cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 23 விமர்சனம்

அருகிலிருக்கும் நெருங்கிய உறவு

Getting your Trinity Audio player ready...

ஒரு கவிதை நூலில் சில கவிதைகள் நெஞ்சைத் தொட்டுப் போகும். சில கவிதைகள் ஓரிரு நாட்களுக்கு நம் மனதை வருடிக் கொண்டே இருக்கும். பிரியா பாஸ்கரன் அவர்களின் இந்த கவிதை நூலில், அவரது முன்னுரையில் அவர் மேற்கோள் காட்டி சொன்ன

“Fill your paper with breathings of your heart” 

 William Wordsworth,

நம்மை இந்தக் கவிதையோடு உடனடியாக இணக்கமான மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது.

நூலின் முதல் கவிதை, “சாம்பல் பூத்த கவிதைக்குள் நான்”.  இந்த கவிதையில் முதல் வரி  

 “சூரியன் உமிழ்ந்த எச்சத்தில் 

ஒளிர்கிறது நிலவு” 

இக்கவிதையில்  துக்கத்தை ஒரு விலங்கோடு ஒப்பிட்டுச் சொல்கிறார். விலங்கோடு ஒப்பிடுவதில் தவறில்லை. அது ஒரு புள்ளி மானாகவோ முயல் குட்டி ஆகவோ அணில் குட்டியாகவோ இல்லாமல்,  

 “தூக்க விலங்கொன்று என்னைக் கவ்விக் கொண்டு போய் சப்பி தின்று விழுங்குகிறது” 

என்கிறார். அந்தத் தூக்கம் துக்கம் தான்.

ஒரு புயல் வந்தால் அதற்கு   இவைதான் எல்லைகள். இந்தக் கட்டுக்குள் தான் இது இருக்கும் என்பது இல்லை. அது போல் தான் கோபத்தில் நாம் உதிர்க்கும் சொற்களும் என்ற பொருளில் 

 “கதவிடுக்கில் நுழையும் யானை” என்ற கவிதையில் சொல்லியிருக்கிறார். இந்த கவிதையை இன்னொரு சந்தர்ப்பத்தில் முழுவதுமாக விரிவாக எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது அவ்வளவு அழுத்தமான ஆழமான வரிகள் சினத்தில் உதிக்கும் சொற்களுக்கு.. 

சில வரிகள் நமது வாழ்க்கையோடு ஒன்றி நம்மோடு பயணிக்கின்றன. அதனை மட்டும் சொல்லிக் கடந்து போகிறேன்.   “முடிவிலிக்கு முற்றுப்புள்ளியிடும் மனது” சொல்கிறார் கவிதையில் உண்மையான மகிழ்ச்சி என்னுள்ளே இருக்கிறது என முடிவிலி அலைதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து… பல நேரங்களில் உண்மை மகிழ்ச்சி எங்கே மகிழ்ச்சி எங்கே என்று பல இடங்களில் தேடித் தேடி ஒரு  தனிமையில் உட்கார்ந்து நம் மனதில் தோன்றும் சில உணர்வுகளை நினைவுகளை அல்லது ஏதோ ஒன்றை எண்ணி மகிழ்கையில் உண்மையாகவே புரிகிறது உண்மையான மகிழ்ச்சி என் உள்ளே தான் இருக்கிறது. அந்த எண்ணம் வந்துவிட்டால் அலைபாயும் மனசுக்கு முற்றுப்புள்ளி என எளிய நடையில் சொல்வது சிறப்பு.

சில இரவுகளில் படித்தவுடன் உறங்கி விடுவோம் சில இரவுகளில் சில  பாடல்களைக் கேட்டு உறங்குவோம். ஒரு சில இரவுகள்

   “அந்தரிக்கும் மனது”   கவிதையில் கவிஞர்  

“இன்றைய இரவு முந்தைய இரவுகளைப் போல அல்ல செந்தேள் கொடுக்கால் கொட்டிய வலி துடிக்கிறேன் ஒரு மெழுகுவர்த்தியை அல்லது ஒரு தீப சுடரை ஏற்றிட … ” என்கிறார்.இவ்வளவு ஒரு கடினமான இரவு எல்லோருக்குமே வந்திருக்கும் அதை உணர்ந்து,  அதனை நமக்கும் கடத்திப் போகிறார் இலகுவாக..

வாழ்க்கையைப் பற்றி எளிதாக  “அபஸ்வரம் நுழையா தொலைவில் நான் ” என்ற கவிதையில் 

“பூவையும் உதிர்க்கும் சருகையும் நகர்த்தும் மரத்தையும் முறிக்கும் காற்றாய்… ”

வாழ்க்கை ஒரு காற்று. அந்தக் காற்று எப்படிப்பட்ட காற்று, அதன் தன்மைகள் எப்படியெல்லாம் இருக்கிறது. மாறுகிறது. ஒரு காற்றைப் போல வாழலாம் என நினைப்பேன் முன்பெல்லாம். அது போலத் தான் இப்போது வாழ்க்கை போகிறது ஏறக்குறைய எல்லோருக்கும்.   ஆழமான  சிந்தனை என்பதைவிட யதார்த்தமான சிந்தனை ஏனென்றால் யதார்த்தம் மட்டுமே உண்மை பேசும்.. தொடர்ந்து அந்த கவிதையில்..

“உனது அபஸ்வரம் நுழையாத தொலைவில் எனது செவிப்பறை ஆதலால் நிறுத்து” இந்த வரிகளோடு இந்த கவிதையை முடித்திருக்கலாம். அடுத்து நீ புலம்புவதும் அபத்தமாகப் பேசுவதும் நுழையாத தொலைவில் நான் இருக்கிறேன் தனியாகக் கத்திக் கொண்டு இருக்காதே நிறுத்து..  என்று ஒரு கட்டளையோடு முடித்துள்ளார். அந்த கட்டளையில் இந்த கவிதை வீரியம் பெறுகிறது.

வாழ்க்கையில் சில பேரை மறந்து விடலாம் என நினைத்து முற்றுப்புள்ளி வைத்திருப்போம். சிலரை நினைத்துக் கொண்டே இருக்கலாம் எனத் தொடர் புள்ளி வைத்திருப்போம். சிலரைக் கேள்விக்குறியோடு கடந்து வந்திருப்போம். கவிஞர் ”கவிதை சனித்தல்” என்ற கவிதையில்

“மயிர் இழையில் ஆடிக் கொண்டிருக்கிறது நினைவு”  

நிறைய உறவுகளை நாம் இப்படித்தான் வைத்துள்ளோம். நிறைய உறவுகள் நம்மையும் அப்படி தான் வைத்திருக்கிறார்கள். நிதர்சனமான உண்மை.  பெண் உடலுக்கு மதம் இல்லை உடலின் ருசியும் சாதி அறியாது”  எச்சிலாய் வடியும் ஆண்மை வக்கிர எண்ணங்களுக்கு அங்கே வைக்கிறார் சூடு.. ஆவி பறக்க…. இனிக்க இனிக்கப் பேசுகிறார் எனச் சிலரைப் பார்த்து நமது மனசுக்குள்ளே நினைப்போம். அதற்கு ஓர் அழகான ஒரு  வார்த்தை வரிகளைக் கொடுத்துள்ளார் .

”தேனடை நாக்கு”  என “பொய் முலாம் பூசிய சொற்கள்” என்ற கவிதையில். சப்பென அறையக்கூடிய வார்த்தைகள். அதே கவிதையில் இன்னொரு வரி..

”எனக்காய் உதிர்க்கும் ஒரு சொல்லிலாவது துளி உயிர்ப்பை ஒட்டி வைக்க முயல்வாயா” ஏக்கம் தரும் இந்த வார்த்தைகளில் தான் எவ்வளவு ஏமாற்றம். போகின்ற போக்கில் எதோ ஒன்றை அல்லது எல்லோரிடமும் சொல்வதை நமக்கும் சொல்லிப் போகும் நல்லவர்களுக்கான கவிதை இது.

