cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கட்டுரைகள்

இயற்கையின் நிழலில் அயர்ச்சியின் உருவாய் பேசும் மொழி

வினோதா கணேசனின் கவிதைகளைக் குறித்து முபீன் சாதிகா


வினோதா கணேசன் கவிதைத் தொகுப்பை ராமேஸ்வரம் சென்றிருந்த போது முழுமையாகப் படித்து முடித்தேன். எப்போதும் கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதும் போது ஒவ்வொரு கவிதை குறித்தும் ஒரு சிறு குறிப்பு எழுதிவிடுவேன். அவற்றை ஒருங்கிணைத்து கட்டுரைக்குப் பயன்படுத்திக் கொள்வேன். மின்கோப்பாகத் தொகுப்புகளை வாசிப்பதை மட்டுமே எப்போதும் விரும்புகிறேன். அதனால் அவற்றிலேயே குறிப்புகளை எழுதியும் வைத்துவிடலாம். ராமேஸ்வரத்தில் உணவு விடுதி ஒன்றில் காலையிலிருந்து மாலை வரையில் தனியாக இருந்த போது துணையாக இருந்த வினோதாவின் கவிதைகள் எனக்கு ஏற்கனவே முகநூலில் அறிமுகமானவைதான். அவருடைய கவிதைகள் குறிப்பிடத்தக்க இடத்தைத் தமிழில் பெறுபவை. பெண் கவிஞர்களில் வேறுபட்ட படைப்பாக்கத்தைக் கைக்கொண்டிருப்பவர் வினோதா. ஆனால் எல்லா கவிதைகளும் ஒரே சாயலில் இருக்கின்றன. ஒரே கவிதையிலிருந்து கிளை பிரிந்து வளர்வது போல தெரிகின்றன. இப்போது தமிழில் கவிதை எழுதுபவர்கள் பலருக்கும் உள்ள குணாம்சம் இது. மேலும் இந்தக் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் உள்ளடக்கத்தை மூன்று பிரிவுகளில் கொள்ளலாம். அ.நான்/நீ அல்லது தன்மை/முன்னிலை ஆ.இயற்கையுடனான உரையாடல் இ.கணினியின் பயன்பாட்டில் முளைக்கும் உணர்ச்சிகள் ஆகிய மூன்று பிரிவுகளுக்குள் இந்தக் கவிதைகளை அடக்கவிட முடியும். இந்த மூன்றையும் இணைக்கும் கோடாக அயர்ச்சி உள்ளது. அயர்ந்து போதல், களைப்படைதல், அலுப்பின் பாற்பட்டிருத்தல் என்ற அடிப்படையின் மீதுதான் எல்லா கவிதைகளும் கட்டப்பட்டிருக்கின்றன. 

……….

அ. நான்/நீ, தன்மை/முன்னிலை

தமிழ்க் கவிதைகள் சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கலாக நான்/நீ என்ற தன்னிலை/மற்றமை விளக்கம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. தன்னிலையை முன்வைத்து எழுதப்படும் கவிதைகள் மற்றமையால் விளக்கமடைவதைப் பற்றியவையாக இருக்கின்றன. வினோதாவின் கவிதைகளில் இருக்கும் வேறுபாடு, நானைக் குறித்த அறிதலுக்கான பயணம் பல கவிதைகளில் தொடர்கிறது. நான் என்ற சுயத்தைத் தனியாகப் பிரித்து அதனைக் குறித்த விளக்கத்தை அறிய பெரும் முயற்சி எடுக்கின்றன கவிதைகள். பஞ்சபூதங்களில் ஒன்றாக, மற்றமையால் விளக்கமடையாததாக, உள்ளீடில்லாமல் தொங்குவதாக, எந்த வடிவமும் அற்றதாக, வெற்று உவமையாக, நிழலாக, புனைவுகளில் ஒதுங்குவதாக நான் என்ற தன்னிலை கவிதைக்குள் அடைபட்டுக் கிடக்கிறது. ஏனெனில் தன்னிலை குறித்தப் பூடகமான புரிதலே இது வரையிலான பண்பாட்டுச் சொல்லாடல்களின் மூலம் வந்து சேர்ந்திருக்கிறது. அதனால் இந்தக் கவிதைகள் அந்தப் பூடகத்தை அறியும் முயற்சியை எடுக்கின்றன. தன்னிலையைக் கைக்கொள்ளப் பெரும் பிரயத்தனம் செய்கின்றன. ஆனால் அது இயலாமல் போகையில் அயர்ந்து போகின்றன. 

