Share :

இன்றைய கவிஞர்களில் முக்கியமான ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தின் கண்டாச்சிபுரம் குறுநில மன்னன் கண்டராதித்தன் பெயரைப் புனை பெயராகக் கொண்டவர்.

இதுவரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்: கண்டராதித்தன் கவிதைகள், சீத மண்டலம், திருச்சாழல். திருச்சாழல் மிகுந்த கவனம் பெற்ற கவிதைத் தொகுப்பு.

மரபின் சாயலும், பகடியும், சுய சரிதையின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் விரவி காணப்படுகிறது. இரண்டு வாரங்களாக இந்தக் கூடாரத்தில் தான் ஒதுங்கி நின்று கொண்டு இருந்தேன். பல கவிதைகளை இரண்டு முறை, மூன்று முறை வாசித்தேன். பெரும்பாலான கவிதைகள் நீண்ட கவிதைகள்.

மிகச் சிறப்பான ஓவியம் மற்றும் புத்தக வடிவமைப்பு.

எனக்குப் பிடித்த சில கவிதைகள்:

எந்தக் குழுவிலும் இல்லாத ஒருவர் இப்படித்தானே இருக்க முடியும்?

  • இருப்பு

“இந்த அந்தியின் அடிவானம்

இருளுக்குள் செல்லும்போது

அவர்களுக்காகவே நானும் அதனுடன்

நழுவிச் சென்று விடுகிறேன்”

காலம் தான் எல்லாவற்றையும் எப்படித் திருப்பிப் போடுகிறது. நாமும் இந்தப் பெரியவர் போல, ஏதாவது ஒன்றைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் தானே?

“பூங்காவின் அருகிருந்த

பாழடைந்த ஜட்காவை

அனுதாபத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்

முதியவர்.

ஜனங்கள் பரபரக்கும் வீதியில்

பிரேதத்தில் பழுப்பேறிய காலம்

ஜட்காவிற்காகக்

கொஞ்சநேரமாகக்

காத்திருக்கிறது”

மற்றொரு சிறப்பான கவிதை. கவிஞன் எப்போதும் தனியானவன் தானே? மரபும் எளிமையும் கலந்த அருமையான கவிதை:

  • தனிமையின் நல்வாழ்வு

“நண்பகலில்

இச்செடிகளுக்கு

நீ ஊற்றும் நீருக்கு

பாத்தி மடிப்பேன்

எட்டத் தெரியும்

நல்லூரில்

பூத்த

பிச்சிப்பூ முடிக்க

நாள்தோறும்

நார் தருவேன்

பிச்சையென

எது தந்தாலும்

ஏற்றுக்கொள்வேன்

நான் தனியன்

என்றுணர்ந்து குரைக்கும்

கூட்டு நாய்களுக்கு

செவிசாய்க்காமல்

நடையைக்கட்டுவேன்

எப்போதும்.”

 

“இல்லை

என்ற ஜீவன்

ஒரு சுடரைப்போல

அலைந்துகொண்டே

நித்தியமானதாக

இருக்கிறது.

இருக்கிறது

என்னும் ஜீவன்

ஒருமுறை தீபத்தாலும்

மறுமுறை அதன்

நிழலாலும்

முற்றுப்பெற்றது.

யார் சொன்னது

நான்தான்.”

மற்றும் ஒரு மிகச் சிறந்த கவிதை. வானம் எல்லாம் சுற்றித் திரிந்த கிளிக் கூட்டில் வாழ்வது கஷ்டம்தான். வாழ்ந்து கெட்ட வாழ்க்கை வலி நிறைந்தது:

