எழுத்து (‘ஸீரோ டிகிரி’) பதிப்பக வெளியீடாக வெளியாகியிருக்கும் ‘கார்த்திகா முகுந்த்’ அவர்களின் ‘துமி’, கவிதைப் பிரதி குறித்த ஒரு மதிப்புரை.
0.
‘துமி’ என்ற தலைப்பு ஏற்படுத்திய வசீகரம், அந்தச் சொல்லுக்கு எனக்கு முதலில் அர்த்தம் தெரியாததால் மட்டுமல்ல, அதனூடே கூடி ஓடி வரும் சந்த நயமும் தாள லயமும் தரும் புதிய உணர்வால் கூட இருக்கலாம் என்று தான் எனக்கு இந்த புத்தகத்தைப் பார்த்தபோது தோன்றியது. எவ்வளவு யோசித்தும் என் நினைவின் அடுக்குகளில் அந்த வார்த்தை இல்லை. எனக்கு ‘உமி’ தான் தெரியும், இது என்ன ‘துமி’ எனத் தேடினால், ‘மழைத் துளி’ என்ற அர்த்தம் கிடைத்தது. ‘அட’, என புத்தகத்தைக் கையிலெடுத்தேன். சிறிய புத்தகம் அதுவும் கவிதை புத்தகம் என்பதால் இந்த வருடம் இதுவரை என் புத்தக வாசிப்பு எண்ணிக்கையில் ஒரு புத்தகமாவது ஏறி 0-விலிருந்து 1-க்குத் தாவி, இலக்கிய உலகில் பலரும் இடும் ‘நான் இந்த வருடம் படித்த புத்தகங்கள் பட்டியல்’ போல நாமும் இடத் துவங்கலாம் என்று தன்னம்பிக்கை பொங்க வாசிக்கத் தொடங்கினேன். இதுவரை இந்த ஆசிரியரின் எந்த ஒரு வரியையும் நான் வாசித்ததில்லை. புத்தகத்தின் பின்னட்டை வாசகங்களை வாசித்தபோது எனக்குத் தோன்றியது – ‘இவை ‘evocative’ (அகத்தூண்டல்) வகைக் கவிதைகளாக இருக்கக் கூடும்’ என. வாசிப்பதும் சுலபம் வர்ணிப்பதும் சுலபம் என தான் நினைத்தேன்.
1.
‘சின்னப் பிள்ளையார்’ என்ற முதல் கவிதையே சட்டென்று தன் எளிமையின் மந்திரத்தால் நம் அழகுணர்வின் ஆவியைத் தட்டி எழுப்பிவிடுகிறது. என்ன, // ‘என் மீது மெல்ல ஒரு மலரையுதிர்க்கும் / இந்த அரசமரம்கூட நாளுக்கொரு கோலம் தோற்றுகிறது…!’ // என்ற வரிகளோடு கவிதை முடிந்திருக்க வேண்டும். மேலும் இரு வரிகள் அர்த்தப் புலம்பலாகத் தோன்றி அழகியலை ஆத்திகம் நாத்திகம் எனப் பதம் பார்க்கும் தோற்றத்தை நமக்குத் தேவையில்லாமல் தருகின்றன. அந்தக் கடைசி இரண்டு வரிகளில் வரவழைக்கப்படும் ‘ஆசிரியர் கூற்று’, அந்த உதிர்ந்த் மலர் போல போகட்டும் என மன்னித்தால் நமக்குக் கிடைப்பது ஒரு அருமையான கவிதை. நமக்கு அது போதும், அது தான் போதும்.
