cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 கட்டுரைகள்

சூலுரைத்து சுடலையாடும் நீலப்பறவை!


 

சாய் மீராமுகநூல் பெருவெளியில் கவிதைகளாலும் கவிதை மீதான தர்க்கங்களாலும் நான் அறிந்துகொண்ட பெயர். இதுவரை நேரில் பார்த்ததில்லை. தோழர் சோழநிலாவால் முன்னெடுக்கப்பட்டு வரும்  “காலத்தின் பக்கங்களில் கவிதையெனும் ஆன்மா” தொடர் வாயிலாக பிறரது கவிதைகள் குறித்த பதிவுகள் கவிஞரின் திறமைக்கு ஒரு உரைகல். கவிதைகள் குறித்த அவரது பார்வை மீச்சிறு புள்ளிகளை இணைத்து ஒரு கோட்டோவியத்தை உருவாக்குவதைப் போன்ற நேர்த்தியை உடையது. ஆத்மார்த்தமான அன்புதான் இன்று சாய்மீரா கவிதைகள் குறித்து எழுத என்னை உந்தியுள்ளது என நினைக்கிறேன். 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மைவாய்ந்த தமிழ் இலக்கியப் பரப்பில் படைப்புகள் சோறு போடுமா? என்ற கேள்வி ஒரு சாராரால் எப்போதும் எழுப்பப்பட்டே வருகிறது. கல்வி என்பதே பணம் காய்க்கும் மரமாக மாற்றிப் பார்க்கப்படும் அவலமான சூழலில் இத்தகைய கேள்வி எழுவது அப்படி ஒன்றும் பெரிய விசயம் இல்லைதான். அதேவேளை எல்லாக் காலங்களிலும் படைப்பாளர்கள் இலவசமாக சமூக சேவையாற்ற வேண்டிய தேவையும் இல்லைதானே?. முழுநேர எழுத்தூழியம் செய்யும் படைப்பாளர்களுக்கு இது பெரும் சிரமமான ஒன்றுதான். இத்தகைய சூழலில் புதிதாக எழுத வருகிறவர்களிடம் படைப்புச் சுரண்டலின் வழி அச்சத்தையும், விரக்தியான மனநிலையையும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும். மேற்கு நாடுகளைப் போல் படைப்புகளுக்கு சரியான விலையும், அங்கீகாரமும் கிடைக்கும் நாளில் தமிழ்ப் படைப்புலகமும், படைப்பாளர்களும் உயர்மதிப்போடு அணுகப்படுவர். 

சாய் மீராவின் கவிதைகளுக்குள் நாம் நுழைவதென்பது சமுத்திரத்தில் முத்தெடுப்பதைப் போன்றது. நல்ல முதிர்ச்சியும், நேர்த்தியும் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் அறிமுகக் கவிஞர் என்று சொன்னால் அவ்வார்த்தை அந்நியத் தன்மையுடையதாகிறது. சொல்வளமும், புதிய சொற்களின் பயன்பாடும், தேர்ந்த சொற்களைக் கொண்டு சிறந்த கவிதையாக்கம் செய்வதும் சமகாலப் பெண் கவிகளிடம் அநாயாசமாகத் தெறிக்கிறது. சாய் மீராவும் இவ்வரிசையில் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். அநேக கவிதைகளில் நீலம் நீக்கமற நிறைந்திருக்கிறது. சமுத்திரத்தின் நீலமாக, பெருவானத்தின் நீலமாக, இப்பிரபஞ்சப் பெருவெளியின் ஆன்மாவாக கவிதை புதியதொரு பரிமாணத்தில் நம்மோடு உரையாடுகிறது. ஒரு வகைமைக்குள் அடைத்துப் பார்ப்பது பேராபத்தானது. இது ஒரு விசாலமான பார்வைக்கு மட்டுமே புலப்படும். சமூக அவலத்தின் மீது சாடும் இடமாக இருக்கட்டும், மொழிமீதான தாக்குதலுக்கு எதிராக பேசும் இடமாகட்டும், பெண்கள் மீதான வன்முறைகளைச் சாடும் இடமாக இருக்கட்டும் ஒவ்வொன்றிலும் தனித்துவமான சொல்லாடல் வழி கவித்துவம் குன்றாது எடுத்தியம்புகிறார். கவிதையின் அத்தனை கூறுகளையும் தன் கவிதைகளில் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்.

