cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 விமர்சனம்

ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம்- கவிதைத் தொகுப்பு மதிப்புரை


மொழி என்பது பேச,  எழுத பயன்படுத்த உதவும் கருவி மட்டுமல்ல ஒரு இனத்தின் வரலாற்றை, பண்பாடு கலாச்சாரத்தை வரையறுத்து அந்த இனத்தை வாழ வைப்பது என்று மொழி குறித்து விளக்கம் தந்து அந்த மொழி இந்தக் கவிதைத் தொகுப்பில் மிகுந்திருப்பதாக பதிப்புரை தந்திருக்கின்றார் பாவையர்மலர் ஆசிரியர் ம.வான்மதி அவர்கள்.

 “பாப்பாக்குடி எனும் 

பச்சை வயலூர்த் 

தோப்புக் குயில் இவன் 

தொடுப்பது எல்லாம் 

யாப்பில் அடங்கிய 

யவ்வனத் தமிழின் 

பூப்புக் காலப் 

புதிய கூவல்கள். 

.

.

முத்திரை அழகுற 

சேயின் முகத்தில் 

முத்தம் ஒன்றை

இடுவது போல்தான்”

என்று வாரி அணைத்து முத்தமிட்டு தந்தைமையோடு அணிந்துரை தந்திருக்கின்றார் கல்யாணி சி எனும் வண்ணதாசன் அவர்கள்.

கவிஞர் புதிய பரிணாமத்தையும் பரினாமத்தையும் தந்துள்ளார். பரிமாணம் பெறுவது, பரினாமம் மாறுவது முதிர்ச்சியின் அடையாளம். அது இந்தத் தொகுப்பில் நன்கே தெரிகிறது என்று மதிப்புரை வழங்கி இருக்கின்றார் கவிஞர் ஜெயதேவன் அவர்கள்.

உவமானம், உருவகங்கள் கையாளப்பட்டு காட்சிப் படிமங்கள் நிலைத்திருக்க வேண்டும். அதுவே கவிதை. தாம் எழுதியதெல்லாம் கவிதை என நினைத்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் தனக்கு தெரிந்த மொழியில் சந்தத்தில் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் பாப்பாக்குடி இரா. செல்வமணியின் என்னுரை ஈர்க்கத்தான் செய்கிறது.

உண்மைதான். எல்லாரும் இதுதான் கவிதை என்று பறைசாற்றிக் கொண்டு இருக்கின்ற போது, தூயதமிழில், சுவைபட,  எதுகை மோனை நயத்தோடு, சந்தத்தோடு, பாடல் புனைவதென்பது அத்தனை எளிதல்ல. அதனை சாத்தியப்படுத்தி இருக்கின்றார் செல்வமணி.

தமிழே நீ என்று துவங்கி எல்லாமுமானவன் என்று நிறைவு செய்திருக்கின்ற கவிதைத் தொகுப்பு இது.  எல்லாமுமானவனாக இருப்பவரும் தமிழுக்காக தன்னையே தந்தவரும் கலைஞர். தமிழும் கலைஞரும் இவருடன் பிறந்த உடன்பிறப்புகள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

தமிழேநீ.

“ஆழிப்பெருங்கடலின் 

அறிய முடியா

ஆழமும் நீ 

மழலை மொழியும் நீ 

மங்கையர் விழிகளின் 

ஒளியும் நீ 

என் உயர்வும் நீ 

உயிரும் நீ!” என்று தமிழைப் பாடியதில் இவருடைய தமிழ்ப்பற்று தெரிகிறது. கூடவே நம்மையும் அதே வாஞ்சையோடு தமிழப்பற்று கொள்ளவும் தூண்டுகிறது.

அலைகள்.

முற்றுப்பெறாது தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும் அலைகளைப் போன்று இவருடைய காதல் நினைவுகளும் வீசிக் கொண்டே இருக்கின்றது என்பதனை அழகாக செதுக்கி இருக்கின்ற வரிகள் இவை.