ஒரு ’நான்’ விளக்கமடைவதற்காக ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது: நீரின் தண்மையும் வெயிலின் கடுமையும் இருந்தாலும் காற்றுதான் நானாக வடிவெடுக்கிறது. பஞ்சபூதங்களில் காற்றுக்கான அழுத்தத்தை நானாக மாற்றிச் சொல்கிறது கவிதை. இதிலிருந்து இயற்கைக்கு அடுத்த அடுக்கில் தன்னிலையை வைக்க இந்தக் கவிதைகள் முனைவதைக் காணமுடிகிறது. ஏனெனில் தன்னிலை பற்றிய எந்த விளக்கமும் தர இயலாமல் கோழிக்குஞ்சைப் போல் அது பறந்துபோய்விடுவதாகக் கவிதைக் கண்டுபிடிக்கிறது. 

சொற்களும் சொல் விதிகளும் தன்மை முன்னிலைக்கானவையாக இருந்தாலும் அவை தன்னிலையும் மற்றமையையும் உணர்த்தும் ஆளுமைகளின் வேறு வடிவங்கள்தான் என்பதை ஒரு கவிதை காட்டுகிறது. சொல்லில் இருக்கும் இல்லாமைகளின் உருவகமாக தன்னிலையைப் பார்க்கின்றன இந்தக் கவிதைகள். அதனால்தான் அது உள்ளீடற்ற ஒன்றாகவும் பாலையின் நிறத்தில் இருப்பதாகவும் கற்பனை செய்கின்றன. நான்/நீ என்பதில் மற்றமையால் விளக்கம் அடையாத ‘நானை’க் குறித்து மட்டும் அக்கறைக் கொண்ட இந்தக் கவிதைகள் புனைவுகளுக்குள் அது சிக்கி இருப்பதாகச் சமாதானம் அடைகின்றன. அங்கும் அது உவமையாக இருப்பதாக விளக்குகின்றன. அது மட்டும் அல்லாமல் தன்னிலையின் ஒரு கூறாக உள்ள சுயம் நிழலாக இருப்பது குறித்த ஒரு கவிதை, கடந்த கால சுயம் இனி வரப்போகும் சுயம் எனவும் அதைக் கழற்றி மாட்ட முடியாத நிலை இருப்பதையும் சொல்கிறது. சுயம், அடையாளம், தன்முனைப்பு ஆகியவை இணைந்த ஒன்றாகத் தன்னிலை என்ற பண்பாட்டு இருப்பு இதுவரையிலான தத்துவச் சிந்தனைகளில் பல திருப்பு முனைகளைக் கண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய தன்னிலையைப் பிரித்தறியும் முயற்சியை இந்தக் கவிதைகள் செய்கின்றன. ஆனால் அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் எனும் தருணத்தில் அயர்ச்சியைக் கொண்டுவிடுகின்றன.