இவ்வகைக் கவிதைகளின் வடிவமைப்பில் சொல்ஜாலம் பொதுவாக இருக்காது அல்லது குறைவாக இருக்கும். இவை, ஒரு சிறுகதையின் உரையாடல் மொழியில் ஒரு சம்பவத்தைச் சொல்லி, அதை ஒரு ‘ஹைக்கூ’ (haiku), ‘சென்ரியூ’ (senryu), ‘தன்கா’ (tanka), ‘சிஜோ’ (sijo – korean form of haiku), ‘சொமொன்கா’ (somonka – two tankas combined), ‘சின்க்வொயின்’ (Cinquain – created by an American poet named Adelaide Crapsey, who, inspired by Japanese haiku and tanka verse, created this simple five-line poetic form), ‘லிமரிக்’ (Limerick – a funny five line poem which is rhyming and known for it’s wit and sly humor), ‘சொனெட்’ (sonnet – again a very strict form of rhyme based poem that says great things in a simpler form) போன்ற பிற கவிதை வடிவங்கள் அளிக்கும் ஒரு அருமைத் தருணத்தின் அற்புத தரிசனமாக உருமாற்றும் எளிமையின் வல்லமையை அளிக்க வல்லவை. இன்னும் ‘ஹைகா’ (haiga), ‘ச்சொகா’ (choka), ‘கட்டௌடா’ (katauta), ‘செடொகா’ (sedoka – multiple katautas), ‘ரெங்கா’ (renga’) எனப் பலவகைமைகளில், அவற்றின் தளை இலக்கணம் (யாப்பிலக்கணம்) நீக்கிய புதுக்கவிதையாக இவ்வகைக் கவிதைகள் இயங்குவதை நான் கவனத்திருக்கிறேன்.
இத்தொகுப்பின் பெரும்பான்மைக் கவிதைகளும் இப்படித் தான் இருக்கின்றன. ஆனால் இந்த நடையில் பழகி வரும் கவிதைகளின் ஒரு சாபம், இவை சில சமயங்களில் அசட்டுத்தனமாக அமைந்துவிடும் – ‘இதையெல்லாமா ரசிப்பார்கள்’ என்ற அறிவின் பார்வையில் நேரும் அசட்டுத்தனமல்ல அது. புத்துணர்வில்லாத, புதுப்பொலிவில்லாத சலிப்பு ஏற்படுத்தும் சம்பவம் ஒன்றினை மீண்டும் தேய்வழக்காக ஒலித்துக் கூறுவதால் வரும் அலுப்பு. அதாவது இவ்வகைக் கவிதைகளின் மிகப் பெரிய பலமான ‘POV’ (Point of View) / ‘perspective’) – பார்வைக் கோணம், ‘dimension’ (பரிணாமம்) ஆகியவற்றில் எந்தப் புதுமையுமில்லாமல் பழைய பல்லவியைப் பாடுவதால் வரும் வினை. இரண்டாம் கவிதையான ‘கிளிக்கூச்சல்’லிலேயே இது எனக்கு நேர்ந்தது துயரம். இருந்தும் நான் அசரவில்லை. மேலும் வாசிக்கலானேன்.
2.
ஆனால் அடுத்த கவிதையான ‘கல்லிவரும் லில்லிபுட்டும்…’ நிகழ்த்தும் மாயம் ஒரு புதிய தரிசனம். பிறகு வரும் ‘புதிர்பாதை’ கவிதை கூட, ‘அட’ இந்த மாதிரிப் புதிர்களும் குறுக்கெழுத்துச் ‘சுடோக்கு’ (sudoku) சொர்கப் பாதைகளும் தானே நமக்குத் தேவை என்ற உணர்வினை அளித்தது. அதே போலத் தான் அடுத்த கவிதையான ‘ஒரு கை அரிசி’யும் – ‘செம’ (செம்மை என்பதன் பேச்சுவழக்கு) என்று சொல்லத் தோன்றியது.
‘சிக்கல் தேவதை’ தரும் தத்துவப் போக்கு தரிசனம் கூட நமை மிக எளிதாகக் கவர்கிறது.
‘கன்றுக்குட்டி’ கவிதை ‘ஆட்டிசம்’ தாக்குண்ட ஒரு நாற்பது வயதுப் பெண் குழந்தை பற்றிப் பேசுகிறதோ எனும் குழப்பமே நம் கற்பனையின் துர்சமர் அமைப்பில் அந்தக் கவிதையின் சம்பவத்தை ஒரு கனவாகக் கொணர வாய்ப்புள்ளது. ஆனால் இங்கே இறுதிவரை ‘ஆசிரியர் கூற்று’ இல்லாthaது தான் எவ்வளவு ஆசுவாசம் என நினக்கும் பொழுதே வரும் அந்தக் கடைசி வரி ‘தாய்ப்பசுவாகிறேன் நான்’ என்பதில் உள்ள author identification என்பது reader identificationஐ எவ்வளவு பாதிக்கிறது என உணர்ந்தால் கவிஞர் அந்த வரியைச் சேர்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.
