cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 விமர்சனம்

ப்ரிம்யா க்ராஸ்வின்னின் ”தப்பரும்பு” – ஒரு பார்வை


கவிஞர் ப்ரிம்யா க்ராஸ்வின் எதைப் பற்றியும் தன் வித்தியாசமான பார்வையில், நமக்குத் தோன்றாத ஒரே ஒரு வார்த்தையில் சொல்லி விடும் வல்லமை மிக்கவர். ஆங்கிலப் பட்டதாரி. ஆனாலும், தமிழில் கவிதை எழுதுவதில் பெருமை கொள்பவர். அழகான வார்த்தைகளை, முத்துக்களை எடுத்துக் கோர்த்த மாலையைப் போன்றது இவரின் கவிதைகள்.

தப்பரும்பு இவரின் முதல் கவிதைத் தொகுப்பு. தொகுப்பு முழுவதும் மனதின் ஓட்டங்களை, எண்ணங்கள் செயல்படும் விந்தைகளை, மனிதர்களின் விசித்திரமான முகங்களை, கனிவான வார்த்தைகள் கொண்டு கனமாகப் படைத்திருக்கிறார்.

தப்பரும்பு என்பது தவறி விட்ட மலர். மலர் கொய்பவர்கள் கவனிக்காமல் விட்டது. அது போன்று கவனிக்காமல் விட்டவர்களின் நிலைமைகளை, அவர்களின் காதல், பிரிவு, பிரிவாற்றாமை பற்றிய நுண்ணுணர்வுகளை இக்கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர்.

முதல் கவிதையே வாழ்தலின் அழகைச் சொல்கிறது. எப்படிப் பட்ட வாழ்வு, எவ்வளவு காலம் நீடிக்கப் போகும் வாழ்வு. சொல்கிறார் பாருங்கள்,

”பருந்தின் கால்களில்
பறத்தலின் கூச்சத்தை
கண் மூடி ரசிக்கும்
பறவைக்குஞ்சு போல
ஒரு வாழ்தல்.!”

கண் மூடி ரசிக்கிறதாம்…. ரசனை.

ஆண்களின் பல குணங்கள் இவரைக் கவர்கின்றன. இவருடைய கவிதைகளைப் படித்தால், நாம் ஆண் என்பதற்கே பெருமைப் படலாம் போல உள்ளது. அதுவும் அவர் சொல்லும் சில குணங்கள் நம்மிடம் இருந்தால்….  எப்படி மேடம்!

‘வளர்ந்து கெட்ட நல்லவன்கள்’ என்று ஒரு கவிதை. பேருந்தில் அதிக உயரத்தின் காரணமாக, பஸ் கம்பி உயரத்தில் தெரியும் தலை, தலை குனிந்து விஷேஷங்களில் பன்னீர் சந்தனம் வாங்கிக் கொள்பவன், மனைவி பிள்ளைகளுக்கு தன் நிழலைத் தருபவன்… என்று சொல்லிக் கொண்டே வருபவர்,

”ரயில் பயணங்களில்
படுக்கை தாண்டி
நீண்டிருக்கும்
கால்களைக் கண்டால்
வகுப்பறையின் வெளியில்
நிற்கும்,குறும்புக் குழந்தையைக்
கண்டாற்போல
முறுவல் பூத்து விடுகிறது.”

என்று முடிக்கும் போது, சற்று நம் உயரத்தை நாமே பார்த்துக் கொள்கிறோம்.

தனிமை எவ்வளவு கொடுமையானது. சுதந்திரம் இருக்கலாம். யாருக்கும் கட்டுப்பட வேண்டிய, கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், அலுவலகத்திற்குச் சென்று விட்டு, வீட்டிற்கு வரும் போது, நமக்காகக் காத்திருக்கும் உள்ளங்கள் நம்மைத் தாமதமாக வந்ததற்காகக் கடிந்து கொண்டாலும், இருப்பது மாபெரும் சுகம்தானே. அதை,

 “வீடு வந்தால் நீ இருப்பாய்
என்பது
எவ்வளவு ஆசுவாசம்?
நானே தாழ் திறந்து
என்னைப் பூட்டிக் கொள்ளும்
தண்டனை
நீ இல்லாத இவ்வீடு…”

என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

நம் அன்புக்கும் பிரியத்திற்கும் உரியவர்கள், நம்மிடம் பேச வேண்டும் என்பது கூட இல்லை. சற்று கல கல வென்று நடமாடிக் கொண்டிருந்தாலே போதும். நாமும் சந்தோசப்படுவோம் தானே.
‘அன்பின் பதிலி’  இதைத் தான் சொல்கிறது.

