cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 விமர்சனம்

மலர்விழியின் “ஜூடாஸ் மரம்” – ஒரு பார்வை


கவிதைக்கு அவதானிப்பு மிக முக்கியம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். சூழல்களைப் பாடுபொருளாக்க அதுவே அடிப்படை. இந்த புத்தகத்தின் பின்னட்டையில் கூட கலாப்ரியா கவிஞனுக்குப் பார்வை முக்கியம் என்றே தொடங்கி உள்ளார். மலர் விழியின் அந்த ‘பார்வை’என்னை ஆச்சரியப்படவே செய்தது. சூரியனை அடையும் பயணத்தில்,

“ஒரு கண்ணை அருகிலும்

மறு கண்ணைத் தொலைவிலும் வைத்து நடக்கிறேன்”

என்று எழுதியிருப்பார்.

அது போலவே முதல் கவிதையில் இசையோடு சிறு ரயிலாய் ரயிலுக்குள் ஏறும், விரல்களே கண்களாகிப் போனவர்கள் கடைசி கவிதையில்

“கிழிசல் போர்வையில் தெரிந்த

ஒரு ஜோடி சூரியன்களாய்”

மனதிற்குள் மிளிர்கின்றனர். இன்னும் அம்புகளாய், சமாதான கொடியாய், பலிபீடமாய் இவரின் பார்வைகள் தொகுப்பு முழுக்க ரசிக்க வைக்கின்றன. ‘பாடம்’ கவிதையில் மாயத்திரையாகிவிட்ட படுக்கை அறை சுவர் ஒவ்வொருவரின் பார்வைக்கும் ஒரு சித்திரம் காட்டுகிறது.

“அலாரம் அடிக்கும் முன்

விழித்துப் பார்த்த அம்மாவுக்குப்

பொறுப்புகள் சுமக்காத கன்னி முகம் தெரிய

தன் திசையை மாற்றி உறங்குகிறாள்”

என்னும் வரிகளைக் கடக்கையில் எதிர்காலம் இதயத்தில் ஏறிக்கொண்டு அழுத்துகிறது. போர்க்களம் என்றாலே வேள் பாரியின் தட்டியங்காடு நினைவில் வந்து பாடாய்ப் படுத்தி எடுக்கும் இந்த நாட்களில்

“எட்டு எள் பூக்களின்

எடையளவு கணமான மனது கொண்டவள்”

வகுக்கும் போர் உத்திகளும், நிழலைவிட மென்மையான ஆயுதங்களும் அவ்வளவு புதிது.

‘சட்டகம்’ கவிதையில் அப்பா தோள் தொட்டுப் புன்னகைத்த நொடியைச் சட்டகத்தில் மாட்டி, இதயத்தில் ஒளித்து வைத்திருக்கும் கவிஞரைப் போலவே நானும் சில புன்னகைகளை வைத்திருக்கிறேன். ஏன் தான் இந்த அப்பாக்களுக்கெல்லாம் அரிதாகவே சிரிக்க வருகிறதோ?

‘ஆணவக் கவுச்சி’ என்ற ஒரு கவிதை போதும் கவிஞரின் பயணத்தை மதிப்பிட. மேலும், நினைவுகளின் ஈரத்தை தோலுக்கடியில் விட்டுச்செல்லும் மண் துகளும், கடல் இல்லா ஊரில் உப்பாக உவக்கும் கண்ணீரும் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப் பிடித்த கவிதைகள்.

இன்னும் கூட பெண்ணுடலைக் காட்சிப் பொருளெனவும், அதிசயமெனவும் நம்பிக்கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள் கேளிக்கை பூங்காவின் நுழைவு சீட்டில் ஆறு ஒற்றுமைகளைக் கண்டு மௌனிக்கக் கூடும். எச்சரிக்கை.

பார்வை என்ற வார்த்தையில் இவர் வரைந்திருக்கும் சித்திரத்தை வைத்து ஒரு கட்டுரையே எழுதலாம். தொகுப்பின் எல்லா பக்கங்களும் ஜூடாசாகவே மலர்ந்திருக்கிறது. வாழ்த்துகள் கவிஞரே.


நூல் விபரம்
  • ஜூடாஸ் மரம்

ஆசிரியர் : மலர்விழி

வெளியீடு : வேரல் புக்ஸ்

வெளியான ஆண்டு :  2023

விலை : ₹ 100

நூலைப் பெற :  Whats App: 89510 67372

About the author

தீபிகா நடராஜன்

தீபிகா நடராஜன்

என் கடலுக்கு யார் சாயல், புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல் ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Biochemistry & Biotechnology துறைக்கான முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
மலர்விழி

சிறப்பான விமர்சனம்!! நன்றி தீபிகா!!

You cannot copy content of this Website