‘ஈர்க்குச்சியும் தங்கரளியும்’ கவிதை எல்லாம் அது என்ன – ‘வேற லெவல்’ – காலக்கூத்தும், காட்சிச்சிதறலும், சொற்பாடலுமாக சம்பவம் செய்யும் வைபவம் – இந்த ஒரு கவிதைக்கே இந்த தொகுப்பைக் கொண்டாடலாம்.
‘அறிதல்’ கவிதை வழக்கமான ஐந்தறிவு ஆறறிவு உயர்திணை அஃறிணை ஆராவரம்.
‘கையடக்க வானம்’ திருமணமானவர்களுக்கு – அவர் ஆணோ பெண்ணோ ஒரு குறுநகையை வரவழைக்கும் – எனக்கு வந்தது – உங்களுக்கு எப்படியோ.
3.
‘தாயம்’ கவிதை தரும் ‘சஸ்பென்ஸ்’ (suspense) உணர்வு ‘அறிந்தும் அறியாமலும்’ என வாழும் நம் ‘social enigma’ குறித்து அருமையாகப் பேசுகிறது.
‘காரணம்’ கவிதை மிகச் சாதாரணம்.
இன்னொன்றும் சொல்ல வேண்டும் – இவ்வகைக் கவிதைகள் பெரும்பாலும் ‘first person narrative’இல் இயங்கும். இத்தொகுப்பின் பெருன்பான்மைக் கவிதைகள் அப்படித் தான். அது ஏன் என வாசகர்களுக்குத் தெரியும் என்பதால் நான் அதை இங்கே விளக்கப் போவதில்லை.
‘ம்மாணிரப’ (இதற்கு ‘அர்த்தம் அர்த்தமிழக்கும் அழகியலின் அழகியல்’ என நான் புரிந்து கொள்கிறேன்) கவிதையில் …
“மஞ்சளொளியில்
மரநிழல்களூடே
பச்சை வண்ணத்துப்பூச்சியைப்
பின் தொடர்ந்து படபடக்கிறா.. … .”
“சூரியனே பச்சையே உயிரென்னும்
அற்புதம் காண
அடர்வனத்தினுள்
குரங்குக் குட்டியாகித்
தவ்வித் …..”
வரும் அந்த ‘டாட் டாட் டாட்’ எழுத்துகளையும் சொற்களையும் தவிர்த்து வார்த்திருந்தால் என்ன அற்புதம் நிகழ்ந்திருக்கும் தெரியுமா …
இவ்வகைக் கவிதைகளின் ஒரு சிறு குறை என்னவெனில் ‘multi layered text’ஐ (பல அடுக்குகள் கொண்ட பிரதி) இவற்றில் சாத்தியப்படுத்துவது சற்று கடினம். ஆனால், ‘அம்மா பிறக்கிறாள்’ என்ற ‘தாய் – மகள் – பணிவிடை’ கவிதையில் எனக்கு இரண்டு அடுக்குகள் தெரிந்தன.
4.
தொகுப்பின் முதற்பகுதியில் வரும் கவிதைகளில் பெரும்பான்மையாகத் தென்படுவது ‘தன் குழந்தையின் எளிய செயல்களைக் கொண்டாடும் ஒரு தாயின் அரிய தரிசனப் பார்வைகள்’.
‘பரிமாணம்’ கவிதை எந்தப் புதுப்பார்வையிலும் எழுதப்படாமல் எண்ணிக்கைக்காகச் சேர்க்கப்பட்டது போல வெறுமனே நிற்கிறது. ‘ஆசிரியர் கூற்று’ வேறு வந்து நமக்கு சலிப்பு ஏற்படுத்துகிறது.
‘பைத்திய விடுதி’ சென்ற கவிதையின் தொடர்ச்சி போலத் தெரிந்தாலும் ‘பரவாயில்லை’ ரகம் ஆனாலும் எந்த அசாதாரண (unusual) பார்வையும் அற்றது.
‘வா … போகலாம்’ கவிதை மீண்டும் ஒரு அருமை – மாய-யதார்த்தம் இப்படிக் கூட எளிமையின் அழகியலாக இயங்கும் தான் போல.
