cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 விமர்சனம்

“பகடித்தன்மை மிளிரும் வீடு”


“சிவாஜி கணேசனின் முத்தங்கள்” தொகுப்பை முன்வைத்து

 

“சிரிப்பு என்பது ஆன்மாவின் மொழியாக இருக்கிறது”
– பாப்லோ நெருடா


விதையை நோக்கி ஈர்ப்பது எதுவாக இருக்கிறது என்று நோக்கினால் அது வெளிப்படுத்தும் கேள்விகளே ஆகும். கவிஞனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் அது, சமுதாயத்தின் மீதான எள்ளல், நகைச்சுவையுடன் கூடிய குரல் வாசகனை பாதிக்கிறது. குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் நகைச்சுவைத் தன்மை இசையின் கவிதைகளில் படர்ந்து கிடக்கிறது. சரஸ்வதியின் நல்லாசியுடன் உதிரும் சொற்கள் எனக்கூறி அறிமுக உரைக்குள் புகுகிறார் ஆசிரியர், முன்னுரையில், கவிதை என்பது என்று துவங்கி ஏதாவது சொல்லலாம். உங்களுக்குப் போர் அடிக்கும். நீங்கள்தான் எத்தனை கவிதை என்பதுவைப் பார்த்து விட்டீர்கள். எத்தனை எத்தனையோ பேர் என்னென்னவோ சொன்ன பின்னும்,இன்னும் சொல்வதற்கு ஏதேனும் இருப்பதுதான் கவிதையின் அழகா என மொழியும் கவிஞரின் மனம் ஈர்ப்பதாக உள்ளது.

தென்றல். என்றழைக்கப்படும் “ஞாயிற்றுக் கிழமையின் காற்று” கவிதை விடுதலையை எண்ணி மகிழ்கிறது. விடுமுறையைக் கொண்டாடுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கொதிக்கும் மணல். உணராது விளையாடிக் களிக்கும் இன்ப மனோ நிலையுடன் ஒரு ரப்பர் பந்தெனத் துள்ளிக் குதிக்கிறது. கண்ணீரின் துளியும் தித்திக்கும், நின்று நிதானமாய் அழ வாய்ப்புக் கிட்டாத போது, ஞாயிறு தித்திக்கிறது கண்ணீரோடும்.

யதார்த்த வகையிலான வெளியைப் பேசும் கவிதைகள் இசையினுடையவை. அனுபவத்தின் வழியினில் தோன்றும், வேறுபட்ட கோணங்களைச் சித்தரிப்பவை எனவும் வகைப்படுத்தலாம்.

“கலைத்தன்மை மிளிரும் வீடு” என்ற கவிதையில்,

“இது போல் ஒரு வீடு வேண்டும்”
என்று நீ கேட்ட போது
என்னிடம் பாக்கெட்டில், பீரோவில்
வங்கிக் கணக்கிலென
ஒரு பதினான்காயிரம் ரூபாய் இருந்தது.
இதை நான் உணர்ந்த போது
அம்மாளிகை என்னைப் பார்த்து சத்தமிட்டுச் சிரித்தது “

எனத்துவங்குகிறது கவிதை, சொற்களாகிப் பீறிடும் அன்பின் பெருக்கு, சொற்களால் ஒரு வீட்டைக்கட்டுகிறது. தன் அனுபவ வெளியை தனித்த ஒரு படைப்புலகாக மாற்றுகிறார் இசை.

 

 

‘நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் பயணிக்கும் எறும்பு” கவிதை வாழ்வின் மாற்றத்தை, இயல்பினின்று திணிக்கப்படும் அதன் எள்ளலைப் பகிர்கிறது. அதே வகையிலான “டம்மி இசை”மற்றும் ஒரு கவிதையாக அமைகிறது.ஆசுவாசம் கொள்ளும் மனித மனம், தன்னைப் போன்றதொரு பிரதியை உருவாக்கி, வீட்டில் அமர்த்திவிட்டு, தான் தப்பித்துக் கொள்கிறது. பிரதியான பிறவி என்னவாகிறது என்னும் வினாக்களை நம் முன் வைக்கிறது கவிதை.

