” who wrote so many poems without signing them, was often a woman” –
Virginia Woolf
யார் தனது கவிதைகளின் கீழ் அவரது பெயர்களை எழுதாமல் விடுகிறாரோ அது அநேசுமாக ஒரு பெண்ணாகவே இருக்கிறார் என்று விர்ஜீனியா வுல்ஃப் என்கிற பிரபலமான ஆங்கிலப் பெண் எழுத்தாளர் கூறுவார்.அவருடைய காலம் கடந்த நூற்றண்டுகளைச் சார்ந்தது பொதுவாகத் தமிழ்ச்சூழலில் கவிதை தழைத்த சங்க காலம் தொட்டும் புனைவுகளின் ஆரம்ப காலத்திலும் அப்படி ஒரு நிலை இல்லை, இப்போது நவீன தமிழ்ச் சூழலில் அது பெரிதும் அல்லது அறவே உடைபட்டு விட்டதோடு 90 களிலிருந்து பல பெண் கவிஞர்களின் காத்திரமான கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க உதாரணங்களில் ஒன்றாக அ. ரோஸ்லின் பெயரைத் துணிந்து கூறலாம்.
பன்முகப்பட்ட குரல்களில் வகைகளில் பெண்க விஞர்களின் கவிதைகள் எழுதப்படுகின்றன. அதில் ஒன்றாக, அன்பை எதிர் நோக்கும் தன் அடையாளம் காணப்படாத, அங்கீகரிப்படாத உணர்வுகளைச் சற்றே விமர்சனத் தொனியுடன் கவிதைகளாக்குவதை ஒரு வகையாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன் ஒரு உதாரணமாக தேன்மொழி தாஸின் “நிராசைகளின் ஆதித்தாய்” போன்ற கவிதைகளைச் சொல்லலாம். ரோஸ்லினின் சில கவிதைகளும் அப்படி ஒரு வகைமையைச் சார்ந்து இயங்குவதாகத் தோன்றுகிறது. அவர் தனது முன்னுரையில் “அனைத்து உயிர்களும் தனது வாழ்வைக் கடினமான இருத்தலுடன் நகர்த்த வேண்டியிருக்கிறது அவ்வாறான சூழல்களைக் காணும் பொழுது அகத்தில் படியும் வெம்மை தன்னை எழுத்தாக்கி அந்தத் தன்மைக்குள் தானும் கடந்து போகிறது என்று கூறுவது இதனை உறுதிப்படுத்துகிறது, அது ஒரு வகை.
சக்தி ஜோதியின் கவிதையில் பெண்கள், நீர் நிலம் நெருப்பு ஆகாயம் காற்று ஐந்து வகையுடனும் பொருத்தித் தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள். ரோஸ்லின் தன் கவிதைகளில் பலவகைகளிலும் வனத்திற்கு ஒப்பிடத் தகுந்த உயர் உயிரியாகத் தோற்றம் கொள்கிறார். முன்பே ரோஸ்லின் தன் ஒரு தொகுப்பிற்கு “காடறியாது பூக்கும் மலர்” என்று தலைப்பிட்டிருக்கிறார். தாயறியாத சூலுண்டா என்பது சொலவடை.. இங்கே காடறியாது பூக்கும் மலரென தனக்குள் மலரும் ஒரு சினேகத்தைச் சொல்கிறார். ஆம் காதலும் சினேகமும் ஒரு ரகசிய மலர் அது யார் மனதில் பூத்தாலும் முதலில் ரகசியமாகவே இருக்கும். சில மனங்களில் அது பூத்தது போலவே புதைந்தும் போகும் வாழ்க்கையில் இப்படிப் புதைக்கப்பட்ட கனவுகளுடன் அதிகமும் உலவுவது பெண்கள்தான். அவற்றை அவர்களே ஒவ்வொன்றாக மீட்டெடுத்து வந்தாலும் அவர்களுக்கு இன்னும் பல அனுபவங்கள் மறுக்கப்பட்டே இருக்கின்றன.
( ரோஸ்லினின் கவிதைகளைக் கவனிக்கையில் அவருக்கு வாய்த்த வாழ்க்கைத் தரிசனங்கள் எல்லாம் எதிர்பாலின் மீது பிரிவின் ரேகைகள் ஊடாடி நிற்கும் கனவு போன்ற “ஒரு பரிவு” — என்று தோன்றுகிறது. பரிவும் பிரிவின் நிமித்தமும் என புதிய திணை போல என்று அழைக்கத் தோன்றுகிறது.)