”இருத்தலென்றால்”  என்ற கவிதையில்.. தலைப்புக்கு ஏற்ப  இருத்தல் என்றால் உந்தன் உன்னத கணங்களில் தான் என்கிறேன் இருதயம் அதிர” என்றும்,  ”உயிருள்ள எவ்வுயிரும் என்றாயினும் உதிர்ந்து சருகுடலாய் மெல்ல அழுகி மக்கிப் புதையும்” காதல் அகராதியில் அருஞ்சொல்  பொருள் தருகிறார். 

எவ்வளவோ கவிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள்.   இந்த கவிதையை இந்த வார்த்தைக்கு வரும்போது ஒரு ஞானம் திறப்பது போல சில உணர்வுகள் மனதில் வந்து போகிறது. எத்தனையோ கனவுகள் நமக்கு வந்து போகும். மகிழ்ச்சி தரும். பயத்தைக் கொடுக்கும். அதிர்ச்சியைத் தரும். கவிஞரோ.. “பிசாசு மனதின் விசித்திரம்”  கவிதையில்..

“தொட்டால் சிணுங்கும் அழைப்பு மணியில் கொடுங்கனவிலிருந்து விழிப்பு தட்டுகிறது”  என்கிறார்.

“சுயமரியாதை சூழ் உலகு”  கவிதையில் வரும் “நுகத்தடி” என்ற வார்த்தையைப் படித்த போது எனது பழைய நினைவுகள் வந்து போனது.

“யாரோடு நோவது” கவிதையில் “பேச முடியாதவற்றை அச்சுலேற்று, அச்சிலேற்ற முடியாதவற்றை இரை மீட்காமல் கமுக்கத்தில் தாலாட்டு” என்கிறார்.

கமுக்கம் என்ற வார்த்தை  புழக்கத்தில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நக்கலா, நையாண்டியா, கமுக்கமா இருக்கிறார்கள் எனச் சொல்லுவார்கள். அரசுப் பணிகளில் இருக்கிறவர்களுக்குத் தெரியும் நிறையக் கோப்புகளைக் கமுக்கம் என்ற வார்த்தையை முன் மற்றும் முகப்பு தலைப்பில் பயன்படுத்துவார்கள் என்று.

 “அப்பாவின் ஆன்மா” கவிதையில், “சலூனுக்கு செல்லும் முன் பத்து முறையும் கழனிக்குச் செல்லும் முன் 20 தடவையும் குளியலறைக்குச் செல்லும் முன் 100 வாட்டியும் தகவல் சொல்லும் அப்பா விழிக்காத உறக்கத்திற்குச் செல்லும் பொழுது ஏனோ மறந்துவிட்டார்..”

ஒன்றும் சொல்வதற்கு இல்லை இந்த கவிதை பற்றி… கண்களில் நீர்.

 “மனிதர்களுடன் முரண்பாடாக உள்ள மனது இறைவனிடம் மட்டுமே முன்னேற்பாடாக உள்ளது” இந்த ஒரு ஆன்மீக வரிகளில் தான் எத்தனை புலனங்கள்  என..

தெய்வத்தைச் சொற்களால் உருவாக்குகிறேன்”  கவிதையில் நிறையவும் யோசிக்க வைக்கிறார்.

நம்மை யாராவது புறக்கணித்துக்கொண்டே இருந்தார்கள் என்றால் தவிர்த்துகிட்டே இருந்தார்கள் என மனது கஷ்டமாக இருக்கும். பேசிக்கொண்டு இருக்கும்போது தெரியாது. அல்லது அவர்கள் பேசும்போது நாம் கூட அவர்களைத் தவிர்த்துப் போவோம். அப்பக் கூட நமக்கு வலிக்காது  நமக்கு பிடிச்சவங்க நம்மளை புறக்கணிக்கிறவர்கள் தவிர்காமல்  நம்ம கிட்டப் பேசிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் அந்த பேச்சு எப்படி இருக்கும் தெரியுமா? “மரங்கொத்தியின் அலகென  வன்மையாய் தாக்கி என்னுள் அத்துமீறுகின்றன நீ தரும் வலிகள்”

 அந்த வார்த்தை நம்மையும் கொத்துகிறது. 

