நீங்கள் வளைந்து நெளிந்து ஓடும் ஆற்றை என்றாவது பார்த்திருக்கிறீர்களா? அதில் நிதானமாய் நின்று பாயும் நீரைக் கண்ணுற்றிருக்கிறீர்களா? அதன் ஊட்டத்தில் செழித்திருக்கும் கரையோரத் தாவரங்களை? ஆற்றோர மரங்களை? இருளும் ஒளியும் கூடும் வேளையில் அதில் குளிக்க வரும் பெண்களை? இதையெல்லாம் கண்டும் காணாது மீனவன் வருகையை நீருக்கு வெளியில் நோட்டம்விடத் தாவி நீந்தும் மீன்களை? அதோ அங்குத் தெரிகிறது தங்க மீனெனச் சுட்டிக் காட்டும் பிஞ்சு வெண்டையை ஒத்த விரல்களை? பார்த்திருந்தால் உங்கள் நினைவுகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இக்கவிதைகள் உங்கள் மனதைக் கொத்திப் பறக்கும் விரல் பறவையாக மாறும் வகையினம்.
ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு விதமான உணர்வுகளைக் கட்டி இழுத்து மனதின் கரையில் கிடத்திவிட்டு ஆற அமர அவை உரைக்கும் வரை காத்திருக்கின்றன கவிஞரின் சொற்கள். எல்லாம் தினமும் நம்மைச்சுற்றி அரங்கேறும் சங்கதிகள் தான் என்றாலும் சொற்கள் உணர்வுகளைத் தூண்டிலிட்டு மனத்தைப் பிடித்து எடுத்துச்செல்லக் கூடுபவை. கவிதைகளில் அழகு கூடும் சொற்களைப் பக்குவப்படுத்தி ஒவ்வொன்றாய் எடுத்து மனதிற்கு ஊட்டி விடுகிறார் கவிஞர்.
இயல்பாக நடைபெறும் ஒன்றின்மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிச்சொல்வதைத் தமிழ் இலக்கணம் தற்குறிப்பேற்ற அணி என்று வகுக்கிறது. இத்தொகுப்பில் இவ்வகை கவிதைகள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன.
குளியல் என்று தலைப்பிட்ட கவிதையில் மழையில் குளிக்க விடாத தாய்க்குப் பயந்து, “விரலுக்கு மட்டும் குளித்துக்கொள்ளும் குழந்தையாய்” நாமும் இருந்திருக்கக்கூடும்.
“கூரையிலிருந்து சீராக வடியும் மழைநீர் கயிறாவதும் அந்த மழைச்சரடைப் பற்றியேற முனைந்த மல்லிக்கொடியும்” அழகாக உவமை நயத்துடன் நம் வாசலிலும் அது இருக்கிறதா எனத் தேடவைத்துவிடுகிறது.
இத்தொகுப்பிற்கு அணிகலனாய் அமைந்த கவிதை ஒன்று,
“மாநகர நெடுஞ்சாலையின் சிக்னலில்
நகைக்கடை பணிப்பெண்கள்
ஒன்பது பேர்
ஒருவர்பின் ஒருவராக
கைகோர்த்து சாலையைக் கடக்கிறார்கள்
ஜுவல்லரியின் வெளிச்சத்திலிருந்து
தப்பித்த பிரம்மாண்டமான கழுத்தணியொன்று
நகர்வது போலிருந்தது
நடுவில் சென்றவள்
கூந்தல் பறக்க
எதையோ சொல்லிச் சிரித்தாள்
அந்நகைக்கு அவள் டாலராக இருக்கக்கூடும்”
மேற்கண்ட கவிதையில் ஆங்கிலச் சொற்களின் பிரயோகங்கள் மிகுதியில்லாமல் இருந்திருந்தால் இக்கவிதை சிறப்பான கொண்டாட்டத்துக்குரியதாயிருந்திருக்கூடும்.
