cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 38 கட்டுரைகள்

சாந்த துர்க்கைகளின் உறைந்த துயரமும், ஊடாகப் பகடியும்


தாய்க்குலத்தின் பேராதரவோடு ,உமா மோகன் கவிதைத்தொகுப்பென ஏற்கமாட்டேன்.இன்னொரு நான்லீனியர் வகையிலான  கவிதை வடிவத்திலான புதினமெனச் சொல்வேன்.நூலின் பக்கங்களில் உறைந்திருப்பது காலாதீதக் கண்ணீர்த் துயரம்,நாம் காலங்காலமாய்க் கண்ட மகளிர் வாழ்வு .நம் வீட்டுப் பெண்களின் வாழ்வியல் சோகம் !“எல்லாவகையான கவிதைகளுக்கும் ஏதாவது ஒரு தூண்டுதல் வேண்டும். அது, கவிஞனுக்கு அகத்திலிருந்தும் எழலாம். புறத்திலிருந்தும் எழலாம். தூண்டுதல் எங்கிருந்து கிடைப்பினும் கவிஞன் எப்படி அதற்குத் தனது கவித்துவச் சிலிர்ப்பு களை எதிர்வினையாக்குகிறான் என்பதைப் பொறுத்தே கவிதையின் தரமும் திறமும் அமையும்.”-என்பார் ஈரோடு தமிழன்பன் [கவிதைச் சிந்தனைகள் ப.37]

கிராமங்கள் குறித்து திகட்ட திகட்ட தமிழ்க் கவிதை பேசியாயிற்று! பழமலய், தமிழச்சி, வே.இராமசாமி, பாரிகபிலன், அரங்க மல்லிகா- வென பட்டியல் நீளக்கூடும்! நகரமாயும் வளராமல், கிராமமென முடங்காமல் இருக்கின்ற இடையூறுகளில் வாழும் அல்லது வாழ்வதாய் நினைத்துக்கொண்டிருக்கும் ’குடும்பத்தலைவி’ எனும் இல்லாள்களின் வாழ்க்கை வரைபடத்தை பேச்சுமொழிக்கவிதையில் பதிவிட்டிருப்பது உமாமோகனின் பெருமிதம் எனலாம்!ஆனால் இந்த வரிகளாக எழுதும் போது , கவிஞர் கண்ணீர் சிந்தாமல் எழுதியிருக்க ஏலாது; இது வாசகருக்கும் பொருந்தும்

“கல்வி, ஊதியம் தரும் பணி என்ற இடத்துக்குள் வராத அவளுக்கென்றும் மதிப்பீடுகள் உண்டு என்பதை மௌனமாக மறுதலித்த சமூகம் நாம். அவள் புழங்கிய களங்கள், அவள் புழங்கிய கருவிகள்தான். எல்லோரது வாழ்வும், அவற்றை மையமாக வைத்து பெண்ணி வாழ்வைப் பதிவு செய்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்”,

‘தேர்க்கடையில் எப்போதோ வாங்கிய

 குட்டிமணிபர்சுகளை ரவிக்கைக்குள்ளிருந்து எடுத்து

 அழுக்கு நோட்டு, சில்லறையை எடுப்பவளை

எவனும் கவர்ச்சிக்கன்னியாகப் பார்க்காத காலமது[ ப.30]

எனக் காலப் பின்புலம் சொல்லும் ’இக்கவிதைகளில் குறிப்பிடப்படும் எதுவும் கற்பனைப் பாத்திரமல்ல. உங்களுக்கு அருகேயோ, சற்றுத்தொலைவிலோ உலாவிய, உலாவும் பெண்களையே சுட்டுகின்றன. நீங்கள் இல்லாமலா… நீங்களும்தான் இருக்கிறீர்கள். அத்தை, சித்தி, பெரியம்மா, அம்மா, அக்கா, ஆத்தா என உறவுப்படி நிலைகளில் வரும் அம்மாக்கள், அவர்களின் உணர்வுகள் உயர்வுநவிற்சியிலும், கழிவிரக்கத்திலும் கட்டமைக்கப்படவில்லை. இரத்தமும் சதையுமானவை. ‘அடுப்புக்கரியும், எருமுட்டையும், பத்துப்பாத்திரங்களும், சக உயிராக ஆடுமாடுகோழிகளும் என வாழ்ந்த, வாழும் ஊர்ப்புறத்துப் பெண்களின் தரிசனம். நம் சமையலறைகளின் கருவிகள், புழங்குபொருட்களை உணர்வோடு பிணைத்துக்கொண்ட அவள் வாழ்வை அவையின்றி எப்படிச்சொல்ல முடியும்’,எனக் கட்டியம் கூறும் உமாமோகனின் சத்தியச் சொற்களைக் கைப்பிடித்துக் கொண்டு வாசிப்போமேயானால் சமூகவியல் பேருண்மையொன்று துலங்கும்.

