cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 32 கட்டுரைகள்

கௌரிப்ரியாவின் “ஆழியின் மகரந்தம்” குறித்து தாணப்பன்.

Getting your Trinity Audio player ready...

கவிதை என்பது ஓசை நயமிக்க பண்புச் சொற்களால் தொடுக்கப்பட்ட மாலையாகும்.
மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை அமைகிறது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும், தூண்டவும் கவிதை உதவுகின்றது.

காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையிலிருந்து கவிதை தோன்றியிருக்க வேண்டும்’ என்பார் எமர்சன். ‘கவிதை’ முதன் முதலில் வாய்மொழிப் பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்’ என்கிறது வாழ்வியல் களஞ்சியம். கவிதை முதலில் இசைப்பாடலாகத் தோன்றிருக்க வேண்டும் என்ற கருத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக சங்க இலக்கியத்தில் பாணன், பாடினி, விறலி போன்றோர்களின் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தமிழ்க் கவிதைத் தோற்றத்தில் பரிபாடல், பத்துப்பாட்டு ஆகியன எட்டுத்தொகையின் அகவற்பாவிற்கு முந்தைய வடிவம் என்ற கருத்தும் உண்டு.

பழமை முதற்கொண்டு ஒவ்வொரு நூற்றாண்டிலும் மருத்துவத்துறையில் பணியாற்றுவோர் இலக்கிய உலகில் தொடர்ந்து பங்களிப்பு செய்து கொண்டே இருந்திருக்கின்றார்கள். கவிஞராகவும், புனைவு எழுத்தாளராகவும் கட்டுரையாளராகவும் தங்கள் பங்களிப்பை செய்து கொண்டேயும் இருந்திருக்கிறார்கள். ‘சென்னைப் பண்டிதை’ என அழைக்கப்பட்டவர் மனோன்மணி. இவரது ‘மனோன்மணீயம்’ எனும் மருத்துவ நூல் கிடைக்கப் பெறலில்லை. மருத்துவ அறிவுக்கு சான்று அந்நூல். அதேபோன்றே அவர் தமிழறிவிலும் சிறந்தவர் என்பதற்கு கிடைக்கப்பெற்ற அவரது நூல்களே சான்று என்பார் தாயம்மாள் அறவாணன்.

இளங்கலை மருத்துவப் படிப்பு, முதுகலையில் நோய்க்குறியியல் என்ற துறை சார்ந்த படிப்பும் படித்தவர் கௌரிப்பிரியா. கவிஞராகவும் பரிணமளிக்கின்ற இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘ஆழியின் மகரந்தம்’.

மருத்துவர் துறையில் இருந்து கொண்டு நோயாளிகளின் மனதினை மட்டுமே அணுக இயலும் என்பதைத் துறந்து தம்மால் அழகியலையும் காண இயலும் என்பதனை தன்னுடைய கவிதைகளில் இவர் பதிவு செய்திருக்கின்றார்.

இத்தொகுப்பில் மொத்தம் 69 கவிதைகள். ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு தலைப்பு. அந்த தலைப்பு கவிதைகளைச் சொல்வதோடு மட்டுமில்லாமல் தமிழ்பால் இவர் கொண்டிருக்கின்ற பற்றையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

ஆழியின் மகரந்தம்..

“அழியை மடித்து மடித்து
அல்லி வட்ட இதழ்கள் செய்யும் ஒரிகாமி அறிந்த சிறுமி”

முதல் கவிதையின் நிறைவு வரிகளான இவை கடல் பார்த்து திரும்பும் ஒரு நிழற்படம் பிடிப்பவனுடைய மன எண்ணத்தினை வெளிப்படுத்தும் வரிகளாக இருக்கிறது. ஆழியை மடித்து மடித்து அல்லி வட்ட இதழ்கள் செய்ய இயலுமா? இவரது ஒளித்திரை அதனை செய்து காட்டி இருக்கிறது.

பூங்காவில் ஒரு கடற்குதிரை..