ஆ. இயற்கையுடன் உரையாடல்

வினோதாவின் கவிதைகள் அனைத்துமே இயற்கையுடன் உரையாடல் கொண்டிருக்கின்றன. தமிழின் இலக்கியங்கள் அனைத்திலுமே இயற்கையுடன் உள்ள உறவும் பிணைப்பும் படைப்பிற்கான தூண்டுதலைக் கொடுப்பதாகவே இருப்பதை அறியமுடியும். வினோதாவின் கவிதைகளிலும் இந்த வகையான உறவும் பிணைப்பும் ஏற்படுத்தியிருக்கும் உரையாடல் கவிதைகளின் அடிநாதமாக உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் இயற்கையிலிருந்து மொழி விளைகிறது என்பதை இந்தத் தொகுப்பின் கவிதைகள் நம்புகின்றன. இயற்கையுடனான உரையாடல் கவிதைகளில் பூக்கள், செடிகள், மரங்கள், பூச்சிகள், பறவைகள் என்ற உயிர்களின் வாழ்நிலையோடு ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்தவாக உள்ளது. காலத்தின் பரிமாணத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. மனித மொழியும் இயற்கையின் மொழியும் இணைவதையும் பிரிவதையும் பதிவு செய்வதாகவும் இருக்கிறது. 

குறிப்பாக, பறவைகளுடனான பரிமாற்றம் குறித்த கவிதைகள் மௌனமும் பேச்சும் வெளிப்படுவதும் மறைவதும் குறித்து கவனம் கொள்கின்றன. அதிசய பறவையின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றை ஒரு கவிதை வரைந்து காட்டுவதாக உள்ளது. மயில் போன்ற மென்மையுடன் இருக்கும் ஒரு பறவை கவிதையின் இறுதியில் கொக்காகிவிடுகிறது. பறவை மொழி அறிந்திருந்தால் இந்த மாற்றம் நிகழாமல் போயிருக்கலாம் என்றே கவிதைகள் உணர்கின்றன. நீர் மட்டத்தை உயர்த்தத் தெரிந்த காகத்தின் குரலில் அனல் இருப்பதாகச் சொல்லும் கவிதையில் வரும் காகம் பழங்கதையிலிருந்து உருமாறி கவிதைக்குள் வந்திருக்கிறது. பறவைகளின் இருப்பில் வெளிப்படும் தகவல்களைச் சேகரிக்கக் கவிதைகள் முயல்கின்றன. 

காலத்தை இயற்கையின் பல்வேறு உபகரணங்களையும் உயிர்களையும் கொண்டு அளவிட இந்தத் தொகுப்பின் கவிதைகள் முயல்கின்றன. காலத்தை முன் தீர்மானிக்க முடியாத சிக்கலும் நேரப் போவது குறித்த அச்சமும் கவிதைகளில் நிலைத்திருக்கிறது. ஏனெனில் நிலத்தின் காலத்தைக் கணக்கிட முடியாத படி நீர் பலவற்றையும் செரித்துக் கரைத்துவிடுகிறது. மேலும் பழையதும் வரலாறானதும் நினைவுகளில் தங்கிவிடுவதால் அசை போடுவதில் மட்டுமே காலம் வெளிப்படுவதாகச் சுட்டிக்காட்டுகிறது ஒரு கவிதை. கடவுள் அனைத்தும் ஆகட்டும் என்று சொன்னதில் உயிர்கொண்டுவிட்டதைப் போன்றுதான் வண்டைப் பார்த்து உயிரை அறிந்துகொள்வதும் என்கிறது கவிதை. காலத்தை வாழ்வாக மாற்றுகிறது கவிதை. நாட்களின் நகர்வு கொக்கு மறந்த மற்றொரு கால் போல எந்த ஒரு மாற்றும் இன்றி சலிப்புடன் தொடர்கிறது. 

