சன்னதம் என்பதை ஆழ்மனத்தில் எழும் ஒலியற்ற சங்கேத / சங்கீத குறிப்புகளாகத்தான் நான் பார்க்கிறேன். ” சன்னதம் ” என்பது சிவபெருமானின் 108 தாண்டவங்களில் ஒன்று என்றும், மேலும் இது பரதநாட்டியத்தில் 75- வது கரணமாகும் என்றும், கைகளைக் கட்டிக்கொண்டு கால்களை வளைத்து கால் பெருவிரல் நுனியைப் பூமியில் ஊன்றிக் கொண்டு ஆடுவதாகும் எனவும் பொருள் சொல்கிறது. அந்த வகையில் நூலின் தலைப்பே அதன் தன்மையை, பேசவுள்ள பொருண்மையை நேர்படச் சொல்லியதாக உணர்கிறேன்.
கவிதைகள் தோன்றும் கணப்பொழுதின் ஓசையற்ற சிறு வெடிப்பின் போதே எழுதுகிற மனம் வெவ்வேறு தளங்களிலான தனது சன்னதத்தைத் துவங்கி விடுகிறது. இதை இன்னொரு வார்த்தைகளில் ” பிறழ்வு மனநிலை …” என எளிமையாக சொல்லி விடுகிறார்கள். ஆனால், இரண்டும் வெவ்வேறு நிலை.சன்னதம் என்பது முழுமையான ஆட்டம் புதிய பிறப்பாக கருதுகிறேன். இது நல்ல திண்மையான, நிதானமாக வாசிக்க வைக்கும் கவிதைகளுக்கே பொருந்தக்கூடும் எனக் கருதுகிறேன்.
பொதுவாக, முன்னோடிகளின் / சிறந்த ஆளுமைகளின் கவிதைகள் குறித்த கட்டுரைகள் சில தெரிவுமிகு இலக்கிய படைப்பாளர்களால் எழுதப்பட்டுவெளியிடப்பட்டுள்ளன. அவை வாசகர்களுக்கும், கவிதைத் தளத்தில் அதீத விருப்பம் கொண்ட படைப்பாளர்களுக்கும் கவிதை வெளியின் கதவுகளைத் திறந்து வைத்து வழிக்காட்டின. இதிலிருந்து மாறுபட்ட வகையில், ஒரு தோழமை உணர்வோடும் துணிவாகவும் வாழ்வு அனுபவங்களுடன் பொருந்தும் முதற்கட்டமாக 20-கவிஞர்களின் 60-கவிதைகள் மீதான பார்வையை இந்த “மாய சன்னதம்” நூல் தந்துள்ளது.
ஆன்மீக வாசத்தோடு “பூசுவது வெண்ணீறு பொங்குவது திருச்சாழல் ” என கண்டராதித்தன் கவிதைகளுடன் இக்கட்டுரைகள் ஆரம்பிக்கின்றன. சிதம்பரம் கோவிலில் தரிசனத்திற்கு பின்பு மனம் கனிந்து சாய்ந்திருக்கும் மாலைப் பொழுதில், பிரகாரத்தில் பணிக்குச்செல்லும் இரண்டு தோழிகள் ஓர் அரூபப் பொருளைக் கொண்டு எறிந்து விளையாடும் காட்சியோடு நம்மை கண்டராதித்தன் கவிதைக்கு அழைத்து வரும் கவியரசு, ” எல்லாவற்றையும் காண முடியாது ” எனும் குரலால் திடுக்கிட வைப்பதுடன், கவிதையின் ஒரு வரியை பிடித்தே அதன் ஆன்மாவைத் தொட்டுவிடுவதற்கான வாய்ப்பை கையளிக்கிறார். இன்னொரு கவிதை பற்றிய அனுபவத்தைக் கூறும் போது ஆதியந்தமில்லாதவன் என்ற தத்துவ ஒளியை பரவச் செய்வதுடன்
“நானே இளங்கோவும் நானேதான் ஞானப்பூங்கோதையும்” என்று தன்னுடைய பார்வையை பதிவு செய்கிறார்.
இரண்டாவது அத்தியாயத்தில் மருத்துவமனையில் உள்ள வான்கா ஒவியம் கிளர்த்திய உணர்வுச் சுழல்களை க.மோகனரங்கனின் “நெடுவழித் தனிமை” கவிதை வரியான // ஊழிக்கூத்து நாழிகளில்..// என்ற வரியை ஒப்பிட நினைக்கையில், “வான்காவுக்குள் கோடி வண்ணங்களில் கொந்தளித்துக் கொண்டிருந்தது கடல்” என்று சொல்வது நம்மை வியப்புற செய்கிறது. இது ஒரு துளி மட்டுமே. இன்னும் மற்ற கவிதைகளுக்குள்ளும் அனுபவங்களுக்குள்ளும் வாசிப்பவர்களே நேரடியாக சென்று உணர்ந்து கொள்வது நல்லதென விட்டுவிடுகிறேன்.
