்சுத் திணறி மனிதர்கள்
திணைகளைத் துறந்து என்னிடம் வரப் போகிறார்கள்.

இதோ கடலுக்கடியில் மலைகள்,
பவளங்கள் வளர்ந்திருக்கும் காடுகள்,
வயல் வரப்புகளாய் விரிந்திருக்கும் வாசனையுள்ள மண்,
நொடிக்கொரு தரம் இருப்பிடமின்றி
அலைந்து கொண்டிருக்கும் பாலை.

இது, கடல்.

இதுவே போதாமை.
அதனால் இதனை ஆசைக்கு உவமையாய்ச் சொல்கிறார்கள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம்! கவனம்!

எதிர்காலத்தில் இதுவே உங்கள் பாடலாய் இருக்கப் போகிறது.

நன்றி: யாவரும்.காம்


II

ஒரு கவிஞன் கற்பனை (அல்லது புனைவு), இசை, கதை, கட்டமைப்பு, ஆகிய நான்கு மனோபாவங்களில் ஏதாவது ஒன்றில் பிறக்கிறான் அதே நேரத்தில் மற்ற மூன்றையும் வலுப்படுத்துவதற்கு உரிய வேலையை அப்படி உருவாகும் கவிதைக்கு உள்ளே தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறான் என்கிறார் Gregory orr.

ஓலைச்சுவடி இதழ் 8 இல் வெளிவந்துள்ள ச.துரையின் “அலுவலகம் சில குறிப்புகள்” கவிதை மேலே குறிப்பிட்ட கற்பனையில் பிறந்து கதை கட்டமைப்பு இசை ஆகிய மூன்றையும் வலுப்படுத்துவதற்கு கூடிய வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

நிறங்களின் விளிம்பில் இருந்து தொடங்கும் கவிதை “எப்போதைக்கும் போல்தான்
அந்நாளும் கொடுக்கப்பட்டது” என்று அருகில் உரையாடும் ஒரு நண்பனின் பேச்சைப் போல தொடங்குகிறது. ஆனால் “கவிதை ஒரு சுழல் நிலை” என்று ஆலிஸ் புல்டன் கூறியதுபோல தொடர்ந்து செல்கிறது.

கற்பனை அல்லது புனைவு என்ற மனோபாவத்தில் பிறக்கும் கவிஞன் தொடர்ந்து கதையையும் கட்டமைப்பையும் வலுப்படுத்திக் கொண்டு செல்கிறான். அதற்கு உள்ளே செல்லும் வாசகனை ஒத்திசைவு கொள்ளச் செய்து இசையை உருவாக்குகிறார்.

சுட்டுவிரல் உள்ளேயே விழுந்துவிட்டது
சக பணியாளன் புன்முறுவலோடு அதைப் பார்த்தான்
திரும்பத் திரும்ப கையை நுழைத்து
விரலை எடுக்க முயன்றேன்
இப்போது எல்லோரும் பார்த்து விட்டார்கள்

இந்த வரிகள் நம் வாழ்வின் அன்றாடத்தோடு தொடர்ந்து பொருந்திப் போகிறது. சக பணியாளர் என்பவன் சக மனிதனாக விரிவு கொள்கிறான். சுட்டுவிரல் என்பது நம் வாழ்வின் இறக்கங்கள் ஆக மாறுகிறது.

ஆனால் அது ஒருபோதும் நிரந்தரமல்ல எனவே

இலைகள்
உறங்குவதில்லையென பாடத் தயாராயிரு“.

என்று நம்மை ஒரே இடத்தில் தேங்கி விடாமல் நகர்த்துகிறார்

மணல்கடிகாரத்தை கூட இடையில் நிறுத்த அதிகாரம் இல்லாதவன் முகத்தில் உள்ள பள்ளங்களில் தேங்கும் கண்ணீரை தினமும் பெய்யும் மழை என்று சொல்வது கவிதையின் அற்புத அழகியல்.

வாழ்வில் எப்போதும் ஏதேனும் ஒரு அபாய மணி ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது ஆனால் அது கேட்கிறதோ இல்லையோ ஒருவர் ஓடுவதைப் பார்த்து மற்ற மனிதர்கள் ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இந்த கவிதையை வாசிக்கும் போது வாசகன் பல்வேறு சூழ்நிலை அனுபவங்களையும் மேற்குறிப்பிடப்பட்ட அனுபவங்களையும் பல்வேறு கோணங்களில் பெற முடியும் அந்தக் கவிதையை நீங்களும் படித்துப் பாருங்கள்