 “உன் புறக்கணிப்பை மன்னித்து விடலாம் போலிருக்கிறது”.. என முடிக்கிறார்.

நாம நேசிக்கிறவர்கள் பேசுகிற வார்த்தைகள் வந்து மரங்கொத்தி மாதிரி நம்மைக் குத்தின நீ பேசாமலே இருக்கலாம் போல இருக்கிறது உன்னோடு வார்த்தை அவ்வளவு வலிக்கிறது என்பதாகப் புரிகிறது. ஆரம்ப வரிகளையும் இறுதி வரிகளையும் தான் சொல்கிறேன். இடையில் இன்னும் இன்னும் வேற நிலையில் இருக்கிறது கவிதை.

இந்த மாமியார்கள் எல்லாம் தங்களுக்கு வரக்கூடிய மருமகளைத் தேடும்போது அவர்கள் போடுற நிபந்தனைகள் அதில் ஒரு வரி  

 “மாநிறம் உடையவர்கள் மருமகள்கள் ஆகத் தகுதி இல்லை”

உண்மையில் அதே மாமியார்கள்  அதற்கு முரணா சாதம் வைத்து காக்காவினை அழைக்கிறாள் மாமியின் திதி அன்று வந்த அண்டங்காக்கை உருவில் அம்மாவைக் காண மகனின் மனதில் படிந்திருந்த கருமைக்குப் பலத்த அடி ”

அந்த மகனுக்கு மட்டும் இல்ல மாநிறமா இருக்கின்ற பெண் என் பையனுக்கு வேண்டாம் எனச் சொல்லும் அம்மாக்களுக்கும் கூட பலத்த அடி தான்..

எனக்கு இறந்ததுக்குப் பிறகு நீ காக்காவைக் கூப்பிட்டுத் திதி வைக்காதே  மயில் மயில் என்று கூப்பிடு என்று சொல்ல முடியுமா முடியாது அல்லவா… கருமையை ஏளனம் செய்யும் எல்லோருக்குமே இது ஒரு இலக்கணம் தான்.

பிறப்பு இறப்பு பற்றி  “இனியும் வேண்டும் கழுவேற்றுதல்” கவிதையில் “பிறப்பைப் போன்றதொரு ரகசியத்துடன் இருக்க வேண்டியது இறப்பு சிறு பிஞ்சு மனங்களை இன்னும் எத்தனை ஆண்டுகள் தீண்டித் தீண்டித் துரத்தப் போகின்றன அரவங்கள்” எனச்  சொல்லி அதற்கு ஒரு தீர்வையும் அளிக்கிறார் – “கயவர்களுக்குக் கழுவேற்றுதல் வாய்க்கட்டும் பகிரங்கமாக” என முடிகிறார். 

பிரியா பாஸ்கரனின் கவிதை வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் வார்த்தைகள் அவ்வளவு ஒரு வலுவாக இருப்பதால் வார்த்தைகள் கிடைத்த வழிகளில் பாய்கின்றன.

சலமின்றி மிதக்கும் இறகு –வில் மனம் கவர்ந்த சில வரிகளை சில வார்த்தைகளில் சொல்லிக் கடக்கிறேன். அந்த வாக்கியங்களுக்குப் பொருளும் தேவையில்லை மாறாக வாயடைத்து யோசிக்கும் மனநிலைக்கு அழைத்துப் போகிறார் 

“வாய் குகையில் தொடர்கின்ற யுத்தம்”

“அறுதியிட்டுச் சொல்ல முடியாத வேற்று கிரகத்தில் உள்ளது என்கிறார்கள் மனிதர்கள் வாழும் உலகு.”

