cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 விமர்சனம்

காட்டுக்குள் காற்றசைக்கும் வெயில் – அசதா


லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ கவிதை நூல் குறித்து அசதா

கவிமனதின் பிரக்ஞை நிலை எப்போதும் விழிமூடா ஒரு அகவுலகைச் சுமந்து திரிவது. வெளியேயிருந்து அதில் விழும் காட்சிகளால் பெருகும் அதிர்வுகள் மனச்சுவரில் மோதி அலைக்கழிந்து பிறகு மொழியைப் பற்றிக்கொண்டு  கரை சேரும். புறநிலையின் மீதொரு மூடுதிரையைச் சாத்திவிட்டு அகத்தின் பாடலை உரக்கப் பாடும் கவிமனதுக்கும் உடன் வாத்தியங்கள் புற உலகின் காட்சிகளும் அவற்றால் தூண்டப்படும் அகச்சித்திரங்களுமே.  வேறெவற்றையும்விட நீண்ட உணர்கொம்புகளுள்ள உயிரினமாக கவிஞன் இருக்கிறான். தன் உலகின் கடை எல்லை வரையும் அதைத் தாண்டியும் அவற்றை நீட்டி சதா துழாவியபடியிருக்கும் அவன், தான் கண்டடைபவற்றை மொழியின் நினைவில் சேமித்துக்கொள்கிறான். 

இந்த வகையில் லாவண்யா சற்றே நீண்ட உணர்கொம்புகளும் அவற்றைக் கொண்டு துழாவுதலில் மிகத் தீவிரமும் கொண்ட உயிரியாக தனது ‘அறிதலின் தீ’ தொகுப்பில் தெரிகிறார். மேலாட்டமாகப் பார்க்க ஒருநாளில் தன்னைச் சுற்றிலும், உணர்வுத் தளத்துள் தனக்குள்ளும் நிகழ்வனவற்றை உள்வாங்கி தன்முனைப்பற்ற ஒரு மொழியில் வெளிப்படுத்தும் ஒரு செயல்முறையாக அவரது கவிதையாக்கம் இருக்கிறது. ஆனாலும் இக்கவிதைகளில் ஆழப்பொதிந்த அன்பு, நெகிழ்ச்சி, வலியுணர்தல், தனிமைத் துயர், ஆற்றாமை, சுயவிமர்சனம் ஆகியன வெளிப்பாட்டு மொழியிலும், வாசக மனதிலுண்டாக்கும் அதிர்வுகளிலும் தனித்துவமிக்கனவாக அமைந்திருக்கின்றன. 

குழாயில் சொட்டும் நீர் நின்ற பின்னும் அதன் இம்சிக்கும் நிசப்தம் (சலனம்-பக்.21) பிளாஸ்டிக் பைகள் உருவாக்கித் தரும் மாயத் தோற்றங்கள் (தீதும் நன்றே- பக்.29) வாகனக் கண்ணாடியில் படிந்த பனிப்புகையைத் துடைக்கத் துடைக்க உருவாகி வரும் சித்திரங்கள் (துடைப்போவியம்- பக்.35) மேல்விழவிருக்கும் கிளை குறித்த ஆபத்தறியாது இசைக்குறியீடுபோல அமர்ந்திருக்கும் மின்கம்பிக் காக்கைகள் (அறிந்ததும் அறியாததும்- பக்.45) என அன்றாட வாழ்வின் காட்சிகளிலிருந்து லாவண்யாவின் கவிதைகள் உருவாகின்றன. இவற்றை எளிய மறுகற்பனையாக்கங்களாக அல்லாமல் தீவிரக்காட்சிகளாக மொழியில் நிறுத்துகிறார் கவிஞர். உதாரணமாக ‘தீதும் நன்றே’ கவிதையில் வாயிறுக்கப்பட்ட பிளாஸ்டிக் பை நதி மீனாக, மின்கம்பியில் அமர்ந்த இரட்டைவால் குருவி, வண்டிச் சக்கரத்தில் இழுபடும் பாம்புத்தோல், இறுதியில் வயல்காக்கும் நவீன சோளக்கொல்லை பொம்மை என எதிர்-அழகியல்கூடிய தீர்க்கமான கவிதையாகிறது.