அன்பை மழை போல எப்போதும் ஏந்திக் கொள்ளும் நிலமாக ஒரு பெண்ணை இனம் காட்டும். அவரது கவிதைகள், அதே நேரத்தில் ஒரு பெண்ணின் மென்மையான உறவைக் கொச்சைப் படுத்தும் ஆணுக்கு எதிராகவும் முரண் குரல்களை எழுப்புகின்றன. இதை அவர் எந்த கலகக் குரல் சார்ந்தும் எழுப்பவில்லை,தூய அன்பின் வெளிப்பாடாகவே முன்வைக்கிறார்.இந்த முரணின் அழகியலைப் பொறுத்து ரோஸ்லினின் கவிதைகள் ஒரு பாலை நிலத்தாவரமாக வறட்சியினைப் பிரதிபலிக்காமல் நெய்தல் கரையின் குளிர்மணலில், வளர்ந்து உயர்ந்து நிற்கும் தென்னைகளாகத் தோற்றமளிக்கின்றன. இந்த அழகியலை நான் வித்தியாசமான ஒன்றாகக் காண்கிறேன்.
“மிதக்கும் முத்தம்” என்றும் “மலர்க் காட்டின் ஆதித்துளி” என்றும் அவர் மானுட குலத்தின் நிபந்தனைகளற்ற அன்பினை ஆதிக் காதலை மிக மிகச் செறிவான சொற்களில் நம்முன் விரிக்கிறார். முந்திய நான்கு தொகுப்புகளில் இருந்தும் மிகவும் முதிர்ச்சியான இறுக்கமான வரிகள் கொண்ட இக்கவிதைகள், காட்டில் நிலவாகவோ, கடலில் மழையாகவோ பெய்து வீணாகாமல், சரியான விளை நிலத்தில் விழுந்து தானியங்களின் அன்பை உயிர்ப்பிக்கின்றன.
ரோஸ்லினுக்கு வார்த்தைகள் செறிவாகவும் அழுத்தமாகவும் வந்து விழுகின்றன. எழுதிப் பழகிய கையின் லாவகம் பல கவிதைகளில் வெளிப்படுகிறது.
“சேறு படர்ந்த கதைகள்” என்று ஒரு கவிதை,
“தனது ஜீவனை
மரிக்கும் தருவாயிலுள்ள பறவையைப் போல
சுமந்து கொண்டிருக்கிறாள்,
முன்னம் அவளுக்கு
மிகப் பரிச்சயமான சிற்றோடையிடம் ஒரு நாள்
காலவோட்டம் அறியாமல் தொன்மக் கதை பேசியிருக்கிறாள்.
ஓடியும்
சாடியும்
தெறிக்கும் நீர்த்திவலைகளை அள்ளியள்ளி
மேலே பூசிக்கொண்டபோது
சிற்றோடை பல்வேறு வனக்கதைகளை அவளிடம் கூற ஆரம்பித்தது,
தனது நீண்ட வேள்வியினின்று,
முடிவுறாத அவள் தேகத்தின் வேதனையினின்று,
கடந்துவந்த பால்யத்தின் சாற்றினின்று
அவற்றை சிரத்தையுடன் கொண்டாடுகிறாள்
ஓடையில் நனைந்த
மருதோன்றிச்செடியென.
முதல் புணர்ச்சி குருதியின் வெஞ்சொட்டென ஒழுகும் முள்ளின் நெருக்குதலிலிருந்து
அவளை இப்போதும்
விடுவித்தபடி
நகர்ந்துகொண்டிருக்கிறது வனம்.
அவளொரு பூநாரையாகி
நீண்டு வளைந்த தன் கழுத்தை ஓடையின் காதுகளை நோக்கி நீட்டுகிறாள்,
அவளுக்குப் பிடித்தமான சேறு படர்ந்த
கதைகளையுள்ளியவாறு”
இதில் முதலில் கவர்வது அவரது வார்த்தை அடுக்குதலின் தேர்ச்சி அவை தன்னியல்பாக வந்து விழுவதை நான் காண்கிறேன். அப்புறம் வரிகள் பத்திகளாகி, பத்திகள் மொத்தக் கவிதையாகி அதன் ஆன்மாவிற்குள் நம்மை இழுத்துக் கொள்கின்றன. நாம் கூடு விட்டுக் கூடு பாய்கிறோம். நாமே ஒரு நாரையாகி கழுத்தை ஓடையினை நோக்கி நீட்டுவது போல ஒரு உணர்வு மனதுள் எழுகிறது.
காமத்தின் கனி என்றொரு கவிதை அதை வாசிக்க வாசிக்க ஒரு படைப்பாளியாக எனக்குள் பல திறப்புகளை உண்டு பண்ணுகிறது. அல்லது புதிய படிமங்களை உருவகங்களை உருவாக்குகிறது, அதுவே நல்ல கவிதையின் ஒரு இலக்கணம் எனலாம். அப்படி ஓர் கவிதை இது சினேகத்திற்கும் காமத்திற்கும் இடையே தொலைதூரம் இருக்கிறது. ஒன்றையொன்று எப்படி நெருங்குகிறது, சூரியனுக்கும் செடிகளுக்கும் இடையே தொலைவு மறைந்து கூடல் நிகழ்ந்து இலைகள் அன்பெனும் சூரிய ஒளியால் எப்படி பச்சையம் பெறுகிறதோ அப்படி இருக்குமோ என்று ஒரு படிமத்தைத் தோற்றுவிக்கிறது, புரிந்து கொள்ளும் முன்பே பேசத் தொடங்குவதே சிறந்த கவிதை என்பார்கள், அப்படி ஒரு நல்ல அனுபவத்தைத் தூண்டுகிற கவிதை இது
“கனியின் முதிர்வைப்போல
ஒரு அன்பைக் கண்ணுற்றபடியிருக்கிறேன்.
