cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 15 விமர்சனம்

எஸ்தரின் “பெரு வெடிப்பு மலைகள்” குறித்து திராவிடமணி


இலங்கை மலையகத்திற்குப் பயிர்செய்கைக்காகத் தமிழகத்திலிருந்து ஏராளமான தமிழர்கள் புலம்பெயர்க்கப்பட்டும், புலம்பெயர்ந்தும் 200 ஆண்டுகள் கடந்துவிட்டன.  அதனை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கும் இன்றைய சூழலில் வெளிவந்துள்ள, இலங்கையின் நுவரேலியா மாவட்டத்தில், அட்டன் டிக்கோயா பிரதேசத்தில், சாஞ்சிமலை தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட  எஸ்தரின் ”பெருவெடிப்பு மலைகள்” கவிதைத் தொகுப்பு கவனம் பெறுகிறது.

கவிதை என்பது மனவெழுச்சியால் உந்தப்படும் நிலையில் ஒரு புள்ளியிலிருந்து உடைபட்டு மொழியின் வழி தான் சொல்லக்கருதிய பொருண்மையைச் சொல்லிச் செல்கிறது.  அகப்புற வாழ்வின் ஊடாட்டங்களில் உற்றதையும், உணர்ந்ததையும் கருவாகக் கொண்டு மொழியும் கவிதைகளில் வாழ்வியல் போராட்டங்களும் வலிகளுமே  எஞ்சி நிற்கின்றன. அவ்விடத்தில் மொழி வடிகாலாகவும் கொண்டு மொழிதலாகவும் நிலைபெறுகிறது.

அவ்வகையில் எஸ்தரின் கவிதைகள் பெருந்தோடத் தொழிலுக்காகத் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த தமது மூதாதையர்களின் வலிமிகுந்த வாழ்வையும். 200 ஆண்டுகள் ஆனபோதும் மாறாத பணிச்சுமையையும், கூலிச் சுரண்டலைம் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், புரையோடிவிட்ட மூடப்பழக்கவழக்கம் சார்ந்த நம்பிக்கைகளையும், நவீனமயமாதலில் வறண்டு போன மனித மனங்களையும்,  பற்றிப் பேசுகின்றன.

பிரிட்டீசார் ஆட்சியில் இலங்கை பல்வேறு நிலைகளில் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாகியது இலங்கை ஆங்கிலக் காலனித்துவத்திற்கு ஏற்ற வகையில் பொருளாதார வளம்பெற்ற  நாடாக மாற்றப்பட்டது. போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் கடைப்பிடித்த இலங்கையின் பாரம்பரியப் பொருளாதாரக் கட்டமைப்பை உடைத்துப் பிரிட்டீசார் புதிய பொருளாதாரக் கட்டமைப்பையும், தொழில் முறைமைகளையும் கொண்டுவந்தனர். இதன் விளைவாக  இலங்கையில் புதிய பணப்பயிர் செய்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பணிகளுக்காகத் தென்னிந்தியாவிலிருந்து ஏராளமான கூலித் தொழிலாளர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். மட்டுமல்லாது அக்காலத்தில் தென்னிந்தியாவில் நிலவிய சமுதாயச் சூழலும் கூலித் தொழிலாளர்களாக இலங்கையை நோக்கி அவர்கள் புலம்பெயரக் காரணமாக அமைந்தன. இது குறித்து ஜெயசீல ஸ்டீபன் குறிப்பிடுகையில்

”பஞ்சத்தினாலும், ஏழ்மையினாலும் வாடிய தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கும், இலங்கைக்கும் பிஜி முதலான கிழக்கிந்தியத் தீவுகளுக்கும் தொழில்செய்து பிழைக்கச்சென்றார்கள். அந்நாடுகளில்  தேயிலை, காப்பி இரப்பர் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் இவர்கள் கூலிகளாகச் சேர்ந்தனர். அத்தோட்டங்கள் சுரங்கங்கள் ஆகியவற்றின் முதலாளிகளுக்கு ஆள்பிடித்துக் கொடுத்தவர்களுக்குத் தரகு கொடுக்கப்பட்டது. கூலிகளாகச் சேர்ந்த தமிழர்களுக்கு பொன்னும், பொருளும் பூமியும் கிடைக்குமென்றும், அவர்கள் குறுகிய காலத்தில் பெரிய  செல்வந்தர்களாகி விடலாம்  என்றும் இச்சை காட்டி  அவர்களை ஏமாற்றினார்கள். இந்தியக் கூலிகள் சென்றவிடத்திலெல்லாம் விலங்குகளினும் இழிவாகவும் அடிமைகளைவிடக் கொடுமையாகவும் நடத்தப்பட்டனர்.” (ஜெயசீல ஜ்டீபன், காலனிய வளர்ச்சிக் காலம், 2019) என்கிறார்.

