cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 விமர்சனம்

சொல்லின்மேல் படரும் பொருள் – சுகன்யா ஞானசூரியின் பார்வையில்.


“புலனத்தைவிட
வானத்தின் வலையமைப்பு
ஆகப்பெரியது
என்
இதழ் முத்திரை பதித்து
எழுதி அனுப்பியிருக்கிறேன்
எடுத்துப் படித்துக்கொள்.”

“அஞ்சல் வானம்” எனும் இக்கவிதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் தொலைந்து போன ஒரு தேசத்தை, வாசத்தை, உணர்வை பின்னோக்கிப் பார்த்து நினைவின் தாழ்வாரத்தில் கண்ணீர் சொரியச் செய்கிறது சகோதரி சுதா மாணிக்கத்தின் சொல்லின் மேல் படரும் பொருள் கவிதைத் தொகுப்பு.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்ற தொல்காப்பியத்தின் சொல்லதிகாரம் உரைப்பதைப் போல் சொல்லின் மேல் படரும் பொருள் கவிதைத் தொகுப்பும் பொருளுணர்த்தி உள்ளது. சுதா மாணிக்கத்தின் அகம் புறம் என சொற்களின் பொருளை இக்கவிதைகளில் நாம் உணர்ந்து கொள்ளலாம் என்பதைத் தாண்டி பெண் மனத்தின் அகம் புறத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார் என்பதே சரியாகும். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் சொல்லப்படுகின்ற சொற்களுக்கு பொருள் உண்டு என்பதை வாசிக்கும் நீங்கள் உணர முடியும். பொருளற்ற வெறும் சொல் யாலத்தை வைத்து கவிதை என கண்கட்டு வித்தை காட்டும் சூழலில் கவிதை என்பது பொருளுடையது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது இவரது தொகுப்பு.

“செவியுணவு” எனும் கவிதை அகம் புறம் இரண்டையும் குறியீடாக பாடும் அழகிய கவிதை. ஒரு பெண்ணின் தாபத்தை அவள் விரும்பும் போது வழங்க முடியாத இணையானவனை நோக்கிப் பாடுவதாகவும், அதே வேளை வயிற்றுப் பசியால் வாடியிருப்பவருக்கு அந்த நேரத்தில் வழங்க முடியாத உணவு பிறகு கிடைத்தாலென்ன மீந்துபோய் குப்பையில் கொட்டினால் என்ன என்றும் இருண்மை கொண்டு பசி எனும் சொல் இரு பொருளினை காலத்தோடு இணைந்து அதற்கேற்ப பொருள் வழங்குகிறது. ஆனால் அவர் முடிப்பதோ திரை நடிகர் வடிவேலு பாணியில் செவியுணவைச் சொன்னேன் என்பார். நகைச்சுவை உணர்வும் அவருக்குள் இளையோடி வருகிறது.

“அன்பு விட்டகன்று” எனும் கவிதை துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்போம் அல்லவா? ஆனால் இவர் திகட்டத் திகட்ட அன்பை வாரி வழங்குபவரைக் கண்டாலும் தூர விலகிச் செல்லச் சொல்கிறார். அதீதமான அன்பும் ஒருவகையான மனவுளைச்சலை வழங்கக்கூடியதுதான். உண்மைதானே? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழி காலங்கடந்தும் சாலப் பொருந்துகிறது.

“கடவுளின் வருகை” எனும் மற்றொரு கவிதை கடவுளின் இருப்பு குறித்து நம்மோடு உரையாடுகிறது. இங்கே கடவுள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் தனக்கு வருகின்ற துயரங்கள் அத்தனையையும் அவர் கடவுளாகப் பார்ப்பதாகக் கூறுகிறார். ஒவ்வொரு துயரையும் அடித்து நொறுக்கி வாழ்வைப் பற்றிய புரிதலை உருவாக்கிய சொற்களைக் கடவுள் என்கிறார். அவரை நோக்கி அவசரமாக வந்துகொண்டிருக்கும் மற்றொரு கடவுளிடம் மீண்டும் ஒரு உரையாடலைத் துவங்குகிறார். உண்மையில் ஆணைவிடவும் பெண்ணுக்கே மனவலிமை அதிகம் என்ற மூத்தோர் சொல் மெய்தான்.