“பாட்டி இறந்த பொழுது கிழக்கு வேலியிலிருந்த இரண்டு பூவரசு விரகுகளால் எரித்து இறுதிச் சடங்கு பேரிடர் காலத்தில் இறந்த தந்தையின்  சாவறிந்து  துடிதுடித்துப் போனேன் மின்னடுப்பு காத்திருந்து காவு கொடுத்ததைப் பார்த்துக் கதறி அழுதாயிற்று கட்டை வேக ஒற்றை பூவரசு இல்லை.”

“வெட்டுப்பட்டாலும் வழுக்கி உடல் தூக்கி ஊர்ந்து செல்லும் எலும்பற்ற மண் புழுவாய் தன்னம்பிக்கை.”

“கடலளவு துணிவு இருந்தும் கடுகளவே எதிர்க்கிறேன் புகலிட கைதியாய்”

“ஒவ்வொரு குழியிலும் பொறி வைத்துக் காத்துக் கிடக்கிறது இனவெறி”

“செக்கு மாடாய் உழைத்த பகல் உறங்கத் தொடங்குகிறது இரவில்”

இது போன்ற வரிகள் விளக்கமின்றி நெஞ்சம் தொடுகின்றன. ஏராளமான வரிகள் இது போல இந்த தொகுப்பில் இறைந்து கிடக்கின்றன.

இந்த காலத்தில் பிச்சைக்காரர்கள் கூட விட மாட்டார்கள் எனப்  போகின்ற போக்கில் சொல்வதைக் கேட்டு இருப்போம். மனதை இரணப்படுத்துகின்ற அந்த நிகழ்வை வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்.

 “ஆடை நெகிழ்ந்த நிலையில் மணம் பிறழ்ந்த ஒருத்தி மடிப்பு கலையாத சட்டையிட்ட மிருகம் ஒன்று நெருங்குகிறது அவளை”

ஒரு நாளைக்குப் பத்து தடவை  சோப்பு போட்டுக் குளிக்கிறவன் கையை கழுவுகிறவன் சென்ட் போட்டுக்கொள்கிறவன் எல்லாருமே இந்த விஷயத்தில்  ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் மாதிரியான ஒரு கருத்தை எடுத்துச் சொல்வது உண்மை. 

 “வியர்வையில் நீரூற்றி வளர்த்த உழைப்பின் கசகசப்பு” 

உழைப்புக்கு இதைவிட அதிகமாக அர்த்தம் பொதிந்த இரண்டே வரிகளில் சொல்ல முடியுமா என்றால் அது சற்று கடினம் தான்.

மாத கடைசியில் பண்டிகைகள் வந்துவிட்டால் நம்ம பாடு இருக்கிறதே

 ”குறைமாத சிசுவாய் வார இறுதியில் கொண்டாடப்படுகிறது பண்டிகை” ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு வரியிலும் அவ்வளவு அடர்த்தியான கருத்தாழம் நிறைந்து படிப்போரின் கண்களையும் மனதையும் கூட பெருமூச்சு விட வைக்கிறது.

 “அலைபேசியில் வரும் அசரீரி”

இந்த கவிதை கூட ஒரு வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்காகத் தான்.. நமது நாட்டிலிருந்து ஒரு தொலைப்பேசி கால் எதிர்பாராத முரனான நேரத்தில் வந்தது என்றால் பதட்டம் ஆவது இயல்பு…… வார வாரம் செய்கிறவர்கள் அன்றாடம் செய்கிறவர்கள் எல்லாம் சரி தான் ஆனால் வராத ஒரு கால் வந்தால் எப்படி இருக்கும் எப்படியோ இருந்துகொண்டு போகட்டும் ஆனால் நாம் எப்படி நினைக்கவேண்டும் அந்த புது எண்ணில் வரும் அல்லது நமக்குத் தெரிந்தவரின் அழைப்பில் வரும் செய்தி இவையாகக் கூட இருக்கலாம்.

