cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 15 விமர்சனம்

காலத் தழும்புகளின் மீதான கவிதைகளின் வருடல்


வாசிக்கும் ஒரு கவிதையின் கதவைத் திறந்து தேடப்போவது யாரை? அந்தக் கவிதையை எழுதிய படைப்பாளியையா? அந்தக் கவிதையின் அறைக்குள் ஒளிந்திருக்கும் யாரோ ஒருவரையா? அல்லது கதவு திறந்து உள்ளே செல்வதற்கு முன் தொலைந்து போயிருந்த நம் ஆன்மாவையா? நான் என்ற வெளியைத் திறவுகோலாகக் கொண்டு ஒரு கவிதையின் கதவைத் திறந்து உள்ளே நுழைவது போல் அபத்தம் வேறென்ன இருந்துவிடப் போகிறது? 

சலசலத்தோடும் ஆற்றங்கரை வெம்பாறையில் அமர்ந்து ஒரு கவளம் சோறூட்டும் காதலுக்கு அருகிலமர்ந்தபடி கவிதையை வாசிக்க அதன் கதவு திறக்கத் தெரிய வேண்டும். இரு கை நீட்டி அள்ளிய நீரை அப்படியே ஆற்றில் சிந்தவிடும் கணத்தைத் திறவுகோலாகக் கையிலேந்தித் திரிய வேண்டும். 

திறந்தே கிடக்கும் கவிதைக்குள் நுழைந்து தேடுவதற்கு உகந்த சொற்கள் இருக்கப் போவதில்லை. தேடுதலோடு அலைபவர்கட்கே கதவு பூட்டிய கவிதைகளுக்குள்ளிருக்கும் கள்ளிப் பூக்களின் மகரந்தம் கிட்டுகிறது. கற்பூர வள்ளியின் பைந்தண்டுகளில் ஏறி இறங்கும் கட்டுவிரியனைப் பார்க்கும் சிலிர்ப்பைத் தேடி அலைகிறவர்கட்கே தழும்புகள் ஒவ்வொன்றும் தங்க கிரீடம். 

கற்றுக்கொண்ட அறங்கள் யாவும் கவிதைகளின் கதவு திறந்து பெற்றுக்கொண்டவை தாம். பெற்றுக்கொண்ட அறங்களைப் பேணிக் காப்பதான கற்பனைக்குள் செல்லும் இன்னொரு கவிதையோ பெற்ற  அறங்களைக் குறுக்கு விசாரணை செய்கிறது. கவிதைகளே அறம் பாடுகின்றன. கவிதைகளே அறம் வளர்க்கின்றன. கவிதைகளே அறங்களைத் திருத்தித் திருத்தி எழுதுகின்றன. கவிதைகள் கையளித்த அறங்களை கவிதைகளே மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கின்றன.

திரிபுக்கும், பித்து நிலைக்கும் இடையில் நின்று அறம் பாடி, அறம் வளர்த்து, திருத்தி எழுதிய அறங்களை முன் வைக்கும் கவிதைகளாக, தழும்பின் மீதான வருடல் நூல் அமைகிறது.இது அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் நான்காவது நூல். 

புதிர்வாதையின் சொற்களின் வீச்சாக இந்தக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. செவிகள் இல்லாத தீர்ப்பெழுதும் எழுதுகோல்களின் தொலைந்து போன அறங்களைப் பாடுகின்றன இந்தக் கவிதைகள். 

மாயக்கதகளி என்னும் தலைப்பில் தொடங்கி, எண்பத்தொரு கவிதைகளாக விரிந்து. பூவிதழ் சுருக்கம் என்னும் தலைப்பில் நிறைவு பெறுகிறது இந்த நூல். மாயக்கதகளியாகவும், பொம்மலாட்டங்களாகவும் நடக்கின்ற, காதலைத் தொலைத்துவிட்ட இன்றைய வணிகமய காலத்தின் குறியீடாக மாறி நிற்கின்றன இவரின் ரோஜாக்கள். பக்கத்து வீட்டு ரோஜாச் செடியிலிருந்து சிறு கிளை ஒடித்து பதியனிட்டு வளர்த்த காலத்தை மதிற்சுவர் எழுப்பி மறைத்துவிட்டதே இன்றைய வணிகமய வாழ்வு. காதலும், ரோஜாவும் குறியீடுகளாகி, இன்றைய நவீன வாழ்வின் அபத்தங்களை அலசுகிறது இந்தக் கவிதை. சுற்றிலும் நடக்கும் மாயக்கதகளியையும், பொம்மலாட்டங்களையும் கவனமுடன் பார்க்கச் சொல்கிறது. 