“நிறைசூலி மனைவியைப் போல் நடந்து காட்டி சிரிக்கிறான்
உடன் நடை பயிலும் கணவன். ‘உன் வாலைக் கொஞ்சம்
சுருட்டி வை’
கடிவது போல்
நாணுகிறாள் அவள்.
முன்னோக்கி மெலிதாய்
வளைந்த முதுகு
உப்பிய வயிறு மற்றும்
சுருட்டிய வாலுடன்
கடற்குதிரையை
வரையத் தொடங்குகிறான்
பூங்காவில் ஒரு ஓவியன்”

தன் மகவைச் சுமக்கும் மனைவி மீது அத்தனை வாஞ்சை ஒவ்வொரு கணவனுக்கும் இருக்கும். இருவருக்குமுள்ள அன்னியோன்யம் ஒருவரையொருவர் நையாண்டி செய்து, பரிகசித்து ஆனந்தம் கொள்வதிலும் மிளிரும். நிறை சூலி மனைவியைப் போல் நடந்து காண்பித்துச் சிரிக்கிறான் கணவன். பதிலுக்கு உன் வாலைக் கொஞ்சம் சுருட்டி வைக்கிறாயா என்கிறாள் அவள். இந்தக் காட்சியை படபிடித்து வளைந்த முதுகு, உப்பிய வயிறு மற்றும் சுருட்டிய வாலுடன் நகரும் கடற்குதிரையோடு ஒப்பிட்டு இந்த கவிதையை வடித்திருக்கின்றார் கௌரிப்பிரியா. பரிகசிப்பும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலும் ஒரு சேர ஒரே கவிதையில், ஒரு கடற்குதிரையில் வடித்திருப்பது இவரது கற்பனையின் உச்சத்தை காண்பிக்கிறது.

சினைக்குழாய்க்கு நட்சத்திர விரல்கள்

“சருமம் கெட்டித்து
இடை அகண்டு
அகம் கசிந்த பின்னும்
நீர்மையைத் தக்க வைத்தல் அன்றாடத்தின் போராட்டம் பாலையின் கள்ளிக்கும்
பதில் வறண்ட
காரிகைக்கும்
.
.
பன்முனைகளுள் ஒன்றின் மேல் படர்ந்து ஒளிர்வதுண்டு
அவள் சுண்டி தள்ளும்
விழி நீர்த்துளி
அத்தகைய நொடிகளில்தான் சூலகம் உமிழும்
அணு ஒன்றினை விழுங்கி இன்மையை நோக்கி தள்ளுகின்றன
சினைக் குழாயின் முனையில் இருக்கும்
நட்சத்திர விரல்கள்”

அறிவியலும், அகமும் சேர்ந்த கவிதை இது. அணுவின் ஓட்டத்தை அன்றே கணித்தவர் ஔவையார். ஆரம்ப காலக் கல்வியில் படித்த அந்தப் பாடலின் வரிகள் எல்லோருக்குள்ளும் புதைந்திருக்கும். ‘அணு ஒன்றினை விழுங்கி இன்மையை நோக்கி தள்ளுகின்றன’ என்ற வரிகளில் அந்த ஏக்கத்தைக் கடந்த ஒருவித ஆனந்த நிலையினை வடித்திருக்கின்றார். ‘பாலையின் கள்ளிக்கும் பதில் வறண்ட’ என்ற வரிகளில் வலியினைப் புகுத்திய அவர் சினைக் குழாயின் முனையில் இருக்கின்ற நட்சத்திர விரல்கள் அதனை உள்வாங்கிக் கொள்கின்றன என்று ஆறுதல்படுத்தித் தருகின்றார்.

துளி நிழல்

“மலரிதழ்
விளிம்பில் தொடங்கும்
முந்தைய இரவின்
மழைத்துளி.
இளங்காலை வெய்யில் வந்து இதழ் மேல் இடறும்,
துளியைத் தொலைக்கும். அடுத்திருக்கும் மலரின் மேல் நிழலென வீழும் இதழ்
சுடரென ஒளிரும் துளி. நீர்த்துளிக்கு உண்டோ நிழல்?
கவி மனம் குறுகுறுக்க…
நிழல் மீதும்
ஒளி மீதும்
ஊர்ந்து செல்லும்
சிற்றெறும்பு.”

இது ஒரு அழகியல் சார்ந்த கவிதை. முந்தைய நாள் இரவு பெய்த மழைத்துளியினைத் தாங்கி நிற்கிறது ஒரு மலர் இதழ். காலை வெயில் வந்ததும் அடுத்த இதழ் மேல் இடறுகிறது அந்தத் துளியை. அது அடுத்து இருக்கும் மலரின் மேல் நிழலென விழுகிறது. அந்த ஒளி இதழை ஒளிர வைக்கும் நிழல் மீதும் ஒளி மீதும் ஊர்ந்து செல்கிறது சிற்றெறும்பு. இவ்விரண்டையும் சுவீகரித்துக் கொண்டு தன்னிலை மறந்து ஊர்ந்து செல்கிறது ஒரு சிற்றெறும்பு. இதைக் கண்ணுற்றுதன் வெளிப்பாடே இக்கவிதை.