“நிசம் மறக்க” எனும் கவிதை எல்லாத் துயரங்களிலிருந்தும் தன்னை மறந்திருக்க ஒரு குவளை மதுக்கோப்பையை வேண்டி நிற்கிறது. இங்கே பெருவாரியான ஆண்கள் தங்கள் துயரம் மறக்க மது குடிப்பதாக சொல்கிறார்கள். அப்படியெனில் ஏன் பெண்ணும் தன் துயர் தீர்க்க, அல்லது துயரத்திலிருந்து தப்பிக்க மது குடிக்கக் கூடாது? அப்படி நிகழ்ந்தால் நாடுதான் தாங்குமா? ஆண் வர்க்கத்தை நோக்கி வீசப்பட்ட ஒரு சாட்டையாக இருக்கிறது இக்கவிதை.

“பேர் சொல்லும் பிள்ளை” என்னு கவிதை ஒரு புதிய பாதை போடுகிறது. பெண் பெண்ணை மதிப்பது என்பதும் அவசியமாகிறது. மாபெரும் சபைதன்னில் பேர் சொல்லும் பிள்ளையாக ஆணுக்கு மட்டும்தான் உரிமை உண்டா? பெண்ணுக்கு இல்லையா? என கேள்விக்கணை கொடுக்கிறார். சுதா மாணிக்கம் கவிதை உலகில் பெயர் சொல்லும் பிள்ளையாகியுள்ளார் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. பெண்களுக்கும் தந்தையின் சொத்தில் சமவுரிமை இருக்கிறது என்பதை சட்டம் சமீபமாக இயற்றியுள்ளது. பெண்களும் உலகெல்லாம் பெயர் சொல்லும் பிள்ளையாக வலம் வந்துகொண்டிருக்கும் நவீன காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமைதான்.

“கடற்கரைக்குச் செல்லுதல்
மணலோடு திரும்புதல் என்றாயிற்று
மலைகளுக்குச் செல்லுதல்
அடிவாரத்தோடு பின்வாங்குதல் என்றாயிற்று
சித்திரா பெளர்ணமி
சோறு உண்ணும் போதும்
தரை பார்த்தலே
எனது எல்லை என்றாயிற்று”

எனும் வரிகளை வாசிக்கையில் எவ்வளவு துயரத்தை எழுத்தாக்கியுள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. சின்னச் சின்னச் சந்தோசங்களைக்கூட பெண்குழந்தைகளுக்கு நாம் வழங்கத் தவறிவிடுகிறோம் அல்லது பழமையான சிந்தனைகளால் முடக்கி வைத்துள்ளோம் இல்லையா. ஆனால் இன்றைய நாளில் இவைகள் குறைந்திருக்கின்றன என்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம் இல்லையா? ஒரு அழகிய பெளர்ணமியை கூட ரசிக்க விடாத அந்த துயரத்தின் எல்லைக் கோட்டை தகர்த்தெறிந்து பெண் விடுதலையை வலியுறுத்திய பெரியாரை சுதா மாணிக்கம் இப்படியாக நிறைவு செய்கிறார் இன்னொரு கவிதையில்.

“பெரியார்
ஒரு
சகாப்தம் அல்ல
என்றென்றும்
ஓயாத அலை
சாகத சப்தம்”

இதற்குமேல் நான் என்ன சொல்லிவிட முடியும்? தமக்கான விடுதலையை வாங்கித் தந்தவரை அவர்களால் மட்டுமே புரிந்துகொண்டு எழுத இயலும் என்பதற்கு சுதா மாணிக்கத்தின் இந்தக் கவிதை சாட்சி.


 

நூல்: சொல்லின் மேல் படரும் பொருள்

ஆசிரியர்: சுதா மாணிக்கம்

வெளியீடு: வளரி எழுத்துக்கூடம்

தொடர்பு எண்: +91 78715 48146

விலை: ₹ 100

 

About the author

சுகன்யா ஞானசூரி

சுகன்யா ஞானசூரி

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார்

இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website