நீ குழந்தை. என் காதலோ உன்னை விடச் சிறிய குழந்தை. ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையிடம் கொடுத்தால் போட்டு உடைத்துவிடும் என்ற பயத்தில் தன் காதலைச் சொல்லாமல் வைத்திருக்கும் எளிய மனம் கொண்ட கவிஞர் காதல் பற்றிய இந்த இரு குறிப்புகளை மட்டும் கவிதைகளாக எழுதிவிட்டு நகர்ந்துவிடுகிறார். 

வேதாந்தங்களையும், தத்துவங்களையும் துணைக்கழைத்து சமாளிக்கின்ற அதிகாரங்களை, அதிகாரங்களால் தன்னை நிறுவிக்கொண்ட சமூகத்தை அடுத்தடுத்து கேள்விகளாகக் கேட்கிறது அதே எளிய மனம். அந்தக் கேள்விகளின் நெடிய உரையாடலாகத் தான் மற்ற கவிதைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன. ஒரு சொட்டுப் பால் கேட்டுத் துடிக்கும் சிசு கதறி, மூச்சுத் திணறி, மௌனமாய் மரணித்துப் போவதை வேடிக்கைப் பார்த்தபடி கடந்து போகும் அதிகாரங்களை சமூகத்தின் முன் அடையாளமிட்டுக் காட்டுகின்றன இவரின் கவிதைகள். 

சவால் விட்டு வெல்வதற்குப் பித்தும், பிறழ்வும் எதிரிகளா? சொல்லிவிட்டுப் பிடிக்க முன்பின் அறியாதவையா அவை? கவிஞரின் இந்த வரிகள் “தழும்பின் மீதான வருடல்” எனும் தலைப்பிற்கான பொருளையும், மற்ற கவிதைகளின் கதவுகளையும் திறந்து பார்க்கும் அவகாசத்தையும் தந்து விடுகின்றன. பித்தும், பிறழ்வுமின்றி கவிதை ஏது? கவிஞன் தான் ஏது? சொல்லாத பிரிவின் மொழியைப் புரிந்து கொள்வது தான் ஞானத்தின் சிறுதுளி. அது இருள் ஞானமாக இருப்பது தான் மறையாத தழும்பாக வாழ்வின் உடலில் தங்கிவிடுகிறது. 

ஸ்வரங்களை மீட்டி இசையைப் பொழியச் செய்யவே எல்லா இசைக் கருவிகளும் என்றாலும், அதே இசைக் கருவிகளில் தாம் அபஸ்வரங்களும் இருக்கின்றன. அபஸ்வரங்களை மீட்டி மீட்டித் தான் ஸ்வரங்களுக்குள் வந்து சேர முடியும். ஸ்வரங்கள் பழகும்போது தவிர்க்க முடியாத அபஸ்வரங்களை ஸ்வரங்கள் பழகிய பின்னும் அபஸ்வரங்களை மீட்டிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? என்னைக் காக்கவா, உன்னைக் காக்கவா என்ற கேள்வி அபஸ்வரம் மீட்டிய ஜலதரங்கக் கிண்ணங்களின் நீர் போல் அலைந்துகொண்டேயிருக்கிறது. 

போகிற வழியில் பொன் நதியொன்றில் கால்நனைக்கும் பூக்களைத் தரிசித்தவனும், சிட்டுக்குருவிக்கு வீடு கட்டியவனும் வெறுங்கவிதையாக, உடைந்து போகிற உடைமையாக வரிகளெங்கும் உலவுகிறார்கள். அவர்கள் படர் கொடியைப் பார்த்துவிட்டு நேராய் எதையும் சொல்லத் தெரியாமல் தழும்பைத் தந்துவிட்டுப் போகிறார்கள்.      

வினாவாக நீ தகித்திருந்தால்

விடையாக உருகிக் கொட்டியிருக்கலாம்.

தகிக்கித் தெரியாத அவர்கள் கொடுத்த தழும்பு ஒரு முற்றுப் புள்ளியாக ஒளிர்கிறது. 

தென்னங்கீற்று விலக ஒளி சிந்தும்

முகம் காட்டி குறுநகை பரிசளிப்பான்

குட்டிப் பயலே ஏன் ஓடினாய்

எதற்கிப்படி வாட்டுகிறாய்

என்றெல்லாம் கேள்விகள் எழுப்பும் எளிய கவி மனம் இறுதியில், 

குழந்தையா காதலனா கடவுளா

யார்றா நீ எனக்கு? 

என்று எழுப்புகிற கேள்வி, ஒரு நெடும்பனையின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு கிளியின் கீச்சாக ஒலிக்கிறது. கிளைகளற்ற பனையின் உச்சியில் ஏறி நின்று தனிமையின் தழும்பைப் பேசுகிறது கவிதை. இந்தக் கவிதையின் கதவைத் திறந்து பார்க்கும்போது அதன் அறைகளெங்கும் தனிமையின் தழும்புகள் கொட்டிக் கிடப்பதாகவே காட்சிப்படுகின்றன. 