“லட்சுமி கன்று ஈன்ற செய்தியாகவோ 

தோட்டத்து மாமரம் பிஞ்சு விட்டதாகவோ 

அக்கா மகனுக்கு வேலை கிடைத்த விஷயமாகவோ..”

இவ்வாறு கூட இருக்கலாம் இவையும் கூட முக்கியமானவைதான் என ஆற்றுப்படுத்துகிறார்.

சில மனிதர்களின் புதிர் முகத்தைக் கிழிக்கிறார் 

 “எனை பின்னும் பிரம்பே” என்ற கவிதையில்..

சிலர் வந்து  பேசவேண்டும் வேண்டும் என நினைப்பார்கள். நாமும் பேசுவோம். அவர்கள் மட்டும் அவர்களுக்கு நம்மிடம் பேசுவதற்கு ஆசை இருக்கா இல்லையா..?  அதை நம்ம கிட்டக் காட்டிக்கொள்ளவே மாட்டார்கள்.. பேச மாட்டார்களா ஒரு மெசேஜ் அனுப்ப மாட்டார்களா என்று இரவு பகலாகிடத் தோன்றாமல் காத்திருப்போம். ஆனால் அவர் நம்மைப் பார்க்கும் போது கொஞ்சம் அலட்டல் இல்லாமல் நாம் இருப்பதைக் கூட கவனிக்காததைப் போலப் பாசாங்கு செய்து மற்றவரோடு வக்கணையாய் பேசுவார் அப்போது நமக்குக் கோபம் வர வேண்டும் ஆனால் இவர்… 

 “நடிகன் வேடமிட்டு மௌனமாய் நடிப்பதை பாரேன் எவ்வளவு அழகு”

 “என்னங்க இது பாசக்கார சைக்கோவா..” அப்படின்னு ஒரு படத்தில் வருகிற வசனம் மாதிரி காதல் கார சைக்கோவால தான் இப்படிப்பட்ட ஒரு கவிதை எழுத முடியும்.. வெல்டன் பிரியா பாஸ்கரன்..

சில  கவலைகளை அல்லது  பிரச்சனைகளைக் கழுதை மாதிரி சுமக்காதீர்கள் ஆறாத தழும்புகள் போலத் தான் அவை இருக்கும்  அதை என்ன செய்ய வேண்டும் எப்படிக் கடந்து வர வேண்டும். ”நீ போ கவிதையே வா” என்ற கவிதையில் விடை சொல்கிறார்.

“சுமக்காமல் கழற்றி ஹேங்கரில் தொங்கிவிட்ட பின் அம்மணமாய் விரிந்து கிடக்கிறது மனது”

அதை நாம் செய்வது இல்லை அம்மனத்துக்குப் பதில் கோட் சூட் ஷூ சாக்ஸ் கூலர் கிலவுஸ் எனப் போட்டு மாட்டி அழகு படுத்தி வெந்து போகிறோம். அந்த சூடு தணிவதே இல்லை கவலைகளைப் பொருத்தவரை அம்மனமாய் இருப்பதே பாதகம் இல்லாதது என்பதை டேக் இட் ஈசி மனநிலையில் புரிய வைக்கிறார்.

பெண் எப்போது பெண்ணாகிறாள் காலம் காலமாய் கேட்ட கேள்வி தான் ஆனால் காலம் கடந்தும் நிற்கும் பதில் “பெண்ணாகும் நான்“ என்ற கவிதையில்…

 “நேரங்களை அழகாக்கும் உன்னோடு தான் பெண்ணாகிறேன் நான்”

ஆகா கவிதை கவிதை எனச் சொல்லத் தோன்றுகிறது. கவிதைதான் காலம் கடந்து தவறான பதில் சொல்லிக் கடந்து போகும் சிலருக்கு இது தான் கவிதை என்று நினைத்தாலும் சரி கண்ணத்தில் ஒரு அறை என நினைத்தலும் சரி தான்.