ஓவியங்களால் தன்னை இழக்கும் சுவர் தானே தனக்கான சித்திரத்தைத் தீட்டிக்கொள்வதும் (சுவர் வரைந்த சித்திரம்- பக்.19), மழை நனைக்கவியலாதபடி எப்போதும் நனைந்தே இருக்கும் நதியோர மணலும் (ஈரம்- பக்.48), சடசடத்து எழுந்து  நாயாக மாறிக் குரைக்கும் இரவும் (உறங்கும் இரவு- பக்.88) என இக்கவிதைகளில் அமைந்திருக்கும் மேற்சொன்னது போன்ற காட்சிகள் இன்னொரு தளத்துக்கு நகர்ந்து நுட்பமான அர்தத்தங்களுடன் விரிகின்றன. குறிப்பாக  மழை நனைக்கவியலாதபடி எப்போதும் நனைந்தே இருக்கும் நதியோர மணலைச் சுட்டும் ‘ஈரம்’ என்ற கவிதை அலாதியானது. 

பெண்வாழ்வை, அதன் சாபங்களைப் பேசும் இயல்பான, தன்முனைப்பகன்ற கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகிறது. ‘சிறுமி வளர்க்கும் வெயில்’(43) தத்துவ விகசிப்புகூடிய அழகியல் கவிதை போல மெல்லத் தொடங்கி வளர்ந்து சிறப்பான பெண்ணியக் கவிதையாக முடிகிறது. ஜன்னலோர வெயிலைப் கைக்குள் பொதிந்துகொண்ட சிறுமி அதனைப் பல இடங்களிலும் வைக்க முயன்று தோற்கிறாள், இறுதியில் ‘போய்/ அடுக்களை அடுப்பில்/ சேர்த்து வைத்தாள்/ இவளோடு வளர்ந்து சமைந்து/ வெயிலும் சமைக்கும்/ பின்னொரு நாளில்’ என்று முடிகிறது கவிதை. சொந்த அடுக்களையற்றவள்/ முதுகில் அடுப்பைக் கட்டிக்கொண்டு/ பாதையற்று அலைகிறாள்/ காலங்காலமாய் என்ற வரிகளைக் கொண்ட ‘முதுகுப் பாரம்’ என்ற கவிதையும் இதே தளத்தில் நிற்கிறது. ‘மாலை நெருங்க நெருங்க/ எல்லா மலைகளும்/ பெண்ணாய்த் தெரிகிறது/ இரவில் வாதையுடன்/ அவை புரண்டு படுக்கும் ஓசை/ எனக்கு மட்டும் கேட்கிறது’ என்னும் ‘மலைப்பெண்’ (பக்.37) கவிதை சூசகமாகப் பெண் வலியைப் பேசுகிறது. ‘மலையோடே இருக்கும் மலை’ (பக்.63) கவிதையில் ‘வீடு திரும்பும்போது உடன் வராத மலை’ வேறொன்றைக் குறிப்புணர்த்துகிறது. 

பனிப்புகையைத் தொட்டழித்து ஓவியமாக்கும் மனம் இன்னொரு தருணத்தில் கட்டுடைப்பு மனநிலையில் ‘ஒவ்வொன்றாய் ஓவியத்தின் இழைகள் நீக்கிப் பார்க்கிறது’ (உணர்வின் வண்ணம்- பக்.22) ‘எஞ்சியது/ தூரிகை தீண்டாத/ வெண்காகிதமல்ல/ மேகம் நகர்ந்த இடத்தில்/ மிச்சமாய் நின்றிருந்தது/ மேகத்தின் நிழலாய்/ வானத்தின் வண்ணம்’ எனக் கண்டறிந்துவிட்டு, ‘மீட்கப்படுவதும் தொலைக்கப்படுவதும்/ ஒன்றெனத் தகுமோ?’ என்ற தத்துவக் கேள்வியை முன்வைத்து முடிகிறது. இதுபோன்ற தத்துவச் சாய்வு கொண்ட கவிதைகள் லாவண்யாவின் கவிதை உலகைப் பூரணமாக்குகின்றன. ‘தான் நினைத்தவரை வாழும் தற்கொலையாளி’ (தற்கொலையாளி- பக்.33) என்ற வரி முதல் ‘எவரிடத்தும் தொலைவிலுமில்லை அருகிலுமில்லை என் நினைவு’ (தனிமையாய்- பக்.53) என்று விடுதலையான பொழுதிலும் மிதந்தபடியே ஏகாந்தத்தின் சமநிலை பேசும் மனம் வெளிப்படும் வரிகள்வரை கவிதைகளில் தத்துவ வெளிப்பாடு குறிப்பிடத்தக்கது. ரசிப்புக்கிடமான இன்னுமொரு தத்துவக் கவிதை ‘நீல நிலவு.’(பக்.77) ‘அன்று/ நிலவின் நிழலில்/ கால் நனைத்த காவேரியின்/ நீர்த்துகள்கள்/ இப்போது கடலடைந்திருக்கக்கூடும்’ என்ற வரிகளில் கால் தொட்ட நதி இனி கடல்தான் என்பதில் அதே ஆற்றில் இரண்டுமுறை இறங்க முடியாத ஹெராக்லிடஸையும் இன்னும் நுணுகி நோக்க ‘அற்றைத் திங்கள்’ ஏக்கத்தையும் நினைவுபடுத்திச் செல்கிறது. 

