cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 விமர்சனம்

பா.மகாலட்சுமியின் ”குளத்தில் மிதக்கும் சிறகு” – கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை


பெண் என்பவள் இந்த உலகில் என்னவாக அறியப்படுகிறாள் ? என்னவாக அவளை சமூகம் அறிந்து கொண்டிருக்கிறது? என்ற கேள்விகளை முன் வைத்து இந்த தொகுப்பை வாசிக்க ஆரம்பித்த கணத்தில் ஆணுக்கு பரந்து விரிகின்ற உலகத்தில் பெண்ணுக்கு   மட்டும் மிகச் சிறிதாக வாய்ப்பதுஏன்? என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டுக் கொண்டு பெரியாரை உள்வாங்கிய கையோடு மார்க்சிய சித்தாந்தங்களையும் தனது சிந்தனை தளத்தில் விரித்து குளத்தில் மிதக்கும் சிறகு என்ற தனது முதல் தொகுப்பை கொண்டுவந்திருக்கும் மகாலட்சுமிக்கு என்   வாழ்த்துக்கள்!.  

ஒரு பெண் தனியாக இவ்வுலகில் வாழ்வதென்பது ஏதோ அவளால் இந்த சமூகத்தில் தனித்து இயங்க முடியாத ஒரு பிறவியாக காலம் காலமாக கட்டமைக்கப்பட்ட கருத்துக்களால் அவளின் தனித்துவமான வாழ்வை ஒடுக்குவதாக அமைந்துள்ளது. பெண் என்பவள் எப்போதும் தாயாக , மனைவியாக, சகோதரியாக, மகளாக சமூகத்தால் அறியப் பட்டுள்ளது. சமூகத்தின் இந்த பொதுப்புத்தியை உடைத்து தனிமையின் சிறகு என்ற கவிதையில் தனிமை என்பது எனக்குச் சிறையல்ல …சிறகுகள்தான் என்று தன் கருத்தை முன் வைக்கிறார்.

தனிமையின் சிறகு

 “என்னைத் 

தனிமைச் சிறையில் 

அடைத்துவிட்டதாய்

ஆனந்தம் கொள்கிறீர்கள்

என்னைக் கைபிடித்து

அழைத்துப் போகும் 

தோழியின் சிநேகமாய்

படிக்கவும் எழுதவும் 

துணை நிற்கிறது அது.

என்அந்தரங்கத்தின் 

ரகசியங்களையும்

 ஆன்மாவின் அலறலையும் 

தன் தோள் மீது 

கிடத்திக் கொள்கிறது

தெரியுமா உங்களுக்கு

தனிமை என்பது 

எனக்குச் சிறையல்ல… 

சிறகுகளென்று?”

இவரது இன்னொரு கவிதை மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பொன் மொழியை பொய்யாக்கி விடுமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.இதோ இப்படி ஒரு கவிதையை ஒரு பெண்ணால்தான் வலியுடன் எழுதமுடியும் என்று நிரூபித்திருக்கிறார். 

மாற்றம்

 “விறகடுப்பிலிருந்து விடுதலை

நவீனமயமானது சமையலறை

நீரிறைக்கும் சிரமமின்றி

தண்ணீர் கொட்டும் குழாய்கள்

சோறு வெந்த சேதியினை

சொல்லியடங்கும்

குக்கரின் குரல்…

ஆட்டுரலில் மாவாட்டி

ரேகை தேய்க்க வேண்டியதில்லை

நவீன யுகத்தின் 

அத்தனை வசதிகளும்

நிறைந்து கிடக்கிற வீட்டில் 

மாற்றமின்றியே கிடக்கிறது 

சமயலறையில் ஒடுக்கப்பட்ட

அவளது வாழ்வு

அடுப்புக் கரியில் 

வரையப்பட்ட

கருப்பு ஓவியமென”

பெண்ணின் இருத்தல் என்பது இங்கே அடுப்புக் கரியில் வரையப்பட்ட கருப்பு ஓவியமென நிற்கிறது. நவீன யுகத்திலும் தன்னை மாற்ற முடியாத சில பண்பாட்டுச் சிக்கல்களுடன் பெண்ணின் வாழ்வு  முடங்கி கிடப்பதை தனது யதார்த்த மொழியில் மிக எளிமையாக சொல்கிறார்.

பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தன் அம்மாவை தான் பார்த்து வளர்ந்து வரும் சூழ்நிலையில் தன் அம்மாவைப் பற்றிய பிம்பங்கள் அவளின் மனதில் வலுவாக இருந்து அவளின் எதிர்காலமும் அவ்வாறே அமைய வாய்ப்புள்ளது என்று கருதுவதற்கு இடமுண்டு. தாயை தந்தை எப்படி நடத்துகிறாரோ அப்படியான சமூகத்தில் ஆணாதிக்க மன நிலையுள்ள ஒரு குடும்பத்தில் இருந்து வரும்போது தான் பார்த்த அந்த அம்மாவை தன் தந்தையானவர் அம்மாவிற்கு கொடுத்திருக்கும் இடத்தை ஒரு சிறிய கவிதையில் மிக அழுத்தமாக பதிவு செய்கிறார் .

 “கடைசி வரையிலும்

 கிடைக்கவேயில்லை

தன் உடைமைகளை வைக்க

பீரோவும்

தன் கணவனின் 

இதயத்தில் ஒரு இடமும்

என் அம்மாவிற்கு”

அதேபோல் இன்னொரு கவிதையில்  பண்டிகை நாட்களில் அம்மாவுக்கு கிடைக்கும் உணவென்பது அடிதங்கிய ரசமும் அப்பாவின் இலையில் சிதறிக் கிடக்கும் சில காய்கறித் துண்டுகளும் என்று விவரிக்கும் போது அம்மாக்கள் எப்போதும் தனது ஆணின் பின் நின்றுகொண்டு இருக்கும் பிம்பங்களாய் கட்டமைக்கப்பட்ட நமது காட்சிகள் பின்னோக்கி நகர்கின்றன. நமது சமூகம் பெண்ணிற்கு தந்திருக்கும் இடத்தை தனது சிறு சிறு அழுத்தமான பதிவுகளின் மூலம் காட்சிப்படுத்துதலும் நுட்பமான கவி மொழியுடனும் இணைந்தே பயணிக்கின்றன இவரது கவிதைச்சிறகுகள்.

பெண்ணின் அவஸ்தைகளும் துயரங்களும் எப்போதும் போல என்று சொல்லிவிடத் துணிந்தாலும் பெண்களின் உலகத்தில் பேசாது விட்ட சில விஷயங்களும் பேச மறுக்கிற விஷயங்களுமாய் நம்மை நாமே தொலைத்து நிற்கிறோம் . இதுவும்கூட ஆணாதிக்கத்தின் ஒரு விளைவோ என்று நினைக்கும் அளவிற்கு நம்மிடையேயும் நமது ஒழுங்கு முறைகள் முறைதவறிக் கிடக்கின்றன. அதையும்பேசலாம் . பேச மறந்த கதைகள் போல் எழுத மறந்த கவிதைகளும் ஏராளம். இந்த தொகுப்பில் நாம் பேச மறந்த பல விஷயங்கள் கவிதையாய் எழுந்து நிற்கிறது.

பெண்களும் பேசலாம்… எழுதலாம் எதைப்பற்றியும் என்று கொஞ்சம் கொஞ்சமாக நம்மை முன்னோக்கி நகர்த்தியிருக்கும் நமது முன்னத்தி ஏர்கள் நமது பெண்ணியவாதிகள் . பெண்ணியம் என்பது ஆணாதிக்கத்தின் மீது எழுந்த கருத்தியல்களால் ஆனது என்று பலரும் தங்கள் சிந்தனைகளில் ஏற்றிக்கொண்டு பெண் எழுதுவதையும் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்களின் எழுத்தை நிராகரித்து வரும் நிலையில்தான் பெண்கள் இன்று துணிந்து தங்கள் கருத்துக்களை கவிதைகளால் நிரப்புகிறார்கள்.பெண்களின் உலகம் எப்போதும் இருண்ட ஒரு மூலையில் கிடந்து அழும் கண்ணீரால் எழுதப்பட்டும் துடைக்க முடியாத கரங்களால் அடைகாக்கப் பட்டும் வீணே கழிந்து போகாமல்  உறுதியும் திடமும் கொண்ட பெண்மையின்  நிலையில் தெளிவாக  நின்று தனது வார்த்தை அம்புகளை எப்போதும் தயாராக வீசக் காத்திருக்கும்  இவரது கவிதைகள் சம காலத்திய கவிதைகளில் இருந்து விலகி விடாமல்  முன்னிறுத்திக் கொள்கிறது. 


நூல் விபரம் : 

குளத்தில் மிதக்கும் சிறகு (கவிதைகள்)

ஆசிரியர் : பா.மகாலட்சுமி

வெளியான ஆண்டு : மே- 2019

பதிப்பகம் : தழல் பதிப்பகம்

விலை : ரூ 100

நூலைப் பெற

தொடர்புக்கு  :  98425 93924

 

About the author

மஞ்சுளா

மஞ்சுளா

மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.

மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.

“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website