இத்தகையப் பின்னணியோடு பார்க்கும்பொழுது  எஸ்தரின் “பெரு வெடிப்பு மலைகள்“ எனும் கவிதைத் தொகுப்பானது கவனிக்கத்தக்கதாகிறது.  கொண்டுமொழியும் துர் அனுபவங்களும், நிகழ்வுகளும் எவ்வித மாற்றங்களும் நிகழந்துவிடாமல் தனித்துக் காக்கப்பெற்ற அவல வாழ்வும், விடுபடலின் சாத்தியக்சுறுகள் குறைந்த வாழ்வில் பேரிழப்பின் மீளாத் துயரில் நின்று நடப்பியலை நின்று நிதானித்துப் பேசுகிறது..

தமிழகத்திலிருந்து இலக்கைக்குத் பெருந்தோட்ட பயிர்செய்கைக்காகப் புலம்பெயர்ந்த தமிழர்களை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை இந்தியர்கள் என்று அடையாளப்படுத்தியது. கடுமையான நிர்பந்தங்களை உண்டக்கி தமிழகத்திற்குள் தள்ளியது. அந்நிலையில்  அவர்கள் தமிழக அரசாலும், மக்களாலும் இலங்கை அகதிகள் என அடையாளப்படுத்தப்பட்டனர்.  பெருவலியை உண்டாக்கிய ரணங்களுடன் கடந்துகொண்டிருந்த பெருவாழ்வில்  துயருற்ற மலையகத் தொழிலாளியின்  மனக்குமுறலாக கவிஞர் எஸ்தரின் “நாடற்றவன்“ கவிதை வெளிப்படுகிறது.

 “நாடற்றவனாக்கப்பட்டவன்  நோட்டன் தோட்டத்தில்

அஞ்சு பெரு வெடிப்பு மலையின் கீழே

முன் தேசத்தின்

வாழ்வை நினைத்துக் கொண்டான்

தோட்டத்து தேயிலை மலையை ஒரு சுத்து சுத்தி

வரும் முன்னே அவனுக்கு முன் ஓடுகிறது

ஒரு கோடி நினைவுகள்

ஏன் நான் நாடற்றுப் போனேன்

நாதியற்றுப் போனேன்

என்ற சிறிய கேள்விக்குப்

பெரிய விடையைத் தேடுகிறான்”  (நாடற்றவன்)

“தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலிகளாக இலங்கைக்கு வந்தவர்கள். அவர்களது தாய்நாடு இந்தியாவாகத்தான் இருக்கவேண்டும். இலங்கையர் என்ற அடிப்படை உரிமையில்லாத மக்களுக்கு வாக்குரிமை வழங்கமுடியாது என்ற கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டன. (பெருமாள் சரவணகுமார், இனவரைவியல் நோக்கில் இலங்கை மலையகத் தமிழ் நாவல்கள் ஆய்வேடு-2023) இத்தகைய போக்கால் மலையகத் தமிழர்கள் சூழ்நிலை அனாதைகளாக்கப்பட்டனர். எனும் கருத்தும் . இங்கு மனங்கொள்ளத்தக்கது. ஏனெனில் விடுதலை இலங்கையில் இவ்வகையான பரப்புரையைச் சிங்கள அரசியல்வாதிகள் மக்களிடம் செய்தனர். இதனால் அக்காலகட்டத்தில் சிங்கள அரசாலும் மக்களாலும் மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.   நாடற்றவர்களாக வாழும் அவலநிலை இருந்தது.

மற்றொரு கவிதையான “கரிக்கோச்சி“ எனும் கவிதையில்  தன் தாத்தாவின் பூட்டன் சொன்ன கதையைக் கண்ணீருடன் பதிவு செய்கிறார் கவிஞர்.