இயற்கையின் பல பரிமாணங்கள் மனிதனின் வாழ்வியலையும் உணர்வு முறைமையையும் மாற்றி அமைப்பதை வினோதாவின் கவிதைகள் பதியச் செய்கின்றன. குறிப்பாக நீர்ப்பாலை குறித்த மூன்று கவிதைகள் மூன்று வகையான பரிமாணங்களைக் காட்டுகின்றன. வெப்பத்தால் மட்டுமல்ல நீராலும் பாலையாகிவிடும் சூழல் உள்ளது. ஒளியும் நிழலும் கலந்த சூழலாக அது உள்ளது. சொற்களால் ததும்புகின்ற சிந்தனை அல்லது கருத்து போலவும், காலம் தவறி பெய்யும் மழை போலவும் அது கொட்டி நீர்ப்பாலையை உருவாக்கிவிடுகிறது. நீர் அதிகமானாலும் பாலையை உருவாக்கிவிடும். வெள்ளக்காடு என்பதுதான் நீர்ப்பாலை. சொற்கள் அதிகமானாலும் பாலையின் தன்மையைப் போல் வெப்பத்தையும் கடுமையையும் உருவாக்கிவிடும். மற்றொரு நீர்ப்பாலை பாசியோடு பச்சையும் கலந்திருந்தாலும் வெப்பம் நீரில் பயனற்றுப் போவது போல் சிந்தனையின் பயன் உரையாடலில் இல்லாமல் போவதைச் சுட்டிக்காட்டுகிறது. நீரும் வெப்பமும் பல கவிதைகளில் முதன்மையான வெளியாக மாறுகின்றன. கரை ஒதுங்கும் கடல் போல் நீரின் வினையைப் பேசுகின்றன இந்தக் கவிதைகள். இயற்கையின் எல்லாமே துணையுடன் இருக்கின்றன என்று தீர்மானிக்கும் இந்தக் கவிதைகள் அத்தகைய துணையின்றி இருக்கும் மனித வாழ்வுக்கு எஞ்சியிருப்பதாக அயர்ச்சியையும் சலிப்பையும் சுட்டுகின்றன. காலம் தொடரும் சக்கரமாகிவிடுவதும் அதன் பொருளற்ற தன்மையும்தான் இந்த அயர்ச்சிக்குக் காரணமாகிறது. 

இ. கணினியின் பயன்பாட்டில் முளைக்கும் உணர்ச்சிகள்

வினோதா கணேசனின் கவிதைகளில் சில கணினி, அலைபேசி போன்ற உபகரணங்களில் பயன்படும் மொழியின் மூலம் உருவாக்கப்படும் உணர்ச்சி சித்திரங்களை வகைப்படுத்திக் காட்டுகின்றன. கணினியில் மினுங்கும் பூச்சிகளும் அவற்றைத் தொடர உதவும் எலியும் கவிதைக்குள் இருப்பதைப் பார்த்து அயர்ந்து போனதால் திரை அனலாகிறது. மனத்திரையும் அனலாகிறது. வாட்ஸ்அப் புலனத்தில் வரும் குறுஞ்செய்திகளின் உணர்ச்சிகளுக்குரிய பொருளைக் கொள்ள விழையும் கவிதைகளாகவும் சில உள்ளன. புலன பரிமாற்றத்தில் திரும்பி வரும் செய்தியும் எழுதாத மொழி போல் இருக்கிறது. வெறும் குறியீடாகிறது. முயல் ஆமை ஓட்டத்திற்குப் பதில் உடும்பு ஆமை ஓட்டம் கவிதைக்குள் நிகழ்கிறது.  உடும்பின் பிடிவாதமும் ஆமையின் வேகமின்மையும் இணைவைக்கப்படுகின்றன. உபுண்டு என்பதுதான் உடும்பு என மாறியிருக்கிறது கவிதைக்குள். கணினியின் மென்பொருளுக்குரிய விளக்கங்களாகக் கவிதை நகர்கிறது.  புலன பரிமாற்றத்தில் பெரும்பாலும் ஆண் பெண்ணுக்கு இடையிலான ஊடலாகத் தெரிகிறது. ஆண்-பெண் உறவில் நிலவும் அழுத்தம் குறித்த பரிமாற்றம் அதிலும் அறம் சார்ந்ததாக உறவின் பரிமாற்றம் இருக்கவேண்டும் என்ற அழுத்தம்தான் கவிதையின் அடிப்படை. அது புலனச் செய்திகளில் பரிமாறப்படும் போது ஏற்படும் உணர்ச்சிகளின் மாற்றங்களைப் பதிவு செய்கிறது கவிதை. 

