cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 22 விமர்சனம்

கோவை ஆனந்தனின் “வேர்களின் உயிர்” – ஒரு பார்வை


பருவமழை பொய்க்கிறது. அறுவடை நேரத்தில் பெய்து அழிக்கிறது. விளை பொருள்களுக்கு உரிய விலை இல்லை. அனேகமாக ஒவ்வொரு முறையும் நஷ்டத்தைத்தான் சந்திக்கிறான். ஆனாலும், இத்தனைக்குப் பிறகும் விதைக்கிறானே அவனை அன்றி யாரை வணங்குவது?

இந்தக் கவிதையைப் பாருங்கள்.

பருவமழை பொய்த்தாலும்
தனக்குள்ளிருக்கும்
நம்பிக்கையால்
விதைக்கின்றான்
அவனுக்குப் பின்னும்
நிழல் தரும் விதையை

அவனுக்குப் பின்னும் நிழல் தரும் விதையை என்கிற வரி எத்தனை அழகு. எத்தனை பொருள் மிக்கது.

மரபணு விதைகளால் அழிவது பயிர்கள் மட்டுமல்ல, அதை உண்கிற மனிதர்களும் என்பதை அழுத்தமாகச் சொல்லுகிறது இந்தக் கவிதை.

மரபணு விதைகளால்
விளைந்த அத்தனையிலும்
அடிபட்டுச் சாகிறது
ஆண்மையும் பெண்மையும்

நம் வாழ்வின் பரபரப்பில் நாம் தவற விடுகிற எத்தனையோ அழகுகளைக் கவிஞர்கள் தானே நமக்குக் காட்டித் தருகிறார்கள் இதுபோல.

நீர்பாய்ச்சும் இரவினில்
டார்ச் லைட்டில் வெளிச்சமும் தீர்ந்திட
நனையும் பயிர்களுக்கு
வெளிச்சம் துளிகளைத் தூவி மேய்கிறது
மின்மினிகளும்.

தக்காளி விலை உயர்ந்து விட்டால் மொத்த நாடும் பதறுகிறது. ஆனால் அதே தக்காளியை விலை இல்லாமல் சாலையோரங்களில் வீசிச் செல்லும் பொழுது யாரும் அதைக் கண்டு கொள்வதில்லை என்கிற வேதனையைப் பேசுகிறது இந்தக் கவிதை.

தாறுமாறாய் விற்ற
தக்காளியாலேயே
தாறுமாறாய்ப் போய்விடுகிறது
பயிரிட்டவனின் வாழ்க்கையும்
வேலியோரங்களில்
கூடையோடு வீசும் போது

வளைகளில் எதிர்காலத்திற்காகச் சேமிக்கும் எலிகளைப் போலன்றி எதிர்காலம் குறித்த கவலை இல்லாமல் திரியும் விவசாயிகளைக் குறித்துப் பேசுகிறது இந்தக் கவிதை.

பொந்துகளில் மறைந்திடும்
எலிகளுக்கிருக்கும்
தொலைநோக்கு எண்ணங்கள் கூட
எதுவுமே இல்லாமல் திரிகிறேன்
விளைநிலமே கதியெனக் கிடக்கும்
விவசாயியாக

எல்லா வீடுகளிலும் சாப்பிடும் போது, அம்மா உனக்கு இருக்கிறதா? என்று நம்மில் எத்தனை பேர் கேட்டிருக்கிறோம். எல்லோரும் திருப்தியாகச் சாப்பிட்ட பின்,மிச்சமீதியைச் சாப்பிடுகிற அல்லது பட்டினி கிடக்கிற தாயைக் கண்டுகொள்ளாதவர்களின் மனசாட்சியை உலுக்குகிறது இந்தக் கவிதை.,

குடும்பமே பசியாறியது
ருசி மட்டுமே பார்த்த
அம்மாவால்

கரும்புக்கட்டு
விலகிச் செல்லும் எறும்புகள்
பூச்சிமருந்து வாசம்

எறும்புகள் கூட விரும்பாத கரும்புகளை மனிதர்கள் சாப்பிடுகிற அதிர்ஷ்டத்தை என்னவென்பது?