“விழிகளின் சந்திப்பு 

காதல் 

மொழிகளின் சந்திப்பு 

நட்பு 

இரண்டுமே 

சந்திப்புகளுக்கு 

பின்னதான 

பொழுதுகளை 

சங்கடப்படுத்த 

செய்கின்றன… 

இன்னும் 

கொஞ்ச நேரம் 

பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமோ? இன்னும் 

கொஞ்ச நேரம் 

பேசிக்கொண்டு இருந்திருக்கலாமோ?”

என்று பூட்டிக்கொள்ளாத வரிகள் மூலம் நம்மைக் கட்டிப் போடுகிறார்.

நிலவைப் பார்த்து பாடும் கவிஞர்கள் நிறைய பேரை நாம் கண்டிருக்கின்றோம். கவிதைகளையும் கேட்டிருக்கின்றோம். சூரியனைப் பாடுகின்ற ஒரு சிலரில் இவரும் ஒருவராகிப் போகின்றார். அழகோவியம் என்று தலைப்பிட்டு சூரியனைப் பாடியிருக்கின்றார்.

அழகோவியம்.

“ஒவ்வொரு நாளும் 

கண் நிறைந்த 

பொழுதுகளின் 

எண்ணங்கள் சுமந்து வண்ணங்கள் குழைத்து 

பொன்னென மிளிர்ந்து 

விண்ணிறங்கி 

விடை பெற்றுச் செல்லும் 

அந்த 

அந்திச் சூரியன் 

அழகொன்றே 

இவ்வுலகில் 

ஆகச்சிறந்த 

அழகோவியம்” என்று அந்திசாயும் சூரியனை நம் அகக் கண் முன் கொண்டு வந்து தாலாட்டுப் பாடுகின்றார் .

எது உயிர்ப்பு? என்று கேள்வி கேட்டு

“அசைகின்ற

நிலைதானே

அழகும் உயிர்ப்பும்”

என்று விடை தந்திருக்கின்ற பங்கு அவருக்கே உரியது.

ரைஸ் என்று சொல்லிக் கொண்டும், சோறு என்று சொன்னாலே ஏதோ ஒருவித தவறான வார்த்தையினை பேசியது மாதிரி நமக்குள் திணிக்கப்பட்டதைத் தோண்டி எடுத்து இழப்பு எனும் இக்கவிதை மூலம் கேள்விக்கணை தொடுத்திருக்கின்றார்.

இழப்பு.

“காளைகள் தலையசைக்க

கலப்பையுடன் கால்பதித்து

கவனமாய் நெல் விதைத்து

காளையரும் கன்னியரும் 

கதிரறுத்து கட்டு சுமக்க 

கண் முன் கண்டு மகிழ்ந்த 

காட்சியெல்லாம் கனவுகளாய்

பழந்தமிழர் பண்பாடாய்… 

இழந்து விட்டோமோ

இயந்திரங்களின் ஆட்சியில்

இதயங்களின் இணைப்புகளை?” என்று பாடுகின்றார்.

 

ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம் .

இதுவே இப்புத்தகத்தின் தலைப்பாகும்.புத்தகத்தின் தலைப்பினில் கவிதை என்றால் கேட்கவா வேண்டும். ஒரு வரவேற்பு அறை எப்படி இருக்கும் என்பதனை சொல்லி அவற்றையெல்லாம் விட அன்போடு வீட்டிற்குள் அழைத்து கேட்கும் ஒற்றைச் சொல்வான தண்ணி குடிக்கிறீங்களா? என்ற அன்பின் பரிமாணத்தில் தான் வரவேற்பு இருப்பதாக கவிதையினை நிறைவு செய்திருப்பது உண்மை. மோப்பக் குழையும் அனிச்சம் என்பார் வள்ளுவப் பெருந்தகை. வரவேற்பு கிடைக்கவில்லை எனில் முகர்ந்தாலே தலைகவிழ்ந்து கொள்ளும் அனிச்சம் பூவைப்போல வருபவரின் முகம் வாடிவிடும் என்பதனை வள்ளுவப் பெருந்தகை சுட்டி இருப்பார். அதற்கு சற்றும் குறைவில்லாதவை இந்த வரிகள்

“ஒற்றைக்குவளையின் 

நீரில் இருக்கிறது 

எனது உயிர்ப்பு!” என்று நிறைவு செய்திருப்பதில் அந்த வரவேற்பறை நம்மை வரவேற்கத்தான் செய்கிறது.