‘தன்னந்த்தனிமை’ கவிதை ‘ஓ.கே.’ ரகம்.
‘ஆட்டுக்குட்டியின் மலை’ கவிதையின் எளிய கற்பனையையும் ஜீவகாருண்யத்தையும் ரசிக்க முடிகிறது.
‘அ.மு. அ.பி’ – கவிதையா என்று கூட எனக்குத் தெரியவில்லை.
‘ஊரடங்கு’ கவிதை அருமை ஆனால் வழக்கம் போல அந்த இறுதி இரண்டு வரி ‘க்ளைமேக்ஸ்’ ‘நீதி போதனை’ இல்லமலிருந்தால்.
‘நானென்னும் ஜிக்ஸா புதிர்’ கவிதை ‘பலே’ – மிக அருமை. மாய-யதார்த்தத்தின் துணை கொண்டு கவிதாரூபத்தில் நிகழ்த்தப்படும் ஒரு தத்துவ விசாரம் மனதை வருடுகிறது.
‘சிசுவின் உலகு’ மிகவும் மாமூலான ஒரு நெகிழ்ச்சிக் கடத்தலை முயற்சித்துப் பார்க்கிறது.
‘பூமி இன்னும் சுற்றுகிறது’ கவிதை ஒரு அழகிய சூறாவளி.
5.
நான் மிகவும் எதிர்பார்த்தத் தலைப்புக் கவிதையான ‘’துமி’ கவிதை மிக அருமையாக ஆரம்பித்துச் சென்று அது என்ன பிரச்சனையோ தெரியவில்லை அந்தக் கடைசி இரண்டு வரிகளில் தடம் புரள்கிறது –
“அலைபுரண்டு இரைகிற சமுத்திரம்
அப்போது கொஞ்சம் அமைதி கொள்கிறது.”
என்ற வரிகளை
“அலைபுரண்டு இரைகிற சமுத்திரம்
மேலும் ஒரு அலையைத் திரட்டிக் கொள்கிறது.”
என்று மாற்றிக் கொண்டு நான் இதை ரசித்துக் கொள்கிறேன்.
‘என் ஊர்’ கவிதை படித்தபோது எனக்கு ஆத்மாநாமின் சில கவிதைச் சொல்லாடல்கள் நினைவிற்கு வந்தன – நல்ல கவிதை.
‘அகணிதம்’ கவிதை – அபாரம் – ஒரு கவிதைத் தொகுப்புக்கு இப்படிச் சில உலகளக்கும் கவிதைகள் இருந்தால் கூட போதுமே.
‘தைய்யா தக்கா’ கவிதை – சொல்வதற்கு எதுவமில்லை.
‘சலனம்’ – நல்ல கவிதானுபம் தருகிறது.
‘வசந்தகால கான்லெஸ்*’ – கவிதை பேரின்பம் தருகிறது – ‘memories of emotions recollected in tranquillity’ (அமைதியில் மீட்டெடுக்கப்படும் உணர்வுகளின் நினைவுகள்) என்ற பதத்திற்கு மிகச் சரியான உதாரணம். சத்தியமாகச் சொலிறேன், இது, ‘வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்’ (William Wordsworth), ‘ராபர்ட் கெல்லி’ (Robert Kelly) அல்லது ‘John Keats’ (ஜான் கீட்ஸ்) ஆகியோரின் ஏதோ ஒரு நல்ல கவிதையின் மொழிபெயர்ப்பு போலத் தான் முதலில் யாருக்கும் இதைப் படிக்கும் போது உடனடியாகத் தோன்றும் – ‘கார்த்திகா’வின் கையெழுத்து மட்டும் இக்கவிதையின் மடியில் இல்லாமல் இருந்தால். ‘கான்லெஸ்’ (Gaunless) என்பது ‘ஆக்லேண்ட்’ (West Auckland) பகுதியில் உள்ள ஒரு நதியாம் – அது நதியில்லை ஆறு – இடம் தேடித் தேடி அலுத்துப் போய் பிறகு ‘ஒரு வழியாய்’ அறிந்து கொண்டேன்.
6.
