cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 22 விமர்சனம்

வட்டாரக் காற்றில்.. | வினையனின் “எறவானம்” நூல் குறித்தான பார்வை


மனசில் ஏறி அருவமாகக் கொந்தளிக்கும் அனுபவங்களை அவயம் காக்கும் கோழியாக உரிய சொற்கள் பொரிக்கக் காத்திருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் “சொல்ல வொண்ணுமில்ல” எனத் தான் தொடங்குவார்கள். அதேபோல தன் எளிய வாழ்க்கையின் உட்பக்கங்களை மண்வாசம் மிக்க யதார்த்த மொழியில் மனசின் உடலைத் தொட்டுப் பேசும் உணர்வினைத் தன் ‘எறவானம்’ நூலின் முன்னுரையில் கவிஞர் வினையன் நமக்குத் தருகிறார்.

நான் வாசிக்கத் தொடங்கியபோது நிலவிய சூழலில் மனசுக்கு அணுக்கமாகக் கடைசிப் பக்கத்தில் இருந்த கவிதைகளை வாசித்த என்னை, காமத்தின் முட்டுத் தெருவிற்கு இட்டுச் சென்றது.

“உரசலுக்குப் பின்பான
வழு வழுப்பில்
தீ.”

எனும் வரிகள் உடலின் உள்ளத்தின் மறைவிடப் போராட்டமாக மட்டுமல்ல சொல்ல இயலா வலிகளுக்கும் பொருந்தும் என உணரச் செய்கிறது.

வினையன் தன்னைப் பற்றிச் சொல்லும் முன்பக்க உரையில் புறப்பூச்சு இன்றி தன்னைத் தானாகவே காட்டி இருக்கிறார். ஒரு பார்வையில் இது இளவயதின் துணிச்சலாகத் தெரிகிறது. இது தேவையா? எனத் தோன்றினாலும்
நான் இதுதான் எனச் சொல்ல வந்திருப்பதை அவரின் இயல்பாக எடுத்துக் கொள்ளலாம்.

‘என் கவிதை நானே எழுதுவதில்லை; எனக்குள் இருக்கும் வேறொன்றால்தான்’ என அவரின் எழுத்துகளின் பிறப்பு மூலத்தை “என்னை விழுங்கி காலத்தைக் கக்குகிறேன்.” என்ற வரிகள் சொல்கின்றன.

அப்பாக்கள் மகன்களிடமும் அப்பாக்களிடம் மகன்களும் இரகசியமாய்த்தான் பாசம் வைப்பாங்க போல. அது எப்போதாவது தான் வெளிப்படும். அப்படி தன் தகப்பனை மனசுக்குள் சுமந்து திரியும் கவிஞனின் பகல் உறக்கத்தில், “மொவ பேரு கேட்ட அப்பன்” காணக் கிடைக்கிறான். வாசிக்கும் தருணங்களில் நாமும் கலங்கச் செய்கிறோம் .

போலி மனசில்லாத கிராம மக்களிடம் ஆத்திரம் எழுகிறபோது குலசாமியும் மாட்டிக் கொள்கிறது.
//பெய்யாத // கண்டாரோழிபய // வானமும் மாட்டாதா என்ன? // அந்த வெள்ளந்தியான இயல்பை, வேளாண்மை செழிக்காத ஆற்றாமை வறண்ட வெப்பமாய் வீசுகிறது “தண்ணியில..” கவிதையில் ( பக்-9)

எள்ளலாய், யதார்த்தமாய் அறிமுகப்படுத்தப்பட்ட மழை அருமை. கூரை வீட்டில் அது பல கதாபாத்திரங்களோடு பேசுகிறது; மழை சொட்டு சொட்டாய்.

மாறாத மரண வாசனை இழவு வீட்டின் இறுதி முகத்தைக் காண்பிக்கிறது.