 “வா இந்த முறை உன்னைக் கிறுக்கல்களாக்க என்னிடம் பூமாராங் இருப்பதை யுத்த நேர்மையோடு சொல்லிக் கொள்கிறேன் ..” கவிதை அறுவடை என்ற கவிதையில் தான் யுத்த நேர்மையை இப்படிச் சொல்லி இருக்கிறார் 

உங்கள் நேர்மை ரொம்ப பிடித்திருக்கிறது என என் மனதில் தோன்றியது

இவர்களுடைய நேர்மை கூட தெரிகிறது முதுகில் குத்தும் பழக்கம் இல்லை என்பதை யுத்தத்திற்கான மரபு என்னவோ அதைச் சொல்லி வா ஐ ஆம் ம் வெயிட்டிங் என்பது போல உள்ளது.

  “உனக்காகச் செலவிட்ட கணங்களைக் குறைந்தபட்சம் நட்சத்திரங்களை எண்ணி இருக்கலாம் அல்லது தூக்கணாங்குருவி கூட்டின் நுட்பத்தை ஆராய்ந்து இருக்கலாம்” ஒருவருக்குச் செலவிட்ட நேரத்தை இதைவிடக் குறைவாக மதிப்பிட்டுச் சொல்ல முடியாது. எந்த அளவுக்குக் காயப்பட்ட ஏமாற்றப்பட்ட இதயத்தால் தான் இப்படி என்ன முடியும் கற்பனை என்ற அளவில் மற்றவர் உணர்வுகளைப் புரிந்து பருகும் போது அங்கு இப்படி கவிதை பிறக்கிறது. 

அவசர முத்தம் இதை அனுபவித்தால்  தான் புரியும் “முற்றுப் பெறாத பிரியங்களின் எச்சங்கள்” கவிதையின் மூலம் அதை அனுபவித்த உணர்வைத் தருகிறார் கவிஞர். 

 “சில்லென்ற ஈரத்தையும் மீறி நினைவு படுத்தியது முன்பொருநாள் மழை பொழுதில் அவசரத்தில் நீ முத்தமிட்ட போது உன் உள்ளங்கையிலிருந்த கையளவு வெப்பம்” அவசர முத்தத்தில் கையளவு வெப்பமும் இருக்கும் என்பதைப் புரிய முத்தம் வாங்கி பாருங்கள்.. கொடுத்துப் பார்க்கலாம் வாங்கி பார்ப்பது எப்படி.

இதே கவிதையின் தொடர்ச்சியில்..

 “உன்னைப் போலவே உன் நினைவுகளும் அரைகுறையாய் என இறக்கி விடுகின்றன”. புண்பட்ட காதல் மனதிற்கு இது ஒரு பண்பட்ட கவிதை மருந்து 

எல்லாவற்றிற்கும் உச்சமாய் ஒரு கவிதை மௌனம் என்பது சாதாரண ஒரு விஷயம் இல்லை அது வன்முறையானது.

“உன் ஆணவத்திற்கு எதிரான அப்போதைய என் மௌனம் எதனினும் வன்முறையானது…”

இந்த வரிகளைப் படித்தபின் உண்மையாகவே இன்னும் கொஞம் அதிகமாக மௌனம் கடிபிடைக்கலம் என நான் நினைக்கிறேன். வன்முறைக்கு ஆதரவாளன் இல்லை நான். 

எந்த மனநிலையிலிருந்தாலும் படிப்பதற்கு ஆற்றுப்படுத்துவதற்குப் புன்முறுவலுக்கு, ஒரு மாற்றத்திற்கு இளைப்பாறுதலுக்கு அமைதிக்கு இதற்கு ஒரு கவிதைப் புத்தகம் இருக்கிறதா எனக் கேட்டால்  அந்த புத்தகம்தான் பிரியா பாஸ்கரனின்

”சலனமின்றி மிதக்கும் இறகு” இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது.. எல்லாமே இருக்கிறது அவ்வளவுதான் .

