cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 விமர்சனம்

அமுதம் சொரியும் பாழ் வட்டம் .


நந்தா, இலக்கியம் ஓவியம் ஒளிப்படங்கள் ஆகிய கலைத்துறைகளில் ஆர்வமுடைய படைப்பாளி. இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘மைனஸ் ஒன்’ என்ற தலைப்பில் 2012 வெளிவந்தது. சிறுகதைகள் எழுதுவதில் பல பரிட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொள்பவர்.

‘வெற்றிடத்தின் வட்டம் – பூஜ்யத்தின் எல்லையற்ற சுழற்சி – கடந்து கவிழ்ந்து முகிழ்ந்த நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் ‘டிஸ்டோபியன்’ நித்தியத்திலிருந்து துளிர்விட முனையும் கற்பனாவாதக் கனவுகள்’ என்று தன் பாழ் வட்டம் கவிதைகளைப் பற்றி கூறுகிறார் நந்தா.

என் வாசிப்பனுபவத்தில் “குறைந்த பட்சத்தின் நிறைந்த உச்சம்” அவர் கவிதை உலகம் என்று சொல்வேன். அவர் வரிகளிலேயே சொல்வதென்றால் “சொற்களின் நெரிசலில் சிக்கித் தவிக்கும் அர்த்தஜாமம்” அவரது கவிதைகள்.

‘நாம் பெற்ற பொன் மொழியின் பொற்காலம் நொடிக்கு நொடியென விடியத் தொடங்கவும் இந்தத் திரவ நிலவின் மணி வெளிச்சத்தில்’ மின்னுகின்றன இவரது கவிதைகள்.

‘அதிகத்துவம்’ என்ற கவிதையில் ‘அப்புறம் இந்தக் கவிதைகளை வேறு மிக அதிகம் யாத்துத் தள்ளுகிறீர்கள்’ என்ற வரியில் ‘யாத்து’ போன்ற ‘ஆர்கேயிக்’ தமிழ் வார்த்தைகளை பிரயோகிப்பதால் கவிதைகள் அடையும் இடம் நூதனமான கிளர்ச்சியை வாசக மனதில் ஏற்படுத்தும் சாகசம் புரிகிறது.

அதேபோல் நவீன கவிதை உலகம் தவிர்க்க விரும்பும், தவிர்த்தே விட்ட எதுகை மோனை எதிர் பாராத இடத்தில் எதிர் பாராமல் வந்து நிற்கும் வேண்டாத விருந்தாளியாக கவிதையின் கனத்தை குறைத்துவிடும் அபாயத்தை ‘சொல்மோகச் சம்போகம்’ கவிதையில் வரும் ‘நான் யோனிப் புதர் / நீயோ மானிடப் பதர்’ என்ற வரிகள் கச்சிதமாகச் செய்கின்றன.

‘சொற்ப அற்ப அற்புதம்’ கவிதை, வாசக மனதைக் திகைப்பில் ஆழ்த்தும் ‘லிரிக் இன்டன்சிடியுடன் (Lyrical Intensity)’ மிளிரும் நளின நடன மாயாஜாலம்.

மொழியைப் பரிட்சார்த்தமான கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படுத்துகிறாரோ என்று நினைக்கும் பொழுது ‘ஒரு டால்பின் டைவில், ஒரே லீப்பில்’ அதன் உச்சத்தில் நிழலாட்டம் ஆடும் கவிதைகள், தொகுப்பு முழுவதும் விரவி காணப்படுகின்றன.

‘ஞானம் என்னும் மறைகேலி’, ‘காலச்சொட்டின் மௌனப்பிரதி’, என இப்படித் தொகுப்பு முழுவதும் பலப்பல சொல் ஜால வித்தைகள் பிதுங்கி வழிகிறது எனச் சொன்னால் அது மிகையாகாது.