ஒவ்வொரு கவிதையாய்த் திறந்து பார்க்கப் பார்க்க வெவ்வேறு உணர்வுகளின் மேல் நீங்காமல் நிலைத்துவிட்ட வெவ்வேறு தழும்புகள் காணக் கிடைக்கின்றன. அதிகாரங்களும், சமூகமும், அவன்களாகிய அவர்களும் வழங்கிய தழும்புகளைக் காட்சிப்படுத்தி பித்துக்கும், பிறழ்வுக்கும் இடையில் நின்று கேள்விகளை எழுப்புகின்றன அனைத்துக் கவிதைகள். எழுகின்ற அந்தக் கேள்விகளின் குரலில் எளிய மனத்தின் அறம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

இடது மெட்டி என்கிற கவிதை எழுப்புகிற உணர்வு மிகவும் அழுத்தமானது. 

தொலையவே கூடாதென வைப்பவை

தொலைந்தே போவதே விந்தை

அதன்பின் அழகிய அம்மெட்டி

எங்கு தேடியும் தட்டுப் படவே இல்லை

மெட்டிகளில்லாது விரல்களுக்கென்றும் 

வலிகளில்லை.   

என்று முடிகிற இந்தக் கவிதை வேறொரு வெளியை உருவாக்கிக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறது. தாலியின் இருப்பு குறித்து நிறைய கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. கொலுசுகளோ ஆண்களுக்குக் கவிதைக்கான கச்சாப் பொருள். மெட்டியைக் குறியீடாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதை மிகமிகக் குறைவு. “மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட” என்கிற பாடலைத் தாண்டி வேறெதுவும் நினைவுக்கும் வரவில்லை. இயல்பான நிகழ்வொன்றைக் கவிதையாக்கித் தந்து இந்த நூலோடு கூடுதல் நெருக்கத்தை உண்டாக்கிவிடுகிறார் கவிஞர். 

சுழற்சியின் அசதி நாள் என்ற போதும்

மறுப்பை ஏற்காது வேண்டுகோள்

மந்திரம் ஜபித்துக் கொண்டே இருக்க

இரக்க மனத்துளையோ

இறக்கும் மோன விழைவோ

தரிசன மாதுளை விளைவித்தது. 

தரிசன மாதுளை என்ற தலைப்பில் இப்படியாகத் தொடங்குகிற கவிதை “அசுத்த நாள் என்றொன்றில்லை” என்கிற சொற்கள் வழியாகப் பெண்களைக் கற்பிக்கிறது. கற்றுக்கொள்ளுதலே அறம். 

அந்தரங்கக் கொஞ்சல் ஆசையாய் அத்துமீறினால்

போதுமெனச் சொல்லி நெஞ்சைக் கிழித்துவிட்டு

வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்பான்

எனத் தொடங்குகிற பூசணி இலைப்பச்சை எனும் தலைப்பிலான கவிதை,

பின் வாசலில் நிமிர்ந்து நிற்கின்ற

கருநீலக்கரும்பும் அதில் படர்ந்திருக்கும் 

மெல்லிய பாகற்கொடியும் ஆனவன்

என்று முடிகிறது. 

தழும்புகளைப் பாடிப்போகிற அதே வேளையில் இரசனை மிகுந்த வரிகளும் அழகான, அற்புதமான படிமங்களும் கவிதைகள் தோறும் நிரம்பித் ததும்புகின்றன. தழும்புகளைப் பாடுவதால் இவை சோகப் புலம்பல்கள் இல்லை. தழும்புகள் என்பதும் இங்கே ஒரு குறியீடு தான். காயங்கள் ஆறிய பின் நிலைத்து நிற்கும் தழும்புகள் ஞாபகச் சின்னங்கள். ஓடி விளையாடும் போது, மிதிவண்டி ஓட்டப் பழகும் போது என விழுந்து அடிபட்ட காயங்கள் யாருக்குத் தான் இல்லை? விளையாடுவதும், மிதிவண்டி பழகுவதும் விரும்பித் தானே செய்கிறோம். அப்படியான விருப்பங்களோடு நிகழ்கிற இயல்பிலிருந்து அரும்புகிற நிகழ் கணங்கள் தாம் இந்த நூலில் கவிதையாகியிருக்கின்றன. 

அறைக்குள் ஒரு கடல் பரிசளித்தாய்

உனதான பரிசோடு எனக்கெந்த பந்தமும் இல்லை

என விலகியும் போகிறாய். 

