கவிஞர் வேல்கண்ணன் இந்த தொகுதியில் தத்துவ முரண், பாம்பு அதன் குறியீடுகளில் ஒன்றான காமம், கடல் சார்ந்த உணர்வுக்குறியீடுகள், கைவிடுதல், விடுபடுதல், இல்லாமல் போதல், கடைசி நம்பிக்கையுடன் வாழ்வை நகர்த்துதல், துன்பியலில் இன்பியலினைத் தேட முயற்சித்தல் போன்ற சாராம்சங்களுடன் புத்தகம் முழுவதிலும் சிறு கவிதைகள், பெருங்கவிதைகள், சாதாரண கவிதைகள் போலதொரு தோற்றங்கள், ஆழ்ந்த உணர்வுடன் கூடிய கவிதைகளென சீசாப்பலகையில் ஏறி இறங்கி இறங்கி ஏறி அமர்ந்து நடக்கும் தன் மனதுடனான போராட்டங்களை எழுதுகிறார். ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு சாதாரண மனிதனின் அத்தனை “ஊசலாட்டங்கள்” தான் தொகுப்பு.
முதல் இரண்டு கவிதைகளும் கவிதை அரசியலைச் சித்தரிப்பதாக கூறப்பட்டது என்றாலும் நான் இன்னொரு கோணத்தில் யோசிக்க முடியுமா என்று யோசித்தேன்.
“முழுமையற்ற” என்று தொடங்கும் கவிதை
”நெளிந்த சொற்களுக்குள் மெனக்கெட்டு
எப்படியோ மீனைப்பிடித்துவிட்டேன்
செதில் நீக்கம் செய்து கொண்டிருக்கையில்
… …
மீனை ஆய்ந்து கொண்டிருக்கும் போதே
குழம்பைக்கொதிக்க வைக்கிறீர்கள்”
என்று நீள்கிறது.
எவ்விதமான தர்க்க விதண்டாவாதத்திற்கும் இதைப்பொறுத்த முடியும் அல்லது தன்னை நிரூபிக்க ஏதுமற்றுக் கையறுநிலையில் கதறும் ஒருவனின் வலுவான அந்தரங்க ஓலமாகக் கொள்ள முடியும். எதைச் சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் நம்மை மடக்கி நம்மீது குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பவர்களுக்கு நாம் எந்தச் சொற்களாலும் விளக்கம் கொடுக்கவே முடியாதல்லவா? இப்படிப் பல கோணங்களைத் தரமுடிகிற கவிதைகள் வழிந்து நிரம்புகின்றன கவிதை அணைகளாக.
இன்னொன்று
“ரெண்டு நாளிலேயே தாலியறுத்த அத்தை புழக்கடையில் செத்துக்கிடந்தாள்… .
அவள் சொன்ன கதைகள்… “
என்று சாதாரணமாக நகரும் கவிதையில் ஒரு நுட்பமான படிமத்தைத் திடுக்கென்று சேர்க்கிறார் கவிஞர்.
“அவள் கனவின் அழகிய பாம்புகள்
புழக்கடை வந்திருக்குமோ?”
பாம்புகளை நிறைவேறாத காமம், குண்டலினி சக்தி, பய உணர்வு, தெய்வத்தன்மை இப்படிப் பல குறியீடுகளில் நாம் புரிந்து கொண்டாலும் இந்த இடத்தில் ரெண்டு நாளிலேயே தாலியறுத்தவளின் தாப உணர்வுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று ஒரு கேள்வி எழுகிறது. அந்தத்தாப உணர்வுகளின் அழகியலைக் கூட அவள் கதைகளாக,வடிகாலாக மாற்றி இருக்கலாம். அந்த வரியின் முடிவு ஒரு சிறுகதைத் தன்மையைக் கொண்டுள்ளது வாசகனுக்கு வழிவிட்டு.
“ஒரு குருடனுக்குப்
பேரொளியால் நிரம்பியிருக்கிறது பிரபஞ்சம்
ஒரு செவிடனுக்குத்
தீராத ஒலியால் நிரம்பியிருக்கிறது காலம்
… … … .. … .. “
என்று செல்லும் கவிதை
“பால்வெளியைத்திறக்கும் திறக்கும் இரவு
மற்றுமொரு பகலே”
என்று முடிகிறது.