நவீன கவிதைகள் புரிவதில்லை என்ற குற்றச்சாட்டு சில பத்தாண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. தொண்ணூறுகளுக்கு முன்னமே ப்ரமிள் இதற்கான பதிலையும்  தந்துவிட்டே சென்றிருக்கிறார். காதல் வசப்பட்டவன் காதலியின் ஊடலை மீறியே அவளது உள்ளத்தை அறிந்து கொள்வது போலவே கவிதையின் பொருளை போகப்போக உணர்ந்து கொள்வர் என்கிறார். உண்மைதான் புரிந்து கொள்வதற்கான மெனக்கெடல்களைச் செய்யாமல் குற்றப்பத்திரிக்கை வாசிப்பது அபத்தம் அல்லவா? ஈராயிரம் ஆண்டுகளாக மொழி இத்தகைய தாக்குதல்களுக்கு மத்தியில்தான் தன்னைச் செழுமைப்படுத்தி நம்மோடு உரையாடுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“சூலுரைத்து சுடலையாடும் கொற்றவை” யாக சாய்மீரா சமூகத்தின் அவலங்களுக்கு எதிராக தன் கவிதைச் சாட்டையை முடுக்கி விடுகிறார். இத்தகைய உக்கிரத்திற்கு மத்தியில் 

“ஒரு மரணம் எவ்வளவு எளிதானது 

மரம் விட்டு 

உதிரும் பழுத்த இலைபோல்” 

என ஜென் தத்துவார்த்தமான கவிதை மூலம்  இக்கொற்றவையால் வாழ்வியலைச் சொல்லவும் முடிகிறது. 

மீண்டும் ப்ரமிள் சொன்ன வார்த்தையோடு முடிப்பதே சாலப்பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். தன்னுடைய ஆத்மாவின் குரல் மூலம் மனித வர்க்கத்தின் ஆத்மாவை எல்லாக் காலங்களிலும் புதுமை குறையாமல் வெளியிடுவதுதான் ஒரு இலக்கியவாதியின் வெற்றி என்பார். சாய் மீராவின் கவிதைகளுக்குள் ப்ரமிளின் இந்தக் குரல்கள் எதிரொலிக்கின்றன. 

“நிலம் விடுத்துப் பறந்துபோன 

அச்சிறு மழைக் குருவியொன்றன் 

சிறகசைப்பில் விரிகிறதென் 

பெருவானம்” 

சாய் மீராவின் கவிவானம் மிகப்பெரியது. அதில் சிறு தூறல்களையே நான் சுட்டிக் காட்டியுள்ளேன். வானத்தை வசப்படுத்தும் கவிதை நடை சிறப்பாக இருக்கிறது. சங்க காலத்திற்குப் பிறகு சமகாலத்தில்தான் பெண் படைப்பாளர்கள் அதிகமாக உள்ளனர் என்பதை இங்கு அழுத்தமாகச் சொல்லி வைக்கிறேன். மனித வர்க்கத்தின் பாடுகளை புதுமை குன்றாது காலாதீதத்தில் உன் சிறகுகளை விரித்து இன்னும் உயர உயரப் பறக்க வாழ்த்துகிறேன் அன்பின் நீலப்பறவையே.


நூல் விபரம்

நூல்: நீலச் சிறகு

ஆசிரியர்:  சாய் மீரா

வெளியீடு: மௌவல் பதிப்பகம்

விலை :  ₹  120

தொடர்புக்கு :+91 9787709687

இக்கட்டுரை  “நீலச்சிறகு” கவிதைத் தொகுப்பு நூலுக்கு கவிஞர் சுகன்யா ஞானசூரி எழுதிய முன்னுரை

About the author

சுகன்யா ஞானசூரி

சுகன்யா ஞானசூரி

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார்

இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website