 கூண்டு பறவைகள் எனப் பாடுகின்றன… பறவைகளிடம் பாடுவதற்கு இதுவரை பாடப்படாத பாடல் இருக்கிறது. கூண்டிலிருந்தாலும் கூட பாடத் தவறுவதில்லை

பிரியா பாஸ்கரன் அவர்களிடம் கூட பாடப்படாத இத்தனை பாடல்கள் இருக்கின்றன. இன்னமும் கூட இருக்கிறது.. அதனை அவரது அடுத்தடுத்த படைப்புகளில் நாம் பார்க்கலாம் என நம்புகிறேன் ஆனால் இந்த 

“சலனமின்றி மிதக்கும் இறகு” என்னை நிறையவே சலனபடுத்திவிட்டது

இந்த நூல் படைத்த கவிஞர் பிரியா பாஸ்கரன் சங்க இலக்கிய மரபு இலக்கியத்தில் நிறைய ஆர்வம் கொண்டவர் என்பது அவரது கவிதைகள் தொடர்ந்து படிப்பவர்களுக்குப் புரியும் எனக்கும் புரிகிறது … அவருக்குச் சங்க இலக்கியம் மரபு இலக்கியத்தில் ஆர்வம் உண்டு என்பது புரிகிறது. சங்க இலக்கிய வார்த்தைகளை நிறைய இவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். இன்னும் கற்றுக் கொண்டும் முழுதாகப் படிக்க வேண்டும் அவரது அனைத்து படைப்புகளையும் என்ற ஆர்வத்தை வர வைத்துள்ளது.

 இவர் பாரதியார் விருது சேலம் தமிழ் இலக்கிய பேரவையில் பெற்றுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் வளரும் படைப்பாளர் விருது பெற்றுள்ளார். வல்லின சிறகுகளின் மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதை 87 ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த படைப்பாளி விருது படைப்பு குழுமத்திலிருந்து பெற்றுள்ளார். இவரது முந்தைய இரண்டு கவிதைத் தொகுப்புகள் நான் ஏற்கனவே வாசகர் பார்வையில்  படித்து மகிழ்ந்ததில் சொல்லி இருக்கிறேன்…

புத்தகங்களும் எனக்கு நெருங்கிய உறவு எனச் சொல்லலாம். ஏனெனில் எப்பொழுதெல்லாம் உரையாட ஒருவர் வேண்டும் என நினைக்கும்பொழுதெல்லாம் புத்தகங்களுடன் உரையாடுவது பழக்கம். அந்த வகையில், இந்த புத்தகத்தைப் படித்தபின் இது எனது படுக்கை அறையில் மேசைக்கு அருகிலேயே வைத்துள்ளேன். எப்பொழுது தோன்றினாலும் எடுத்துப் படிக்க வேண்டும் எந்த மனநிலையிலும் எந்த சூழ்நிலையிலும் படிப்பதற்கான ஒரு தொகுப்பு இது.

“சலனமின்றி மிதக்கும் இறகு ” புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தார் டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் மற்றும் படைப்பாளர் அன்பிற்கினிய தோழி பிரியா பாஸ்கரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

 கண்டிப்பாகப் புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டிய ஒரு தொகுப்பு இது. ஒரு சாதாரண கவிதைப் புத்தகம் எனக் கடந்து போக வேண்டிய நூல் அல்ல.


நூல் விபரம்

நூல்: சலனமின்றி மிதக்கும் இறகு

நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : ப்ரியா பாஸ்கரன்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு : 2022

பக்கங்கள்: 160

விலை: ₹ 180

 

About the author

ஜனனி அந்தோணிராஜ்

ஜனனி அந்தோணிராஜ்

எஸ்.அந்தோணி ராஜ் "ஜனனி அந்தோணிராஜ்" என்ற பெயரில் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள்
எழுதி வருகிறார். திருச்சி அகில இந்திய வானொலி நிலைய பண்பலை பிரிவில் பகுதி நேரமாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் பிரசுரமாகி உள்ளன. தற்போது கல்வித்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற இவர், நாவல்களை எழுதி வெளியிட காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website