ஒரு கவிதையில் அலுவலகம் ஒன்றில்; அலுவல் கூட்டம் முடியும் வேளையில் பயன்படுத்தி மீந்தத் தேநீரை நீட்டும் கரங்களுக்கு பதில் கரங்கள் நீளாமல் அதை வாங்க மறுத்து, நிமிர்ந்து நிற்கும் மனதைப் பேசுகிறார் கவிஞர். அதன் இறுதி வரி அக்கவிதையின் பிரம்மாண்டத்தைக் காட்டுகிறது இவ்வாறு,
“சில நேரங்களில்
தேநீர் அருந்துவது மட்டுமல்ல
மறுப்பதும் ஆசுவாசம் தான்”
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல உவமைகளின் மீது குறிப்பேற்றி கற்பனைகளால் கரைகட்டும் கவிதைகள் ஏராளம் இத்தொகுப்பில். அதில் என்னை ஈர்த்த இன்னொன்று,
“மௌனத்தின்
இசைக்கேற்ப
நெளிந்தாடும் புகை
மேலெழும்பும்
மெழுகுவர்த்தியின் கூந்தல்”
மேல்நோக்கி விரிந்த மெழுகுவர்த்தியின் புகையை அதன் கூந்தல் என்று உருவகப்படுத்தும் இக்கவிதை மனதில் உயர்ந்து புகைகிறது.
இரட்டைக்கிளவி, எதுகை மோனைகள் உட்பட தமிழ் காட்டும் இலக்கணங்கள் அறிந்திருப்போம். வார்த்தைகளைத் திருப்பிப் போட்டுப் பார்த்து அதன் தன்மை மாறாமல் பொருள் மாறுபடக்கூடிய விளையாட்டுகளை இப்போதைய கவிஞர்கள் ஆடி பார்ப்பதைப் போல இவரும் பின்வரும் கவிதையைக் கையாண்டிருக்கிறார்.
“கரை புரண்டு
வருகிறது செந்நதி
தண்ணீரால்
கண்ணீரை துடைக்கிறான்
கண்ணீரால்
தண்ணீரை துடைக்கிறான்”
படிப்பதற்கு அழகாகவும் அதே சமயம் பொருள் உணர்ந்தால் ஆழமான வலியைக் கொடுக்கும் சொற்களையும் மாற்றி மாற்றி அமைத்து அமைந்த இக்கவிதை அலாதி.
“வாழ்ந்து முதிர்ந்த மீனுக்கு
கடல்
எத்தனை பெரிய மீன்தொட்டி
புதிதாய் பிறந்த மீன்குஞ்சுக்கு
மீன்தொட்டி
எத்தனை பெரிய கடல்”
மேற்கண்ட இக்கவிதையில் சஞ்சரிக்கும் மீன்கள்தான் மனிதர்கள். அவர்தம் வாழ்க்கைதான் அந்த மீன்தொட்டியும், கடலும். ஒப்புமை சரிவருகிறதல்லவா? கவிதைகள் நேரடியாக அனைத்தையும் போட்டு உடைக்காமல் பூடகமாகப் பேசுவதைப் புரிந்துகொள்ளும் போது அவற்றின் இனிமை இயல்பாய் தித்திக்கும். அதை இக்கவிதை தெளிவாய் செய்திருக்கிறது.
“இன்ன இனம்
இன்ன மதம்
என படித்தபிறகு
வகைபிரிக்கத்
தெரிந்து கொண்டேன்
பேருந்தில் கடக்கும்போது
பொட்டு வைக்காத சாமி
என்றே கன்னத்தில் போட்டுக் கொள்வாள்
அம்மா”
பள்ளிக்கூடம் ஒதுங்காத அம்மாக்கள் தான் எத்தனை வெள்ளந்தியானவர்கள்? ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் அவர்களின் மனத்தை நம் இலக்கியங்கள் கதைகளிலும் கவிதைகளிலும் பதுக்கி வைத்துக்கொள்கின்றன. பொட்டு வைக்காத சாமிக்கு நமஸ்காரம் போடும் இந்த அம்மாவை இந்தக் கவிதைக்குள் அடைத்துவிட்டார் கவிஞர்.
