கவிதையின் அதிர்வுகளை தலைப்பின் வழியே புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ கவிஞர் மதிபாலா. அத்தனை அதிர்வுகள் தாங்கிய கவிதைகளை ஒரே தளத்தில் வெவ்வேறு வகைப்பாடுகளில் எழுதிவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார்.
நினைவுக்கேணியில் தூண்டில் போடும் அவரை “மனச்சேறு” எனும் கவிதையில் கவனிக்கும் போது,
“மிடறு மிடறாய்
திரித்துப் பின்னிய மது கயிற்றில்
தேடல் வாளியை இறுக்கி
நினைவுக் கேணியில் இறக்கி
ஏற்றி ஏற்றி இறக்கி
ஓர் புணர்ச்சி பொழுதின்
முன் விளையாடல்கள் போல்
தொலைத்த காலங்களை அள்ளி அள்ளி எடுக்கிறேன்”
சேர்ந்திருந்த பொழுதுகளின் வாசத்தை என்று அழகாக அள்ளி எடுக்கும் அவருக்குத் திமிங்கலமே சிக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கவிதை முடைந்தவிதம் அருமை.
காலம் தொட்டு நகர்ந்து போன காலடிச் சுவடுகளை கையில் பொத்தி வைத்துக் கொண்டு அசைபோடுதலென்பது தேநீர் சுவைத்தலுக்குப் பின் நாக்கில் ஊறும் இன்ப அலாதி. அத்தகைய அலாதியை வௌவ்வால் மடியாய் நினைவுகள் சுரந்து
காலக்குட்டிகளிள் தாகம் தீர்த்தல், மனவுன்னி ஆகிய வார்த்தை ஜாலங்களால் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கவிஞரின் தமிழ் சுவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மனிதன் தன் ஆசையொன்றை வெளியேற்ற கிளம்பும் தருணம் கதவின் தாழ்ப்பாழ்கள் தடம் மறிப்பதை “புணர் மகுடியின் வாச இசையுண்ண” என்ற வரிகளில் ஆரம்பித்து அழகாகச் சொல்கிறார் கவிஞர்.
காதல், இயற்கை, தனிமை, நினைவுச்சுவர், பால் வேட்கைகள், என ஒவ்வொன்றையும் அவருக்கே உரித்தான பாணியில் சூசகமாக கையாண்டிருக்கிறார்.
‘புகழ்ச்சேறு’ எனும் கவிதையில்
ஆன்லைன் பாராட்டுகளில் மயங்கி கிடந்த கவிஞனுக்கு பேரானந்தம் தரை கொள்ளவில்லை. கால வெப்பத்தில் முகம் ஒழுக தொடங்கியபோதுதான் பதறி கவனித்திருக்கிறார்..
“கூடவே கேட்டிருக்கிறது
வெளிச்சத்தின் போதே உண்மையைச் சொன்ன சில வாசகர் குரல்கள்”
பாராட்டுகள் எல்லாம் ஒருவித மாயை என்று உணர்ந்ததில் முடிகிறது புகழ்ச்சேறு.. இது கவிஞரின் அனுபவத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்..
‘பெரு நகரம்’
“நெல் கலங்கள் வாயில் வாய்க்கரிசி தோப்புகளில்
நெய் பந்தங்களின் சடசடப்பு நகரங்கள் விழுங்கிய கிராமங்களை
எளிதாக குறைக்க
பெரு நகரங்கள் எனப் பெயரிட்டோம்”
என்றபடியே “தனிமனிதன்” தனக்குள் எழும் சமூக அவலத்தை (கிராமங்கள் சாலையாதல், நகரமாதலை) மின்னல் தெறிப்புகளால் அள்ளி வீசியிருக்கும் கவிஞரின் ஆத்திரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
‘இன்னொரு புறம்’
‘அதிகாரத்தின் பிடியில் தன்னிலை மாற்றப்பட்டு கிடக்கும் ஒருவன்
ஓய்வு பெறுதலை அழகாக உதிர்த்திருக்கிறார் ஓர் “அலுவலராய்”…’
புறமுகம், உள்வெளி, இன்னொரு புறம் என்ற கவிதைகளை எழுதி ஒருன்மைக் கவிதைகளுக்கும் என்னிடம் பஞ்சமில்லை என்று உணர்த்தியிருக்கிறார்.
மின்மினி மரம், குதிரையாட்டம், நீலநிறப்பொய், மூன்றாம் குரல் இப்படி பலதரப்பட்ட கவிதைகளில் சிலவற்றை குறி’ பால்’ உணர்த்தியிருக்கிறார்.