தொகுப்பில் குழந்தையின்மை அல்லது குழந்தையிழப்பு குறித்த கவிதைகள் வாசகனிடத்தில் அந்த வலியைக் கடத்திவிடுவனவாக உள்ளன. ‘விரட்டிப் பிடிக்கவோ/ உடைத்ததைப் பொறுக்கவோ/ கலைத்ததை அடுக்கவோ/ வாய்க்காத/ வருத்தத்துடன் நகர்கிறதென்/ வாழ்க்கை’ என்னும் ‘பிள்ளைகள் வளர்ந்தனர்’(பக்.25) கவிதையும், ‘கரிசல் காட்டில்/ சின்னச் சின்னச் சாம்பல் குன்றுகளில்/ சில குழந்தைகளின் முகம் தோன்றி/ மனதைப் பதைபதைக்கச்செய்கிறது’ என்ற ‘தோற்றம்’(பக்.32) கவிதையும் ‘இன்னும் எத்தனைப்/ பிஞ்சுகளை விழுங்குமோ/ என் கருவறை’ என்ற ‘இருளின் நிழல்’ கவிதையும் இந்த வகையின.

‘தருவதற்கு வேறு ஏதுமில்லை’(பக்.64) என்ற தலைப்பில் அமைந்த ஒரு கவிதை. ‘கோலம் வரைகிறேன்/ தெருவில் செல்லும் பசு/ எதற்காக என்னை/ முகர்ந்ததோ தெரியவில்லை/ ஆனால் தருவதற்கு என்னிடம்/ பயத்தைத் தவிர/ வேறு ஏதுமில்லை’. இதுவொரு அன்றாடக் காட்சிதான். தெருவில் கோலமிடும் பெண்ணை முகர்ந்து பார்க்கும் முன்பின் பார்த்திராத ஒரு வீதிப் பசு. மனிதன் மிருகம் என்ற இரு எதிர்நிலைகள், கோலமிடும் பெண்ணை முகர்ந்து பார்ப்பதன் மூலம் பசு தனது மிருக இயல்பைத் தாண்டி மனித இயல்புக்கு வர முயற்சிக்கிறது, ஆனாலும் அந்தத் தருணத்தில் மரபணு அடுக்குகளில் படிந்த மனிதவுணர்வு அதனைச் சந்தேகித்துப் பயப்படுவதன் மூலம் தனது ஆதி விலங்கு நிலைக்குச் சென்றுவிடுகிறது. இப்போது அந்தக் கணத்தில் அங்கே ஒரு மனிதப் பசுவும், விலங்குப் பெண்ணும் தோன்றி மறைவதை இக்கவிதை மிக நுட்பமாகச் சொல்லிச் செல்கிறது. ‘தருவதற்கு வேறு ஏதுமில்லை’ என்ற வரியில் வெளிப்படும் மெலிதான குற்றவுணர்வும் அதையே காட்டி நிற்கிறது.

‘உடைந்த குடை’(பக்.69) கவிதை பயன்பாட்டு மனநிலையில் ஒரு பொருளின் குறை தெரிவதில்லை என்ற கருத்துவழி, பயன் உள்ளவரை ஒரு பொருள் மிக்க அன்புக்குரியதாக இருக்கும் என்ற கோட்பாட்டின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது.

உதிரம், உமிழ்நீர், கண்ணீர் எனத் திரவங்களையே வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்தும் பெண்ணுடலை, ஒருபுறம் நொய்மையானதாக இருந்தாலும் மறுபுறம் அபௌதிகத் தன்மை கொண்டது எனக் குறிப்புணர்த்துகிறது ‘உடலற்ற உணர்வுகள்’(பக்.70) கவிதை. பெண்ணுடலின் திரவ வெளிப்பாடு என்பது உள்ளமைந்த அதன் சாபங்களாக இருந்தாலும்,  உருவாக்கம் தொடங்கி அழிவு வரையான பிரபஞ்சத் தொடர் இயக்கத்தில் அதன் பங்கினை மறைமுகமாகச் சுட்டுகிறது கவிதை. 