“பழிவாங்கப்பட்ட என் தாத்தாவின் பூட்டன்

கருங்குளம் பழனியாண்டியின்

சாதி சனமும் ரொசல்ல ரயில் நிலையத்தில்

கட்டிப் பிடித்துக் கதறியதாகவும்

பின் கையசைத்து விடைபெற்றதாகவும்

ஒரு கையில் கண்ணீரை துடைத்துத் கொண்டு சொன்னார்

கரிக்கோச்சி பிரிவின் துயர் சுமந்து கொழும்பு நோக்கிப் பயணித்தது

 

தாத்தாவின் கதைகளில்  கரிக்கோச்சியின் நிறம் மட்டும்

இன்றுவரை சாயம் போகவில்லை

காலமெல்லாம் நாடற்றவரின் துயர வரலாறு

காற்றில் கரித்துண்டில்தான் எழுதப்பட்டது”

இக்கவிதை தமிழகத்திலிருந்து இலங்கை துறைமுகத்தை சென்றடைந்த தமிழர்கள் அங்கிருந்து பல்வேறு மலையகப் பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டனர். அந்நேரத்தில்  உறவினர்களைப் பிரிந்து சென்ற பூட்டனின் மனவலி, பிரிவுத்துயர், கண்ணீர் போன்ற கொடுநிகழ்வுகள், காலங்காலமாகக் கடத்திவரப்பட்டு வாய்மொழியாகக் கேட்டு உணர்ந்து அனுபவிக்கும் வம்சாவழியினரின் உணர்வைப் பிரதிபலிக்கிறது.

கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை உண்மையென்று கருதி  நல்ல கூலிக் கிடைக்கும் வசதியான வாழ்வு கிடைக்கும் என்று நம்பிச் சென்றவர்கள் பெருந்தோட்ட முதலாளிகளாலும், கங்காணிகளாலும் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர். இன்று வரை அங்கு நல்ல கூலியோ, வாழ்விடமோ, உணவோ கிடைக்கவில்லை என்பதை

 “பெரிய பெரிய கல்லுகளுடன்

லயங்களில் தகரக் கூரைகளுடன்

இப்பவோ அப்பவோ நொறுங்கி விழக்கூடும்

வெள்ளை மண் பூசிய செவிரோடும்

அவன் குழந்தைகளும் சிறுத்தைகளும்

குளவிகளும் 1000 ரூபாக் கூலிக் கனவுகளோடும் நூற்றாண்டுகள்

அரசியல்வாதிகளின் அப்பழுக்கற்ற வாக்குறுதிகளோடும்

பத்திரமாயிருக்கிறான் பெறுமதியற்றத்

தோட்டத் தொழிலாளி” (தேயிலைத் தூள்)

என்று கவிஞர் பதிவு செய்துள்ளார்.  200 ஆண்டுகள் கடந்த இன்றைய நிலையிலும் மலையகத் தமிழர்களின் வாழ்வு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துபவர்களின் வாழ்வு அதலபாதாளத்தில் கிடக்கிறது.

வாழ்விடம் இப்பவோ அப்பவோ நொறுங்கி விழும் நிலையில் இருப்பதையும், சிறுத்தைகள், குளவிகளால் ஏற்படும் உயிரச்சத்தோடு குழந்தைகளுடன் வாழும் சூழல் இன்றும் தொடரும் அவலத்தையும் நோக்கும் பொழுது. கூலிகளின் உயிர் மலிவாகிப்போனதை உணரமுடிகிறது.

.. தற்கால விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்த்தப்படாத நிலையில் தேர்தலின் பொழுது அரசியல்வாதிகள் வந்து பொய்யான வாக்குறுதிகளைத் தருவதும்  பிற்பாடு கடந்துவிடுவதும் வாடிக்கையாய் இருக்க  உயர்த்தித் தருவதாகச் சொன்ன 1000 ரூபாய் கூலி என்பதும் கனவாகவே பொய்த்துக்கொண்டிருக்கிறது என்கிறார். தேர்தல் வாக்குறுதிகளுக்கு நிலைத்தன்மையில்லை அது அந்நேரத்துப் பேச்சுமட்டுமே. அடுத்தநொடி கரைந்துவிடும் என்பதால் கனவு என்றவர்   அவர்கள், இழிவாகவும் அடிமைகளைப்போலும் நடத்தப்படுவதால் பெருமதியற்றத் தோட்டத் தொழிலாளி எனச் சுட்டிச் செல்கின்றார்.

