cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 விமர்சனம்

லிங்க விரல் கவிதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம்


மனசின் தாழ்வாரத்தின் ஓர் நிச்சலனப் பொழுதில் படித்த யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள “லிங்க விரல் கவிதைத் தொகுப்பிலிருந்து என்னுள் நகர்ந்த இரண்டு வரிகளின் ஊடே லயித்து வாசிப்பின் சுகத்தோடு கற்றலையும் தந்த கவிஞர் வேல் கண்ணன் அவர்களின் படைப்புகள் குறித்து சில பத்திகளை வாசகனின் பார்வைக்காகவும் என் விருப்பமான ஒரு கால உறைவிடலுக்காகவும் இங்கு எழுதுகிறேன்.

//நகரும் நத்தைக் கொம்பின் மீதான பனித்துளிக்குள் பால் வீதி//

// எல்லோருக்குமான உணவை எப்படித் தயாரிப்பது என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் நெரூதா , உங்களின் ரொட்டிகளைப் போல..//

என்ற இந்த வரிகள் ஒர் புள்ளியில் நம்மை படைப்புகள் குறித்து பிறரிடமும் இக்கவிதைகளை பேச வைக்கின்றன.

சொற்களைக் கொண்டு தான் எந்த மொழிக்கும் உயிர்ப்பு. “முழுமையற்ற” எனும் தலைப்பில் // நெளிந்த சொற்களுக்குள் // என்ற வார்த்தை பிரயோகம் பொருட்செறிவானது. பொதுவாக தொடர்ந்த பயன்பாட்டால் சலித்துவிடக் கூடிய சில சொற்கள் உண்டு. அதனை, இக்கவிதையில் “அடி வாங்கிய சொற்கள்” என்பதை பொருள் கொள்கிறேன். இவ்வார்த்தை ‘இம்’ போட வைப்பதுடன், கவிதை – கவிஞர்கள் – விமர்சகர்கள் – எனும் வெளியில் சில சொற் கூடார மனிதர்களின் விமர்சன வம்பாடலை ஒலிக்கும் “தலைப்பிரட்டையை வைத்து என்ன செய்வது,மீன் எங்கே?” எனும் கேள்வியை இரக்கமற்ற கேள்வி என்கிறது. இது சரியான ஆதங்க தொனியாகவே ஒலிக்கிறது.

” செக்கச் சிவந்த கருநீலம் ..” என்று ஆரம்பிக்கும் கடல் குறித்த கவிதை வரிகளால் கவிஞர் தன் மெய்நிலையில் புகுந்து, எழில் தூவி தத்துவத்தில் அலையற்று நிற்க வைத்து விடுகிறார்.

கடல் எதிரே உடல் தழுவும் உப்புக் கரிப்பில் நின்று , தன்னைத் தீண்டும் அணியாத சேலை மடிக்கும் அலைகளின் அசையும் விளிம்புகளில் பறிக்கவியலா வெண் பூக்கள் நிலையினை
// கடல் வானம்// இணை கோட்டைத் // தேடும் கண்களுக்கு // ஒரு விள்ளல் போதும் // நிலையாய் நிற்க… // என கிளாசிக்காக சொல்லி தத்துவ பீடத்தில் அமர்ந்து விடுகிறார்.

தொன்மத்தின் ருசியை எல்லைச் சாமிகள் பற்றிய கதைகளில் சுவைத்திருக்கிறோம். வேல் கண்ணனின் லிங்க விரல் தொகுப்பில் மொழி, இனம், சாதி ஆகியவற்றை கடந்த கண் எதிரே உலவும் எல்லைச் சாமிகளான இராணுவ வீரர்களின் மனசின் இன்னொரு புறத்தை தரிசிக்க வைத்த ” எல்லை வீரன் ” கவிதைகள் Master Piece.

// பாறைகளின் இடையே // துளிர்த்த // பச்சை நடு நரம்பில் // துளியூண்டு பூ // எனை // அசைவற்று நிற்கச் செய்தது.//

” வை ‘னோடு
கொஞ்சம் உணவிருக்கிறது
போதவில்லை என்றால்
நேற்றிரவு இறந்து போன நண்பனின்
வைன் எடுத்துக் கொள்ளலாம்.”

” இறந்தவனின் இறுதிக் குறிப்பு :

‘ என் உடல் கண்டைந்தால்
ஆடையின்றி ஆயுதங்களின்றிப்
புதையுங்கள்
அல்லது
நரிகளுக்கு வீசி எறியுங்கள் “.

இவ்வரிகள் நம்மை உலுக்கி எடுக்கின்றன.

” ஒரு முறையேனும் ஒசை எழுப்பாமல் இரவுக்குள் நுழைந்து விட வேண்டும் இரவு நுழைவது போல்” எனும் கவிஞரின் வரிகளுக்கு ஒத்திசைவாக பல கவிதைகள் நமக்குள் நுழைந்து விடுகிறது.

எளிய வகையில் ஈர்த்து மனம் விடாது அசை போடும் குட்டிக் கவிதைகளும் இதில் உள்ளன அவற்றிலிருந்து எனக்கு பிடித்தமான சில :

” எதிரிக்கு முகம்
என் நிலத்திற்கு புறம்
என்பது
விந்தையானது .”

” வெள்ளை வெளேரெனத்
தியான அறை
கிடக்கிறது
ஒரு சிலந்தி”

” மேற்சுவர்
இல்லாத வீட்டில்
கொல்லைப்புறம்
முடிந்தும் முடியாமலும்
தொடங்கி விடுகிறது
வாசல் “

சுவைகளில் துவர்ப்புச் சுவை அலாதியானது. நாக்குடன் நெடு நேரம் தங்க கூடியது அது. அச்சுவை நல்லதும் கூட. அதனைப் போல,பல்வேறு சுவைகளுடன் தனித்த வகையிலான நடையினைக் கொண்டுள்ளது கவிஞர் வேல் கண்ணன் அவர்களின் கவிதைகள்.


நூல் விபரம்
  • லிங்க விரல்

ஆசிரியர் : வேல்கண்ணன்

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்

வெளியான ஆண்டு :  2023

விலை : ₹ 110

நூலைப் பெற :  90424 61472

About the author

இரா.மதிபாலா

இரா.மதிபாலா

சென்னையைச் சார்ந்த இவரின் இயற்பெயர் பாலாஜி. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் சார்புச் செயலாளராக பணியாற்றிவர்.
இவரின் முதலாவது கவிதை 1984 -இல் "தீபம்" இலக்கிய இதழில் வெளியானது. 40 ஆண்டுகளாக பெரும் விருப்பத்தோடு கவிதைத்தளத்தில் இயங்கி வருகிறார்.இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

நெருடலும் வருடலும் (1988),
84 கவிதைகள் ( 2018),
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில் ( 2020)]

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website