‘நெளிவுசுளிவு பார்த்துப் பேசாத

நிமிடங்களின் வரலாறு 

அவள் அடுப்பங்கரையில் உண்டு

நீர்மாலைக்குப் போய்வந்து 

துக்கத்தின் அத்தனை கனத்தோடும் இறக்கிப்போட்ட 

பித்தளைத்தவலையின் அடிவளைவில் நிற்கிறது

 அப்பனின் இழப்பு

காப்பி சூடு இல்லையென

 வீசியெறியப்பட்ட லோட்டாவின்

 இடுப்பு நசுங்கலுக்கு இணைத்தழும்பு 

அவள் வலது நெற்றியோரம்

 

அவளுக்கும் கோபம் உண்டு என நிரூபிக்க

 அவ்வப்போது ணங்கென வைக்கப்பட்ட கிண்ணம்,

 மாக்குவளையின் நெளிதேமல்கள்


சின்னவள் விவரமின்றி அழுந்தக் கிண்டியதால்

 வளைந்த தோசைதிருப்பியை

 ஒடுக்கு எடுத்து சுட்ட ஆயிரக்கணக்கான தோசைகள்


குழிக்கரண்டியிலும் உண்டு

 சூடுவைக்கத் தீயிலிட்ட நெருப்பின் கறுப்பு’-[ப.12]

அடுக்களை என்பது  DOMESTIC  WOMEN  எனும் ’வூட்டப்பாத்துக்குறபொம்னாட்டிகளுக்கு’

தண்டனைக்கூடமா.. அன்றி ஆற்றுப்படுத்தும் அமைதிச்சமவெளியா..?

இன்றைய உழைக்கும் மகளிருக்கு இரு பாதங்களிலும் குடும்பம் மற்றும் அலுவலகம் என்ற இரு சக்கரங்களோடு உழல வேண்டிய நிர்பந்தம். இரண்டும் திக்குகள் தெரிந்து பயணப்பட்டால் மட்டுமே விபத்தில்லா வாழ்வு ஏலும். ஆனால் நடைமுறைகளின் நிதர்சன தரிசனம் வேறாகவே இருக்கிறது. பணிகளுக்கேற்ப பருவங்களுக்கேற்ப திசைமாற்றிக் கொள்ளும் பயணங்களை பெரும் பொழுதும், சிறுபொழுதுமே தீர்மானிக்கின்றன. இத்தகைய நித்தியப் பயணத்தில் இயற்கைத் தடையரண் தாண்டி மனித முரண்களோடும் பயணிக்க வேண்டியிருக்கிறது, உழைக்கும் மகளிரின் பிரச்னைகள் பன்முகம் கொண்டவை .ஆனால் ’வூட்லயே சொம்மா இருக்குற’ குடும்பத்தலைவிகள் மனசை ,அவர்தம் வலியை மொழிபெயர்த்திருக்கிரார் உமாமோகன்.

’அலுமினியத்தில் ஒரு அன்னக்கூடை

இதற்குத்தானென்று இல்லாமல்

அவித்த நெல்லை அள்ளிக்கொட்டுவதிலிருந்து

அழுக்குத்துணியோடு ஆறு குளம் போகும்வரை

மாட்டுக்குத்தண்ணி காட்டுவதிலிருந்து

 தோப்பில் மாங்காய் பொறுக்குவதுவரை

கோட்டுப்பில் ஏற்றிய சோற்றுக்கஞ்சி வடிப்பதிலிருந்து

 எங்காவது ஒரு விசேஷ வீட்டில் பெயருக்கேற்றபடி

 அன்னந்தாங்கும்வரை

அதுவும் அவளும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு’[ப.34]- 

அன்னக்கூடை எனும் அலுமினியப் பாத்திரத்தை வீட்டுப் பெண்களுக்குக் குறியீடாயாக்கிய மேற்சொன்ன வரிகள் தொகுப்பின் உச்சக்கட்ட கவிதையென்பேன்

‘அம்மிக்குழவியை சரேலென்று தூக்கி நிறுத்தி

 மசிந்த கலவையை உருட்டும் லாவகத்தில்

 வாழ்வையும் கையாண்ட எம் பெண்டிரே ..!