மனிதனின் சுயநலச் செயல்களால், சாக்கடையாக மாறிப் போன நதியை,நுங்கையும் தந்து, நுங்கு மட்டை வண்டியாகவும் மனிதர்களின் வாழ்வியலோடு இணைந்து இருந்த பனைமரத்தை, அப்பத்தாவின் பிரியமான வார்த்தைகளைப் போலச் சிவந்த மருதாணியை, கன்று ஈனும் பசுவின் பிரசவத்தை மிகவும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.கன்றின் பின்னங்கால்களின் இடையில் தேடிப் பிறந்திருப்பது கிடாரிக்கன்று என மகிழ்ந்த மனிதர்களையும் பதிவு செய்யத் தவறவில்லை அவர்.

கையில் இருந்த சொத்தான மாடும் நோயில் மறைந்து விட்டது. அதைப் புதைப்பதற்கான குழி தோண்டும் இயந்திரத்திற்கான கட்டணமும் மாடு இறந்த துக்கத்தை மேலும் ஆழமாக்குகிறது.

நோய் பரவலால்
மூச்சினை நிறுத்திய
ஒத்த மாட்டினைப்
புதைத்திட வந்த
இராட்சச எந்திரத்தின் முன்
இருந்த ஒன்றையும் பறிகொடுத்தவன்
இடிந்து விடுகிறான்
தோண்டாத குழியின்
வாடகை பேரத்தில்

ஆசையைத் துறந்த புத்தனின்
சீடனுக்கும் பேராசை
போதிமர நிழலுக்கு

இலவசப் பயண அட்டையுடன்
பயணிக்கும் கடவுள்
அம்மன் வேடத்தில் மாணவி

புத்தனின் அறை என்னும் தலைப்பில் உள்ள இது போன்ற சின்ன சின்ன கவிதைகள் வசீகரிக்கின்றன.

இந்தக் கவிதை காட்டும் அழகியலைப் பாருங்கள்.

குளக்கரை மரத்தில் குயில் பாட்டு
மரக்கிளைத் தொட்டிலில்
ஆழ்ந்த உறக்கம் குழந்தை

கற்பனை வளம் நிரம்பிய படைப்புகளோடு மட்டும் பயணிக்காமல் நிஜ வாழ்வில் சக மனிதர்களின் எதார்த்தங்களை வெளிப்படுத்தியாக வேண்டும் என்று முழு முனைப்போடு எழுதி முடிக்கப்பட்டது இத்தொகுப்பு என முன்னுரையில் சொல்லியிருப்பதை இந்தத் தொகுப்பை வாசிக்கும் யாரும் மறுக்க முடியாது.

விவசாயத்தின், விவசாயிகளின் துயர்களைக் கவிதைகளில் எத்தனையோ பேர் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட தொகுப்பு முழுவதும் விவசாயிகளின் துயர்களை வாசகனுக்கு நெருக்கமான எளிய மொழியில் உயிர்த் துடிப்புடன் பேசுகிற கவிதைகளின் தொகுப்பு.


நூல் விபரம்
  • நூல்:  வேர்களின் உயிர்
  • நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு
  • ஆசிரியர் :  கோவை ஆனந்தன்
  • வெளியீடு :  பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
  • பக்கங்கள்: 112
  • விலை: ₹ 150
  • நூலைப் பெற : Mobile : 9003677002

About the author

ஜி.சிவக்குமார்

ஜி.சிவக்குமார்

ஜி.சிவக்குமார் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். வேதியியல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது மதுரையில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

இவரின் கவிதைகளும் சிறுகதைகளும் ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம், புரவி , கொலுசு, கோடுகள் உள்ளிட்ட இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.‘புல்லாங்குழல்களை சுவைக்கும் யானை’,‘ஆத்மாநாமின் கடவுள்’ ஆகிய கவிதை தொகுப்புகள் , ‘வெம்புக்கரி’ என்ற சிறுகதை தொகுப்பு ஆகிய நூல்கள் இவரின் எழுத்தாக்கத்தில் வெளியாகி இருக்கின்றன.
‘புல்லாங்குழல்களை சுவைக்கும் யானை’ கவிதைத் தொகுப்பு தேனி - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வழங்கிய அசோகமித்திரன் நினைவு படைப்பிலக்கிய விருதையும், புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் நடத்திய போட்டியில் முதல் பரிசையும் பெற்றுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website