நினைவின் கற்பனை வீதியில் நடந்து இறுதியில் வாழ்வின் அபத்த யதார்த்தத்தை எதிர்கொள்ள நேர்வதை விவரிக்கும் ‘இளங்காலைப் பொழுதொன்றில்’(பக்.66) கவிதையின் ‘காட்டுக்குள் காற்றசைக்கும் வெயிலென/ மெல்ல நடக்கிறேன்’ என்ற வரி தீவிர அழகியலும் கவித்துவமும் கொண்டது. ‘நிற்கத் தேவையற்ற நிலையத்தை/ எத்தனை எளிதாகக் கடந்துவிடுகின்றன/ இந்த ரயில் பெட்டிகள்?’ என்ற ‘கடந்து போகும்’(பக்.47)  கவிதையின் எளிய வரிகளில் வெளிப்படும் யதார்த்த தரிசனம் மிகப்பெரியது. தளரா அன்பின் வழிநிலையில் கரைந்து காணாமல் போகும் பாறையாகும் அகத்தை விவரிக்கிறது ‘நீர்ப்பாறை’(பக்.76) கவிதை. ஒரே நிகழ்வு குதூகல ஆட்டமாகவும், அலைக்கழிப்பாகவும் இரண்டு வேறுபட்ட பார்வைகளில் வெளிப்படுவதை அழகுறச் சொல்லும் கவிதை ‘இரு பெண்கள்(பக்.93)’. காகம் உண்ணும் பயன்படுத்திய நாப்கினும் காலில் இடறும் ஆணுறையும் முறையே ஒரு பெண்ணினதும் ஆணினதும் அந்தரங்கத்தை நினைவூட்டிச் செல்வதைச் சொல்லும் கவிதை ‘அந்தரங்கம்’(பக்.80)

புறப்பட்டு திரும்ப வீடு வரும் வரையில் தனிமை என் வெறுமையை விரட்டியது எனச் சொல்லும் கவிதையில், (‘சுயநலமற்ற தனிமை’- பக்.26) அதனோடு இயல்பாயிருக்கும்படிக்கு இருப்பைத் தகவமைத்துக்கொள்ளல்  அல்லது தவிர்க்க முடியாத தீவினையெனக் கருதி உடன் வாழப் பழகுதல் என்பதே தனிமைக்கான தீர்வு என்பது லேசான புன்னகையுடன் சொல்கிறது.

இத்தொகுப்பில் கவிஞர் தனது கவிதைகள் பற்றிப் பேசுகிற ‘பேனாக்கள் நிரந்தரமில்லை’(பக்.81), ‘என் கவிதை’(84) ‘அவசரம்’(பக்.71) போன்ற கவிதைகள் சுயபிரகடனம் தொனிக்க சற்றே உரத்து ஒலிப்பவை. ‘அவசரம்’ என்ற கவிதையில் அவரே சொல்வதுபோல, பல கவிதைகள் சற்றே மெனக்கிட்டிருந்தால் இன்னொரு தளத்தைச் சென்றடைந்திருக்குமல்லவா என நினைக்க வைக்கின்றன. சிறிது நிதானமும் புறத்திருந்து கவிதையை நோக்கும் மனமும் வாய்த்தால் கவிதைகளுக்குள் அற்புதம் இன்னும் கூடிவந்திருக்கும் எனத் தோன்றுகிறது. கவிதையின் ஒற்றைப் பரிமாண வெளிப்பாடுகளில் கிடைக்கும் மகிழ்வையும் திருப்தியையும் துறந்து அவற்றை இன்னும் ஆழங்களுக்கு நகர்த்த வேண்டியிருக்கிறது. ‘துரத்தும் கனவுகள்’, ‘பழம் புத்தகம்’, ‘குடும்ப வாசனை’ போன்ற கவிதைகள் இவ்வாறு சுருங்கி விடுபவை.

பொதுவாகப் பார்க்க, பாவனை குறைந்த தன்னை முன்னிறுத்தாத ஒரு குரலில் அக உணர்வுகளையும், அகத்தில் பிரதிபலிக்கும் புறத்தையும் தனது கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் லாவண்யா. நவீன கவிதை வடிவம் குறித்த ஆழ்ந்த அறிதலும் செறிவான சொல்லாட்சியும் கொண்ட கவிதைகள் அவருடையவை. தனது இந்த மூன்றாவது தொகுப்பில் முதிர்ந்த அழகியல் வெளிப்பாடும், சுயம் குறித்த கேள்விகளுடன், அகன்ற உலகியல் பார்வையும் கொண்டு கவிதையில் தனக்கென ஒரு உலகை உறுதி செய்திருக்குமவர் அந்த உலகுக்கு இன்னும் அர்த்தமும் வலுவும் சேர்க்க வேண்டும்.


– அசதா

நூல் விபரம்
  • அறிதலின் தீ

ஆசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்

வெளியீடு :  பாதரசம் வெளியீடு

வெளியான ஆண்டு :  2015

விலை : ₹ 60

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website