  • தாழ்வாரம்

“பணியிலிருந்து எப்போது

வீடு திரும்பினாலும்

நீங்கள் துக்கமாக இருப்பதாக

பிள்ளைகள்

புகார் சொல்கிறார்கள்

எவ்வளவுதான்

பட்டும் படாமலிருந்தும்

நாள்தோறும்

சிறுகசப்பு தட்டிவிடுகிறது

தோற்றத்தில் திண்ணை முற்றம்

வாசல் தோட்டமென

விசாலமாக இருக்கிற மனதிற்கு

தாழ்வாரத்தைப் பணிந்து

வாழத்தெரியவில்லை”

தொகுப்பில் மற்றுமொரு சிறப்பான சிறு கவிதை. கொடிது கொடிது இளமையில் வறுமை. இக்குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? எத்தனையோ கேள்விகளை எழுப்புகிறது:

  • பசி

“அப்பா இல்லாத

வீட்டில் அம்மாவுடன்

வேறொருவர் இருந்ததைக்

கண்ட அக்காளும், தங்கையும்

அதோ அந்த வேம்படியில்

பசியோடு காத்திருக்கிறார்கள்

அம்மாவும் அவரும்

எப்போது வெளியே வருவார்களென.”

இக்கவிதையில் வரும் கவிஞரின் வாழ்க்கை அவருடையது மட்டுமா என்ன?:

“விதியும் வாழ்வும்

ஊழும் நியதியுமான

வண்டிச்சக்கரம்

எல்லாத் திசைகளிலும் ஓடுவதைக் கண்டேன்”

கொரோனா பற்றிய நீண்ட கவிதை ‘உதுமான் நான் உலகளந்த பெருமாள் பேசுகிறேன்’, எள்ளலும் பகடியும் கலந்த மிகச்சிறந்த கவிதை.

அவர் கவிதையில் நகுலனின் தொனி.

உடைந்த வாழ்வு மற்றுமொரு சிறப்பான, பல கேள்விகளை எழுப்பும் கவிதை:

“மத்தியானத்தில்

நீர் தளும்பாதிருக்கிற

குளத்தின் எதிரில்

நின்று கொண்டிருப்பவனுக்கு

குடத்தில் குளத்தைச் சேகரிக்கும்

பெண்ணின் மீது ஆவல்

பைய உருண்டு திரண்ட

அந்த ஆவல்

வண்ணத்திரட்சியான

நீர் குமிழின் மீது அமர்கிறது

ஒரு மீன்கொத்தி அந்த

மத்தியானத்தின் குளத்தில்

தளும்பாத தண்ணீரை

தளும்பும் ஆவலை

ஒரே கொத்தில்

கொத்திச் சென்றது”

பகடிக்குப் பல கவிதைகள்: நிறைகுடம், வள்ளலார், பரிசு, எழுத்தை வைத்து, நாய்.

நாய் பற்றிய கவிதை, நாய் பற்றியது மட்டுமல்ல.

கவிதை எழுவதைப் பற்றிய கவிதை சிறப்பு. நாமும் கவிஞரைப் போல அந்தப் பறவையைப் பிடித்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்?

“கவிதையொன்றை
எழுத முற்படும் போது
அதை விரும்பாது
தாளுக்கும்
எழுதுகோலுக்குமிடையில்
இருந்த பறவை பறந்து செல்கிறது

நான் அந்தப்பறவையைப்
பிடித்துவிட்டேன்
ஆனால் அலறும் அதன் குரல்
வெகுதூரத்தில் கேட்கிறது”

தன்மானமும் சுயமரியாதையும் கவிஞருக்கு அழகு:

மனம் கவிதையின் கடைசி வரிகள்:

“கேட்கமாட்டேன்

இந்தப் புறம்போக்கிடத்திலேயே

வசித்துக் கொள்கிறேன் “

மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவம். கண்டருக்கு வாழ்த்துகள்.!!


நூல்:  பாடிகூடாரம்

நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் :  கண்டராதித்தன்

வெளியீடு : சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

பக்கங்கள்:

விலை: ₹ 130

[/su_service]

Author :

கண்ணன்
கண்ணன்
சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments