வனத்தை பற்றி படித்திருக்கிறோம். அவ்வப்போது சென்று வந்திருக்கிறோம். ‘ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்திச்சாம், அந்த சிங்கம் தான் அந்த காட்டுக்கே ராசாவாம்’ என பாட்டிகள் சொல்ல வனக்கதைகளை கேட்டிருக்கிறோம். இப்பொழுதெல்லாம் நிறைய குழுக்கள் வனயாத்திரை மேற்கொள்கின்றனர் தங்களின் மனமகிழ்ச்சிக்காக. அவர்களிடம் ஒரே மூச்சாக ஒரு பத்து காட்டுமரங்களின் பெயர்களை கேட்டால் சொல்ல கூட தெரியாது. திடீரென ஓர் விபத்து நேரிட்டால் எந்த மூலிகைச்செடியை பிடுங்கி கசக்கி சாறினை வைக்க வேண்டுமென்பதும் தெரியாது. ஆனால் அவர்களிடத்து நவீன முதலுதவிப்பெட்டிகள் இருக்க வாய்ப்புண்டு. அதையும் அப்பழுக்கற்ற காட்டுமண்ணில் வீசிவிட்டு வரும் அதீத அறிவுமுண்டு. வனம் என்பது ஏதோ பொழுதுபோக்கும் இடம் என மனிதன் நினைப்பது இந்த நூற்றாண்டின் துயரம். காடுகளிலும், மலைகளிலும் திரிந்தலைந்த குடி இன்றதை விடுமுறை நாளின் கழிப்பிடமாக எண்ணிக்கொண்டிருப்பது துயரன்றி வேறென்ன?
நமதிந்த மனிதப்பிறவியில் மலைக்க மலைக்க அதிசயத்து போகும் ஒன்று உண்டெனில் அது இயற்கை மட்டுமே. குறிப்பாக இயற்கையின் படைப்பான கடல், மலை, மழை, யானை அதன்பிறகு காடு. இவைகளை ரசிக்க ரசிக்க தீராத தாகம் எல்லோருக்கும் உண்டாகும். கடலை தவிர மீதமுள்ள அனைத்துமே ஒரு பெருவனத்துள் இருப்பவை. அதை இன்றைய தலைமுறைகள் எந்தளவிற்கு நேசிக்கிறதெனில் நேஷனல் ஜியோகிராபியில் விலங்குகளின் பருவகால நிகழ்வுகள், வேட்டையாடுதல், பருவநிலை மாற்றம் என்பதை கண்ணாற கண்டு கழிக்குமளவே.
உண்மையில் வனமென்பது மேகங்கள் சடாரென பாய்ந்தோட நிழல்படிந்து மழை பெய்யததும் ஈரம் சொட்ட நிற்கும் திரைக்காட்சிகளல்ல, தூரமாக பச்சை பூசியபடி நிற்பது மட்டும் மலையல்ல, ஊருக்குள் புகுந்த யானை விரட்டியடிக்க பட்டது என்பது தான் யானையுமல்ல என்பதோடு இவைகளின் இன்னொரு தோற்றத்தை நமக்கு காண்பித்துள்ளார் “யானைகளை கண்டிராத ஃப்ளமிங்கோக்கள்” என்கிற கவிதை நூலில்.
பாகனின் துணையோடு யானை நம் ஊர்ச்சாலைகளில் வந்த சித்திரம் இன்னும் நமது பால்யத்தில் தேங்கி நிற்கும் காட்சிகளில் ஒன்று. அப்படியாக யானை பார்த்த நினைவுச்சித்திரத்தில் தொடங்கி மெல்ல மெல்ல வாசகனை பல்லுயிர்களும் வாழும் காட்டுக்கள் அழைத்துப்போகிறார் கவிஞர். உண்மையில் இவர் கவிஞருமல்ல, இதிலுள்ளது எதுவும் கவிதைகளுமல்ல என்பதே சரி. ஆமாம். நமக்கு காட்டை சுற்றிக்காட்டும் ஒரு மூத்தக்குடி இவர். இவர் சொல்லியிருக்கும் அனைத்தும் காட்டுக்குறிப்புகளும், காட்டுயிர்களின் வாழ்வியலுமேயன்றி வேறில்லை என்கிற போது இவரை கவிஞர் என்கிற ஒரு சொல்லிற்குள் எப்படி அடைக்க முடியும்?