சொற்களும் பொருள்களும் கதைகளும் புனைவுகளும் எழுத்தை மறைப்பதையும் மாற்றுவதையும் ஒதுக்குவதையும் எதிர்கொண்ட கவிதைகளாக இவை இருக்கின்றன. அதனால் எந்த ஊடகத்தின் வழியாக வெளிப்பாட்டாலும் எழுத்தின் நிலை, பொருள், குறிப்பு போன்றவை மாறுவதில்லை என இந்தக் கவிதைகள் நம்புகின்றன. இதுதான் அயர்ச்சிக்கும் சலிப்புக்கும் களைப்புக்கும் காரணமாக அமைகிறது. எழுத்தின் ஓசையை வினாக்களில் அதிகம் கேட்கின்றன இந்தக் கவிதைகள். ஏனெனில் புனைவின் பல பொருள் அடுக்குகளையும் கதைக்குள் தள்ளி வைக்கப்பட்ட கதையையும் வாசிப்பதில் மறைந்துவிடும் குறிப்பையும் வௌவால் தலைகீழாகத் தொங்குவதில் வெளிப்பட முடியாத உண்மையாக இந்தக் கவிதைகள் காட்டுகின்றன. 

வினோதாவின் ஒரு கவிதையை வாசித்துப் பார்த்தால் அவருடைய கவிதை உலகத்தின் நிழலும் ஒளியும் வெளிப்படும்.

உள்நா நழுவி குடல் நீரில்

விழுந்த விதை தொல்தோற்றம்

முடிக்க இடம் மறந்து சட்டென

வளர்ந்து பச்சை முருக்கியது

படர் கினளயது வானேற

இனடமறைத்த பச்சைப்புல் உலகம்

முனளவிட்ட இருதலை உயிரினம்

மூக்கில் வரைந்த கீறல்

உள்ளுள் வெள் யானை முகம்

முட்டல் கூரிலை கடைமுனை

குண்டுகட்டி நின்ற துளிநீர்

வரைவதெல்லாம்

வெளிச்சம் தின்ற இருளையே.

……..

இந்தக் கவிதையில் ஒரு விதையை விழுங்கினால் என்ன ஆகும் என்ற வினா எழுகிறது. அதற்கு விடையாக அந்த விதை முளைத்து வளர்ந்து வானத்தை நோக்கி படர்ந்தது. அது இருதலை கொண்ட உயிரினத்தின் மூக்கில் கீறலை உருவாக்கி ஒரு புதிய உயிரினமாக்கிவிட்டது. அது உள்ளில் வெள் யானை போன்ற முகத்தைக் கொண்டதாக இருந்தாலும் இலை கொண்ட தாவரத்தைப் போலவே இருக்கிறது. விதை உண்டதால் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் காரணமாக விழி நீர் வடித்த உயிரினம் உருவாக்குவது இருள் என்ற மறைபொருளைத்தான் என்கிறது கவிதை. ஏனெனில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அது சலிப்புக்கான மற்றொரு வடிவமாகத்தான் இருக்கும். 

’புனைவிற்குள் ஒதுங்கும் ஒற்றைச் சொல்’ என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் வினோதா பல சொற் சேர்க்கைகளுடன் வேறொரு புதிய கவிதை உலகைப் படைக்க எண்ணியிருப்பது வெளிப்படுகிறது. கவிதைகளுக்குள்ளான சலிப்பும் அயர்ச்சியும் வாசிப்பிலும் அவ்வப்போது நிழலாடிவிடுகிறது. அதனைத் தவிர்த்திருந்தால் இந்தத் தொகுப்பின் கவிதைகள் ஆர்வமூட்டும் சொற் சித்திரங்களாக இருக்கும்.


 

About the author

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website