‘சைக்கிளேறும் சங்கிலிபூதத்தார்’ – ஒரு குறுங்கதையின் தெறிப்பைக் காட்டுகிறது.
‘என் சிற்றில் சூரியன்’ மற்றுமொரு உலகளக்கும் கவிதை. ‘உலகளக்கும் கவிதை’ என எதை நான் சொல்லுவேன் என்றால் – என் வாசிப்பனுபவத்தில் சர்வதேசத் தரம் வாய்ந்த ஒன்றையே – எந்த மொழியில் பெயர்த்தாலும் அந்த மொழியின் வாசகருக்கு அக்கவிதை அவர்களின் அருமை பெருமையாகிவிடும் அற்புதம் நிகழ்த்த வல்ல ஒன்று.
‘சலனம்’ கவிதையில் தொடங்கி அதை அடுத்து வரும் பெரும்பான்மையான கவிதைகளில் நீளமும், ஆழமும், அகலமும், கூதல் தன்மையும் கூடிக் கொண்டே போகிறது. சரி – அது என்ன ‘கூதல் தன்மை’ – இன்பமான குளிர் காய்ச்சல் தர வல்லக் கவிதைகள் எனலாம் – தத்துவம், அழகியல், மிகையின் எளிமை, அரூபத்தின் சொரூபம், அதீதத்தின் சாஸ்வதம் – ஆகியன பொருந்தி வருபவை. ‘கதவு’ கவிதை படித்தால் ‘அதீதத்தின் சாஸ்வதம்’ என நான் எதைச் சொல்கிறேன் என விளங்கலாம். மேலும் ‘சலனம்’ கவிதை தொடங்கி அடுத்தடுத்து வரும் கவிதைகள் அனைத்துமே மிக அருமையே.
‘என் கிளியின் உலகம்’ – இப்படியாக அமுங்கிய அதிர்வுகள் பொங்க முடிகிறது …
“மந்திர தந்திர தேவதைக் கதைகளில்
நம்பிக்கையற்றோரே …
என் கிளி ஒளித்து வைத்திருப்பதைத்
தேரும் துணிவிருந்தால்,
எங்கள் மனவுலகம் உங்களுக்குத் திறந்திருக்கிறது
இப்போது.”
‘சிலந்தி வலையில் சிக்கிய கிளி’ என்ற என் எங்கேயும் ஏற்றுக் கொள்ளப்படாத என் சிறிய எளிய கவிதை என் நினைவிற்கு வந்த என்னைத் தொந்தரவு செய்கிறது.
‘கிண்ட்ஸூகி*யும் ஒரு பாண்டமும்’ கவிதையை நாம் எப்படியும் deconstruct செய்து கொள்ளும் அற்புதம் கொள்ளும் சாவிலிருந்து மீளும் ‘ஃபீனிக்ஸ்’ (phoenix) பறவை – இந்த மாதிரியான ‘unusualness’ தான் ‘புத்தும் புதுக் காலை’களை நமக்கு உருவாக்கித் தந்து கொண்டேயிருக்கும். ‘கிண்ட்ஸூகி’ (Kintsugi – is the Japanese art of repairing broken pottery by mending the areas of breakage with lacquer dusted or mixed with powdered gold, silver, or platinum)
7.
‘தோழிப் பறவை’ – ஒரு கட்டத்திற்கு மேல் ‘கார்த்திகா’வின் கவிதைகளை dissection, digestion என்றெல்லாம் கூட critical-ஆக யோசிக்க முடியாமல், அவை தரும் ultimate pleasure of the textக்குக்காக மட்டும் வாசிக்கும்படி நமைத் தொடர்ந்து ஒரு வார்ப்பில் கொண்டு போய் விட்டு விடுகிறது. விமர்சனம் ரசனையாக உருமாறிய பின் எல்லாம் இன்பமயம் தான்.