“அடிக்கும் பறையோடு பாடல் அபாரம் அபாரம்

ஆனாலும் அடிப்பதை கொஞ்சம் நிறுத்துங்கள் மக்களே

அதிலே நாடற்றவனின் நிலமற்றவனின்

நிறம் அற்றவனின் தோட்டக் காட்டான்

கள்ளத்தோணி என்ற கருத்தியலாலும்

காரசாரமாக உழைப்பு சுரண்டப்பட்டவனின்

ஆயிரம் காலத்துக் கதறல்

கேட்டுக்கொண்டேயிருக்கின்றது” (வெளியேறும் மனம்)

இலங்கை, மலையகத் தமிழர்கள் நாடற்றவன், நிலமற்றவன், கள்ளத்தோணியில் வந்தவன் என்றெல்லாம் இழிவாகப் பேசி அவமானப்படுத்தப்படும் அவல நிலையையும் அறியமுடிகிறது.

“மற்றைய பகுதிகளைவிடச் சாதிய கட்டமைப்பின் இறுக்கத்தைத் தமிழகத்தில் மிகுதியாகக் காணலாம். குறிப்பாக உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் வாழும்படிச் செய்து, தங்களுக்கு அருகில் நெருங்கினால் தீட்டு என்று நடத்தும் அளவிற்குக் கீழ்த்தரமாக நடத்தப்பட்டதால் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஒப்பந்தக் கூலிகளாக வெளிநாடுகளுக்குச்  சென்றனர்.“ (ஏ.காளிமுத்து, தமிழகத்தில் காலனித்துவமும் வேளாண்குடிகளும், 2012)

இப்படியாகத், தமிழகத்தில் ஐரோப்பியர் காலத்தில் இருந்த கடுமையான சாதியக் கொடுமைகளாலும், சமுதாயத் துன்புறுத்தல்களாலும் பாதிக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் அடிமைமுறை விலக்கப்பட்ட நிலையிலும் இத்தகைய கொடுமைகளிலிருந்து மீளக்கருதி தாமாகவே முன்வந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்தனர். ஆனால் அங்கும் சாதிய கட்டமைப்புகள் மாறாமல் அப்படியே தொடர்ந்தது. இந்நிலையை இளந் தலைமுறையினர் நினைத்தால் மாற்றமுடியும். என்று சொல்லும் கவிஞர் அதனை மாற்றும் சக்தி காதலுக்குண்டு என்கிறார். மேலும்  யார் பூனைக்கு மணி கட்டுவது என்று எதிர்பார்த்திராமல் நீயே முதல் அடியை எடுத்து வை என்று உரைப்பதாக  “சாதிகள் இருக்கிறது பாப்பா?“ எனும் கவிதை அமைந்துள்ளது.

“குருவிகளை துரத்தித் துரத்திக் கலைந்த புள்ளிகளை நீ

மறுபடி இணைப்பது

சாதிகள் இல்லையடி பாப்பா என்றவனின் வார்த்தைகளையா?

…………………………………………………………..

கெட்டித்தட்டிப் பாறையாய் எழுந்திருக்கும் சாதியக் கோடுகளையும்

கொம்புகளையும் காலம் ஒருநாளும் இங்கே இடித்தொழிக்காது

பெண்ணே

நீயும் நானும் புறப்படும் வரை”

கெட்டித்துக்கிடக்கும் சாதிய இறுக்கம் ஒருநாளும் தளரப்போவதில்லை. நீயும் நானும் களத்தில் இறங்கிப் போராடாதவரை என்கிறார் கவிஞர்.

தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் கடுமையானப் பணிப்பளுவால் மிகவும் துயருற்றனர். ஆண் பெண் எனும் பகுப்பற்று அவர்கள் வேலைவாங்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரையிலும் வேலைசெய்தார்கள், குழந்தைப் பிறந்ததும் பால்குடி மாறாத பச்சிளம் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு உடனே பணிக்குவரப் பணிக்கப்பட்டார்கள். காலையில் வேலைக்கான சங்கு ஒலித்ததும் பச்சிளம் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களின் மனம் பதறத்தொடங்கிவிடும் என்கிறார் கவிஞர்

 “அவளின் விடியலில் ஆகத்துயரம்

பிள்ளைமடுவத்தில் தேவீயின்

குழந்தையைக் கைவிடுதல்தான்

 

பத்தோடு பதினொன்றாகக்  கத்தும் அவள்

பிள்ளையை வேகமாகத் தள்ளிவிடுதலே” (தேவி)

 

என்று ஒரு தாயின் மனக்குமுறலைப் பதிவிட்டுள்ள கவிஞர் வேலைக்குக் காலம் தாழ்த்திச் சென்றால் முதலாளியிடமும் கங்காணியிடமும் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்படும் அதனைத் துயரிலும் சுயமிழக்காத அப்பெண்கள் விரும்புவதில்லை என்பதை

 

 “நேரம் பிந்தினால் சிலலுவையின் முன்னே

பாவி போல் நிற்க வேண்டும்

 

கங்காணி கணக்குப்பிள்ளை முன்

தலைசொறிந்து கெஞ்சி

கூலிக்காக குறுகி வெடிக்க வேண்டும்

தேவி

…………………………………………………………………..