‘அறை கடல்’ எனும் தலைப்பில் தொடங்குகிற இந்தக் கவிதை கவிதைக்கான எல்லா ஒழுங்குகளோடும் மிக நேர்த்தியாகப் பின்னப்பட்டிருக்கிறது. ‘நீர்ச் சொட்டச் சொட்ட மூழ்கிப் போகும் கதைகள்’ என்கிற வரி மிக அழகான இன்னொரு வெளியை உருவாக்கித் தருகிறது. 

கைப்பூ, காப்பிப்பூ என பூக்களுக்குப் பெயர் சூட்டும் வாழ்வு கொண்ட பால் வாங்கச் சென்ற சிறுமியாக கவிஞர் அவர்கள் கவிதைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்வது பெரும் வியப்பு. பரிசுக்கோர் பரிசு, கூகையின் பெருவிழி, உருளும் கிழங்கு, இலை கிள்ளி, ஒப்பீடுகளின் மூன்றாம் விதி, மறைகுயில், புலிக்குள்ளே பூனை, கண்ணாடி நாவுகள், முகமூடிப் பிரியம், பருகாமை, சிறகும் சருகும்… என இவர் கவிதைகளுக்குச் சூட்டிய தலைப்புகள் ஒவ்வொன்றும் கவிதை. ஈர்க்கும் தலைப்பின் அழைப்பில் வரவேற்கும் கவிதைகள் அனைத்தும் தலைப்புக்கு நியாயம் செய்கின்றன என்பது தனிச் சிறப்பு. 

‘குருதி பார்த்தல்’ என்கிற தலைப்பில் அமைந்த கவிதை இது:

உள்ளொடுங்கிய நத்தைக் கூட்டினுள்

ஈர்க்குச்சி குத்தி இருக்கிறதா இல்லையா

என்று பார்த்து பாறையில் போட்டு

உடைத்து குருதி பார்த்தவர்கள் தானே 

நீயும் நானும்.  

கவிதைகள் சோடை போகவில்லை என்பதை எடுத்துக்காட்டும், இந்தக் கவிதை நுட்பமான உணர்வையும் கடத்திவிடுகிறது

20-ட்வென்டி எனும் கவிதை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கவிதையாக அமைந்திருக்கிறது. 

எந்த இலக்கில் வீசினாய் 

எனத் தெரியாது

எனை நோக்கி வந்த முதற்பந்தை

என்று தொடங்குகிற இந்தக் கவிதை வெகு இயல்பாய் பயணித்து முடியும் போது வாழ்வின் வலியை, மீப்பெரும் தழும்பை உணர்த்தி விட்டுப் போகிறது. யாரோ ஒருவரின் தோல்விதானே யாரோ ஒருவரின் வெற்றியாக அமைகிறது. இந்தக் கவிதை இப்படி முடிகிறது:

உனக்கு யார் சொல்வார்

ஒருவரின் விளையாட்டு

இன்னொருவரின் வாழ்வாக மாறும்

உலக சாபத்தின் தத்துவத்தை

நூலை வாசித்து முடிக்கும் போது “உங்கள் தழும்புகளின் மீதும் இவ்வரிகளில் ஏதேனுமொன்று வருடல் செய்யுமாயின் நீங்களும் நான் தான்” என்று தனது முன்னுரையில் குறிப்பிடும் கவிஞர் ஜெயஶ்ரீயின் வரிகளுக்குத் திரும்பி வர வேண்டியிருக்கிறது. 

யாருக்குத் தான் காயங்கள் இல்லை; காயங்கள் ஆறி தழும்புகள் ஞாபகச் சின்னங்களாக நிலைத்து விடுகின்றன. தழும்புகளை வருடும்போது ஒரு வாழ்வைத் தான் வருடிப் பார்த்துக் கொள்கிறோம். 

அப்படியான எல்லா வருடல் பொழுதுகளையும், எல்லாத் தழும்புகளையும் கவிதைகளாக எழுதி விட முடியாது. கவிஞர் அன்புத்தோழி ஜெயஶ்ரீ அவர்கட்கு அத்தகைய அத்துணை வருடல் பொழுதுகளையும் கவிதையாக்கத் தெரிந்திருக்கிறது. கவிதையாக்கியும் இருக்கிறார். 

நிறைவான தொகுப்பை வாசித்த மகிழ்வான மனத்துடன் எனதான வருடல்களோடு வாழ்த்துகிறேன். 

வாழ்த்துகள்.


  • நாணற்காடன்

 

நூல் விபரம்
  • தழும்பின் மீதான வருடல்

ஆசிரியர் : அன்புத்தோழி ஜெயஸ்ரீ

வெளியீடு :   கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2022

விலை : ₹ 160

நூலைப்பெற :  www.panuval.com

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website