பெருவாரியான கவிதைகள் காதலை, காமத்தின் உச்ச விளைவை, மந்திரச் சொற்களால் கட்டித் தூக்கி அடிக்கின்றன. உதாரணமாக ‘நாட்குறிப்பில் நழுவும் காமம் – ஒன்று’ என்ற கவிதையைச் சொல்லலாம் – ‘காமத்தின் குறியடித் தடத்தில் வெற்று வெளியும் அற்று / காற்று தன் மூச்சைப் பேரலையின் பெருங்குரலில் பதுக்கிப் பதறுகிறது / உதறும் உதடுகள் கதறும் பால்வீதியின் காலங்கள் கடந்து / தாமதமாக விழுந்த மோக நிழலின் உண்மையின் ஆமோதத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறது/’, இதில் “வெற்று ,அற்று, காற்று” உகர சொல்லடுக்கின் முறை கவன ஈர்ப்புக்காகவா எனப் புரியவில்லை. அதேபோல், ஆமோதிப்பிற்காக என்பதை ‘ஆமோதத்திற்காக’ என மாற்றியது ‘புதியன புகுத்தலுக்காகவா’ என்றும் கேள்வி எழாமல் இல்லை.

ஒரு வெட்கமற்ற முத்தத்தின் / காதல் கனித்துளி / நிஜத்தில் சூழ் கொள்ளும் முள்ளின் முனையில் / பூத்த ரோஜாவையும் / காத்துச் செத்த ராஜாவையும் /’ ‘பற்றி நாட்குறிப்பில் நழுவும் காமம் – இரண்டில்’ இப்படி வர்ணிக்கிறார் ‘முலைப் பனி நுனி கந்தர்வம் / அவ்வளவு லாவண்யம் / அவ்வளவு சௌந்தரியம்’.

மன வெளிப் பிம்பங்களை கட்டமைப்பதில், சாகசங்கள் நிகழ்த்துவதில், , நந்தகுமாருக்கு தனி இடம் உண்டு. இவர் தன் கவிதைகளுக்கு தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகள் கவன ஈர்ப்பைச் செய்கின்றன. ‘சொல்லில் கூடும் கவிதை’ ‘சொல் மோகச் சம்போகம்’ போன்ற கவிதைத் தலைப்புகள் ஒரு வாசகனின் வாசிக்கும் தேர்வினை எளிதாக்கி விடுகின்றன.

பெருவாரியான கவிதைகள் காலச்சுவடு, நடுகல், வாசகசாலை, மணல்வீடு போன்ற பத்திரிகைகளில் வந்தவை என்பது கூடுதல் சிறப்பு.

இவரது பல கவிதைகள் மீள் வாசிப்பிலும் புரியாமல் வாசகனை உதாசீனப் படுத்திப் போகின்றன. கவிதைகளுக்கு மதிப்புரை எழுதுவதெல்லாம் அபத்தமான செயல் என்று நினைப்பவள் நான். கவிதைகளைப் புரிந்துகொண்டேன் என்று ஒரு வாசகன் சொல்வது கூட அதற்கு இழைக்கும் மிகை அநீதி என்று கருதுபவளும்கூட. கவிதைகளுக்கு நெருக்கமாக பயணிக்க முயற்சி செய்வது மட்டுமே வாசகனால் முடிந்த செயல். அப்படித்தான் நந்தாவின் சில கவிதைகளுக்குள் பயணம் போனேன். ஆனால் திரும்பி நானாக வர முடியவில்லையோ என்ற ஆச்சரியமும் பிரமிப்பும் குழப்பமும் நீடிக்கிறது. சில தரிசனங்கள் அப்படியான மனநிலையில் நிறுத்தி விடும்போது மதுக் கிண்ணத்தை கீழே தவறவிட்டுப் பின்னும் உடைப்பதைப் போல கவிதைத் தொகுப்பினை குப்புற கவிழ்த்து விடுவது கவிஞனுக்கு சொல்லும் ‘சீயர்ஸ்’ என்று மனப்பூர்வமாக நினைக்கிறேன். சிறியதொரு நன்றி நவிலலும் நந்தா – உங்கள் கவிதை யாக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தவர்கள் வரிசையில் மூன்றாவதாக எனது பெயரையும் கோர்த்தமைக்காக மனமார்ந்த நன்றிகள் !


– அமுதமொழி

 

  • கவிதைத் தொகுப்பு : பாழ்வட்டம்
  • ஆசிரியர் : நந்தாகுமாரன்
  • வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
  • விலை :  ₹175

 

About the author

நுட்பம்

நுட்பம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website