அதன் இளம் வாசனையென மிளிர்கிறது
நாம் ஒளித்து வைத்திருக்கும் சிநேகம்,
தொலைவெனும் இடைவெளியில் உடலின் மதுரத்தை
பகிர்ந்து கொண்டிருக்கிறோம். மகத்துவமான
உன் பிரியத்தின் நெடியில்
தேகம் வேண்டும் மாம்சத்தின் வாஞ்சையோடு
தன்னை இலகுவாக்கிக் கொள்கிறது காமத்தின் கனி”
இதே போல பிடித்த மீனை மறுபடி நீருக்குள் விட்டு விட அது ஆழத்திற்கு விரைந்தோடி ஆசுவாசமடைந்து ,மறுபடி நீச்சலில் திளைப்பது போன்ற உணர்வை “மழை அல்லி, இரவு,நிர்மாணம்” போன்ற கவிதைகள் தருகின்றன. இவற்றை வாசித்த பின் எனக்குத் தோன்றிற்று அந்த மீன்களுக்கு பயம் போயிருக்குமா அல்லது மாந்தர்களைப் போல பயம் உள்ளார்ந்து இருக்குமா என்று. அதனாலவை மறு வாசிப்பைப் பலமுறை கோருகிற கவிதைகளாக உள்ளன.
ஆனால் பிரிவு போன்ற வாசிப்பு எளிமையும் அர்த்த ஆழமும் கொண்ட கவிதைகளும், இருக்கின்றன.
“பிரிவு”
வெறுமையும் வெப்பமுமாய் புழுங்கித் தொலைகிறது.
லாக்டௌன் காலங்கள்
எல்லாவற்றையும் கடந்து விட்டதாய்
களித்துச்
சொன்னாலும் உயிரைப் பத்திரப்படுத்த
அறைக்குள் கிடந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.
நீருக்குள் மூழ்கிய ஒன்றாய் கிடக்கிறது வெறுமை.
இப்படியான பிரிவின் அபத்தம் நிகழுமென
நமது கடந்த சந்திப்பில்
நான் நினைத்ததில்லை.
ஒரு முறை பயிற்சி காரணமாக
தொலைதூரப் பயணம்
செல்ல நேர்ந்தது,
உன் நினைவில்
எடுத்துக் சென்றது
முத்தமிட்டுப் பரிசளித்த
உன் வீட்டு செண்பகப் பூக்களைத் தான்.
வலிந்தோடும்
இப்பிரிவிற்கு இதமாய் அம்மலரினை மெல்ல முகர்கிறேன்.
தொலைவின் இடைவெளியன்று இது.
நம் நலனுக்கான இடைவெளி.
எப்போதும் போலவே எல்லாம் நிகழ்கிறது இங்கே
சினிமா பார்த்து சிரிக்கிறாள் அம்மா,
வலை தளங்களில்
தேடிக் களைக்கிறான் வினோதன்.
செல்பேசியில் கதைக்கலாம் தான். ஆனாலும் உன் கரத்தை
இளஞ்சூட்டோடு
இப்போது பற்ற வேண்டும்”
மற்றும் ஒரு கவிதையில்,
“அப்பழுக்கில்லாத நதியாக
சப்தமின்றி கடந்துவிடலாம்
என்றுதான் ஆசை.
மணிக்கட்டு எலும்பு முறியும் போது எவ்வாறு அமைதி காப்பது கிருஷ்ணா”.
என்பது போல சாதாரண வரிகளும் உள்ளன.
ஆனால் சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கக் கூடிய கவிதைகளைத் தொடர்ந்து வழங்குவதில்அ.ரோஸ்லின் இயல்பான தேர்ச்சியினைப் பெற்று விட்டார் என்ற மகிழ்வோடு அவரை வாழ்த்துகிறேன்.
குறிப்பு : கவிஞர் அ.ரோஸ்லினின் “வாலைக் குழைக்கும் பிரபஞ்சம்” கவிதைத் தொகுப்பு குறித்தான விமர்சனம் நிகழ்வில் கவிஞர் கலாப்ரியா அளித்த உரையின் எழுத்து வடிவம்.
நூல் : வாலைக் குழைக்கும் பிரபஞ்சம்
வெளியீடு : வாசகசாலை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2021
விலை : ₹ 130