cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 23 விமர்சனம்

ப்ரணாவின் “பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை” – ஒரு பார்வை

Getting your Trinity Audio player ready...

பிள்ளையார் சுழி என்ற சிறுகதைத் தொகுப்பையும் தானியம் கொத்தும் குருவிகள் என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்ட நண்பர் ப்ரணா அவர்களின் சமீபத்திய கவிதை நூல் இது. சொற்களைக் கொண்டு எளிய வார்த்தைகளாலும் ஆழமான எண்ணங்களாலும் கட்டமைத்த கவிதை ஊஞ்சல் இது. கடவுள் மீதான பார்வை, எளிய மனிதர்களின் நேசத்தை வெளிக்காட்டும் பாங்கு, ஒப்பீடுகளால் நடக்கும் விளைவுகள், எந்த நொடியிலும் மாறிப் போகும் வாழ்வின் நிலையாமைப் போக்கு, தேர்தல் பற்றிய சிந்தனைகளின் வழி மனங்களில் எழுப்பும் எண்ணங்கள், குடும்ப அமைப்பை தூக்கிப் பிடிக்கும் பாசம், இசையின் மீதான தீராக் காதல் என தன் எண்ண அலைகளால் நம் மனங்களை நனைக்கிறார்.

எளிய மனிதர்களுக்குள் கருணை நிறைய சுரக்கும் என்பதை

“வாடிக்கையாளரை
காக்கச் சொல்லி
பட்டாம்பூச்சிக்கு இளைப்பாற
இடம் அளித்ததன் மூலம்
எட்டாம் வள்ளலென இடம் பிடித்தார் எங்களூர் சலூன் கடைக்காரர்”

என்ற வரிகளில் வெளிச்சப்படுத்துகிறார்.

வாழும் உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்திறன்கள் உண்டு. . எல்லாவற்றையும் ஒன்றுக்குள் திணித்தால் எதுவுமே சிறப்படைவதில்லை. ஒப்பீடு மனப்பான்மையை உதாசீனப்படுத்தினால் மனிதனின் மனதில் மகிழ்வே நிறையும் என்பதை

“இன்னொன்றைப் போலவே இருப்பதற்கும்
இல்லாமலேயே இருப்பதற்கும்
பெரிய வேறுபாடு
ஏதுமில்லை”

என்ற பக்கம் 11 உள்ள கவிதை எடுத்துரைக்கிறது.

“எந்த வித முன்னறிவிப்புமின்றி
சட்டென உதிர்கின்றன
மரத்திலிருந்து இலைகள்”

வாழ்வும் சட்டென ஒற்றை நொடியில் தலைகீழாக மாறிப் போகலாம். குப்பையும் கோபுர ஏறலாம். முயற்சிகளின் நொடிகளில் சந்தர்ப்பங்களைத் தவற விடாதீர்கள் என்கிறது பக்கம் 13 இல் உள்ள இக்கவிதை.

“கொட்டாவி வரும்போது
பேசுவது போல்
விட்டு விட்டு எழுதுகிறது
மை தீரப் போகும் பேனா”

அருமையானதொரு கற்பனை.

“வியாதிக்கெல்லாம்
வீட்டு வைத்தியம் சொல்லும்
பாட்டி போன பிறகு
எகிறித்தான் போயிருக்கிறது
எங்கள் வீட்டு மருத்துவச் செலவு”

  • பக்கம் 15

அனுபவங்களை சில சமயங்களில் தவறவிட்டால் இழப்புகள் அதிகமாகலாம் என்ற வாழ்க்கைப் பாடத்தை அறிவுறுத்துகிறது.

காதலை ஒப்பிடும் மனிதர்கள் அதன் உண்மைத் தன்மையை உணர இயலாமல் அங்கீகரிக்க தயங்குகிறார்கள் என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறுகிறது பக்கம் 17 இல் உள்ள கவிதை,

“கடவுள் எல்லாம் காதலிச்சா
கன்னத்துல போட்டுக்குவோம்
மனுசப் பய காதலிச்சா
மண்ணுக்குள்ள புதுச்சிடுவோம்
நாங்கள் மனித ஜாதி”

வாழ்க்கை மீது பறவைகள் கொண்ட நம்பிக்கை அளவு கூட நாம் நம்மை நம்ப முடிவதில்லை என்பதை பக்கம் 20வ் உள்ள புதுபிப்பு கவிதை விவரிக்கிறது.

உலகம் சுற்றி அறிவை அடைதல் ஒரு காலம். அறிவின் வழியே வீட்டுக்குள்ளேயே உலகத்தைப் பார்ப்பது இக்காலம். மனிதர்களை நேரில் பார்க்கும் நிகழ்வை விட முகநூலில் விசாரிப்பதே இன்றைய நிலைமை என்பதை பகடியாக்குகிறது பக்கம் 24 இல் உள்ள தூங்காத் தெரு கவிதை.

