ஒரு உடல் தனது பாவனைக்காக, தனக்காக, இன்ன பிறவற்றிற்காக தன் அக உணர்வுகளை, மனநிலைகளை வெவ்வேறான கூறுகளில் சொல்லவும், வாதிடவும் முனைகின்ற போது அங்கு ஒரு மொழி அதிகாரப் பூர்வமாக அமர்ந்துக் கொள்கின்றது. மொழி என்பதே கட்டற்ற உடல்கள் தேடி அலைதலால் கிடைக்கப்பெறும் ஒரு கருத்துப்பதிவு.நிபந்தனைகளேதுமற்ற உடல்கள் வெளிப்படுத்தும் உட்கிடக்கையை மொழி உள்வாங்குகின்றது. அதனின் பயன்பாடு வெளிப்படுத்துதல். மற்றும் புரியவைத்தல். புரியாததையும் இலகுவாக்கி, ஒவ்வொரு உடலிலும் தாவி தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளுதல். ஆண்டாண்டுகளாக இந்தத் தாவுதல் எவ்விதத் திட்டமிடலின்றி வளர்ந்து/சிதைந்து தேவைகளுக்கேற்ப அறிவு மாற்றமாய் கோடிக்கணக்கான உடல்களில் மையமிட்டுள்ளது.
இவ்வுடல்கள் காலங்காலமாக ‘அனுபவம்’ என்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டு அக/புற உலகினை விசாலப்படுத்த முனைந்தன. புலன்களுக்கு எட்டும் நிகழ்ந்த / நிகழ்த்தப்பட்ட அனுபவங்கள் மனதின் செயல்கள், உணர்ச்சிகள், புனைவுகள் அனைத்தும், மொழியால் அமைவுறுகின்றது. மொழியின் இருத்தலென்பது உடல்களுக்கான அறிதலை நெறிப்படுத்துவது. அதற்கான சொற்களை உடல்களோடு பிணைப்பது.. இதில், மொழியின் முதல் அடிப்படை வினை என்னவென்று பார்த்தோமானால் அனுபவங்கள், நினைவுகள், கண்டறியப்பட்டவைகள், செவிச்செய்திகள் மற்றும் பிற ஒழிபுகள் போன்றவற்றை சொற்களாக உருமாற்றி உடல்களிடம் தரவுப்படுத்துதல் மட்டுமே. அத்தரவுகள் காலத்திற்கும் ஏதோவொன்றை தனித்தோ, கூட்டுச் செயலாகவோ பற்பல உடல்களுக்குக் கடத்தி கொண்டேயிருக்கும். இதில், “எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே” என்பது மட்டும் தான் எல்லாவற்றிற்குமான பதிலும் கூட.
சொற்களென்பது வாழ்வின் இதம். சூழலுக்கேற்ப அது, உடல்களின் வாய்மொழியில் பிடித்த / பிடிக்காத பொருளாக மாறும் நிலை ஏற்படுகின்றது. சொல்லப்படும் முறையிலும், உணர்த்தப்படும் விதத்திலும் சொற்களை அறிதலென்பது உடல்களுக்கானது. இதனைச் செய்வது மொழி. இச்சொற்கூட்டுக் களத்தில் சொற்களின் பொருளென்பது பெருங்கொண்டாட்ட மனநிலையைத் தரவல்லது. அதற்கான பெரும் விளைச்சல் மொழியில் நித்தமும் உழுதுக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த உழவு நிலத்தில் விளைச்சலற்றது எது? அது யாரிடமும் கடுமை காட்டுவதில்லை. துளிர்த்தலும், காய்தலும் அதனியல்பு. நிறைந்த பச்சையும், கடும் வெடிப்பும் அதன் அமைப்பு.
உச்சிக்குளிர் பாதையும், சுடு நிலப்பாதையும்,கடுங்காற்றும், மென் வருடற் காற்றும் அனைவர்க்குமானது தான். சொற்களும் அப்படிப்பட்டது தான்.
இங்கு, ஊறுதல், மறத்தல் என்ற இரு சொற்களைப் பற்றி பார்க்கலாம்.
ஒன்று மனதில் நீரின் குளிர்ச்சித் தருவது. மற்றொன்று நீரின்றி காய்மைத் தருவது.