‘இண்ட்ரோவெர்ட்டுகளின் கற்காலம்’ கவிதை நியாயமாக எனக்குப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் தலைப்பே மிகத் தவறு – ‘இண்ட்ரோவெர்ட்டுகளின் கலிகாலம்’, ‘இண்ட்ரோவெர்ட்டுகளின் எதிர்காலம்’, ‘இண்ட்ரோவெர்ட்டுகளின் காலம்’, ‘இண்ட்ரோவெர்ட்டுகளின் புதிர்காலம்’, ‘இண்ட்ரோவெர்ட்டுகளின் கதிர்காலம்’, ‘இண்ட்ரோவெர்ட்டுகளின் சதிர்காலம்’, ‘இண்ட்ரோவெர்ட்டுகளின் புதிர்காலம்’, ‘இண்ட்ரோவெர்ட்டுகளின் இன்காலம்’ அல்லது இன்னும் சிறப்பாக ‘இண்ட்ரோவெர்ட்டுகளின் சமகாலம்’ என்று ஒரு தடையை மீறியிருக்க வேண்டும் – அடுத்த தலைமுறையில் ‘இண்ட்ரோவெர்ட்டுகள்’ இருக்க மாட்டார்களா அல்லது வேண்டாமா – ‘இண்ட்ரோவெர்ட்டுகள்’ எல்லோரையும் போல என்னையும் போல தகவமைத்துக் கொள்வார்கள் (adaptability and agileness) – உண்மையை எப்படி எங்கே பேச வேண்டும் என அறிமயாமல் எல்லாவற்றையும் உணார்ச்சி மேலிடப் பீறிடலாகப் பார்க்கும் அருஞ்சொற்குப்பை இக்கவிதை – கொஞ்சமாவது ஒரு ‘இண்ட்ரோவெர்ட்டான’ எனக்கே ‘கனெக்ட்’ ஆக வேண்டாமா.
‘ஒரு மஞ்சரித்தண்டின் கடமைகள்’ கவிதையோடு இத்தொகுப்பை வாசிப்பதை நிறுத்தி விடலாம் – இவ்வளவு ‘pleasure of text’ யாருக்கும் தாங்காது.
‘தாயல்லாதவள்’, ‘விலங்குப் பண்ணை’, ‘பராதி’, ‘கண்டேன் கண்டேன் கண்டேன்’ ஆகிய கவிதைகள் நம்மை மேலும் மேலும் சொக்கிப் போகவே வைக்கின்றன.
அதுமட்டுமல்லாது ‘சலனம்’ கவிதைக்குப் பின் வரும் பெரும்பான்மைக் கவிதைகள் ‘evocative’ வகைமயை மீறி மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் பல அடுக்குகள் கொண்டு பரிணமிக்கின்றன. ஒரு மாயவெளியின் அந்தரத்த்தின் அந்தகாரத்தின் மீது பட்டாசுப் பட்டொளியை பரவவிடுகின்றன.
// புன்னகையை தாராளமாகச் செலவழிப்பவள் // என்ற ‘ஜீவநதி’ கவிதையின் முதல் வரி தான் இத்தொகுப்பின் மிக முக்கிய ஆதூரம் மற்றும் ஆன்மா எனத் தோன்றுகிறது.
மேலும் எனக்கு இந்தக் கவிதை என் ‘மைனஸ் ஒன்’ தொகுப்பில் உள்ள இரண்டு கவிதைகளை நினைவூட்டியது (2002 ரெண்டாம் காதல் கவிதை, சேமித்த புன்னகைகளை பண்டமாற்றாக அல்லாமல் ஊதாரியாகச் செலவழிப்பதாக வரும் ஒரு வரி கொண்ட இன்னும் ஒரு கவிதை – கவிதையின் தலைப்பு மறந்துவிட்டது).
8.
‘இரவெனும் பறவையொன்று’ – ஒரு விண்வெளிப் பாய்சலின் புவியீர்ப்புவிசையற்று மிதக்கும் உணர்வைத் தருகிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்பதில் இருக்கும் குழந்தைமையின் அற்புத ஆணவத் தலைமைப் போக்கு அழகியலைப் பிதற்றுகிறது.
இன்னும் ஒரு அவதானிப்பு யாதெனில் இத்தொகுப்பின் பிற்பகுதியில் வார்க்கப்படும் கவிதைகளில் மிகப் புதிய சொற்கள், புதிய imagery கையாளப்படுகிறது
‘நம் சீஸா’ எனக்குத் தெரிந்தவரை ஒரு சிறந்த ‘வின்-வின்’ (win-win) கவிதை.