நகர்தலே நதியின் அழகு. உருண்டு ஓடுதலே மழையின் அழகு. உயிர்ப்புடன் இருத்தலே மனிதர்க்கு அழகு என நம்பிக்கை தருகிறது பக்கம் 27 இல் உள்ள மீண்டெழுதல் கவிதை. இதில் உள்ள கடைசி வரிகள்

“வீழ்ந்த இடத்திலேயே
நிரந்தரமாக தங்கி விடுவதில்லை மழைத்துளிகள்”

அன்றைய காலகட்டங்களில் பொங்கல் விழா தீபாவளி விழா என பண்டிகைகளுக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் நினைவுகள் இன்று நம்மை முகநூலின் வழியே வாழ்த்து கூறுவதில் கொண்டு செலுத்தி இருக்கிறது. ஆனால் வாழ்த்து அட்டை அனுப்பும் போது உள்ள ஆனந்தமும் மகிழ்வும் இன்றைய முகநூலில் அச்சடிக்கையில் நமக்குள் உண்டாவதில்லை என்பதையும் அழகாக விளக்குகிறது பக்கம் 28 இல் உள்ள பொங்கல் வாழ்த்து கவிதை.

அவரவர் பார்வைக்கு அப்பாலும் உலகம் இயங்கத்தான் செய்கிறது அவரவர் பார்வைகளை பார்த்தபடி என்பதை அழகாக விளக்குகிறது பக்கம் 31 இல் உள்ள கவிதை.

“சிறகில்லாத மனுஷன் பாவம்
தினமும் சாப்பாட்டுக்கு
என்ன பண்றான்
என்று வருந்திக் கொண்டே
வானில் பறந்து கொண்டிருக்கலாம்
இரை தேடும் ஏதேனும் ஒரு பறவை.”

பறவை கவிதைகள் வாசிக்கும் ஒவ்வொருவரையும் கற்பனை வானில் பறக்க வைக்கின்றன. சுதந்திர எண்ணங்களில் சிறகடிக்க வைக்கின்றன. வெற்றியின் கொண்டாட்டமாகவோ வேண்டுதலின் பூஜை நடத்தலாகவோ இருக்கும் வலியை விட பசியின் வெற்றிடத்தை நிரப்பும் வழி வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தவல்லது.

“தாழப்பறந்த பருந்து ஒன்று
சட்டென தரையிறங்கி
இரையைக் கவ்விக்கொண்டு
வானம் ஏகியதும்
பசியின் வெற்றிடத்தை
நிரப்பியது
பலி”

என்ற பக்கம் 35 இல் உள்ள கவிதையில்””” பசியின் வெற்றிடத்தை நிரப்பியது பலி””” ஆழமாக சிந்திக்க வேண்டிய வரிகள்.

நூலில் உள்ள தேர்தல் தொடர்பான கவிதைகள் இன்றைய நாட்டு நடப்பையும் அரசியல்வாதிகளின் பேச்சுகளையும் வெறும் பேச்சு எதற்கும் உதவாது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும் என்பதையும் அழகாக எடுத்துரைக்கின்றன. தேர்தல் அறிக்கை என்ற தலைப்பில் ஆன பக்கம் 40 இல் உள்ள கவிதையின் இறுதி வரிகள் அனைத்து அரசியல்வாதிகளும் வாசிக்க வேண்டிய வரிகளாக அமைகிறது.

“இவை அனைத்தும்
நிறைவேற
எங்களுக்கே ஓட்டு அளிப்பீர்.
எங்களைக் காட்டிலும்
இவ்வளவு சிறப்பாக
யார் செய்து விடப் போகிறார்கள் உங்களுக்கான
சவப்பெட்டியை.”

ஆம்! இன்றைக்கு தேர்தல் அறிக்கையின் வழியாகவும் வெற்று விளம்பரங்கள் வழியாகவும் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சியில் அமரும் நபர்கள் அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்களா என்பதையும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை சீரும் சிறப்புமாக செய்துவிட முடிகிறதா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தூண்டல்களை கவிதை நமக்குள் எழுப்புகின்றது. மக்களை பிச்சைக்காரர்களாக்கி ஓட்டுப் பிச்சை கேட்கும் அரசியல்வாதிகள் என மொழிகிறது நூலில் உள்ள தேர்தல் கவிதைகள்.

கடவுள் எப்போது பிறந்தார்? கடவுளை படைத்தவர் யார்? கடவுளுக்கான தேவையை யார் கண்டறிந்தது? யாருக்காக கடவுள் தேவைப்படுகிறார்? நம்முள் எழும் கடவுளுக்கான வினாக்களுக்கு விடை தருகிறது பக்கம் 50ல் உள்ள இக்கவிதை.

“பெயரற்ற ஆதி கடவுள்
யாவருக்கும்
பொதுவாய் இருந்தான்.
பெயர் சூட்டி கடவுளை
மதமாற்றம்
செய்து வைத்தான் மனிதன்”

இசைக்கருவிகள் செய்யப் பயன்படும் மரங்களின் வகைகளைப் பட்டியலிடும் கவிஞர் ஒவ்வொரு மரத்திற்குள்ளும் உயிரை உறங்க வைக்கும் உணர்வும் விரியும் இசையும் ஒளிந்து கிடக்கிறது என்பதை அழகான வரிகளில் முடிக்கிறார்.