கொஞ்சம், அதிகம், மிக அதிகம் மிக மிக அதிகம் என்ற

 வேகப்பொத்தான்களின் விசையையும் தாண்டி 

அரைபடும் மனதை நசுக்குவதா வழித்தெறிவதா

என்ன செய்தீராம்?’-[ப.90]

-உமாமோகனின் வழியாக காலத்தின் வினா ..கனமான மொழியில் ஒலிக்கிறது..விடைசொல்வார் யார்?

“பெண் கவிஞர்களின் பெண்-மைய- நவீனமொழி/ புதுமொழி/ பெண்ணிய மொழி  என்பது, அவர்களின் தனித்த அனுபவங்கள் எளிமையாகவும், அறிவார்ந்த/ தத்துவார்த்த/ உணர்ச்சி சார்ந்த புரிதல்களின் அடிப்படை சார்ந்ததாகவும் இருக்கின்றன. இவை பெண்களிடையே ஒரு புது மொழியை உருவாக்குகின்றன” என்பார் முனைவர் அரங்க மல்லிகா (பெண் மைய வாசிப்பும் அரசியலும் பக் 20)

உமா மோகன் கவிதைகளுக்கும் இந்த புதுமொழியை நம்மால் காண முடிகிறது. இது தொடர வேண்டியது சமகால அவசர அவசியம்.

‘நீண்ட மண்ணெண்ணெய் வரிசைகளிலிருந்து

சிலிண்டர்கள் மீட்பர்களாக வந்த பம்ப் ஸ்டவ்வும்

அவளை மீட்டன

சிலிண்டரும் சிலகாலம் 

பலிமேடையானதும் உண்டு’ [ப.09]

*
‘முள்ளுமுருங்கையோ,காசினியோ,நொச்சியோ

எந்தக் கொல்லையில் கிடந்தாலும் பொதுவுடைமை'[ ப.16]


*

‘ஊருக்கு ஒரு ரைஸ்மில் வந்து

உரலுக்கும் உலக்கைக்குமாக வாக்கப்பட்ட

வாழ்க்கையிலிருந்து விடுதலை ஆவோமென

நம் கொள்ளுப்பாட்டிகளுக்குத் தெரியாது’ [ப.17]

*
‘நாலு குடித்தனத்துக்கு நடுவாந்தரத்தில்

ஒற்றையாய்க்கிடக்கும் ஆட்டுரலுக்கு அமைதி ஏது

கழுவியிருக்கும் அழகு சொல்லும் 

கடைசியாய் ஆட்டியவர் பெயரை

கழுவி ஊற்றுதல்

அங்கே பிறந்த வசவு தான் போல’[ ப.19]


”தன்னுணர்ச்சிப் பாடலின் சத்தும் சாறும் தனிமனித ஆளுமையேயாயினும், உலகில் விழுமிய தன்னுணர்ச்சிப் பெரும் இலக்கியத் தகுதிகளுக்கும் தனி ஒருவரின் உணர்வுகளுக்கும் மட்டுமே மானுடர்க்கும் வடிவவங்களுக்கும் உணர்வுகளுக்கும் பொதுமையின் வடிவம் தருவதேயாகும். அதனால் இப்பாடல்கள் வடிக்கும் உணர்வுடன் பலரும் ஒன்றிக் கலந்திட வாய்ப்பு நேர்கிறது.” [ஈரோடு தமிழன்பன் [கவிதைச் சிந்தனைகள் ப.86] எனக் குறிப்பிடுவது போலவே  உமாமோகனின் தனி மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்தம் நுண்ணுணர்வுகள் யாவும் பொதுத் தளத்துக்குக்கு வருகின்றன, வாசகரை சிந்திக்கத் தூண்டுகின்றன.

’பொறுக்கிவந்த சுள்ளியா

கட்டிவந்த செத்தையா

கழித்துவந்த கிளைகளா

வாங்கிவந்த விறகா

வீட்டுத்தவிடா, மரத்தூளா……..