ஈடாகுமோ?    

“அசலூரு போனாலும் 

அஞ்சாறு நாளானாலும் 

கண் துஞ்சாது 

காத்திருந்து 

கையில் கிடைத்த 

அம்மாவின் 

கடிதம் வாசித்து மகிழ்ந்த பொன்னான நாட்களை 

கண்முன் தந்திடுமோ 

உன் கைபேசி?…

என்று கைபேசி வந்ததிலிருந்து நாம் தொலைத்த வாழ்வினை பட்டியலிட்டு, இவை நம்மை ஈடுசெய்லதில்லை என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

 

உங்களுக்கு

 

“மோர் வாங்கலையோ மோர் 

என்றொரு

குரல் கேட்டு 

வீதிக்குச் சென்றால்  

பத்துப்பைசாவுக்கு 

பாதி சொம்பினை 

நிறைத்துத் தருவார் பாக்கியலட்சுமி அக்கா…

தண்ணீராகத்தானிருக்கும்

ஆனால் 

தங்கியிருக்கும் சுவையில் 

மதிய உணவு தானாகப் போகும் இப்பவும் வாங்குகிறேன் 

பத்து ரூபாய்க்கு 

ஒரு குச்சி டப்பா மாதிரி கடைல சொத்துனு சோத்துமேல

விழத்தான் செய்யுது 

கட்டியாக 

ஆனால் 

ஏதுமற்ற 

சுவையுடனே.! 

உங்களுக்கு?”

என்று கேள்வி கேட்டு நிறைவு செய்திருக்கும் கவிதையில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அந்தத் தண்ணீரின் சுவை பொய்த்து கட்டியாகினும் கிடைப்பதில்லை என்பது ஒரு வகையாயினும் அந்த அன்பு இப்பொழுது கிட்டவில்லை என்பதையும் சுட்டுகிறது. தாராளமயமாக்கலுக்குக்  கட்டுப்பட்டு கட்டியாகிப் போனது அன்பு என்று வருந்துகின்றார். நம்மையும் வருத்தமுறச் செய்கின்றார்.

மல்லுக்கட்ட மனமின்றி.

“தொலைக்காட்சி களவாடுகிறது

 தொலைக்காட்சிக்கான நிமிடங்களை 

உறவுகள் வந்து உரிமையாக்கி விடுகிறார்கள் 

உறவுக்களுக்கான நிமிடங்களை

உறக்கம் குடிபுகுந்து தனதாக்கிக் கொள்கிறது 

உறக்க நிமிடங்களை 

கைபேசி கையிலெடுத்துக்கொள்கிறது

கைபேசி நிமிடங்களுக்குள்

கவிதை நுழைந்து கலைத்துவிடுகிறது

கவிதைக்கான நிமிடங்களையெல்லாம்

நோய்நொடிகள் வந்து திருடிச் செல்கின்றது…”

என்று இன்று கைபேசி திரையில் விழுந்து கிடக்கின்ற மாயையை கண்முன்னே விரிகின்றார்.

கோழிக்காலம்.

“அடைக்கோழி 

அறைக்குள்ள 

அறியாம சென்றுவிட்டு 

அதன் விரட்டலில் 

அலறியடித்து

ஓடி வந்ததொரு காலம்! 

.

.

வேகமாக வண்டியில 

பயணிக்கும் பொழுதுகளில்

தெருவுக்கு இரண்டு கடையில

கம்பிக்கட்டுக்குள்ள

மலங்க மலங்க 

விழித்துக் கொண்டிருக்கும்

வெள்ளை கோழிகளை!’

அந்த அடைகாத்தல் தொலைந்து போனது. அனைத்தும் மறைந்து போய் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் அந்த வெள்ளை கோழிகளிடமும் ஒன்றுமேயில்லை நிறம் மட்டுமே வெண்மை என்று சொல்வதில் வேறு ஒரு பரிமாணத்தை பதிவு செய்திருக்கின்றார்.

அழகின் இருப்பு.  

“முருங்கை கம்பெடுத்து 

முனையில் சாணியிட்டு

முற்றத்தில் நட்டு வைத்து 

மூன்றாம் நாள் பார்க்கையில்

கிளை விரும்பி வெளியேறும்

முளைக்குருத்தின் பசுமை!”

இத்தனை அழகியலோடு இந்த வரிகளை வடித்திருப்பதில் நிகழ்கின்றோம். வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் தேவை. முருங்கை விருத்தி செய்யும் என்பது தொன்று தொட்டு நம்பி வரும் நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் கூட. அந்த முருங்கைக் கம்பை நட்டு வைத்து அதன் முனையில் சாணி வைத்து மூன்றாம் நாள் துளிர்க்கும். அந்தத் துளிர்ப்பு கிளம்பி வெளிவரும் சிறுஇலை குறித்து அத்தனை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் பாங்கு இனிது. இயற்கையின் அழகை சொன்னவர் காதலியின் அழகியலையும் சொல்லாமல் விடுவாரா என்ன?

“கார்மேகப் பொழுதொன்றில்

காற்றசைத்து விளையாடும் கன்னியரின்

காதோர 

ஒற்றை முடியசைவு 

தருகின்ற செய்திகள்! 

உலகமெங்கும் அழகின் இருப்பு.”

 

நிறங்கள்.

 வெள்ளை நிறமே நிறம் என்று கொண்டிருக்கின்ற போலி உறவுகளிடம் இல்லையில்லை கருமையே நம்முடைய உண்மையான நிறம் என்று கண்முன்னே காட்சிமைப்படுத்துகின்றார்.

“படிக்கட்டுகளாக அடுக்கப்பட்டிருந்த 

பளபளக்கும் வளையல்கள் 

அவள் கைகளை அசைத்திடும் போதெல்லாம் 

ஆயிரம் கதைகள் பேசின…

அவளது மேனியின் கருத்த நிறத்தைப்பார்த்து 

நிராகரித்துச் செல்வதெல்லாம்

நிலையில்லா உலகில்

நியாயமாகப் படவில்லை எனக்கு..!”

என்று கருப்பு என்று தட்டிக் செல்வோரையெல்லாம் குட்டி தவறு என்றுரைக்கின்றார்.

 

யாருக்காக எனும் கவிதையின் நிறைவு வரிகள் என்னை வெகுவாகவே ஈர்த்தன.

 

“உன் நினைவுத்தூசிகளின் உறுத்தல்களோடு 

விழி நீர் வழிய 

பயணிக்கிறது என் வாழ்வு

யாருக்காக என்பதை அறியாமலே!”

உண்மையில் நினைவுத்தூசிகளின் உறுத்தல்கள் கண்களுக்குள்ளே இருந்து கொண்டுதானிருக்கின்றன.

 

என்றாவது.

“உன் விழிகள் சொல்லும்

மொழியகராதி

ஒன்றினை

படைத்தை தீருவேன்” என்று சூளுரைக்கின்றார்.

 

சொந்த முகம்.

 

“உயிரைச் சுமக்கும்

உடலாக வாழ்கின்ற

மனிதனின் வாழ்வில்

எது சொந்த முகமாக

இருக்க முடியும்

இடுகாட்டில்

படுத்திருக்கும்

அந்த முகம் தவிர?”

இதனை உணர்ந்து நாம் இனி தேவையற்ற அலுங்கல் குலுங்கல்களை விட்டுவிடலாம். அதுவே நமக்கான உண்மை முகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

மழைக்காலம்

 

“குளித்து முடித்து காத்திருக்கின்றன 

மரங்கள்… 

காற்றே 

இன்னுமென்ன தூக்கம்? 