சொற்களைப் பிழையாகப் பேசுபவர்களைக் கிண்டலடித்துச் சிரிப்பது வழக்கம். சிலரது நாக்குகள் அவ்வாறு அமைந்திருக்கும். த,ச,ட எனச் சில வார்த்தைகள் மட்டும் அவர்கள் பேச நா தடைபோடும். இது சினிமாவில் நகைச்சுவையாகக் கையாளப்பட்டாலும் அதை நிஜத்தில் தாங்குபவர்களின் மனம் வேதனைப் படத்தானே செய்யும்? இங்கும் ஒருவர் இருக்கிறார். ஆயுள் முழுவதும் சுமை தூக்குபவர். அவருக்கு மூட்டை என்று வாக்கியத்தில் ‘ட்’ மட்டும் வராது. அதனால் அவர் உச்சரிப்பில் அது மூடை ஆகிவிடும்.
“மூட்டை என்பதை மூடை என்றே உரைக்கிறான்”
என்று தொடங்கும் கவிதையின் பாதியில் யார் சொல்லியும் கேட்காத அவர் நாவிற்கு அறிவுறுத்துவதை நிறுத்திவிட்டேன் என்று தன் தோல்வியைக் கவிஞன் ஒப்புக்கொள்வதாக இருக்கும்.முற்றுப்புள்ளியின் துவக்கத்தில் ஓர் உன்னதமான கருத்தை இக்கவிதைக்குத் திணித்து அதில் உணர்ச்சிகளைக் கொட்டி உயிர் கொடுத்திருக்கிறார் கவிஞர்.
“சொல்லிலாவது கனத்தைக் குறைக்க
அவன் நினைத்திருக்கலாம்”
அவனது சொற்களிலாவது கனம் குறையட்டுமே என்று படிக்கும் போதே மனதின் கனம் சற்று இறங்கியது போலிருந்தது.
சிறு வயதில் கலர் கோழிக்குஞ்சுகள் வாங்க வேண்டும் என்று ஆசை எல்லோருக்கும் இருந்திருக்கும். நாகரிக மாற்றத்தில் பழமை மறந்து போன நகர வாழ்க்கையில் இதையெல்லாம் காணுவதென்பது அரிய நிகழ்வு. இன்னும் கொஞ்சமேனும் ஈரம் ஒட்டிக்கொண்டிருக்கும் கிராமத்து மண்ணில் பழமை அதன் நினைவுகளையும் சுமந்துகொண்டு ஊர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறது. அதைப் பறைசாற்றும் இக்கவிதை நம்மையும் பால்யத்திற்கு நகர்த்திச் செல்லும்.
“தார்ச்சாலையின்
கருப்பிலிருந்து கசிந்த
வண்ணக்கலவையாக
மரநிழலில் கூடி நிற்கின்றன
கலர் கோழிக்குஞ்சுகள்”
சாலையில் இப்படி வண்ணக்கலவையாகத் தென்படும் கோழிக்குஞ்சுகள் மேலும் ஓர் உவமையில் வேடிக்கை பார்க்கும் பள்ளி மாணவர்களின் கண்களுக்கு அவை,
“சிறகு முளைத்த
ரோஜாப் பந்துகள்”
ஆகின்றன.
அவை வளர வளர நிறமிழக்கும் ரகசியத்தை விற்பனன் போலவே அப்பாவும் ரகசியமாகவே வைத்திருக்கிறார் என்பது இக்கவிதையில் அழகு கூட்டிகள்.
இக்கவிதைத் தொகுப்பில் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் இயற்கை சார் காட்சிகளும் ,உணர்வுகள் பொங்கும் மனத்தின் சாட்சிகளும் சொற்களால் நிறைந்துள்ளதால் இது நிச்சயமாகக் கொண்டாடப்படவேண்டிய தொகுப்புதான். மீன் காட்டி விரலால் மனதின் அடர்த்தியைச் சுட்டிக் காட்டி அதை இதமாய் தடவிக் கரையச்செய்யும் கவிதைகள் காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டியவை.
வாழ்த்துகள் சிவநேசன். !
நூல்: மீன் காட்டி விரல்
நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : ந.சிவநேசன்
வெளியீடு : மெளவல் பதிப்பகம்
வெளியான ஆண்டு : செப்டம்பர் 2023 (முதற்பதிப்பு)
பக்கங்கள்: 111
விலை: ₹ 120
நூலைப் பெற :
Mobile : +91 97877 09687, +91 94888 40898