குழந்தையின் கண்ணீரில் முகத்தைக்

கழுவி

தேயிலையைக் கொய்து கொய்து

கைவிடப்பட்ட கடவுளை நினைத்து

கூடையில் இடுகிறாள்

தேவி”   (தேவி)

என்று சொல்லிச் செல்கிறார். இருத்தலுக்கானப் போராட்டம் என்பது கருவிலேயே அங்குத் தொடங்கிவிடுதலையும், இருப்புக்கேற்ப வாழப்பழகும் பெண்கள் தாய்மையின் பிடிக்குள் அகப்படும் பொழுது உண்டாகும் ஆகப்பெருந்துயரைச் செரிக்கப் பழகுகிறார்கள் என்பதையும். சுயமிழக்க விரும்பாத இவர்களின் நிரந்தர வடிகால் கண்ணீரும், கைவிடப்பட்ட கடவுளும் என்பதையும் உணரமுடிகிறது. மலையக மக்களின் வாழ்வு எப்போதும் ஒரே இயல்பினையுடையதாக இருக்கிறது. சுவையற்ற வாழ்வை வரித்துக்கொண்ட இவர்களின் பொருளாதாரம் இன்றுவரை மேம்படவில்லை. துண்டு விழும் நிலையில்தான் இருக்கிறது என்பதை

“அப்பா 10 ஆம்

நம்பர் மலையில்

கவ்வாத்து வெட்டப்போய்

மின்னலடித்ததில்

நின்றது

மூன்று வேளை

ரொட்டி சோறு சம்பல்

 

பதுங்கியிருந்த சிறுத்தை

செய்வதறியாது

பாய்ந்தது

இரண்டு வேளை

பசி தீர்த்த

அக்கா மீது

…………………………….

83 ஜீலை நெடுங் கலவரத்தில்

டயர் மாலை வாங்கிய மாமாவின்

பிள்ளைகளும்

தேயிலைக் காடுகளில்

மிலாறு பொறுக்கித் தேயிலையின்

காஞ்சக்கட்டையை உடைக்கிறார்கள்

வறுமையின்

கைவிலங்கை

உடைக்கவே முடியாத ஒத்திகையில்” (அப்பா)

 

என்கிறார். மூன்று வேளை உணவு அப்பா இறப்புக்குப் பிற்பாடு இரண்டாகியது அக்கா இறப்புக்குப் பின்னர் அதுவும் கேள்விக்குறியானது. இக்கவிதை வறுமை பசியை மட்டும்  பேசவில்லை பாதுகாப்பற்ற வாழ்வியல் சூழலையும் பதிவுசெய்கிறது. இப்பொழுது மரித்துப் போன மாமாவின் பிள்ளைகளும் இருக்கிறார்கள் இருந்தபோதிலும், .வறுமையின் விலங்கை உடைக்கவே முடியவில்லை என்பது. மீள முடியாத அடிமை வாழ்வை உணர்த்திச் செல்கிறது.

இவ்வாறாக மலையகத் தமிழர்களின் சவால் மிகுந்த வாழ்வியலை வலிகளோடும் அம்மக்களிடம் வேரூன்றியுள்ள கடவுள் வழிபாடு, அது சார்ந்த சாதிய இறுக்கம், நம்பிக்கைகள், மூடப்பழக்கவழக்கங்கள் பற்றியும்.  படித்த இளந்தலைமுறை மலையகத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், மாறாத் தன்மையுடன் தொடரும் பாதுகாப்பற்ற வாழ்வு, வறுமை, சுரண்டல் போன்றவற்றையும் இத்தொகுப்பில் பேசியுள்ளார். தமிழ்க் கவிஞர் மத்தியில் தவிர்க்க முடியாத இடம் எஸ்தருடையது

”நீ என்பது

நீலத் திமிங்கிலத்தின் ஆறாப் பசி

நானோ தாகம் அடங்கிப் படரும்

நீலப் பெருங்கடல்”

 


முனைவர் பொ.திராவிடமணி

உதவிப் பேராசிரியர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி(த),  தஞ்சாவூர் .

[email protected]

 

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website