தலை துவட்டச் செல் 

தாமதமின்றி!!”

என்று மழை வடிக்கின்ற நீரினை தலை துவட்ட காற்றைக் கட்டளையிடுகின்றார்.

 

பார்வைகள்.

“ஒரு பெரு மழையின் 

ஓய்தலுக்குப் பின்னரான

இந்தப் பொழுதில் 

நீண்ட நேரமாக 

கத்திரிப்பூ செடியின் 

இலைமுனையிருக்கும் மழைத்துளி

எப்போது 

விழக்கூடும்?” 

இந்த வரிகள் அழகியலின் உச்சம். மழை நிறைவுற்ற பின் நிறைவு துளிகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றன அந்த பூ. அது சிந்த எத்தனிக்கிறது. அந்நிறைவான மழைத்துளிகளை  கிரகிக்க காத்திருக்கிறதாம் பூமி. இந்த காட்சியை கண்முன் காட்சிமைப்படுத்தியிருக்கின்ற இந்த வரிகள் நம் நெஞ்சை நிறைக்கின்றன.

காதல் கவிதைகள் மட்டுமல்ல, சமூகச் சூழல்கள் குறித்தும் பேசியிருக்கின்றார். யானைக்காக பரிவு காட்டியிருக்கின்றார். பரணிக்கு பரணி பாடியிருக்கின்றார். சிட்டுக்குருவிக்கு சமாதானம் சொல்லியிருக்கின்றார். பாரதி, பாரதிதாசன், கலைஞர் என்று தமிழ் நெஞ்சங்களை கவிதைக்குள் கவிதையாக வடித்து பெருமை சேர்த்திருக்கிறார்.

நிறைவாக ஒன்றும் கவலை வேண்டாம் என்று எழுதியிருக்கின்ற கவிதையினைக் காண்பித்து நம் வாழ்வினை எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? அந்த வாழ்வு நிம்மதியான வாழ்வுதானா? என்று கேட்பதில் உண்மை இருப்பதை உணர இயலுகிறது.

 ஒன்றும் கவலை வேண்டாம்.

“நிமிடத்திற்கொருமுறை மரங்களின் அசைவினில் 

மனம் கொள்பவரா நீங்கள்? மணிக்கொருமுறை 

மழலைகளின் புன்னகையைத் தேடுபவரா நீங்கள்? 

நாளுக்கொருமுறை துணைவியின் அன்பினில் 

கரைபவரா நீங்கள்? 

வாரத்திற்கொரு முறை 

தாயின் நினைவால் 

தவிர்ப்பவரா நீங்கள்? 

மாதத்திற்கொருமுறை 

நிலவோடும் நட்சத்திரங்களோடும்

நேசம் கொள்பவரா நீங்கள்?

வருடத்திற்கொருமுறையேனும் வருகின்ற

விருந்தினர்களுக்காக வாசல் நிற்பவரா நீங்கள்? 

ஒன்றும் 

கவலை வேண்டாம்! 

நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது 

உங்களின் வாழ்வு!”

எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வை  மீட்டெடுத்து மீண்டும் இப்படி வாழ வேண்டுமென்று நமக்கு அறிவுறுத்துவதைக் கேட்போம்.இனிதாய் வாழ்வோமென்று கரம் குலுக்கிக் கொள்வோம்.

ஒரு வரவேற்பறையின் வாக்கு மூலம் மட்டுமல்ல வாழ்க்கையினுடைய அத்தியாயங்களை அடுத்தடுத்த கவிதைகளில் தமிழால் செப்பி நெஞ்சம் நிறைக்கிறார் கவிஞர்.


 

  • கவிதைத் தொகுப்பு : ஒரு வரவேற்பறையில் வாக்குமூலம்.
  • ஆசிரியர் : பாப்பாக்குடி இரா. செல்வமணி.
  • வெளியீடு : பாவைமதி வெளியீடு
  • விலை :  ₹ 150

About the author

ப.தாணப்பன்

ப.தாணப்பன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website