‘சாய்த்துப் போட்ட பெஞ்சை நிமிர்த்துக் கழுவினாலும்’
மனத்திற்கான குறியீடாகப் பார்க்கிறேன்.
(பக் – 13)

அரசியல் போல இருக்கு இந்தக் கவிதை.

“மேக்கூரைய அடச்சாதான் நிம்மதி
அதுக்கு ரெண்டு சுருட்டும் பட்டச்சாராயமுந் தர்றேன்னு சொல்லற கத”

சாமிக்கும் வீரியத்தை ஏற்றவும், குறைக்கவும் ரூட் போதைதானா.? மக்களின் ஆற்றாமை கவிதை வரிகளில் சுழல்கிறது.

வண்ணாத்தி மகள் ஒரு கவிதையிலும், மகன் ஒரு கவிதையிலும் வந்திருப்பது வினையனின் மன விசாலத்தையும் தடையின்றி எங்கும் நுழைகிற எண்ணப் பாங்கினையும் காட்டுகிறது.

நூலிழையில் ஒட்டிய வாசம் உள் நுழைந்து கிளர்த்தும் இயல்பு சரி. இங்கு துர்நாற்றமும், ஊளைச் சளியும், அழுக்கு படலமும் சூழ் வாழ்வியலும் கவிதையாய் காட்சி தருகிறது. இறுதியாய் இரு வரிகளில் சொல்லும்,

 “பிட்டந் தட்டும் பெரியாண்டைக்கு
எப்போதாவது இப்படி எழுச்சி பெறும்”

என பெருசுகளின் காமத்தை ‘பளிச்’சென தெறிக்கிற நுண்ணியம் இரகசிய அழகு.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை இயல்பாய் வட்டார வழக்கில் சொல்லும் பாங்கில் கழுதைக் குட்டி தூக்கிக் கொஞ்சிய பாரதியாய் தெரிகிறார் வினையன்.

‘ஈச்சம்பூண்டி கிழவன் மனசு
ஆழ்வெளி நிர்வாணத் துள்ளல்.
உயிர் நீர் வாசம் படிக்கையில்.’

‘அசதியில் புரண்டயிடம்
கொழுந்தனுக்கு’ எனும் இடத்தில்
இயற்கை மலர்கிறது.

காமத்தில் லயித்து விடாது அடுத்து நாத்திக பார்வையில் பாமரன் பரமனை பதில் தர அழைக்கிறான்.

‘நீங்கள் என்னை உங்களின் அடிமை என்று நினைத்தபோது’ கவிதை ‘தீ ‘ தத்துவ யதார்த்தமாய் தகிக்கிறது.

“யாவருக்குமாய் காத்திருக்குமாம் தீ” என உணர வைத்ததோடு இடது முட்டியில் மடார்னு ரெண்டு அடி கொடுத்து “சாம்பதான் நீயிம் நானும்” எனச் சொல்லி முடித்து வைக்கிறார். வாழ்க்கையை அறிந்தவன் பிணமாகி வரும்போது, பிணமெரிப்பவன் மனசு விட்டு அவனைப் பற்றி ஏதாவது சொன்னால், அதுதான் உண்மையான அவனுடைய வாழ்க்கைக் குறிப்பு.

புதிதாய் திருமணம் முடிந்த தனியனின் நினைவுகள் தாம்பத்திய நதியின் அக்கரையில் பிழைப்பும், இக்கரையில் தவிப்பும் இரு(று)க்க இரவின் ஔியில் ஓடுகிறது பிழைப்பு. தன் நிலத்தின் குறுஞ்செய்தியைக் கவிதையாய் சொல்கிறார். நெடித்து வளரும் துயரை,

‘காத்திருப்பது தனியறையில் என.’

அதோடு முடிகிறதா தனியன்கள் கதை. இல்லை என்கிறார். தீர்த்தமாடி போதையில் மிதந்தலைந்து மனசுடன் நிர்வாணத்தில் புரளுவது, தோப்பிலும் குளிரூட்டிய அறை அனுபவம் அலாதி வெவ்வேறு தான் என நிதானப்படுத்துகிறார்.