முதலில், ஊறுதல். ‘ஊறி வருதல்’ எனப் பொருள் கொள்ளலாம். விடாது ஒன்றைப் பற்றி ஊற்றுக் குழியில் நீரூறுவது போல தோன்ற வைப்பது. துளிச் சொல்லாக ஊறி ஒரு பெருஞ்சொல்லாக ஊறித்ததும்புவது. கசப்பின்றி விருத்தியாக்குவது. கசப்பென்பதும் ஒரு சுவை தான். அது, இங்கு இவ்வூறுதலுக்குத் தேவையில்லை. அர்த்தமுடைய சில சொற்களின் பொருள்கள் எல்லையற்ற உடல்களின் குளிர், வெம்மை இதுபோல் பல கட்டங்கள் தாண்டி ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பற்பல நற்செயல்கள், பரிணாமங்கள், உடல்களின் வாழ்நாட்கள் அதிகரித்தல், இவையெல்லாம் இவ்வூறுதலில் உண்டு. மனதின் அதீத கற்பனை, பிளவு, தேடல், தீவிர சுயமுயற்சி, பிரதான சிந்தனையினை அதிகரிக்கச் செய்யும் காரணி இச்சொல். ஒரு விதமான மன ஒருங்கமைப்பு என்றும் சொல்லலாம். பல்வேறு தருணங்களில் சம்பாவனை ஏதுமற்று,உப காரணங்களுமற்று இந்த ஊறுதல் நிகழும். பொதுவாக, இது, புரிதலானதொரு அன்பில் நிகழக்கூடியது. சராசரித்தனம் அதிலிருக்க வாய்ப்பில்லை. இருமனங்களின் தனித்துவம் இவ்வூறுதலில் முக்கியம் பெற்றிருக்கும். அவர்களே, அதில் கதை மாந்தர்கள் மற்றும் பார்வையாளர்களும் கூட.
துளி நீரிலிருந்து, பெருகும் நீரை அள்ளிப்பருகும் பேரளவும் அவர்களுக்கானதே. தத்தம் அக உணர்வுகள் இப்பரவெளியில் பலப்பல உயிர்களுக்கானது. உயர்திணை அஃறிணைக்கெல்லாம் பொதுவானது.
தொல்காப்பியரின் கூற்றின் படி,
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்”
என எண்ணப்படுவது.
பெருங்காதல் / பெருவிருப்பம்/ பெருந்திளைத்தல் – எனச் சுய பச்சாதாபமின்றி உடல்கள் வெளிப்படுத்தும்.
ஒற்றுணர்ச்சி இருவருக்குமானது. அது, ஒரு கடலைக் கைப்பற்றிக் கொள்ளல் போல, அதன் அலையை விழுங்குதல் போல, நுரையைப் பிடிக்க ஓடுதல்போல செய்யக்கடவது. ஓயாது நிகழும் சித்திரப்பேச்சில் நினைத்துப் பார்க்க சம்பவங்கள் அதிகமிருக்கும். மிக அழகான விளையாட்டு மைதானத்தில் நிகழும் காட்சிகளை அவர்கள் மட்டுமே கண்டு மகிழ்வர். இந்த ஊறுதலில் உச்சிப்பொழுது தெரிய வாய்ப்பில்லை. நிழலற்ற வெளி கூட மனதிற்கினியது. ஒன்றன் பொருட்டு ஒன்றை விட்டுக் கொடுக்கும் ஊற்றுக் கண் இதன் பிரதானம்.
அடுத்தது, மறத்தல்.
இதை, நினைவை அகற்றல் எனக் கொள்ளலாம். வலுக்கட்டாயமாக மறக்க வேண்டுமென்றால் மனதிலிருந்து நீக்குதல் வேண்டும். அல்லது மனதை ஒடுக்கிக் கொள்ளல் வேண்டும். மிக்கப்பசி கொண்டு அலையும் போது உணவைத் தட்டிவிடுவது போன்றது மறத்தல். இருவருக்குமான கரிசனமற்ற வெளியை எதைக் கொண்டு சாடுவது? தவித்தடங்கும் மனதில், வயிற்றைப் பிசையும் ஒரு உணர்வில் மறத்தலென்பது உடலின் பெருந்துயர். வாயிலில் மூடப்பட்ட தொங்கும் திரைச்சீலைகளில் முன்பு தெரிந்த வண்ணங்கள் இம்மறத்தலில் சாயமற்றுத் தெரியும்.