இதை ஒருவகையான தத்துவ முரண் கவிதையாக நான் பார்க்கிறேன். குருடனால் எப்படிப் பார்க்க முடியும், செவிடனால் எப்படிக் கேட்க முடியும். இருந்தும் குருடனுக்குப் பேரொளி நிரம்புகிறது என்கிற சொல்லாட்சி இங்கே எதைச் சொல்ல வருகிறது.? எந்தவித தீர்ப்பு, முன் முடிவு இல்லாதவனுக்கு எல்லா மனிதரையும் ஒன்றாக நோக்கும் தன்மை வாய்க்கும் அல்லது அறிய அறியத்தான் வேறுபாடுகள், பிரிவினைகள், ஒன்றுமே அறியாமல் அறியாமையில் திளைத்துக் கிடக்கிற ஒரு வெகுளி மனிதனுக்கு இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் ஒன்று தானே.
அடுத்து
“வளர்த்த நந்தவனம்
தாங்கொணாப்புழுக்கம்
கிரஹித்துக்கொள்கிறது
அத்துவானக்கானல் செடி”
என்று ஒரு சாதாரண குட்டிக்கவிதை போலதொரு தோற்றம் தான். ஆனால் அது சொல்லும் செய்தி…
நானே பாடுபட்டுப் பாடுபட்டு ஒரு அன்பை வளர்க்கிறேன்…… . அது அன்பின் மிகுதியால் அல்லது பொசசிவ்தன்மையால் தாங்கொணாப்புழுக்கத்தை இறுக்கத்தை அடைந்து விடுகிறது… வேறு வழியில்லை நான் வளர்த்ததால் அதைக் கிரகித்துக் கொள்கிறேன் . கானல் செடியாக என்பதை இங்கே அன்பின் மாயத்தோற்றம் என்று பொருளெடுக்கிறேன்.
மற்றுமொரு தத்துவ முரண் கவிதையாக இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.
“கனவுக்கதவுகளை அறைந்து சாத்தியபடியே
நொடியில் பிளந்து கொட்டுகிறது மழை
கசையடிகள் கொடுத்தபடியே
நித்தியத்துவத்தைக் கடத்த முயல்கிறது காலம்”
என்று நீளும் கவிதை
வேலை வாய்ப்புகளைப் பிடுங்கி விரட்டி விடப்பட்டு, உருகி உருகிக் காதலித்துத்தொலைத்து முழுகி விட்டு, உறவுகளை அதன் மூலம் வரும் நெருக்கடிகளை அறுத்துக் கூறுபோட்டு விட்டு இப்படி எல்லாவிதமான கைவிடப்பட்ட தன்மையுடன் தான் நமக்கான ஓட்டத்தை முரணுடன் ஓடிக்கொண்டே இருக்கிறோம். குளுமையைத்தருவது போல் போக்கு காட்டி வெம்மையைத்தந்து நகரச்சொல்கிற, ஓடு ஓடு என்று விரட்டுகிற காலத்திடம் சக்களத்திச் சண்டை போட நமக்கு நேரமிருக்கிறதா என்ன? இருத்தலில், பிழைத்தலில் இல்லாமல் இருந்துகொண்டே தொடர்வது. அத்தனையும் கவிதை முடிவுபோல “சிதறியபடியே” நிகழ்கிறது.
பிறிதொரு கவிதை. சாதாரண கண்ணில் அங்கதச்சுவை போலத் தோன்றும் கவிதை. ஆனால் உட்பொருள் காதல் தன்மையைக் கடந்து ஒத்திசைவுடன் காமத்திற்கு நகரும் இரு மனங்களின் உரையாடலாக.
“என் அடைசலில் உருவாகிய கொசு உன்னைக்கடித்தது
உன் நிரவலில் வளரும் பூனை என்னைப் பிறாண்டியது
… ..
வேட்டை நாய்களை ஏவினேன்
பசித்த புலியின் கூண்டு திறந்து விடுகிறாய்
……
ஒற்றை யானை வந்து கொண்டிருக்கிறது.”
என் மன அடைசல் அல்லது புழக்கத்தில் உருவான காமம் உன்னையும் தொந்தரவு செய்கிறது. உனக்குள்ளும் இருக்கும் அவ்வுணர்வு என்னைத் தொந்தரவு செய்கிறது. காமத்தின்பால் தோன்றுகிற குழைவுச்சொற்களை வேட்டை நாய்களைப்போல ஏவுகிறேன். தெரிந்தே என் பசி போக்க புலிக்கூண்டைத் திறக்கிறாய். ஒற்றை யானையாக மதங்கொண்ட வாரணமாக என் காமம் உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது… அற்புதமான ஒரு காமச்சித்திரம் . இப்படிக் கற்பனை செய்தால் இந்த சாதாரண தோற்றம் கொண்ட கவிதை எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது பாருங்கள்.
மற்றொன்று “புறக்கணிப்பின் சொற்கள்” எனத் தொடங்கும் கவிதை
…….