பளிச்சென தெறிக்கிறது கிடாய்களின் ரத்தத் துளிகள்.
அப்போதும் கடவுள் ஏதும்
சொல்வதில்லை. சேரி பக்கம் தேர் போகாத போதும் கடவுள் ஏதும் கேட்பதில்லை.

“பேச்சு முடிஞ்சி சரிபாதி”. கவிதையில் வயதானவளின் வலி.

இன்னொரு கவிதையில், அழுவுது ஆயா என்பதைச் சொல்கிற அனுபவ உணர்வு,
தன் சொந்த வாழ்வில் தகப்பனிடத்தில் நின்று ஆயாவைத் தன் குடும்பத்தோடு வைத்திருப்பதில் தெரிகிறது.

‘கங்கை கொண்ட சோழபுரத்து கவிதை’யில் வினையனின் வாள் ஔிர்கிறது பிரகதீஸ்வரன் முகத்தில். அப்போதும் பதில் சொல்லாது புன்னகை சிந்துவார் மிஸ்டர் பிரகதீ.

“ஆடி” முடிஞ்சி கவிதை வரிகளில் தாம்பூலத்துப் பழம் ஆற்றாமையில் அரற்றுகிறது. அதுவும் உக்கிர தெய்வம் காளியிடம்.

பௌத்திர நோட்டீஸ் ஒட்டும் கூலியின் வாழ்வையும் கனவையும் காட்டியது. வாழ்வின் இடுக்குகளில் உள்ளவர்கள் மீதான கூரியப் பார்வையைக் காட்டுகிறது.

தொகுப்பில் சில கவிதைகள் நவீனத்தின் முதல் வரிசை. எல்லோருக்குள்ளும் உருளும் காமச் சக்கரங்கள். இதில் ஜதி சுத்தமா ஓடியிருக்கிறது. அதிலும் ‘தீ’ இன்னும் சுகம்.

எறவானத்தில் ஏறி இறங்கி எட்டிய வரை பார்த்தேன். எனக்கு வட்டார மொழி அதிகப் பழக்கமில்லை. வினையனின் அன்பும் யதார்த்த மொழியும் இந்நூலினைப் படிக்க வைத்தது.

இந்த எழுத்துகளில் வழிச்சல் காதல் இல்லை. பாலின உறுப்புகளைக் கொச்சையாய் அதிரச் சொல்லும் மேதாவித்தனம் இல்லை. வட்டார மொழியில் கிராமத்தின் இடுக்குகளில் வாழும் மனிதர்களின் வாழ்வியலை, எண்ண ஓட்டத்தைச் சிறப்பாகச் செதுக்கி இருக்கிறார் .

வட்டாரக் காற்றைச் சுவாசித்தபடியே கிராமம் காண விழையும் வாசகர்களுக்கு ‘எறவானம்’ நல்ல வாகனம்.

தன் எழுத்து உளி நவீனமும் செதுக்கும் எனச் செதுக்கியுள்ளார் கங்கை கொண்ட சோழபுரத்து இளவல்.


நூல் விபரம்

நூல்: எறவானம்

நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : வினையன்

வெளியீடு : மணல் வீடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2016

பக்கங்கள்: 52

விலை: ₹ 80

நூலைப் பெற :

Mobile : +91 9176 222 054.

 

About the author

இரா.மதிபாலா

இரா.மதிபாலா

சென்னையைச் சார்ந்த இவரின் இயற்பெயர் பாலாஜி. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் சார்புச் செயலாளராக பணியாற்றிவர்.
இவரின் முதலாவது கவிதை 1984 -இல் "தீபம்" இலக்கிய இதழில் வெளியானது. 40 ஆண்டுகளாக பெரும் விருப்பத்தோடு கவிதைத்தளத்தில் இயங்கி வருகிறார்.இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

நெருடலும் வருடலும் (1988),
84 கவிதைகள் ( 2018),
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில் ( 2020)]

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website