பரிசுத்தமான அன்பில் பிரிதல் எனும் மறத்தல் நிலைக்கொண்டிருக்கும். சுகந்தமற்ற மணத்தை நுகர்தலில் எங்கிருந்து விருப்பம் வர முடியும்? ஒரு அன்பைப் பலி கொடுத்தலென்பது உடலின் நிற்காத குருதி வெளியேற்றம். தனியனான உடல் பின்பு எதன் மூலம் தன்னை சாத்தியமான அம்சமாக்குகின்றது என்பது இம்மறத்தலில் அவரவர்க்கானது. இதில், சர்ச்சையற்ற நிலைப்பாடு மிகவும் அவசியம். மறத்தலில், பெருந்தீயுடன் மனம் அலைவுறும் போது கனத்த மழை நாடுதல் உடற்றியல்பு. மற்றும், இவ்வைந்திணைகளில் பிரிதலென்பது ஒரு உரிப்பொருள். அது, நிகழக் கூடியது. இதனை,
“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலைத் திணைக்கு உரிப்பொருளே”
எனத் தொல்காப்பியம் பேசுகிறது.
இங்கு, யாருக்கானவரோடான பிரிதலையும் முரணில்லாது ஏற்க சமநிலையான மனங்கள் தேவை. எதார்த்தம், புரிதல் தேவை.
இந்த ஊறுதலையும், புரிதலையும் குறுந்தொகைத் தலைவி உணரும் விதம் வேறு.
“பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசுவீ மென் பிணிக்
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும், வாரார்;
கண்டிசின் – தோழி! – பொருட் பிரிந்தோரே
(குறுந் -220 ஓக்கூர் மாசாத்தி)
தலைவி தோழியிடம்,
பல நாட்களாக பெய்த மழையால், நிலத்தில் விதைக்கப்பட்ட வரகு தழைத்து வளர்ந்தது. ஆண் மான்கள் அதனில் அரியப்பட்ட இளைய கொழுந்துகளை உண்ணுகின்றது. வரகிற்கிடையே முல்லைப் பூத்திருக்கின்றது. அதனின் சிறு அரும்புகள் காட்டுப்பூனை சிரித்தாற் போல உள்ளது. முல்லைப் பூவோடு பிற மலர்களும் மலர்ந்துள்ள இம்முல்லை நிலம் வண்டுகள் தேணுன்ன காட்சியளிக்கின்றது இம்முல்லை நிலம். இம்மாலைக் காலத்தில் பொருளீட்டி வருகிறேனென சொல்லிச் சென்ற தலைவன் வாராது போயினான் என்கின்றாள்.
ஒரு பெண் ஒரு ஆணிடத்து தான் கொண்ட புரிதலைத் தெளிவாகக் கூறுகிறாள். அது, தானாக ஊற்றெடுக்கும் நீர் போன்றது. செழித்து வளரும் வரகு போல, அதன் கொழுந்தால் வயிறு நிறைந்த மான் போல, முல்லைப் பூ பூத்தாற்போல, அதனில் காட்டுப்பூனைச் சிரித்தாற் போல, பிற பூக்கள் மலர்தல் போல தெரிவதெல்லாம் மனதில் தலைவனை நினைக்கும் போது ஏற்படும் ஊறுதல் போலுள்ளது.
ஆனால், அது தானாக தோன்ற வேண்டும். தோன்றாத இடத்து மறத்தல் ஏற்படமுடியாது. அங்குப் பிரிதலுக்கானதென எதுவுமில்லை. வருந்துதலுக்கான வேலையுமில்லை. அப்படிப்பார்க்கின், நினைக்காத அன்பு தேவையற்றது. பொய்த்துப்போன சொற்களில் பிரிதலைத் தேடுதல் நாமே ஏற்று சுமந்துக் கொண்ட சுமை.
ஒரு வழிப்பாதையில் ஊற்றுநீர் தோன்ற முடியாது.
அவ்வளவே….
அருந்தமிழ் அமிழ்தாக இனிக்கிறது..
ஆழமான மிகநுட்பமான காட்சி விவரணை… வாழ்த்துகள்..
Really superb. The words are making me to the historical world of few centuries back. I studied technical line, now I feel why I didn’t study the Tamil language during college time.
I advise the younger generations to concentrate studying Tamil . If school Tamil teachers are like Kannamma they can produce lot of Tamil scholars.
Hats off to sister Kannamma. Wishing her all success in her endeavours.
Excellent super