அடுப்பு மூட்டுவதிலும்

காய்ந்துகொண்டிருக்கும்

வாழ்க்கை அடுக்கு

மண்ணெண்ணெய் திரியடுப்பையும்

பம்ப் அடுப்பையும்

ஈரத்திலிருந்தும் ஊதுகுழாயிலிருந்தும்

மீட்க வந்த ரட்சகனாகப் பார்த்தாலும்

ஆடம்பர பட்டியலில்தான் வைத்திருப்பாள் அம்மா

கரிச்சுவர்களுக்கு கட்டிக்கொடுத்து அனுப்பியபின்

மீண்டும் பார்த்ததில்லை மகள்முகம்…

அந்தந்த வீட்டு கரிச்சுவரிலும்

வெளியே போகாத புகை ஓவியங்கள்

பதிவாகாத ஒரே பாணி

உள்ளே எரிவதிலேயே

கனல்வது அம்மாக்களின் அன்பு

என்று கொதித்துக்கொண்டேயிருக்கும்

உலையிடமிருந்து பத்திரம்

கிடைப்பதுகூட அபூர்வம்தான்’

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓடிக் கொண்டேயிருக்கிறது அனுபவ நதி! சாதாரணன், தனது அனுபவங்களைப் புகைப்படமாய், டைரிக் குறிப்பாய் தனக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள, படைப்பாளியோ தனது அனுபவக் கூழாங்கல்லைச் செழுமை சேர்த்து பிறரோடு படைப்பாகப் பகிர்ந்து கொள்கிறான். அத்தகைய பகிர்தலின் நிகழ்வில் தனிமனித அனுபவம் சமூக மனிதனின் அனுபவமாய் மடை மாறுகிறது.

‘தானா ஒரு தலைபின்னிக்கத் தெரியுதா

வளர்ப்பு என்பது காதுதிருகல்

முதுகில் சாத்துதல் தலையில் கொட்டுதல்

கன்னத்தில் அறைதல்

கர்ணகடூர முகமும் குரலுமான வசவுகள்

விசிறிக்காம்பு விறகுக்கட்டை தொடங்கி 

துணிமாட்டும் ஹேங்கர் வரை ஆயுதமாக்குதல்’

இவ்வளவும் பலனளிக்காது இப்படி ஒரு விமர்சனமா 

புதிய சொற்களும் புதிய உத்திகளும்

 புதிய ஆயுதங்களும் கூடக் கிடைக்கலாம்’

– பெரியவர்களின் தம் சோகத்தை மடை மாற்றும் உத்திதானோ சிறுமிகள் மீதான வன்முறை.

இவ்வளவு இன்னல்களிலும்  வீடெனும் சிறையிலிருந்து வெளியேற எத்தனிக்கும் பெண்மனசு! எப்போதாம்:

‘என் கரண்டிகள் (தொலைந்து போனவை உட்பட)

என் குக்கர்கள்

 (வாஷர் புகைந்த, விசில் மாற்ற வேண்டியவை உட்பட)

என் வாணலிகள்,ஜாரணிகள்(பிடி கழன்றவை உட்பட)

அனுமதிக்கும் பொழுது வானப்பிரஸ்தம் கிளம்புவேன்

 (அடுத்தவேளை உணவை மேசையில் அடுக்கிவிட்டுதான்’-[ப.52]

என்ன ஒரு நூற்றாண்டு பிரக்ஞை..! அலை எப்போ ஓய..கடல் எப்போ முழுக?

எனினும் தமக்கு கிடைக்காத விடுதலை வீட்டுக்கு வரும் பூனைக்குட்டிக்காவது கிடைக்கட்டுமே என்ற நப்பாசை..!

’எப்போதோ பால்சொம்புக்குள் தலையை விட்டுவிட்டு

 தாவித்தாவி முட்டி ஏகடுதகடாக சொம்பை

 நசுக்கி வைத்த புள்ளிப்பூனையை

லாவகமாக சாக்கில் பிடித்துக்கட்டி

 விடுதலை செய்தாள் ஆத்தா

கட்டுவது விடுதலைக்கு என்று

 எகடுதகடான பாடந்தான்’


வாசகர்களாய் நாம் பங்குகொள்ள-உமாமோகனின்  உணர்வுகளோடு , கவிதை அனுபவங்களோடு உறவு கொள்ள வாய்ப்பளிக்கின்றன.

’இட்லி அரிசியும் சாப்பாட்டு அரிசியும்’ எனும் கவிதை வாழ்ந்து கெட்ட உழுகுடியின் துயரம்.,உண்மையில் அந்தக் கவிதையை ஒரு சிறுகதையாக எழுத வேண்டும் உமா!