சிவப்பு

எப்போதைக்கும் போல்தான்
அந்நாளும் கொடுக்கப்பட்டது
எனது வெள்ளை கையுறை திடீரென சிவந்தது
பதறினேன் அதை மேலதிகாரி கவனிக்கவில்லை
ஆனாலும் பயந்தேன் கால்சாராய்க்குள்
கைநுழைத்து எடுக்கும் போது
சுட்டுவிரல் உள்ளேயே விழுந்துவிட்டது
சக பணியாளன் புன்முறுவலோடு அதைப் பார்த்தான்
திரும்பத் திரும்ப கையை நுழைத்து
விரலை எடுக்க முயன்றேன்
இப்போது எல்லோரும் பார்த்து விட்டார்கள்
சிவந்த கையுறை எங்கே போனதென்று தெரியவில்லை
பின்கதவின் வழியே ரகசியமாக
என்னை கொண்டு செல்லும் போது
கோட்டையின் பாதியை திறந்தார்கள்
அங்கு குவிந்திருந்தன ஏகப்பட்ட சுட்டுவிரல்கள்.

கருப்பு

எல்லோரும் உறங்கப் போனதும்
எனது சீருடை சொன்னது
உன்னால் உறங்க முடியாது
உன் மேலதிகாரி உன்னை விட
என்னைதான் அதிகம் நேசிக்கிறான்
நான் எதுவும் கூறவில்லை
அந்த பைப்பர் கூடம் காற்றில் ஆடியது
விடியும் போது நகர்ந்து வேறு
இடத்திற்க்கு போய்விடுமென நினைத்தேன்
காற்றில் குலுங்க குலுங்க சிரித்தபடி
சீரூடை மீண்டும் சொன்னது
எப்போதும் நான் கீழே விழலாம் பிறகு

நீ இலைகள்
உறங்குவதில்லையென பாடத் தயாராயிரு.

பச்சை

நிறைய புகார்களுக்கு மத்தியில் எனது
ஷுவை கழற்றச் சொன்னார்கள்
அதனுள் ஒரு சேரி படுத்திருப்பதாக
உதவியாளன் புகாரளித்தான்
மேலதிகாரி தனது மூக்கை பின்னந்தலைக்கு
மாற்றி வைத்தபடி நெருங்கினார்
உன்னுடைய எதற்கும் உதவாத சப்பாத்துகள்
மிதிபட தரையை கட்டவில்லை புரிகிறதா
நான் மிரண்டு போனேன்
உனது நல்ல ஷுக்கள் எங்கே?
படபடத்தபடியே பூர்வீகத்தில் என்றேன்.

சாம்பல்

மணல்கடிகாரத்தை இடையிலே நிறுத்தும்
அதிகாரம் கூட இல்லாத போதும்
அதை படுக்க வைக்க விரும்பினேன்
கொஞ்சம் கூட கனவுகளை நிமிர்த்த எண்ணியதில்லை
காய்ச்சிய இரும்பு ராடுகளை சுமக்கும்
நமது பற்களுக்கு இதெல்லாம் தேவையா என்பார்கள்
எதுவுமே தெரியாத மாதிரி வாழ முகம் கிடைத்திருக்கிறது
அதன் மேல் தினமும் இரும்பு ராடுகள் சரிய
முகத்தில் ஏகப்பட்ட பள்ளங்கள்
ஒவ்வொரு நாளும் அதில் மழை தேங்கியபடியே இருக்கிறது.

நீலம்

உயரமான சுவர்களுக்கு அடுத்து கடற்கரை வந்தது
எல்லோரும் இறங்கினோம்
நிறைய உதவியாளர்கள் இருந்தார்கள்
மேலதிகாரி பாதி உடயையோடு எங்களை நோக்கினார்
நீங்கள் குளிக்கலாம் ஆனால் உடைகளோடு என்றார்
எங்களுக்குள்ளே முகங்களை பார்த்தோம்
சீருடைகள் கடலை பார்த்தன.

செங்கருப்பு

சுற்றளவு விட்டமென தோண்டி
கற்கள் உறைகளென பூசப்பட்ட பின்
கிணற்றின் இடை இடையே இருந்த துளைகளை
மேலதிகாரி பார்த்தார்
பிறகு எங்களின் சிலரை துளைகளில்
நாள்முழுக்க பூசியபடி நிற்க வைத்தார்.