“உங்களது தன்னுணர்வற்ற மனம் சொல்வதுதான் சரியானது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அதில் தான் காலம் காலமாக உள்ள ஞானம் உள்ளது. நீங்கள் பல லட்சம் பிறவிகள் எடுத்துவிட்டீர்கள். அதில் இந்த தன்னுணர்வுள்ள மனம் இந்தப் பிறவிக்குச் சொந்தமானது.” என்ற ஓஷோவின் வார்த்தையின் படி, பிறவிக்குச் சொந்தமான தன்னுணர்வு நிலையில், தோன்றும் ஞானம் மேற்கூறிய கவிதையின் வழியே தனித்துவமான புரிதலை முன்வைக்கிறது.

இப்பிரபஞ்சத்தின் எல்லா உறவுகளோடும் இணைந்தே கவிதையானது பயணிக்கிறது. தொலைதூரமாகும் உறவுகளின் சிடுக்கைக்கொண்டு வருகிறது “குட்டிச் செம்பொன்” கவிதை.

தாழ்ந்த குரலில் உருக்கொள்கிறது. ஒரு சச்சரவு, வீட்டில் அப்பாவும், அம்மாவும் ஏசிக் கொள்கிறார்கள்; அப்பா உதைக்கப் போகிறார்.அம்மா ஒரு சொல்லைப் பழுக்கக் காய்ச்சி அப்பாவின் நெஞ்சில் தேய்க்கிறார் உறவாட வேண்டிய இருவரும், தாம் பெற்ற குழந்தைகளின் முன், மூர்க்கமாய் சண்டையிடுகின்றனர். இரண்டு வயதே ஆன குழந்தை என்ன செய்யும். ஐந்தாம் வீட்டின் சுவரை முட்டிக் கொண்டு அழுகிறது,

குழந்தையின் இயல்பில் குடும்ப வன்முறையின் ஒடுக்குமுறையை. ஸ்பரிசிக்கச் செய்யும் நூதன மனித மனதை கேள்விக்குள்ளாக்குகிறது.

பிரபஞ்சனின் “மரி என்கிற ஆட்டுக்குட்டி” என்ற கதையில் வரக்கூடிய சிறு பெண் எனக்கு இந்த கவிதையைப் படித்ததும் நினைவுக்கு வந்தாள். பெற்றோர்கள் தனது சொந்த உணர்ச்சிகளுக்கு உள்ளாகி குடும்பம் என்ற அமைப்பில் இருந்து அவர்கள் பெரிதென மதிக்கும் அந்த உணர்வு அவர்களை தங்களது குழந்தைகள் என்ற உறவிலிருந்து பிரித்து விடுகிறது. அப்படியான சூழலில் சிக்கித்தவிக்கும் மரி போன்ற குழந்தைகள் எவ்வாறு இந்த சமூகத்தோடு பொருத்தப்பாடு அற்ற நிலையில் அல்லல்படுகிறார்கள் என்பதான அந்த சிறுகதையை மிக சிறப்பான முறையில் பிரபஞ்சன் அவர்கள் எழுதியிருப்பார்.

இத்தொகுப்பின் தலைப்பாக வரும் கவிதை “சிவாஜி கணேசனின் முத்தங்கள்”. தனி மனிதனின் வாழ்வும் அதன் வித்தியாசமான அனுபவமும் என்ன வாழ்க்கை இது என்பது போன்ற ஏளனத்தையும் ஏக்கத்தையும் உண்டாக்குவதாக இக்கவிதையை அமைத்துள்ளார் இசை. அன்பின் அளவானது எல்லை மீறுகையில் இவ்வுலகில் எந்த ஒரு அமைப்பிலும் ஒட்டாத ஒரு சித்திரமாக கவிதை சொல்லும் கதாபாத்திரம் அமைகிறது.

சமூகத்தின் அவலத்தை கவிதை எனும் சிரிப்பால் அதன் பகடி மொழியால் கார்ட்டூன் சித்திரம் போல தீட்டுகிறார் இசை. “ஒரு கோடியே நூற்றியெட்டுத் துயரங்கள்” என்னும் கவிதை வரலாற்றை அதன் பாசாங்குத் தனத்தை பகடி செய்கிறது.

“இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டுத் துயரங்கள் இருக்கின்றன,
வரலாறு தத்துவம் மற்றும் இலக்கியங்களால்
இன்னும் ஆயிரத்திற்கும்
அதிகமான துயரங்களைக்
கண்டறிய முடியவில்லை
உலகின் தலை சிறந்த
ஓவியர்கள் வசமிருக்கும்
நூற்றுக்கும் அதிகமான வர்ணங்களால்
ஒரு கோடியே நூற்றியெட்டுத் துயரங்களைத் தீட்ட இயலவில்லை”

எனத் துவங்கும் கவிதை “ஒரு துயரமும் இன்னொரு துயரமும் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையே நாம் வரலாறு என்கிறோம்” எனும் அதிர்ச்சியுடன் முற்றுப்பெறுகிறது.

“அன்பு அவனது இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றது”, “லட்சுமி டாக்கீஸ்” , “பசி வறுக்கப்பட்ட கோழியைப் போல் இருக்கிறது” போன்ற கவிதைகள் தன் நனவு மற்றும் நனவிலி நிலையிலிருந்து சொற்களை கொணர்த்துகிறது. “வாழ்க்கையிலே ஏற்படும் அநுபவங்களும், அதிர்ச்சிகளும் அழிந்து போவதில்லை, அவை நம் நனவிலி நினைவில் ஆழமாக பதிந்து போகின்றன” எனக் குறிப்பிடும் பிராய்டின் சிந்தனையை இந்தக் கவிதையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். மூதாதையர் அனுபவங்களும், அவர்களுடைய இச்சைகளும் மறைந்து பின் அவை நனவிலியாக உருக்கொள்கின்றன.

ஒரு பிச்சைக்காரனின் பசி குறித்து இக்கவிதை கூறினாலும், பன்னெடுங்காலமாக அவன் உணவு, தேக்குமரக் கதவுகளாலும், காம்பவுண்டுச் சுவர்களாலும் பாதுகாக்கப்பட்டு பத்திரமாய் இருக்கிறது; நாய்கள் அவை வாழ்வாங்கு வாழட்டும் என இச்சமூகத்தின் கண்களை, அதன் காணவியலாத்தன்மையை, ஏசுகிறார் இசை.

தனது 50க்கும் மேற்பட்ட கவிதைகள் வழியாக சமூகத்தின் நாக்கைத் தன் எள்ளல் கத்தியால் இலகுவாகத் துண்டிக்கும் இசையின் இக்கவிதைத் தொகுப்பு அவசியம் படிக்க வேண்டிய ஒன்றாகும்.


  • கவிதைத் தொகுப்பு : சிவாஜி கணேசனின் முத்தங்கள்
  • ஆசிரியர் : இசை
  • பதிப்பு ஆண்டு : 2011
  • வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்
  • விலை :  ₹95

About the author

அ.ரோஸ்லின்

அ.ரோஸ்லின்

மதுரை மாவட்டம், டி.ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். இளம் பருவத்திலேயே கவிதை இயற்றும் திறன் கொண்ட இவர், கல்லூரி பருவத்தில் தனது முதல் கவிதையை எழுதினார். தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும், வரலாறு,கல்வியியல், போன்றவற்றிலும் பட்டங்கள் பெற்றவர். இவர் கவிதைகள் பெண்ணின் அக உணர்வுகளையும், உறவின் நெருக்கடியையும் மிக நேர்த்தியாக பேசுபவை. சங்க கால பெண் புலவர்களுக்கு இணையான கவியாளுமையை கொண்டவர். இவரின் கவிதைகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. சுற்றுபுற சூழல் சார்ந்த கட்டுரைகளும் எழுதி வருகிறார். தற்போது அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

படைப்புகள் :
மழை எனும் பெண்- 2011,

அழுகிய முதல் துளி- 2015.

மஞ்சள் முத்தம்- 2015,

காடறியாது பூக்கும் மலர்- 2017,

ரோஸ்லின் படைப்புலகம் (2017),

பயணத்தின் மொழி (2020)

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
மாறன்

யாருக்கும் எளிதில் பிடிபடாத சிந்தனைகளை இசை எளிதில் கைபற்றிவிடுகிறார். அசாத்தியமான கவிதை அசைவுகள் உடையது இசையின் கவிதைகள். கூர்மையான திறனாய்வு ரோஸ்லினுக்கு பாராட்டுக்கள் ! நுட்பம் இதழாருக்கு நன்றி. தொடரவும்.

You cannot copy content of this Website