நிறைசூல் கடமான் சுற்றம் விளிக்கும் நிலத்தில் தான் நாம் பெட்ரோல் மணக்கும் மலை பயணத்தை மேற்கொள்கிறோம். பாதி தின்று எறிந்த சோளக்கதிருக்கும், லேஸ் உருளை சில்லிற்கும் போரிட்டு அயரும் சிங்கவால் குரங்குகளின் பசியை உண்டாக்கியது வேடிக்கை பார்க்க சென்ற நாம்தான். சுற்றிலும் மணல் அள்ளப்பட்ட ஆற்றில் தேங்கியிருக்கும் உயிர்த்தண்ணீருக்கு முதலைகள் ஜாக்கிரதை எனும் எச்சரிக்கை பதாகை யாருக்கானது? அதை படித்த பிறகு யார் முதலை? என்கிற கேள்வியை நமக்கே திருப்பிவிடுகிறார்.
இதிலிருப்பதெல்லாம் அலங்கரித்த சொற்களோடு அரிதாரம் பூசிய அழகியல் கவிதைகள் இல்லை. ஒரு காட்டுவாசியாக வாழ்ந்து அவர்களின் மொழியிலேயே இயற்கையின் அழிவை, வன உயிரிகளின் வாழ்வியலை, மகிழ்வை பதிவு செய்திருக்கிறார். இந்த நூலை வாசித்தால் பல காட்டு மரங்களின் பெயர்களை அறிந்துகொள்ள முடியும், விலங்குளின் குணாதிசயங்களை புரிந்து கொள்ள முடியும். வனப்பகுதியில் வாழும் மக்களின் வேண்டுதல்களையும் ஆசைகளையும் தெரிந்துகொள்ள முடியும். மசனன், நஞ்சி, செம்பான், கேத்தி, பொம்மி,வெளுக்கன் போன்ற மனிதர்களையும்…, தொரப்பள்ளி, ஆனப்பள்ளம், சிறியூர்,மன்றாடியார் வளைவு,சீகூர் போன்ற நிலப்பெயர்களையும், நாடாகஞ்சி,விக்கிமரம், பஞ்சுருட்டான், சிரிப்பாங்குருவி போன்ற பல காட்டுமரம்-பறவைகளின் பெயர்களையும் ஆங்காங்கே விதை போல தூவிச்செல்கிறார். இப்புவிக்கு மிக பழைய மிகமூத்த வந்தேறி மழை என்பதையும், இந்த காட்டிற்கு ஆதியோகி என்பது யானை மட்டுமே என்பதை நமக்கு பறைசாற்றுகிறார். மொத்தத்தில் முன்னமே சொன்னது போல் இது ஒரு வனக்குறிப்பு. இதை படித்தால் யாராகினும் வனத்தை நேசிக்க தொடங்கிவிடுவர்.
ஈன்ற ஆட்டின் பால்திரண்ட முலைகளை குட்டிகளை விரட்டிவிட்டு கடிக்க காத்திருக்கும் நாய்களிடமிருந்து ஆட்டையும் குட்டிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. ஆடு என்பது ஆடல்ல குட்டியென்பது குட்டிமட்டுமல்ல ஆனால் நாய்கள் ஒன்றுதான்.
காலங்காலமாக காட்டுள் மரித்த முது விலங்கின் உரு செதுக்கியபடி செல்லும் கடைசிப்பேருந்தின் விளக்கொளியாக நாம் அல்லாது நிஜத்தை பாதுகாப்போம் என்பதே இந்நூல் சொல்வது.
ஆசிரியர்- த.விஜயராஜ். தஞ்சையை சேர்ந்த இவர் தனது பணி நிமித்தம் சில ஆண்டுகளாக நீலகிரியில் வசிக்கிறார். அப்படியாக அவர் சென்ற பயணங்கள், சந்தித்த மனிதர்கள், அவர்களோடு உரையாடியதின் பொருட்டு உருவானதே இத்தொகுப்பு என்கிறார்.
வாழ்துகளோடு,
-சேலம் ராஜா
- யானைகளை கண்டிராத ப்ளமிங்கோக்கள்
ஆசிரியர் : த.விஜயராஜ்
வெளியீடு : வாசகசாலை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2021
விலை : ₹ 120
நூலைப் பெற : +91 9942633833