உடையது கேட்பின்

“கிணற்று நீரில் கவிழ்ந்திருக்கும் பவளமல்லியின் பிம்ப முகம் பூவினுடையதா
நீரினுடையதா?
மலரே!
அது ஒளியினுடையது.

சன்னமாய் சடசடக்கும்
சுடரின் குரல்
திரியினுடையதா
தீயினுடையதா?
ஒளியே!
அது காற்றினுடையது.

நெடுந்தூரம் கடந்து வரும் விண்மீனின் மினுக்கம் வெளியினுடையதா
விழியினுடையதா?
காற்றே!
அது காலத்தினுடையது.

உடையதெனும் இச்சொல் மொழியினுடையதா
கவியினுடையதா?
காலமே!
அது மனத்தினுடையது.

ஊடலின் முடிவில்
கரிக்கும் உப்பு
விழியினுடையதா
இதழினுடையதா?
மனமே!
அது காதிலினுடையது.

உன்மத்தக் காதல் நிலை இளமையினுடையதா முதுமையினுடையதா?
காதலே!
அது
உடையதென்னும்
உணர்வு களைந்த
உண்மையில் மலர்வது!”

காதல் கவிதை இன்றி ஒரு தொகுப்பா? அதை போக்கும் விதமாக ‘உடையது கேட்பின்’ காதல் மணம் வீசுகிறது. பஞ்சபூதங்களின் செயல்களை காதலோடு பின்னிப் பிணைந்து இயற்றியிருக்கிறார். கரிக்கும் உப்பு விழியினுடையதா இதழினுடையதா? எனக் கேள்வி கேட்டு அது காதலினுடையது என்று இயம்பி, அந்தக் காதல் இளமையினுடையதா முதுமையினுடையதா?என்று மீண்டும் ஒரு வினா தொடுத்து உணர்வு களைந்த உண்மையில் மலர்வதே காதல் என்று நிறைவு செய்திருப்பது காதலின் அழகை மிளிரச் செய்கிறது.

பூக்காது போவதில்லை தொட்டாற்சிணுங்கிகள்

“பூரித்துக் கொள்கின்றன மோனத்தில் சிலிர்க்கும்
புறாவின் கழுத்தினின்று புசுபுசுத்த இள ஊதாவை எடுத்தணிந்து”
.
.
அவை
அறிந்தவை போலிருக்கின்றன பூக்கும் பூக்களிடையே
பூத்துக் கொள்பவை
பேரழகென”

தொட்டாற்சிணுங்கி எங்கு வளர்கிறது? அதன் பூ எப்போது மலர்கிறது? அந்த மலர்தல் உணர்வு பூரித்துக் கொள்ளும் புறாவின் கழுத்தினின்று புசு புசுத்த இள ஊதா நிறத்தினையொத்து இருப்பதாக வடித்திருப்பது கற்பனையின் உச்சம். அழகின் வெளிப்பாடு.

கல்யாண்ஜியை பிடிக்காத கவிஞர் யாருமுளரோ? அவருடைய அழகியல் தாக்கம் பெறாத கவிதைகளும் உளதோ?

“ஒரு பூ மலர்வது போல உதடுகளின் மையத்தில் தொடங்கி
அற்றம் வரை படர்வது உண்மையில் உதிக்கும் புன்னகை”.
இது கல்யாண்ஜியின் படிமம் மிளிரும் கவிதை வரிகள்.

“எந்தெந்த பறவைகள் இருந்தன?’ வினவும் தோழியிடம் பகிர்கிறேன்  “பெயர்கள் கவனத்தில் இல்லை. இறகுகள் தொடர்ந்திருக்கிறேன்” என்னை அறிந்தவள்
தோழி சிரிக்கிறாள்
“நீ அங்கு குடும்பத்துடன் போனாயா?
கல்யாண்ஜியுடனா”
என்று வினா தொடுப்பதில் புரிகிறது கல்யாண்ஜி கவிதைகளின் தாக்க உணர்வினை.