‘கவுண்டமணிகள் தேவை’ கவிதை inspirational poetry எனினும் – இந்த முறை அந்தக் ‘கமெடிடு’க்கு நீங்கள் வேறு விதமாகச் சிறப்பாகச் சிரிப்பீர்கள்.
பிறகு சில தலைபிடப்படாத கவிதைகள் வருகின்றன.
“மேடுகளும் பள்ளங்களுமான
புதிர்ப்பாதையில் திணறும்
ஒரு சிற்றெறும்பு.
பற்களை காட்டிச் சிரித்திக்கொண்டிருக்கிறது
தென்னம்பூ.
மரம் அனுபவம்!”
இந்தக் கவிதை ஒரு ‘ஹைக்கூ’ – ஆனால் அந்த் நிறுத்துக் குறிகளும் அந்தக் கடைசி வரியும் அவசியமா?
“கருமேகக் கட்டெறும்போன்று
மெல்ல நகர்ந்து
ஆரஞ்சு சூரிய மிட்டாயை மொய்த்துக் கரைகிறது
வலசை போன மனத்துக்குக்
காத்து கிடக்கிறது கூடு
பித்தேறுகிற மாலைக்கு
வேறு சாட்சியில்லை.”
இந்தக் கவிதைக்கு குறைந்த பட்சம் நம் சொத்தின் ஒரு பகுதியை எழுதி வைத்துவிடலாம் (என் சொத்தின் ஒரு பகுதி ஒரு ‘ருத்திராட்சம் சுழலும் விசில்’).
9.
இத்தொகுப்பின் இறுதிக் கவிதைகளான ‘எளியன 1 மற்றும் ‘எளியன 2’ ஆகியவை தான் இத்தொகுப்பின் தங்கத்தை உரசிப் பார்க்க விரும்ப்புவோர் முதலில் படிக்க வேண்டியது.
இந்த ஒரு பானைக் கவிதைத் தொகுப்புக்குப் பதமாக இந்த ஒரு சோற்றுக் கவிதையை மட்டும் இங்கே தருகிறேன்.
கண்டேன் கண்டேன் கண்டேன்
“காடுகாண் உலாவில் நான்
கற்கால மனுஷியாகிறேன்.
பசுந்துளிர் நிலவெளி
விசும்புயர் தருக்களும்
பிணையொடு கலையும்
பெடையொடு மயிலும்
மந்தியும் கடுவனும்
மற்றுள பலவும் கண்டு
மனம் கூச்சலிடும்…
‘இது என் வீடு…
இது என் வீடு…
இது என் வீடு..!’
எத்தனை கண்டபின்னும்
காதல்மடப்பிடியொடு
களிறு காணா குறையொடு
நகரம் திரும்பும் நாளும் வந்தது…
தாயைப் பிரிந்து
தனிவீடு செல்லும்
நாய்க்குட்டி போல்
நனிதுயர் பயணம்.
சிவப்புக்கு நிற்கையில்
சாலையில் பார்த்தேன்
இரண்டு மஞ்சள் யானைகள்…
எடுத்து உயர்த்தவும்
இடித்து நகர்த்தவும்
எங்களாலாகுமென்று
இரும்புத் துதிக்கை நீட்டி முழக்கும்
இயந்திர யானைகள்.
வரித்தது ஒன்றாயினும்
வசிப்பது வேறு காடென
பொறிக் கை ஆட்டிச் சொல்லிச் செல்கின்றன
களிறும் பிடியும்…
‘இது வேறு காடு…
இது வேறு காடு…
இது வேறு காடு..!’”
கவிதைகள் பிடிக்கும் அனைவரும் இத்தொகுப்பை வாங்கி வாசிக்கக் கோருகிறேன். அற்புதங்களுக்கு நான் ‘கேரண்ட்டி’. இனிமேல் கார்த்திகா முகுந்த் என்ற கையெழுத்தை எங்கே பார்த்தாலும் யோசிக்காமல் வாசிக்கப் போகிறேன்.
நூல்: துமி
நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : கார்த்திகா முகுந்த்
பதிப்பகம்: எழுத்து (‘ஸீரோ டிகிரி’)
பக்கங்கள்: 97
விலை: ₹ 120
நூலைப் பெற:
Mobile : 8925061999
E -Mail : [email protected]