காவி

அன்று மதிலிலிருந்த பூனையொன்று
வெல்வேட் வெண் நிற திரைச்சீலையில் குதித்தது
எனக்கு என்ன செய்வதென்று தோன்றாத போதும்
சீலையின் கரையை உற்று நோக்கினேன்
அதிலிருந்த குட்டி குட்டி கரைகள் நீண்டு
ஒரு வரைபடத்தை நிவர்த்தி செய்தது
அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்
அபாயமணி ஒலித்தது எல்லோரும் என்னை தாண்டி
ஒருவன் தப்பித்துவிட்டான் என ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நன்றி: ஓலைச்சுவடி இதழ் 8


III

கவிதை என்னும் மின்சாரம்

ஒரு கவிதையில் ஏதேனும் இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும்

கவிதை என்பது அவற்றிற்கிடையே கடந்து செல்லும் மின்சாரம் போன்றது

அந்த இரண்டு விஷயம் எவை என்பதைக் கவிஞன் தான் தீர்மானிக்க வேண்டும் அப்படி தீர்மானிப்பதில் தான் கவிஞரின் அறிவும், நுட்பமும், உழைப்பும் இருக்கின்றன.

சொற்களால் கட்டமைத்த கவிஞனால் மட்டுமே உருவாக்க முடிந்த ஒரு காட்சிப் படிமம்
அல்லது சொற்களால் உருவாக்கப்பட்ட ஒரு வெளி
அதற்கு இணை கோடாகவோ அல்லது நேரெதிராகவோ கவிஞன் சொல்ல வரும் செய்தி அல்லது கவிஞனின் மனம் கவிஞனின் உலகம் எதுவாகவும் இருக்கலாம்
சில நேரங்களில் அது வெளிப்பாட்டு உத்தி ஆக கூட இருக்கலாம் இனி கவிஞர் முத்து ராசாகுமாரின் ஒரு கவிதை பற்றி பார்ப்போம்.

கடுக்காய் பால்

+

கரும்புச்சாறு
+
சுண்ணாம்புச்சாந்து

=

சுவர்

கொத்தனும் சித்தாளும்
ஊசிப்போகாமல் வாழ்கின்றனர்.

[ ]
ஆணியிறங்கிய நெற்றியில்
தொன்மப் புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்.

நம்மையே பார்த்தபடியிருக்கும்
உயிரற்ற சட்டக மனிதர்கள்
சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சுக்கொடுத்தபடியே
தொங்குகின்றனர்.

கவிஞர் முத்துராசாகுமார் அவர்கள் உத்திக்கும் கருத்துக்கும் இடையில் வைத்து கவிதையை உருவாக்குகிறார்.
அற்புதமான கவிதையாக மாறுகிறது.
 “முதலில் உருவாகும் கட்டுமானத்தின் மீது
கொத்தனும் சித்தாளும் ஊசி போகாமல் வாழ்கின்றனர்” என்பதில் எளிய மனிதர்களின் உழைப்பு மனிதனின் அன்றாட அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைப் போன்றது என்ற ஆழமான உள் உணர்வினால் ஊசி போகாமல் வாழ்கின்றனர் என்று சொல்கிறார்.

அடுத்ததாக உள்ள,


ஆணி இறங்கிய நெற்றியில்
தொன்ம புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்


என்ற பத்தியில் மிக நுட்பமான ஒரு காட்சிப் படிமத்தை உருவாக்குகிறார்
அதுமட்டுமல்லாமல் இந்த பத்திக்கு மேல் இருக்கும் அடைப்புக்குறி ஒரு புகைப்பட சட்டகம் போல் காட்சியளிப்பதும் ஒரு மாறுபட்ட அழகியல்

சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சுக்கொடுத்தபடியே
தொங்குகின்றனர்

இந்தக்கடைசி பத்தியில் இறுதி வரிகள் இந்த கவிதையை மிக அற்புதமாக முடித்து வைக்கிறது

ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மனதிற்கு நிறைய திறப்புகளை தரும் இந்த கவிதை மிக நேர்த்தியான பண்பினை மிக இயல்பான ஒரு புதிய உத்தியோடு இணைத்துள்ளது .

நன்றி : அரூ இதழ்


 

About the author

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவர். ‘வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி’ என்ற கவிதை தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர். ‘சதுரமான மூக்கு’ மற்றும் துரிஞ்சி’ ஆகிய கவிதை நூல்களுக்கு தமிழின் முதல் அஃபோரிச கவிதை நூலான ‘தண்ணீரின் சிரிப்பு’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். எழுத்தெனப்படுவது எனும் இலக்கணம் சார்ந்த நூலையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறுவர் இலக்கியத்திலும் பங்களித்து வரும் இவர் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

செளமா இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது, தமிழ்நாடு கலை இலக்கிய மேடை விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். , சமீபத்தில் இவரின் “சதுரமான மூக்கு” சிறந்த கவிதைத் தொகுப்பு -2023க்கான படைப்பு இலக்கிய விருது பெற்றுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website