 “தூண்டிலில் சலுகைகளைத்
துடிக்கத் துடிக்க மாட்டி
தக்கை அசையக் காத்திருக்கும்
தன்னலம்
என் அன்பிற்கு இல்லை.
நீ கோவில் குளத்தின்
மாசறு மச்சம்!
நான் தூவும் அன்பிற்கு
பதிலியாய்
நீ செய்ய வேண்டியது
ஒன்றும் இல்லை…
சந்தோஷமாய்க் கண்முன்
வளைய வந்து கொண்டிரு
அது போதும்!! “

எவ்வளவு அழகான வார்த்தைகள்.

காய்ச்சலில் தன் அன்னை, உடல் போர்த்தி தன்னைக் கவனிப்பது, தான் அவள் வயிற்றில் கருவாய் இருந்ததை ஞாபகப்படுத்துகிறது கவிஞருக்கு, குளிர் என்ற கவிதையில்.

காமத்தைப் பற்றி காதலோடு கவிதைகள் தந்திருக்கிறார் ப்ரிம்யா.  ‘பேய்க்காமம்’  என்ற கவிதையின் சில வரிகள், பரவசப் படுத்துகின்றன.

 “வீழ் நட்சத்திரங்கள்
எங்கிருந்து புறப்படும் என்று
அறிகிலேன்…
அவை வீழ்வது
பின்னங்கழுத்தில்
என்பது மட்டும்
உணர்த்தியிருக்கிறாய்!

அழுதுண்டு உறங்கும் சிசுவை
நிகரத்தது
அவளுண்டு துயிலும் அவன்
முகம். “

‘கொலுசுகளின் ஆதாளி’  என்ற கவிதையில், கொலுசின் சத்தத்தை, அவை தரும் அர்த்தங்களை வகைப்படுத்துகிறார். கழுத்தில் மஞ்சள் ஏறிய அன்றே, மெட்டியைப் பிரசவிக்கும் கொலுசு என்று படிக்கும் போது கை தட்டத் தோன்றுகிறது. வேறொரு இடத்தில்,

 “கூட்டுக் குடும்பத்தில்
வாக்கப்பட்டவள்
மொத்தக் குடும்பமும்
உறங்கும் வேளையில்
கால்களின் வாய் பொத்தி
நடக்கக் கற்றுக் கொள்வாள்.”

என்பதைப் படிக்கும் போது, அவரின் பார்வையை வியக்கத் தோன்றுகிறது.

ஒருவரின் மீதான ஈர்ப்பு, புல்லாங்குழல் துவாரங்களுக்குள் சென்று மீளும் பொன் வண்டை நினைவு படுத்துகிறது கவிஞருக்கு.. எந்தப் பக்கத்திலிருந்து ஈர்த்திருப்பாய் என்று.

‘ஆணுடன் நட்பு பாராட்டல்’  என்று ஒரு கவிதை. அவ்வளவு அருமை. அதில் அவர் சொல்லியிருக்கும் கவியழகு, படித்து ருசிக்க வேண்டியது.

முடிப்பதற்கு முன், தலைப்புக் கவிதையிலிருந்து சில வரிகள். விட்டுப் பிரிந்த தலைவனைப் பற்றி தலைவியின் மனநிலை.

 “இப்போது என் வாழ்வில்
நீ இல்லை என்றான பின்பும்
என்னை நானே மலர்த்திக்
கொள்கின்ற
என்றாவது ஒரு நாளில்
மன அடுக்குகளில் இருந்து
உன் முகம் தேடி எடுப்பேன்…
அப்போது
என் நிர்வாணம் ஒரு
சுவாலையைப் போல
திசையெங்கும் ஒளிர
இதழிதழாய் மலர்வேன்..
நானுன் விழி நழுவிய
தப்பரும்பு. “

இனியும் நிறைய உள்ளன. ஒரே குறையாக, குறை என்றும் சொல்ல முடியாது, எல்லாக் கவிதைகளும் அகம் சார்ந்தவை. புறக் காரணங்களும், காரணிகளும்தானே அகத்தைத் தீர்மானிக்கின்றன. புறநானூறு போல, சமூகத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகளையும் எழுதினால் நலம்.

அழகான அட்டையுடன், நூலை அழகாகப் பதிப்பித்த வாசகசாலைக்கு நன்றியும் பாராட்டும்.

எனக்குப் பிடித்த, படித்த வரிகளை வாட்ஸ்-ஆப். ஸ்டேடஸ்சில் பகிர்வது வழக்கம். இவரின் கவிதை வரிகள் பல அதற்கேற்றவையாகத் தெரிகின்றன.

வாழ்த்துகள் கவிஞர் ப்ரிம்யா .!


நூல் விபரம்
  • தப்பரும்பு

ஆசிரியர் : ப்ரிம்யா கிராஸ்வின்

வெளியீடு : வாசகசாலை

வெளியான ஆண்டு :  2022

விலை : ₹ 150

நூலைப் பெற : 99628 14443


 Courtesy : Primya Crosswin Photo : Vasagasalai- Fb Group

About the author

கோவை பிரசன்னா

கோவை பிரசன்னா

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website