ஒரு கவிதை எழுதுவதை விடக் கவிதைத் தொகுப்பிற்கு பெயர் வைப்பது என்பது என்னைப் பொறுத்தவரைச் சவாலான விஷயம்.
கடந்த 16-ஆம் தேதியன்று பேராசிரியர், பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர் என பன்முகத் தன்மை கொண்ட திரு.மானசீகன் அவர்களின் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பை வாசகசாலை பதிப்பகம் வழங்கியது.
‘மதநீராய் பூத்த வனம்’ தலைப்பே கவிதையாய் இருந்தது.
ஒரு சில கவிதைகள் படிக்கும் போது பிடித்தது என்பதைவிடப் படிக்கப் படிக்க பலவேறு விதங்களாய் தன் பரிமாணத்தை விரிக்கும். இந்த தலைப்பு என்னை இறுகப் பிடித்துக் கொண்டது.
மதநீர் என்பது யானையின் கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே சுரக்கக்கூடிய ஒரு திரவம் என்று மட்டுமே புரிதல் இருந்தது.
ஆனால் அதைப்பற்றி யோசிக்க யோசிக்க வேறு சில விளக்கங்கள் புரிய ஆரம்பித்தன.
யானைக்கு மதநீர் ஒழுகும் நேரங்களில் அது வேகம் நிறைந்ததாய் இருக்கும். அதற்கு மதம் பிடிக்கும் வாய்ப்பு அதிகம், அந்த நேரத்தில் யானை ஏற்படுத்தும் சேதங்களும் ஆபத்துகளும் அதிகம் என்ற தகவல்களோடு அதற்குப் பாலுணர்வு ஏற்பட்டிருக்கும் என்றும் உரைத்தது. மதநீர் என்பது காமநீர் என்ற உண்மை உரைக்கவே..வேறு பரிமாணத்தில் அதைப் பற்றி யோசிக்க யோசிக்க …
மன்மதன் நினைவிற்கு வந்தான்.
அவன் காமத்தின் கடவுள்..
மனித இனத்தில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி பாலுணர்வு மிகுந்து இருக்கையில் இயல்பாகவே நீர்ச் சுரப்பது பொதுவானது. ஆக அப்படியான காமத்தின் உணர்வைத் தூண்டச்செய்யும் கடவுளுக்கு மதநீரை நினைவுபடுத்தும் வகையிலேயே மன்மதன் என்ற பெயர் வாய்த்ததுவோ?
ஆக உயிரினத்தின் காம இச்சைகள் மதநீரின் வடிவாய் வெளிப்படும் என்றாகிறது. அப்படியிருக்க பல்லுயிர் ஓம்பிய காடு அதை எப்படி வெளிப்படுத்தும்?
ஒரு செடியோ மரமோ காதல் உணர்வை வெளியிடும் வகை என்ன… ஆராய்ந்தால் பிடிபட்டது…
மணம் பரப்பி… வண்ணம் குழைத்து பூக்கள் மலர்த்தி மகரந்த சேர்க்கை நடத்திடத் தயாராகும். அதுதான் வனம் தன் காமத்தை வெளிப்படுத்தும் செயல் … மயில் தன் தோகை விரித்தும் குயில் தன் குரலால் அழைத்தும் காதலிக்க, வனம் பூத்து, சிரித்து, மணத்து வெளிப்படுத்துவதாய் உணர முடிந்தது.
இந்த எண்ணமே தலைப்பின் மீதான ஈர்ப்பையும் கவிதைகளை வாசிக்கவும் சிலாகிக்கவும் வைத்தது.
இப்படி ஒரு காதல் ரசம் சொட்டும் பெயர் கொண்ட கவிதைத் தொகுப்பில் காதல் கவிதைகள் குறைவென்கிறார் கவிஞர் தன்னுரையில்.
என் வரையில் நிறையவே இருக்கிறது காதல் கவிதைகள்.
இதில் சிறப்பென்றால் இது பால் பாகுபாடற்று இரு பாலாரும் பாடுவதாயும் எடுத்துக்கொள்ளத் தக்க வகையினதாய் அமைந்திருப்பது.
