Getting your Trinity Audio player ready...
|
இலக்கிய பிரதிகளில் ஆதி தன்மை கொண்டது கவிதை. கற்பனைகள் மட்டுமின்றி அதிலிருக்கும் உண்மைகளே அதன் வசீகரம். கவிதைகளில் செயல்படும் காலமும், இடமும் அதன் நம்பகத் தன்மையை வலுவாக்கும். ” அறம் பொருள் இன்பம் அடைதலே நூற்பயன்” என்பதற்கேற்ப நாம் வாசிக்கும் நூல்கள் இருந்திட்டால் உருக்கொள்ளும் மகிழ்ச்சி பகிர்தலுக்குரியது.
மனித மனங்களில் சாதி,மத வேறுபாடுகளை உருவாக்கி, அதை கெட்டிப் படுத்திக்கொண்டே இருப்பதன் மூலம் ஆட்சியை தக்கவைக்கலாம் எனும் நம்பிக்கையின் கொழுத்த புன்னகையில் ஆளும் ஒன்றிய அரசின் கடந்த ஒன்பது ஆண்டுகளின் போக்குகளை அறிய ஒருவர் விரும்பினால் எள்ளளவும் தயக்கமின்றி பரிந்துரை செய்யும் தொகுப்பாக வந்திருக்கிறது சம்புவின் ” காவியேறும் ரத்தம்” கவிதை தொகுப்பு.
கருத்தியல் இல்லாத கலாச்சார செயல்பாடுகள் ஏதுமில்லை. ஒத்த கருத்தியலோடு இணைந்து செயல்பட சார்புத்தன்மை ஏற்படுவது இயல்பு. இச் சார்பு தன்மையை அரசியல் எனவும் கொள்ளலாம். தொகுப்பின் கவிதைகளில் உருக்கொண்டிருக்கும் சார்புத்தன்மை இடதுசாரி தன்மை கொண்டது மட்டுமின்றி எளியவர்களின் கைகளை உயர்த்தும் குரலாகவும் கவிதைகள் உள்ளன.
“……………
ஏகதிசையும் டிஜிட்டலால்
சுற்றிவளைக்கப்பட்ட
ஓர் சிறிய
இரை நீ
இந்தப் பிளேடினால்
நீயாகவே மணிக்கட்டின் நரம்புகளை
அறுத்துக் கொள்
தேசத்தின் பேராபத்து சிவந்த ரத்தம்
அது
காவிநிறத்தில் வழிகிறதாவென
காண விரும்புகிறார் மன்னர்.”
என முடிவுறும் ‘அசல் காவி’ எனும் கவிதையில் தொடங்கி காயாத ரத்தக்கறையுடன் / இம் மண் மீது ரங்கூரமிடும் காவியின் அதிகாரத்தை நேராக சந்தித்த சோஃபியவுக்கு, படுகொலை செய்யப்பட்ட தாத்ரி கிராமத்தின் முகமது அக்லக் நினைவாக, காதூவா மேய்ச்சல் நிலத்தில் குதிரை மேய்த்து திரிந்த இளங்குருத்து ஆசிஃபாவுக்கு 13 ஏப்ரல் 2018 ல் நடந்த கொடூரத்திற்கு, ஓர் தோள்சீலைக்காக தம் மூதாதைகள் பட்ட இழிதுயரங்களைக் கிஞ்சித்துமறியாத தமிழிசைக்கு, 2019 மார்ச் பொள்ளாச்சியில் நிகழ்விற்கு, என அவ்வப்போது அரசு திட்டமிட்டு நிகழ்த்திய அறமற்ற செயல்களுக்கு தன் எதிர்வினையாக மொழியில் அதன் குரூரங்களை வெளிப்படுத்துகின்றன சம்புவின் கவிதைகள். வாசிப்பில் நம்மை ஆற்றுப்படுத்த ஆங்காங்கே அரசியலற்ற கவிதைகளும் உண்டு.
“தீண்டிவிடும் தொலைவில் நச்சரவம்
நெளிகிற
ஆளரவமற்ற கொடு நிலமிது மகளே
உன் பாதையில் சூதானம் அவசியம்.”