“நடனவிருந்தில் குபுகுபுக்கும் மனத்தில் ஒட்டாத
மேட்டிமைகளின்
நளினப் பெருக்கு.
தரையில் ஒரு தவளையென
தாவித் தாவி
இடம் மாறும்
லேசர் ஒளி வட்டம்.
ஒளியைத் துரத்துவதாய்
தானும் தாவி ஆடும்
தங்கமா,
இசை நின்றதும் ஓடோடி
அணைத்துக் கொள்கிறாள் அம்மாவை.
தனியே அமர்ந்திருந்த
பால்யத்தின் சிற்றற்றில்
பாறைகளின் மேல் தாவிக்கொண்டிருக்கும்
அம்மா
நிகழ்வுக்கு மீண்டு
அணைத்துக் கொள்கிறாள் தங்கம்மாவையும்
தன்னையும்”

இப்போது தங்கம்மா தாயாகிறாள். தாய் சேயாகிறாள். தாய்க்கும் மகளுக்குமான அன்பு பரிமாற்ற வரிகள் இவை.

இதே தாய் சேய் உறவை உணர்த்தும் மற்றொரு கவிதை.

“கூழாங்கல்லின் மீது
ஓவியம் வரைந்து
கூடத்துக் காட்சிப்பெட்டியில் வைக்கலாம் என்கிறேன்
வேனில் நாளில்
குளத்தினுள் மீண்டும்
எறிந்து விட்டால்
வெய்யிலே வரையும்
என்கிறாள் தங்கம்மா.

நான்காம் இதழ்

“புற நோயாளிகள் பிரிவில்
எச்சில் ஒழுகச் சிரிக்கிறது
உதட்டுப் பிளவு கொண்ட குழந்தை குனிந்து எடுத்து
வாஞ்சையாய் வருடுகிறேன்
பன்னீர் பூவின்
முனை பிளந்த
நான்காம் இதழை”

எல்லோருக்கும் குழந்தைகள் என்றால் அன்பும் பிரியமும் தாமாகவே வந்து விடும். இங்கே மருத்துவமனை காட்சி ஒன்று காட்சிமைப்படுத்தப்படுகிறது. நோயாளிகள் பிரிவில் ஒருவேளை அந்த குழந்தையைக் கூட காண்பிக்க வந்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் உதட்டு பிளவு கொண்ட குழந்தை அழகாக சிரிக்கிறது. அந்த சிரிப்பின் அழகில் மயங்கியவர் அந்த குழந்தையை வருடுகிறார். உதடு பிளந்த அந்த குழந்தையின் இதழ் பன்னீர் பூவின் நான்காம் இதழாக சிரிக்கிறது. மருத்துவமனை என்பதையும் மீறி குழந்தை மீது இயல்பாய் வாஞ்சை அனைவருக்கும் வந்து விடும். குழந்தையின் சிரிப்பை பன்னீர் பூவின் நான்காம் இதழோடு ஒப்பிட்டு கற்பனை செய்யப்பட்டிருப்பது அழகு. இனி பன்னீர் பூக்களைப் பார்க்கும் போதெல்லாம் இந்த காட்சி கண் முன்னே வந்துவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை.

“கடற்கரை வெளியேகும் தகிக்கும் தங்கச் சுடர்கள்”, “குங்குமப்பூ குழைத்த குட்டிப் பால்வீதி”, “அணுக்கள் ஆடும் ஊழிக்கூற்றின் தாளாலயம்” இப்படி அழகு மிக சொற்களால் ஆங்காங்கே கவிதைகள் மிளிர்கின்றன.

எளிய மற்றும் அழகான சொற்குவியல்கள் இவரது கவிதைகளை அழகாக்கி அருகே அமர வைத்து விடுகிறது. 360 டிகிரி கோணத்தில் அவரது நிலா சுழற்சியில் அவரது கோள்வட்டப்பாதையில் சுழல்வதைப் போல இந்த முதல் தொகுப்பு அமைந்திருக்கிறது என்று அணிந்துரை தந்திருக்கின்ற நேசமித்திரனின் வரிகள் சாலப் பொருந்துகிறது.


நூல் விபரம்

நூல்: ஆழியின் மகரந்தம்
ஆசிரியர் : கெளரிப்பிரியா
வெளியீடு : தமிழ்வெளி
வெளியான ஆண்டு : டிசம்பர் -2023
விலை: ₹ 140

நூலைப் பெற “  +91 90 9400 5600


 

About the author

ப.தாணப்பன்

ப.தாணப்பன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website