‘அப்பாவின் முகம்’ எனும் கவிதையில்
“அப்பாவின் இளமை வாசம்
அவளிடம் இன்னும் வீசுகிறது
அப்பா படத்தின் சம்பங்கி மாலை போல”
அப்பாவின் வாசம், கேட்கும் போதே உள்ளூர ஏதோ செய்கிறது.. இப்போதும் இந்த வரிகளில் நான் சிக்கித் தொலைந்திருக்கிறேன் நீங்களும் தொலைந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்.
“தனிமையில் அறைவந்த ஒற்றை இறகை
வாஞ்சையோடு பார்க்கும் முதிய கண்கள்.”
இழந்த ஏதோ ஒன்றை மீட்டெடுத்த சந்தோசத்தைத் தந்திருக்கிறது அந்த முதியவருக்கு.. சிறப்பு!
‘காலவரைவு’
தலைக் காட்டில்
நரை வயல்களிடையே
நினைவு நரிகள்
காட்சிக் காற்றில்
விழிப்பழங்கள் அசைந்தாட
தேகப்பெருந்தாளில்
அனுபவங்களின் சுருக்கெழுத்துகள்
நிறைந்தபடி அமர்ந்திருக்கும் கிழவன்
என்னைப் பேச்சுத்துணைக்கு அழைக்க
அவரின் முன்னொரு காலப் புகைப்படத்துடன் போயிருந்தேன்
பேசி முடித்து நான் திரும்புகையில்
என் கிழ உருவினை தன் மனதில் கற்பனையாய் வரைந்து சிரித்திருக்கக்கூடும்
அக்கிழவன்”
“தலைக்காடு, நரைவயல், நினைவு நரி” என்று பல உருவகங்களை உள்நிறைத்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி தன்னையும் உள்நுழைத்த விதம் பேரழகு.
“புணரும் கனவில்
ஓசையின்றி அழுகை வீழ்கிறது.
மண் துகள்களுக்கு இடையே
பூத்தூறல்போல”
சூசகமான வரிகளால் தனிமனிதனின் சந்தோச நிமிடங்கள் பூப்பதை பூத்தூறல்போல தூவியுள்ள விதம் அருமை
“விளம்பரம்
கடவுளுக்கு கூட.
ஓர் ஆள் வேண்டி இருக்கிறது
இவர் கடவுள் என்று பிறரிடம் சொல்ல..”“கோயில் நடை சாத்தப்பட்டதும்
கடவுள் அமர்ந்தார்
ரிலாக்ஸ்டாக..”
என்ற வரிகள் மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பதை உணர்த்திக் செல்கின்றன
‘மன வாசனை’ ஆகா, சிறப்பான கவிதை
” மனசெல்லாம் ஆண்வாசம்
வெளிப்படையாக சொன்னால்
வேறுவிதமாக போகும்
சொல்லாதவரை பிறர் நாசி மனவாசனையை நுகரவா முடியும்?”
ஈர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரும் அவர்கள் மனவாசனையை நுகரவா முடியும்??????
“சகஜமாகச்
சலித்தலே போதையாகிவிட கூடாததென பயமேற்படும்”
கவிதையில் கவிஞரின் பயம் அனைவரும் ஏறறுக்கொள்ளக் கூடியதே.
சுவைத்தல், பொருத்துக அல்லது பொருந்துக, தவறு எனப்படுவது யாதெனில் ஆகிய கவிதைகள் கவிஞரின் அருமையான கால வட்டத்தின் அனுபவமென்றே நினைக்கத் தோன்றுகிறது..
கவிதை தலைப்புகளைத் தேர்ந்தெடுத்த பாங்கு மிகச்சிறப்பு, திகட்டாத குறைந்த அளவிலான கவிதைகளை மட்டும் வைத்திருப்பது இன்னும் சிறப்பு.
சில நினைவுகளுக்குச் சம்பந்தமில்லாத கவிதைகள் ஒன்றிரண்டை மட்டும் நீக்கி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது மற்றபடி , எளிய நடை, கடைசி வரிகளில் மின்னல் தெறிப்பு என கவிதைப்புத்தகம் முழுவதும் நினைவுகளால் நிரம்பி வழிகிறது.
மொத்தத்தில், நினைவுகளால் அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்..!
- அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : இரா.மதிபாலா
பதிப்பகம்: தேநீர் பதிப்பகம்
பக்கங்கள்: 72
விலை: ₹ 80