cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 விமர்சனம்

பேரன்பை பொழியும் வானம்: அ.ரோஸ்லின் கவிதைகள் சில புரிதல்கள்


சில நாட்களாக எனக்குள் ஏற்பட்டிருக்கும் அகநெருக்கடிக்கு காடறியாது பூக்கும் மலர் கவிதைகளை ஒரே வாசிப்பில் படித்து விட்டேன். இது கவிதைகள் நமக்குத் தரும் சுதந்திரம். இந்த கவிதைகள் இதழ்களில் வெளிவந்த காலகட்டத்தில் படித்தது தான் என்றாலும் தொகுப்பாகப் படிக்கும் போது புதிய அனுபவம் ஏற்படுகிறது.

தமிழில் எழுதும் பெண் கவிஞர்கள் ஆண் கவிஞர்களை விட இறுக்கம் தளர்த்திய பூடகத்தன்மையற்ற சொற்களைக் கொண்டவர்கள். பெண்மொழி எதிர் கொண்டிருக்கும் சவாலால் அகமன நெருக்கடிகளை அல்லது சுயம் சார்ந்த அரசியல் தன்மை கொண்ட கவிதைகளை எழுதும் போது நேரடித்தன்மை முக்கியமானதாகிறது.

தற்போது பெண்ணிய கவிதை மொழி தனித்த அடையாளங்களைக் கொண்டு இயங்குகிறது. அதுவே இன்றைய நவீன கவிதையின் அடுத்த கட்ட நகர்வு எனலாம். ரோஸ்லின் கவிதைகள் அருகம்புல்லாக வேர் விட்டு மன நிலமெங்கும் வியாபிக்கிறது என்கிறார் கலாப்ரியா முன்னுரையில். அப்படி ஒரு எல்லைக்குள் இந்த கவிதைகளைச் சுருக்கிவிட முடியாது. காதல் சார்ந்த ஏக்கத்தின் வெளிப்பாடு என்கிற புரிதல் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அநேக கவிதைகள் ஆதி பெண்ணின் தொடர்ச்சியின் நினைவிலியைக் கொண்டு தொடங்குகிறது. இயற்கையின் பால் பெண் கொள்ளும் தரிசனம் என்பது சக மனிதர்களின் மீது பேரன்பைப் பொழிகிறது. அது ஒரு நதியாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. எந்த நிபந்தனையும் இன்றி தான் செலுத்தும் அன்பைப் பிறரிடம் கோருகிறது. இந்த கோணத்தில் இந்தக் கவிதைகளை வாசித்தால் புதிய தரிசனத்தைப் பெற முடியும். ரோஸ்லின் சொற்கள் அடர்த்தியானவை. அது எளிய சொல் முறையால் அது கடக்க இயலாத் தூரத்தை எளிதாக கடந்து விடுகிறது. அது சக மனிதர்கள் மீதான கரிசனத்தைக் கொண்டவையாக அக்மதாமாவின் மொழி சாயல் கொண்டவையாக இருக்கின்றன.

இயற்கையின் மீது கவிஞர் பற்று கொண்டு தீவிரமான சூழலியல் பார்வையாளராக மாறிவிடுகிறார். மழை குறித்து அவர் ஆசுவாசமின்றி தொடர்ந்து ஒரு சிறுமியை போல நனைதலிலும் அதனை ரசிப்பதிலும் ஆர்வம் கொள்கிறார். ஆறு, மலர்கள், தாவரங்கள், நீர், மழை, இரவு போன்றவை கவிதைகளின் அர்த்தச் செறிவை அதிகமாக்குகின்றன. இயல்பாக புகுந்து கொள்கின்றன. ஒரு கவிதையில் இப்படி வருகின்றது.

“இசைவின் தேசத்திலிருந்து

கடந்து செல்கிறது

அவள் ஆறு.”

முதலில் இந்த கவிதை வாசிப்பவர் கொள்ளும் பொருள் ஒன்றிலிருந்து விலகி வேறு பொருளைத் தருகிறது. மற்றொரு கவிதையில் இப்படி எழுதுகிறார் ‘ உன் பிரியத்தின் மழையை உறிஞ்சி வைப்பேன் நிலம் போல நானும், என்கிறார்.

பெண்மையை விரி கடலின் ஓசை என்கிறார். இந்த ஒரு வரியை வைத்து பெண் குலத்தின் வரலாற்றை நாம் விளங்கிக் கொள்ள முடியும். இவரின் கவிதைகளின் பலம் அதன் எளிமை.

“என் காமத்தை ஒரு இறகென

உன் கரங்களில் ஒப்புவிக்கப் பழகியிருக்கிறேன்”

என்கிற இந்த வரிகள் பெண் மீதான ஒடுக்குமுறையை ஆதி காலம் தொட்டு ஆண் சமூகம் எப்படிக் கட்டமைத்துப் பழக்கி வைத்துள்ளது என்பதை எளிய ஒப்படைப்பு மூலம் காட்சிப்படுத்துகிறார். பெரும்பாலான கவிதைகளில் படிமத்தையும் தொன்மத்தையும் பயன்படுத்துவது எளிதாக இவரால் முடிகிறது. இவருக்கு நிலத்திலிருந்து தங்கத்தை எடுப்பதைப் போல உணர்வு நிலையில் இருந்து சொற்களைத் தேடி எடுக்கிறார். எங்கனம் நான் உன் நிலமாகிப் போனேன் , என்கிறார் ஒரு கவிதையில்…

மற்றொரு கவிதையில் துயரின் நீர்மை சூடிய பேராறு..என்கிறார் துயரத்தையும் அன்பையும் ஒரே புள்ளியில் நிறுத்துகிறார். சொற்களின் வழியே தாய்மையுடன் கூடிய பேரன்பைக் காட்டுகிறார். நான் மேலே குறிப்பிட்டது போல எளிமையும் சொற்சிக்கனமும் இந்த கவிதைகளுக்கு பலம் என்றாலும் சில இடங்களில் தட்டையாகி கவிஞரின் அனுபவம் வாசகனுக்கு வந்து சேராமல் போகின்ற ஆபத்தும் சில கவிதைகளில் நிகழ்ந்து விடுகிறது. இது கவிஞரின் நான்காவது தொகுதி. ஆளுமையும் கவித்துவமும் நிரம்பி அன்பின் பெரும் பாடகியாகியிருக்கிறார் ரோஸ்லின். இவரை கொண்டாட வேண்டிய தருணம் இது. அதே நேரத்தில் இவரிடம் சிறு வேண்டுகோள் தற்போது அரசியல் கவிதைகளின் தேவை அதிகமாகியுள்ளது கொஞ்சம் முயற்சியுங்கள்.


சிவகுமார் முத்தய்யா

நூல் விபரம்
  • காடறியாது பூக்கும் மலர்

ஆசிரியர் : அ.ரோஸ்லின்

வெளியீடு :  புனைவு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2018

விலை : ₹ 70

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website