அதே நேரம் இதில் காதலருக்கு இடையே கெஞ்சலோ, இரைஞ்சலோ புலம்பல்களோ இன்றி நேரிடையாய் பரஸ்பரம் தேவைகளையும் ஆசைகளையும் முன் வைப்பதாய் இருப்பது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் கவிதையின் தரத்தையும் நேர்த்தியையும் அதிகப்படுத்துகின்றன.
என்னைப் பொறுத்தவரை எந்த படைப்பையும் உணர்வோடு பொருத்திக் கொள்வதுதான் பழக்கம். அந்த வகையில் இத்தொகுப்பு மனதிற்கும் உணர்விற்கும் நிறைவை அளித்திருக்கிறது. நல்லமுதம் பருகிய திருப்தியும் ஆனந்தமும் வழங்குகிறது.
எனக்குப் பிடித்த கவிதைகளில் சிலவற்றை வாசித்துக்காட்டுவது எனக்கு மகிழ்வை தருவதோடு உங்களுக்கும் புரிதலைக் கொடுக்கும் என்று உணர்ந்து வாசிக்கிறேன்.
-
சொற்களைக் கொன்றுவிட்ட நட்சத்திரம்
குளத்தில் கல்லெறியும் போதெல்லாம்
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது
சொற்களைக் கொன்று விட்ட நட்சத்திரம்இரண்டு மரங்கள்
பரஸ்பரம் பார்த்தபடி
உதிர்த்த இலைகளெல்லாம்
வீணான குப்பைகள்தான்
அந்தரங்கம் உணர்ந்த வேர்களுக்காகவே
வானத்தில் பூத்திருக்கிறது
ஏழ் வண்ண அரும்புஇரவுகளில் கூடடைத்து வைக்கும்
பறவையின் பாடலைத்தான்
இருள் போர்த்திக் கொண்டிருக்கிறது;
நான் போர்த்திக் கொண்டிருப்பதும் கூட
அதே இருள்தான்.நதியை அழித்து
கடல் செய்யும் மழைத்துளி
தட்டிக் கொண்டிருப்பது
யார் வீட்டுக் கதவை?
இந்த கவிதை வாசித்தபோது சென்னை வெள்ளம் மனதை உருக்கிய நிலையில்; அக்கணத்தின் கனத்தை உரைப்பதுவாய் உணர வைத்தது.
எல்லா வீட்டுக் கதவைத் தட்டியும் மட்டுமல்லாது., அதுவாக வீட்டினுள் பிரவேசித்தும் நதி தன்னையும் தன் இருப்பிடத்தையும் நினைவுப்படுத்திச் சென்றது.
-
நீ மேகமாகி நகர்ந்த பின்பும்
விரல் சூட்டில் காதலை உணர்கிறபோதே
சடாரென்று விழுகின்ற கரத்தில்,
மூடப்படாத விழிகளின் வெறுமையில்,
நானுணர்வது
உயிரின் சுழல் வளைவன்றி வேறென்ன?அழுகை, ஆதங்கம், அரற்றல்கள்
யாவும் வெளியேதான்.
வெறுமையின் கொடுங்கைகளில் சிக்கிய விழிகளுக்கு
சிறு கருணையாய் வந்தமர்கிறது
மூடப்பட்ட ஜன்னலின் அதட்டலில்
அமர்ந்து விட்ட ஈயொன்று.”யாராவது கண்ணை மூடுங்கப்பா” என்கிற குரலிலேயே
எல்லாம் முடிந்து விடுகிறது
எல்லாமும்தான்.எவரோ உடை சுழற்றும்போது எஞ்சியிருக்கும்
உடல் சூட்டைப்போல்தான்
பழக்கத் தோஷமாய் மிஞ்சுகிறது
ஒரு கவிதை;
நீ மேகமாகி நகர்ந்த பின்பும்.
என்னை மனம் கனக்க வைத்த கவிதை… கவிதையாய் மட்டுமே தங்கிப் போகிற உறவு… வலியானதுதான்.. !
கவிஞருக்கு வாழ்த்துகள்..!
நூல்: மதநீராய்ப் பூத்த வனம்
ஆசிரியர் : மானசீகன்
வெளியீடு : வாசகசாலை
வெளியான ஆண்டு : 2023
பக்கங்கள்: –
விலை: ₹ 150
நூலைப் பெற தொடர்பு எண் : +91 9962814443