இந்த இடங்களில் இந்தமாதிரியான சூழல்தான் நம் வாழ்வில் என யாரும் கணிக்க முடியாது. இப்படியாக பயணம், மருத்துவமனை உலகம், கடற்கரை, இணைய வெளி, சொந்த ஊர், பால்யத்தின் நினைவுகள், போராட்டக் களங்களின் அறிவிப்புகள், நள்ளிரவுச் சாலைகள், மனிதர்கள், குழந்தைகளுடான பொழுதுகள், வெளிப்படாத உடல் ஆசைகள், வணிக நெருக்கடிகள், நவீன கணக்கு இயந்திரங்களுடான விழிப்புணர்வு அற்றவர்களின் அவதிகள், ஞானக் கூத்துகள், குடும்ப வன்முறை, ஆசிரமக் கூடாரங்களில் தியானித்து வெளியேறுதல், இவற்றோடு அதிகம் உணரப்படாத, பேசப்படாத “தகப்பனாயிருத்தல்” என்பதிலுள்ள ஒருவனின் அவதாரங்கள், வலி, புற அவமானங்கள், சுகம், இவற்றை ஏற்றச் சுவடுகள் தெரியாது, காத்து மறைந்து போவது என வாழ்வின் பல்வேறு தளங்களில் நிகழ்ந்த அனுபவங்களின் தலையில் ஒவ்வொரு கவிதையை அமர்த்தியபடி பயணித்து இருக்கிறது இந்நூல்.
இவ்வகைப் படைப்புகள் பற்றி அறிமுகப்படுத்தி ஓர் பதிவு எழுதுவதே சிறிது சிரமம் தான். அதற்கான காரணங்களில் முதலாவது கவிதை ஒவ்வொருக்கும் ஒவ்வொரு முகத்தைக் காட்டக் கூடியது. மறு வாசிப்பில் வாசித்தவனுக்கே இன்னொரு முகம் காட்டும். அது அவரவருடைய வாழ்வனுபங்கள், தேடல்களைப் பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும். இரண்டாவதாக, பரவலான வாசிப்பும் தேடலும், கவிதையில் லயித்தலும் உள்ளவர்களுக்கு இயல்பாக சாத்தியப்படும்.
“கவிதை இரசனையின் மூன்று வழிமுறைகள். ஒன்று அதை வாழ்வுடன் பிணைத்தல். இரண்டு அதன் சொல்லழகை இரசித்தல். மூன்று அதை கவிதையெனும் பெரும்பரப்பில் வைத்து அறிதல். வாழ்வுடன் பிணைத்தல் என்பது கவிதையை வைத்து வாழ்க்கையை விரித்துரைப்பதாக ஆகிவிடலாகாது. கவிதையை வாழ்வின் கூர்முனை எங்கு தொடுகிறதோ அங்கு தொட்டு நிறுத்தி விட வேண்டும் ” எனும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கூற்றை நினைவு கூறுகிறேன்.
என்னளவில், வாழ்வின் அனுபவங்களின் தொடர்புடைய உணர்வுகளை இருபது கவிஞர்களின் தெரிவு மிக்க சில கவிதைகளைக் கொண்டு, கவிதை வெளியின் மாற்றமடைந்து வரும் போக்கினையும் உள்ளடக்கி, அதன் மாய சன்னத ஆடலை கவிதை ஆர்வம் கொண்ட இளம் படைப்பாளிக்கு அறிமுகப்படுத்துகிறது. தொடர் பயணத்திலுள்ள சக கவிஞர்களுக்கும் கவிதைகள் குறித்த இன்னொரு பார்வையையும் அறிய வாய்ப்பு தரும் நூலாக இது அமையும் என கருதுகிறேன்.
இந்த நூலினை, தேநீர் பதிப்பகம் நேர்த்தியான வடிவமைப்பில் சிறப்பாக வெளியிட்டுள்ளது. முகப்பு அட்டையில் உள்ள ஒவியர் ஆலிவர் ஜென் அவர்களின் ஒவியம் கூடுதல் சிறப்பு.
- மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்)
ஆசிரியர் : இரா.கவியரசு
வெளியீடு : தேநீர் பதிப்பகம்.
வெளியான ஆண்டு : 2022
விலை : ₹ 200
நூலைப் பெற : + 91 9080 90600.