சிறகுதிர்வின் சப்தங்கள்
வெட்டப்பட்ட நாளங்களில் வழியும் குருதி
உறையவில்லை
இழப்பொன்றுமில்லை
என்னை என் பக்கம் சாய்த்திருக்கிறாய் “
என்கிறது.
ஊடல் வேறு. புறக்கணிப்பு வேறு. சிறகுதிர்வது எவ்வளவு மென்மையான நிகழ்வு அதை காதறையும் சப்தங்களாகக் கவிஞர் உருவகிக்கிறார். அதேபோல அறிவியலின் படி வெளிவந்த குருதி சற்று நேரத்தில் உறைய வேண்டும். அது உறையாமல் வழிந்து ஓடுகிறது என்பது ஒரு புறக்கணிப்பு வலியை ஆழமாகப் பதியமிடுகிறது. அதையும் தன்முனைப்பாகச் சமாதானம் செய்கிறது மனம். என்னை என் பக்கம் சாய்த்திருக்கிறாய்… . என் உலகத்தைக் கொஞ்சம் கவனிக்க விட்டிருக்கிறாய் என்று ஒரு நன்றியெரிச்சலாக முடிவு கொள்கிறது.
“பூப்பதா உதிர்வதாயென்று
பனியிடம் கேட்கிறது
மரம்”
இதன் உள்குரல் எவ்வளவு வேதனை. சுதந்திரமற்ற தன்மை. ஒருவரை எந்த அடிப்படை ஒன்றிற்காகவும் தினசரி சார்ந்து இருக்கும் சார்பு வாழ்வின் துயருறு கணம். தான் பூக்க வேண்டுமா உதிர வேண்டுமா? இதை நான் செய்யலாமா? கூடாதா? இதற்கு அனுமதி உண்டா இல்லையா? என்று கேட்டு அதன் பதிலை எதிர்நோக்கி இருக்கிற தன்மை சாலக்கொடூரம்.
தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நினைக்கும் மனதின் இன்னொரு கவிதை
“ நீ
சுட்டிய என் கீழ்மைகள்
முன்பொரு நாளில் உன்வானில்
ஏற்றிவைத்த நட்சத்திரங்கள்
சுமத்தும் பழிபாவங்கள்
அதி அற்புதமான பறக்கும் விளக்குகள்
உன் காலணிகள் எனக்குப் பொருந்துவதில்லை
இரவின் வெளிச்சம் வானில் இல்லை…”
இந்தக் கவிதையும் மிகவும் கவர்ந்தது.
என் கீழ்மைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவற்றை நட்சத்திரங்களாக நோக்குகிறேன். ஆனால் எப்படி நம் காலணி அளவுகள் அல்லது குணாதிசயங்கள் ஒன்றாக முடியும். எனில் என் காலணி அளவு உனக்குப் பொருந்தாது தானே. உன்னிடமும் கீழ்மைகள் இருக்கலாம் தானே என்கிற கேள்வி நையாண்டியாக ஒலிக்கிறது. இரவின் வெளிச்சம் வானில் இல்லை. அதெப்படி இரவின் வெளிச்சம் வானில் இல்லாமல் இருக்கும். என்றால் ஒவ்வொரு உயிரும் தனி. ஒவ்வொரு பார்வைகள் வேறு. போடா/ போடி.
“நினைத்து விடுகிறது மட்டுமே” என்கிற கவிதை ஒரு அறையில் ஆண் தன்னுறுப்புகளை கவனிக்கும் அந்தரங்க செயல்பாடுகளை கருநிறப்பாம்பின் வழி சொல்கிறது.
“தொற்றுச்சிதறல்கள் “ என்கிற தலைப்பில் வருகிற கவிதைகள் மரணத்தின் மூச்சு நிறுத்தம் பற்றிய படிமங்களை அடுக்கி வைக்கிறது.
“விடைபெறாதது குறித்தெல்லாம்” என்று தொடங்கும் கவிதை கொரோனாவின் கோர முகத்தை வழியின்றி ஏற்பதைப் பாடுகிறது.
இப்படி விதவிதமான சுள்ளிகளையெடுத்து நம் மனக்காட்டுக்குள் பற்றவைத்துவிட்டு மாயமாகிறார் கவிஞர்.
“லிங்கவிரல்” மேன்மேலும் வெற்றி பெற நிறையப் பேரிடம் இத்தொகுப்பு சென்றடைய மனமார்ந்த வாழ்த்துகள் !
- லிங்க விரல்
ஆசிரியர் : வேல்கண்ணன்
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்
வெளியான ஆண்டு : 2023
விலை : ₹ 110
நூலைப் பெற : 90424 61472
Courtesy : Vel Kannan Photo : Srinivasan Natarajan