எனத் தொடங்கும் ‘ கூடு திரும்புதல் கவிதையில் பெண்களுக்காக எத்தகைய உலகை கையளித்துள்ளோம், வெற்று அடிமைகள் பரிபாலிக்கும் ராஜ்ஜியத்தில் பெண்களின் சுதந்திரத் தன்மை என்னவாகி இருக்கிறது. நீதிக்காக கையேந்துபவர்களை நிராதரவாக்கும் பதர்கள் நிறைந்திருக்க உனக்கான கவசத்தை நீயே கண்டடை மகளே என நாமும் நம் மகளுக்கு சொல்ல வேண்டி இருப்பதை உணர்த்துகிறது இக்கவிதை.
“விசுவாச மருளேறிய இந்த வரிசை
ஒருபோதும் குலைந்துவிடக் கூடாதென்பது
ராஜ்ய நலனில்
அக்கறைகொண்டு விதந்தோதப்படுகிறது”
என்பனவற்றை உள்ளீடாக கொண்டிருக்கும் ‘விசுவாசம் ஓர் தேசிய நிர்பந்தம்’ கவிதை நடப்பு அரசியலின் வெளிப்பாடாக உள்ளது. அரசின் அதிகார எந்திரங்கள் மூலம் தான் நம்பும் சித்தாந்தத்தை அவசர அவசரமாக நடைமுறைப் படுத்தி, அதன் மூலம் ஆட்சியை என்றைக்கும் தங்களுக்கானதாக மாற்றத் துடிக்கும் அவலத்தை காட்சிபடுத்துகிறது கவிதை.
டில்லியன் கொடுங்குளிர், கடும் வெயில் என பாராமல் ஆண்டுக்கணக்கில் நிகழ்ந்த உழுகுடிகளின் போராட்டத்தை நசுக்க அரசு கைகொண்ட அருவருப்புமிக்க செயல்கள், தீநுண்மி நம்மை தகர்த்த போது அதை எதிர்கொள்ள அறிவியல்பூர்வ முன்னெடுப்புகளை விட்டு விளக்கேற்றி பஜனை பாடவைத்ததன் அவலத்தை கூறுகின்றன கவிதைகள்.
நிகழ்வுகள், சம்பவங்களை கவிதைகளாக்குதல் சரியானதா எனும் கேள்வியை எழுப்பிக்கொண்டால் இவைகள் நம் வாழ்வின் தொடர்ச்சி தானே, நம்மின் நகர்விற்கு முக்கிய பங்களிப்பு செய்யக் கூடியவையும் இவைகளே. வாழ்வோடு இயைந்த சம்பவங்கள் நிகழ்வுகளை வெறுமனே கடந்துவிட இயலாது தானே. இறப்பு தவிர்க்க இயலாத ஒன்று. அதற்காக செய்யப்படும் கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா. அதுவும் சாதி, மதங்களின் பெயரால் நித்தமும் அரங்கேற்றப்பட்டபடி இருக்கும் சம்பவங்கள் கவிதைக்குள் வந்திருப்பது சரியானதுதானே.
கரணம் தப்ப மரணம் எனும் சொல்வழக்குக்கேற்ப இந்த்தொகுப்பின் கவிதைகள் கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாக மாறிவிடும் சூழல் இருக்க, தனக்கேயான மொழியின் பரிச்சியத்தால் சம்பவங்களை கவிமொழிக்குள் கொடுத்திருப்பதில் சம்பு எதிர்கொண்டிருக்கும் சவாலை நம்மால் உணர முடிகிறது.
தனி நபர் துதி மூலம் இங்கு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஃபாசிச அரசியலின் கருத்தியல் திணிப்பின் விழிப்பு நிலையை சம்புவின் ‘காவியேறும் ரத்தம்’ தொகுப்பின் கவிதைகள் உணர்த்திக் கொண்டு இருக்கின்றன.
நூல்: காவியேறிய ரத்தம்
நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : சம்பு
வெளியீடு : வெற்றிமொழி வெளியீட்டகம்
வெளியான ஆண்டு :
பக்கங்கள்:
விலை: ₹ 100