”நிறைநாழி நெல் முந்தானையில் ஏந்திக்கொண்டுதான் உள்ளே நுழைந்தார்கள் வாழவந்த பெண்கள் மணையில் அமருமுன் கவனமாக அடியில் நெல் பரப்பியே சமுக்காளம் விரிப்பது மங்கலநிகழ்வுதோறும் கொத்தான புதிர்நெல் எரவாணத்தில் அடுத்த கொத்து வரும்வரை உலர்ந்தாலும் உதிர்ந்தாலும் தொங்கும் பத்தாயங்களின் வாசனையோடு கோணிச்சாக்குகளின் உதறலோடு மழையும் வெயிலும் முற்றத்தில் இறங்கின இதெல்லாம் தொன்மமாகிவிட்ட வீடு இது நேராக உட்கார்ந்தே அறியாத தலைவன் சாய்வு நாற்காலியில் அகன்ற திரை தொலைக்காட்சி பார்த்தபடி நடவு, அறுப்பு என்று அலைந்துகொண்டிருந்த தலைவி நல்லவேளை நமது நாலு ஏக்கரும் பிரதான சாலையில் இருந்தது.

என்று பெருமூச்சோடு ஆறுதல் நல்லவேளை நமது ஊருக்கு கலெக்டர் ஆபீசும் கல்லூசியும் வந்தது. என்கிறாள் தாய்வீடு வந்திருக்கும் இளைய மகள் நல்லவேளை நீயும் அப்பாவும் வயலை மனையாக்க சம்மதித்தீர்கள் என்றாள் தாய்வீடு வந்திருக்கும் மூத்தமகள் தலைதுவட்டியபடி உங்கள் வாழ்வு அல்லவா என்றபடி தானும் தலைதுவட்டத் தொடங்கினாள் தலைவி அவர்கள் அப்போதுதான் துக்கவீட்டிலிருந்து திரும்பியிருந்தார்கள் காய்ந்த வயல் பார்த்துக் கடனை நினைத்தும் பாலிடால் பருகிய பங்காளி சாவு அது “அம்மா என்ன வாங்கவேண்டும்” பட்டணத்திலிருந்து வந்திருக்கும் மகன் கேட்கிறான் அரிசி வாங்கணும்பா இட்லி அரிசியா சாப்பாட்டு அரிசியா தலைவர் சற்றே திரும்பிப் பார்த்தார் எரவாணத்தில் காய்ந்த புதிர் ஆடும் இடத்தை.”

இது உழுகுடிகள் தம்  வேளாண் நிலத்திலிருந்து அந்நியமான அவலம் ;இன்றைக்கும் உழுகுடிகள், தெய்வங்கள் தம் எதிரே நேரில் வந்தாலும், தமக்கென வேண்டாமல், ஊர் வாழ, உறவுகள் வாடி, தம்மை அண்டி நிற்கும் உயிர்கள் வாழவேப் பிராத்திக்கும். “முடிந்த முடிவுகள் எதனையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை என்பதையும் எல்லா உண்மைகளையும், குறிப்பாக அரசியல் உண்மைகள் மாறும் தன்மைக் கொண்டவை என்பதையும் மக்கள் புரிந்து கொள்கிற போது, மற்றவர்களை நோக்கிய தங்களை நோக்கிய வஞ்சப்புகழ்ச்சி இரக்கத்துக்கும் இடம் கிடைக்கும். இந்த நூற்றாண்டின் மிகப்பெரியத் தேவை இதுதான் இரக்கத்தின் மறு உயிர்ப்பு” – என்பார் மெக்சிகோ கவிஞர் ஆக்டோவியாபாஸ்.

தமிழ்ச் சூழலில் தற்காலக் கவிதைகளின் செல்நெறி – வாசகர்களும், விமர்சகர்களும் அறிந்தது தான். உமா மோகன்  , வெளியில் எந்த வேலைக்கும் போகத,’ வூட்லயே சும்மாத்தான் இருக்கிற’  இல்லத்தரசிகளின் இன்னல்களை படம் பிடிக்கிறார்:பதிவு செய்கிறார்   HOUSEWIFE @ HOME MAKER என்ற தாலி கட்டிக்கொண்ட அடிமைப்பெண்களின்  பக்கம் நிற்கிறார் என்பது மறுக்கவியலா உண்மை. வாசலில் நெல்,கேவுறு,கம்பு,பருத்தி காயவைப்பது போல வாழ்க்கையின் பன்முகங்களை  வாசகப் பார்வைக்கு கடை விரிக்கிறார் உமா மோகன்  .செட்டியார் மட்டுமல்ல சரக்கும் மிடுக்கு.


நூல் விபரம்

நூல்: தாய்க்குலத்தின் பேராதரவோடு

ஆசிரியர்: உமா மோகன்

வெளியீடு:  சந்தியா பதிப்பகம்

விலை :  ₹  150  

About the author

அன்பாதவன்

அன்பாதவன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website