“விதைக்குள் உறங்குவது
விருட்சம் மட்டுமல்ல
உயிரை அசைத்து உணர்வைப் பிசையும் இசையும் தான். “பக்கம் 61

“வேட்டை
பறவைக்குக் கண்ணி
மீன்களுக்கு தூண்டில்
எலிக்கு பூனை
பாம்புக்கு மகுடி
யானைக்குக் குழி
காட்டு விலங்குகளுக்கு வலை மனிதனுக்கு
“உங்களைப் போல வருமா”
என்ற ஒற்றைப் பொய் ” பக்கம் 68

மனிதன் ஏதோ ஒன்றில் பலவீனமாகி விடுகிறான். புகழ், பணம், பாசம், பரிவு, கருணை என மனிதனுக்கான தூண்டில்கள் ஏராளம். சமயங்களில் பொய் கூட மனிதனை வீழ்த்தும் ஆயுதமாக மாறலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

பறவை அறைக்குள் நுழைகிறது. அங்கு இருக்கும் பியானோவின் கட்டைகள் மீது தடுமாறுகிறது நடக்கிறது. இந்த காட்சியை கற்பனை செய்து பாருங்கள். நமக்குள் இசை வெள்ளமெனப் பெருகலாம். பியானோ கட்டைகளின் வழி ஏதேனும் ஒரு உணர்வைத் தட்டி எழுப்பும் பறவையை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் பக்கம் 75 இல் உள்ள கவிதையின் வழியே.

புற அழுத்தங்களும் இல்லறப் பிரச்சினைகளும் அலுவலக நடைமுறைகளும் என பிரச்சனைகளுக்குள் வாழும் மனிதனுக்கு ஆனந்தங்கள் ஒரு நொடியில் சட்டெனப் பொழியும் தேன் துளி போல ஆகிவிடுகிறது. இன்றைய அவசர யோகத்தில் குழந்தைகளின் உலகம் எப்போதும் ஆனந்தமயமாகி விடுகிறது. அத்தகு உலகத்தில் நுழைய நாமும் குழந்தைகளாக மாற வேண்டிய அவசியம் இல்லை. நமக்குத்தான் தனித்துவமான சிறகுகள் தேவை குழந்தைகளின் உலகில் நுழைய என்று அறிவுறுத்துகிறது பக்கம் 77 ல் உள்ள கவிதை.

நூலின் இறுதிப் பகுதிகளில் காணப்படும் குறுங்கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான காலகட்டத்தையும் ஒவ்வொரு விதமான களங்களையும் நமக்குள் கடத்துகின்றன. சலனப்படாத மண், பசியைப் போக்கும் மண், குட்டி நிழலில் இளைப்பாறும் எறும்புகள், அறுவடைக் காலத்தை ஏக்கத்துடன் பார்க்கும் விவசாயி என இவரின் கற்பனையின் வழியாக விரியும் குறுங்கவிதைகள் வாசிப்பவரை எண்ணங்களின் வழியே நிறைய சிந்திக்கத் தூண்டுகின்றன. அப்படியான ஒரு குறுங்கவி பக்கம் 86

“வாசல் தெளிக்க மனமில்லை
தூங்கி விட்டுப் போகட்டும்
தெரு நாய். “

நினைவுகள் சிலருக்கு அமுதமாகவும் சிலருக்கு விஷமாகவும் மாறிவிடுகின்றன. காதல் தரும் நினைவுகளும் அப்படியே நம்மை அசைத்துப் பார்க்கின்றன பக்கம் 87 இல் உள்ள இக்கவிதையின் வழியாக

“எரிக்கவோ புதைக்கவோ
ரப்பர் கொண்டு
அழிக்கவோ முடியாத
உன் நினைவுகளை
என்ன செய்யட்டும்”

என வினவுகிறார்.

எண்ணங்கள் வழியே கனவுகளும் கற்பனைகளும் எதிர்காலத் திட்டங்களும் தேசத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் எதிர்காலத்தைப் பற்றிய குறிக்கோள்களும் உருவாகும்போது அவற்றை முறைப்படுத்த, நெறிப்படுத்தி வெளிப்படுத்த எழுத்து பலருக்கு கைகொடுக்கிறது. எழுத்தின் வழியே பிறக்கும் கவிதைகளும் இன்றைய காலச்சூழலையும் வெளிப்படுத்தி விடுகிறது. சமூகத்தை, காதலை, நினைவுகளின் மீட்டலை, பறவைகளின் வானத்தை என பியானோ கட்டைகளின் வழியே பறவையின் வானமென இத்தொகுப்பு நமக்கு காட்சிப்படுத்துகிறது.


நூல் விபரம்

நூல்: பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை

நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் :  ப்ரணா

வெளியீடு :  படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2023

பக்கங்கள்: 96

விலை: ₹ 120

About the author

இளையவன் சிவா

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய 'இளையவன் சிவா' திண்டுக்கல் மாவட்டம் - அய்யம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் அரசுப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். மின்மினிகள், தூரிகையில் விரியும் காடு ஆகிய இரண்டு ஹைக்கூ நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, படைப்பு கல்வெட்டு போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website